Thursday, September 7, 2017

ராஜபாளையம் அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் கண்டுபிடிப்பு



ராஜபாளையம் அருகே 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகளும் பாறை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 06, 2017, 04:00 AM

ராஜபாளையம்,

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும் அரசு பள்ளிதமிழ் ஆசிரியருமான சங்கரநாராயணன் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:–

ராஜபாளையத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 5 குன்றுகள் உள்ளன. இதில் ஒரு குன்றில் நுண்கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல சிறிய குகைகள் உள்ளன. அவற்றில் 3 குகைகளில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் அமைந்துள்ளன.

இதனை நானும் மாங்குடியை சேர்ந்த மலைக்கனி என்பவரும் சேர்ந்து ஆய்வு நடத்தி கண்டறிந்தோம். இந்த பாறை ஓவியத்தில் வேட்டைகாட்சிகள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மனிதர்கள் சிலர் ஒரு புலியை சுற்றி வளைத்து தாக்குவது போன்ற காட்சி சிறப்பாக தீட்டப்பட்டுள்ளது.

மற்றொரு கூட்டத்தினர் வேறொரு விலங்கை சுற்றி வளைத்து பிடித்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆரவாரம் செய்கிற காட்சியையும், கையில் ஆயுதங்களுடன் நிற்கும் மனிதர்களையும் சூரியன் காட்சியையும் வேட்டையாடிய விலங்கை கையில் பிடித்துக்கொண்டு வரும் மனிதனையும் வரைந்துள்ளனர். மேலும் யானையின் உருவத்தையும் கருவுற்ற விலங்குகளின் உருவத்தையும் அந்த கூட்டத்தின் தலைவனையும் அழகாக தீட்டி இருக்கின்றனர். இன்னும் பல கோணங்களில் ஆய்வு செய்வதற்கும் இந்த பாறை ஓவியங்கள் இடம் அளிப்பதாக அமைந்துள்ளன.

இந்த பாறை ஓவியங்கள் உள்ள குகைகள் மற்றும் இதனை சுற்றியுள்ள பழங்கால மனிதர்கள் வாழ்ந்த சில குகைகளையும் கொண்டுள்ள இந்த குன்றினை பாதுகாக்கப்பட்ட தொன்மரபு சின்னமாக தொல்லியல்துறை உடனடியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மீனாட்சிபுரம் கிராமம் மாங்குடி என்ற கிராமத்தோடு இணைந்த பகுதியாக உள்ளது. இதில் மாங்குடி நெல்லை மாவட்ட பகுதியில் உள்ளது. சங்ககால புலவர் மாங்குடி மருதனார் பிறந்த ஊர் மாங்குடியாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2002–ம் ஆண்டு இங்கு தொல்லியல் துறை, அகழாய்வு மேற்கொண்டுள்ளது. அந்த அகழாய்வில் இங்கு நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம், இடைக்காலம் என தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

மேலும் இவர்கள் சீன நாட்டோடும் ரோமானிய நாட்டோடும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இந்த தகவலையும் சங்கரநாராயணன்
தலையங்கம்
டிஜிட்டல் லைசென்சுக்கு அங்கீகாரம்




தமிழ்நாடு முழுவதும் இப்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் மற்றும் கார், லாரி, பஸ், டிராக்டர் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே போகிறது.

செப்டம்பர் 07 2017, 02:32 AM

தமிழ்நாடு முழுவதும் இப்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் மற்றும் கார், லாரி, பஸ், டிராக்டர் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது. இதுபோல, விபத்துக்களின் எண்ணிக்கையிலும், விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கையிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 2–வது இடத்தில் இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தகவலாகும். பெரும்பாலும் விபத்துக்கான காரணம் சாலை விதிமீறல் என்பதில் சந்தேகமே இல்லை. நிறையபேர் லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது விபத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதை தடுக்கும் வகையில், வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களுடன் அசல் டிரைவிங் லைசென்சை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையினரும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது. விரிவான விசாரணைக்குப்பிறகு, நீதிபதிகள் இவ்வாறு ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பதில் என்ன சிரமம் இருக்கிறது?. கண்டிப்பாக டிரைவிங் லைசென்சு வைத்திருக்கவேண்டும் என்ற அரசின் அறிவிப்புக்கு தடைவிதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.

அசல் டிரைவிங் லைசென்சு கையில் வைத்திருப்பது நிச்சயமாக எல்லோராலும் முடியாது. திருட்டு போய்விட்டால் திரும்ப லைசென்சு வாங்குவதற்கு பல நாட்களாகும். அதுவரையில் வாகனம் ஓட்டாமல் இருக்க வேண்டும் என்றநிலை இப்போது இருக்கிறது. ஆனால், இவ்வாறு டிரைவிங் லைசென்சு தொலைந்து விட்டது என்று கூறுபவர்கள், டூப்ளிகேட் லைசென்சுக்காக விண்ணப்பிக்கும்போது போலீஸ் ஸ்டே‌ஷனில் புகார் கொடுத்து, அங்கிருந்து இதை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் பெறவேண்டியதில்லை என்ற அளவில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் குழப்பத்தை போக்குவதற்காக சென்னை கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழு பரிந்துரைப்படி, ‘அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல்’ போன்ற 6 விதிமீறல்கள் மட்டுமே கடுமையான குற்றமாக கருதப்பட்டு, 9–ந்தேதி முதல் போலீசார் அசல் டிரைவிங் லைசென்சை கேட்பார்கள் என்று அறிவித்துள்ளார். போலீசாரின் அனாவசியமான கெடுபிடி இருக்கும் என்ற அச்சத்தை தவிர்க்கும்வகையில், இதுபோன்ற நடைமுறைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசார் அமல்படுத்தவேண்டும்.

2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம், அனைவரும் டிரைவிங் லைசென்சையும், ஆர்.சி.புக் என்ற வாகனப்பதிவு சான்றிதழையும், செல்போனில் உள்ள டிஜிலாக்கரில் பதிவுசெய்து போலீசார் கேட்கும்போது, அதை டவுன்லோடு செய்து காட்டிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று போலீசாரும், வட்டாரபோக்குவரத்து அலுவலகமும் தங்கள் செல்போனில் இதற்கான ‘ஆப்’ என்று கூறப்படும் செயலியை வைத்திருந்தால் இந்த லைசென்சு ஒரிஜினல்தானா? என்பதை உடனடியாக கண்டுபிடித்துக் கொள்ளலாம். செல்போனில் இந்த வசதி இருக்கும்போது, ஒரிஜினல் லைசென்சை கொண்டுவா என்று சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. தமிழக அரசு உடனடியாக தனது மோட்டார் வாகன விதிகளில் ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்கவேண்டும் என்ற பிரிவோடு, டிஜிலாக்கரில் பதிவுசெய்து வைத்திருக்கலாம் அதுவும் செல்லும் என்ற திருத்தத்தை கொண்டுவரவேண்டும். மேலும், இதுகுறித்து முறையாக, அதிகாரபூர்வமாக அறிவித்து, டிஜிலாக்கரில் வைத்திருக்கும் லைசென்சு செல்லுபடியாகக் கூடியதுதான், அதையே போலீசாரிடம் காட்டிக்கொள்ளலாம் என்று அங்கீகரிப்பதன் மூலம், இப்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்கமுடியும்.
இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா: பிரதமர் மோடி அறிவிப்பு


இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா இந்தியா வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 06, 2017, 04:05 PM
நேபிதாவ்,


இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மியான்மர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி, இலவச விசா குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மோடி கூறுகையில்,” இந்தியா வர விரும்பும் அனைத்து மியான்மர் மக்களுக்கும் இலவச விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். மேலும் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் உள்ள மியான்மர் கைதிகள் 40 பேரை விடுதலை செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

வரும் காலங்களில் பரஸ்பர நலனுக்காக இருநாடுகளும் இணைந்து வலுவான உறவை மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். மியான்மருடன் உறவை வலுப்படுத்துவது என்பது இந்தியாவுக்கு முதன்மையானவைகளில் ஒன்றாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 16 வயதில் குழந்தை பெற்ற மாணவி சாவு


பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 16 வயதில் குழந்தை பெற்ற மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செப்டம்பர் 07, 2017, 05:30 AM

சேலம்,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பெற்ற நிலையில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த மாதம் 29–ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்த மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிளஸ்–1 படித்து வந்த அந்த மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். மாணவியின் உடல் சற்று பருமனாக இருந்ததால் அவர் கர்ப்பம் அடைந்தது பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாய உத்தரவு எதிரொலி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலைமோதும் வாகன ஓட்டிகள்


வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து

செப்டம்பர் 07, 2017, 05:00 AM


பூந்தமல்லி,

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை சமாளிக்க கூடுதல் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டு உள்ளன.

வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது அவர்களது அசல் உரிமத்தை வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு நேற்று முதல் அமல் படுத்தி உள்ளது. இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகள் பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவும், புதிய ஓட்டுனர் உரிமம் பெறவும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து ஓட்டுனர் உரிமம் எடுக்க குவிந்துள்ளனர்.

வழக்கத்தை விட கூட்டம் அதிகமானதால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தவர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு, உரிமம் தொடர்பாக சேவைகள் அளிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாகன ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமலும், உரிமத்தை தவற விட்டவர்களும், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களும் அதிகஅளவில் வாகனங்களை ஓட்டி வந்து உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் இந்த உத்தரவு அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் அனைவரும் உரிமம் பெறுவதற்காக வட்டார அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் வழக்கத்தை விட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் திரண்டு உள்ளது.

இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறவர்கள் மூலம் உரிமம் பெறுவதற்காக பெரும்பாலோனோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரில் உள்ள பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர், ஆலந்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

இதனால் கூட்டத்தை சமாளிக்க வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கூடுதலாக சில கவுண்ட்டர்களை திறந்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதுகுறித்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ. நெடுமாறன் கூறுகையில் : அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்ததையடுத்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ எல்லைக்குஉட்பட்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அதிக அளவில் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு வருகின்றனர். அவர்களின் தேவையை அறிந்து கூடுதலாக 3 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி இதற்கு முன்பு எல்லாம் காலை தொடங்கி மதியம் 12 வரை மட்டுமே ஓட்டுனர் உரிமம் எடுக்க ஆன்லைனில் பதிவு செய்யப்படும். தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் காலை தொடங்கி மாலை வரை புதிய ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் சான்று ஏதும் பெறத்தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து அந்த சான்றை கொண்டு வந்து கொடுத்து தொலைந்த ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக புதிய ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ள முடியும்‘ என்று தெரிவித்தார்.

குன்றத்தூர் ஆர்.டி.ஓ. சுந்தரேசன் கூறுகையில் : அரசு அறிவிப்பை தொடர்ந்து அதிக அளவில் பெண்களும், வாலிபர்களும் ஓட்டுனர் உரிமம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை முதல் மாலை வரை ஓட்டுனர் உரிமம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் தினமும் குறைந்த அளவு மக்களே ஓட்டுனர் உரிமம் எடுக்க வருவார்கள் ஆனால் தற்போது அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு உரிய தேவைகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக கொளத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. சுமார் 200–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அலுவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்‘ பெரும்பாலானோர் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்காதவர்களும் தான் அதிகளவில் வாகனங்களை ஓட்டி வந்து உள்ளனர். தமிழக அரசின் இந்த உத்தரவினால் அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகிறார்கள்.‘ என்றார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் இன்று முதல் தொடங்குமா?


ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பிளவு ஏற்பட்டதால் இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பர் 07, 2017, 05:30 AM

ஈரோடு,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் அரசு சார்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு வரும் முதல்-அமைச்சர், ஜாக்டோ- ஜியோ அமைப்பு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பி.இளங்கோ, ஜே.கணேசன் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.

அதைத் தொடர்ந்து ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேயர் அரங்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற பி.இளங்கோ, ஜே.கணேசன் ஆகியோர் ‘போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்’ என்று கூறினார்கள். ஆனால் இவர்களுடைய கருத்துகளை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இளங்கோ, கணேசனை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளாக சுப்பிரமணியன், மாயவன் ஆகியோரை நியமித்து கூட்டம் நடத்தினர். அதன்பின்னரே புதிய ஒருங்கிணைப்பாளர்கள், ‘திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்’ என்று அறிவித்தனர்.

கூட்டம் முடிந்த பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்களுடைய கோரிக்கைகளை முதல்-அமைச்சர் தீர்த்து வைப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் எங்களுடைய எந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இணைந்துள்ள சங்கங்கள் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளோம். அதன்படி திட்டமிட்டபடி நாளை முதல் (இன்று) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும்.

அதே போன்று நாளை (இன்று) அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்றும், 8-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 9-ந் தேதி சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பில் இணைந்திருக்கக்கூடிய சங்கங்கள் பேசி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதற்கிடையே கூட்டத்தை விட்டு வெளியே வந்த, பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ மற்றும் கணேசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்களுடைய கோரிக்கைகளை முதல் -அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடைய வாக்குறுதியை நம்பி எங்களுடைய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்’ என்றார்கள்.

போராட்ட அமைப்பில் பிளவு ஏற்பட்டு இருவேறுபட்ட அறிவிப்புகளால் இன்று (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் நடைபெறுமா என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

Wednesday, September 6, 2017

’நீட் தேர்வில் நான் பாஸ்... ஆனாலும் நீட் வேண்டாம்’: அரசுப் பள்ளி மாணவியின் ஆதங்கம்!


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி கமலிஸ்வரி. மத்திய அரசு அறிவித்த நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும் இவர் படித்தது எல்லாம் தமிழ் வழிக் கல்வியில்தான். ராஜகம்பீரத்தில் பத்தாம் வகுப்பும் மதுரை திருமங்கலத்தில் பன்னிரண்டாம் வகுப்பும் படித்திருக்கிறார். அரசுப் பள்ளியில்தான் தனது பள்ளிக்கல்வியை முழுவதுமாக நிறைவு செய்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பில் 1028 மதிப்பெண்கள் பெற்ற கமலீஸ்வரி சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் கட் ஆப் 109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்கிறார். ஆனாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.
kamaleeswari
 
நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்க வந்திருந்த கமலீஸ்வரி மற்றும் அவரது தாயார் வீரலெட்சுமி ஆகியோரிடம் பேசும்போது, ’நாங்கள் விவசாயக் குடும்பம். என்னோட அண்ணன் தம்பிகளுக்கு எல்லாம் வங்கியிலும் வெளியாட்களிடமும் கடன் வாங்கித்தான் எங்க அம்மா படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் வழி என்பதால் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஆகையால், தமிழக அரசும் மாவட்ட ஆட்சித்தலைவரும் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்க உதவிட வேண்டும். நான் தேர்வுபெற்றபோதிலும் என்னைப்போன்ற கிராமப்புற மாணவர்கள்தான் நீட் தேர்வினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்துக்கு நீட் தேர்வு என்பது தேவையற்றது. ஆகையால், மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு 85 சதவிகித மருத்துவ மாணவர் சேர்க்கை கேட்டதையும் நீதிமன்றம் நிராகரித்தது, என்னைப் போன்றவர்களுக்குப் பாதிப்புதான்’ என்று தெரிவித்தார்.

NEWS TODAY 13.07.2026