Wednesday, September 6, 2017

நிதி நெருக்கடியால் பஞ்சாப் முதல்வரின் சம்பளம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்06செப்
2017
04:16




சண்டிகர்: கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இம்மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.

கஜானா காலி :

பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர், அமரிந்தர் சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலம் முழுவதும், அரசு அலுவலகங்களில், 4.50 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, இம்மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை நிறுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சம்பளம் ‛கட்':

மாநில நிதி அமைச்சர், மன்பிரீத் பாதல் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும், ஜி.எஸ்.டி., அமலாக்கத்திற்குப் பின், வசூலான வரிப் பணம், மாநில கஜானாவுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனால், மாநிலத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், இம்மாதம், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் இன்னும் ஒரு வாரத்தில், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும். பின், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பரவலாக மழை

பதிவு செய்த நாள்
செப் 05,2017 19:38



தேனி: தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது.தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்துவரும் நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் அல்லிநகரம், பெரியகுளம், லட்சுமிபுரம் , வடுகபட்டி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சுற்றி உள்ள கள்ளிமந்தையம், சத்திரப்பட்டி பகுதிகளில் மழை பெய்தது.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் மோகனுாரில், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

துாத்துக்குடி மாவட்டம்

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், பேச்சிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி , நடுகுப்பம் தெளச்ளார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, கனகமாசத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது.

Tuesday, September 5, 2017

வளர்த்த பாட்டி மீது கொள்ளை பாசம்


Published : 03 Sep 2017 09:18 IST

அரியலூர்

பாட்டி பெரியம்மா

அனிதா 3 வயதாக இருக்கும்போதே அவரது தாயார் இறந்து விட்டார். அதன்பின், தாத்தா தங்கவேலு (95), பாட்டி பெரியம்மா (90) ஆகியோரது வீட்டில்தான் வளர்ந்து வந்தார். சில ஆண்டுகள் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த அனிதா, வீட்டுக்கு வரும்போது தனது பாட்டிக்கு ஏதேனும் வாங்கி வருவாராம். அதை வாஞ்சையோடு நினைவு கூர்ந்த பாட்டி பெரியம்மா, “நான் வளர்த்த பெண் எனது சேலையாலேயே தூக்குப்போட்டு இறந்து விட்டாரே” என்று விம்மினார்.


தாத்தா தங்கவேலுபோலீஸார் மிரட்டி கையொப்பம்

வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது.

அங்கு பிரேதப் பரிசோதனை செய்யவும், உடலை பெற்றுக் கொள்ளவும் சம்மதிக்கிறேன் என அனிதாவின் தந்தை சண்முகத்திடம் போலீஸார் கையொப்பம் வாங்கியுள்ளனர். தன்னை போலீஸார் மிரட்டி கையொப்பம் பெற்றதாக சண்முகம் தெரிவித்தார்.

இறந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் நீட் தேர்வைக் கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ப்ளூவேல்’ விளையாட்டு விபரீதம்: ம.பி.யில் பிளஸ் 1 மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Published : 05 Sep 2017 09:09 IST

போபால்

(




மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் தமோ அருகில் உள்ளது நவ்ஜாகிரதி பள்ளி. இங்கு பிளஸ் 1 படித்து வந்த மாணவன் சாத்விக் பாண்டே, கடந்த சனிக்கிழமை இரவு திடீரென காணாமல் போனான். இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு ரயில் தண்டவாளத்தில் சாத்விக் இறந்து கிடந்ததை போலீஸார் உறுதி செய்தனர்.

சாத்விக்கின் தந்தை அரசு அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிகிறார். வீட்டுக்கு ஒரே மகன்.


சாத்விக் கடந்த சில நாட்களாக ப்ளூவேல் விளையாட்டு விளையாடி வந்ததாக அவனது பள்ளி நண்பர்கள் அடிப் கான், ரோகித் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால், சாத்விக்கின் செல்போன் மற்றும் கம்ப்யூட்டரை ஆய்வு செய்யாமல் எதுவும் சொல்ல இயலாது என்று போலீஸார் கூறினர்.

ஆனால், தண்டவாளம் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சாத்விக் தற்கொலை செய்து கொள்ளும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தண்டவாளத்தில் ரயில் வரும் வரை காத்திருக்கிறான். வேகமாக ரயில் வருவதைப் பார்த்ததும் சாத்விக் முட்டிப் போட்டு அமர்கிறான். அவன் மீது ரயில் மோதி செல்கிறது. இந்த காட்சிகளையும் போலீஸார் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் ப்ளூவேல் விளையாட்டால் ஏற்பட்ட முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு குவியும் படங்கள்: திணறும் விநியோகஸ்தர்கள்

Published : 04 Sep 2017 19:48 IST

ஸ்கிரீனன்




கோப்புப் படம்

சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு 8 படங்கள் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பதால், விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விடுமுறையை கணக்கில் கொண்டு பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்திருக்கிறார்கள். இதனால் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.


இந்த தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'வேலைக்காரன்' வெளியாகவிருந்தது. ஆனால், இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் டிசம்பரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

மேலும், மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் 'ஸ்பைடர்', நயன்தாரா நடித்திருக்கும் 'அறம்', விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'கருப்பன்', சந்தானம் நடித்திருக்கும் 'சர்வர் சுந்தரம்', சுசி கணேசனின் 'திருட்டுப்பயலே - 2', ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'செம', ஜெய் நடித்திருக்கும் 'பலூன்' மற்றும் கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் 'ஹர ஹர மஹாதேவகி' ஆகியவை செப்டம்பர் 29-ம் தேதி வெளியீடு என அறிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவு படங்களுக்கு எங்கே திரையரங்குகள் உள்ளது என்று விநியோகஸ்தர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இவற்றில் குறைந்தது 4 படங்களாவது பின்வாங்கிவிடும் என தெரிகிறது.
வன்சொற்களைத் தவிருங்கள்: 'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்து வைரமுத்து

Published : 04 Sep 2017 16:06 IST

ஸ்கிரீனன்




‘விவேகம்’ படத்தில் அஜித் மற்றும் வைரமுத்து | கோப்புப் படம்

விமர்சகர்கள் உணர்ந்ததை எழுதுங்கள்; ஆனால் வன்சொற்களைத் தவிருங்கள் என்று 'விவேகம்' படத்தைப் பார்த்துவிட்டு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. மேலும், திரையுலகினர் பலரின் மத்தியில் மாறன் என்பவரது விமர்சனம் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.


இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தில் பணிபுரிந்திருக்கிறார் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து. இதனால் வைரமுத்துவின் குடும்பத்தினருக்கு தனியாக பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது.

'விவேகம்' பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து கூயிறுப்பதாவது:

அஜித் ரசிகர்களின் பாலாபிஷேகத்திற்கும், சில விமர்சனங்களின் குருதியாடலுக்கும் மத்தியில் இருக்கிறது 'விவேகம்'. ஓர் எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கதையாடலுக்கு முன்னெடுத்துச் சென்ற முதல் முயற்சிக்காக இயக்குநர் சிவாவைப் பாராட்டலாம். காட்சி ஊடகத்தின் சகல சாத்தியங்களும் இதில் முயலப்பட்டுள்ளன.

அஜித்தின் உழைப்பு எனக்கு உடம்பு வலியை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு இயக்குநர் வெற்றி – கலை இயக்குநர் மிலன் இருவரின் திறமைகளும் என் கண்களை இமைக்கவிடவில்லை. அனிருத்தின் பின்னணி இசை படத்தை இடைவெளியில்லாமல் நிரப்புகிறது. கதை இல்லை என்கிறார்கள். இதில் பாகப்பிரிவினையையும், பாசமலரையுமா சொல்ல முடியும்? இதற்கு இது போதும். ஏதோ ஓர் அந்நியத் தன்மை பட்டாம்பூச்சியின் இறகளவுக்குச் சுவர்கட்டி நிற்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

கபிலன் வைரமுத்துவின் சில வசன வரிகளை என் மகன் என்பதற்காக நான் மறைக்க விரும்பவில்லை. 'நீ சமவெளியில் ஓடுகிறாய்; ஓடத்தான் முடியும்; ஒளிய முடியாது', 'ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதைவிட, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வதே வாழ்க்கை' போன்ற நல்ல வரிகளைக் காதுகள் மனப்பாடம் செய்துகொள்கின்றன.

பயம் கலந்த வீரம் தொனிக்கும் காஜல் அகர்வாலின் கண்கள், உறங்கிய பின்னும் முகத்துக்கு மேலே சில மில்லி மீட்டர் உயரத்தில் மிதக்கின்றன. படம் சரியில்லை என்று சொல்கிறார்களே என்ற சலிப்போடுதான் போனேன். குறைகளைவிட நிறைகள் அதிகம் என்று கண்டு திரும்பினேன்.

விமர்சகர்கள் உணர்ந்ததை எழுதுங்கள்; ஆனால் வன்சொற்களைத் தவிருங்கள். ஒரு தோல்விப் படம்கூட 20 மாதப் பிரசவம் என்பதை மறந்துவிடாதீர்கள்

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'

Sep 5, 2017

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

அரசு, சுயநிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நேற்று துவங்கி விட்டன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.டி.எஸ்., இடங்களுக்கு, நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 15 இடங்கள் நிரம்பின. இதனால், மொத்தமுள்ள, 1,045 பி.டி.எஸ்., இடங்களில், 604 இடங்கள் நிரம்பி உள்ளன; 441 இடங்கள் காலியாக உள்ளன.

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 715 பி.டி.எஸ்., இடங்களில், 34 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 681 இடங்கள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், 1,122 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இன்று, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நாளை, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.

NEWS TODAY 13.07.2026