Saturday, September 16, 2017

ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்
பதிவு செய்த நாள்16செப்
2017
00:06


ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின.

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால், வகுப்புகள் முடங்கின; காலாண்டு தேர்வு பாதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏற்பட்ட சுமூக நிலையை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டம், வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை, நேற்று மதியமே கைவிட்டு விட்டு, பிற்பகலில் பணிக்கு சென்றனர். அதனால், பள்ளிகளில் மீண்டும் வழக்கம் போல் வகுப்புகள் துவங்கின.

- நமது நிருபர் -
பொங்கல் ரயில்கள் 'ஹவுஸ்புல்'

பதிவு செய்த நாள்16செப்
2017
00:04


சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு துவங்கிய, 30 நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுகள், 'ஹவுஸ்புல்' ஆகின.

பொங்கல் பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்ல, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம்.

அடுத்த ஆண்டு, ஜன., 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 120 நாட்கள் வரை முன் பதிவு செய்யலாம் என்பதால், ஜன., 13ல், சொந்த ஊர் செல்வதற்காக, நேற்று ஏராளமானோர் முன்பதிவு மையங்களில் குவிந்தனர்.
சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் உட்பட, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், காலையில், கூட்டம் நிரம்பி வழிந்தது. 

சென்னை, எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், முன்பதிவு துவங்கிய, 30 நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான டிக்கெட்கள் நிரம்பின. உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மாலை, 5:00 மணிக்கு முடிந்தன.

ஜனவரி, 13ல், பகலில் இயக்கப்படும் சில ரயில்களில், கணிசமான இடங்கள் மீதம் உள்ளன
கோவை - ஜபால்பூர்: சிறப்பு ரயில் இயக்கம்

பதிவு செய்த நாள்15செப்
2017
22:42

கோவை:பயணிகளின் தேவை கருதி கோவை - ஜபால்பூர் இடையே, வாராந்திர சிறப்பு ரயில், வரும், 30ம் தேதி முதல் அக்., 30ம் தேதி வரையும், ஹவுரா - திருவனந்தபுரம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயிலும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பு ரயில்கள் அவ்வப்போது இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) இடையே வரும், 30ம் தேதி முதல் அக்., 30ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது.

ஜபால்பூரில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு புறப்படும் ரயில், உடுப்பி, மங்களூர், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட ஸ்டேஷன்களின் நின்று ஒரு நாள் கழித்து திங்கள் காலை, 5:00 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த ரயில் வரும், 30 முதல் அக்., 28ம் தேதி வரை இயக்கப்படுகிறது.அதேபோல், கோவையில் இருந்து அக்., 2ம் தேதி முதல், 30ம் தேதி வரை ஜபால்பூருக்கு ரயில் இயக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு, 7:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், போத்தனுார், பாலக்காடு, மடகான், ஹர்டா உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று ஒரு நாள் கழித்து, புதன் மதியம், 12:45 மணிக்கு ஜபால்பூர் சென்றடைகிறது.
அதேபோல், ஹவுரா(கொல்கத்தா) - திருவனந்தபுரம் இடையே வரும், 17 மற்றும், 21ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து, 17ம் தேதி மதியம், 12:40க்கு புறப்படும் ரயில், பாலக்காடு, கோவை, திருப்பூர், சேலம், சென்னை வழியாக, 19ம் தேதி காலை, 10:55 மணிக்கு ஹவுரா சென்றடைகிறது.

மறுமார்கமாக, 21ம் தேதி மதியம், 1:05 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் இரவு, 10:35 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொப்பை போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம் கிடையாது!
பதிவு செய்த நாள்16செப்
2017
00:18

புதுடில்லி: தொப்பை இல்லாமல், நல்ல உடல் தகுதியுள்ள போலீசாரை மட்டுமே, பதக்கங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும், என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும், மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பாக பணிபுரிந்த, போலீசாருக்கு, ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மாநில அரசுகள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறந்த சேவைக்காக பதக்கம் பெறுவதற்கு பரிந்துரைக்கப்படும் போலீசார், அவர்களின் பணி மூப்பு மற்றும் சேவை மட்டுமல்லாமல், நல்ல உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். தொப்பை இல்லாமல், பதவிக்கு சரியான நபராக இருக்க வேண்டும். தொப்பை உள்ள போலீசாரின் பெயர்கள் பரிசீலனைக்கு அனுப்பக்கூடாது.

போலீசாரின் உடல் தகுதி, ஷேப் - 1, ஷேப் - 2 என இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஷேப் - 1ல் உள்ள போலீசார் மட்டுமே, ஜனாதிபதி பதக்கம் பெறுவதற்கு பரிசீலிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெளியூர் செல்லும் முன் ரேஷன் பொருட்களை விட்டு கொடுக்க வாரீகளா! 'கார்டு' ரத்து ஆகாமல் தடுக்கும் செயலி அறிமுகம்!
பதிவு செய்த நாள்
செப் 15,2017 22:52




நீண்ட விடுமுறையில் வெளியூர் செல்ல விரும்புவோர், வழங்கல் துறை இணையதளத்துக்கு சென்று, 'தற்காலிகமாக ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என்று பதிவு செய்யும், புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், நீண்ட நாட்களாக ரேஷன் பொருள் வாங்காததால், கார்டு ரத்தாவதை தவிர்க்கலாம்.
ரேஷன் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் முறைகேடாக, அதிக விலைக்கு விற்கப்படுவதையும், வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதையும் தடுக்க, 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, அனைவரும் தங்கள் ஆதார் மற்றும் மொபைல் போன் எண்களை, ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டியது, மிகவும் அவசியமாகும்.

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினால், அதன் விலை, பொருட்களின் அளவு உள்ளிட்ட விபரங்களை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிந்து கொள்ளலாம். தற்போது நடைமுறையில் வந்துள்ள இந்த திட்டத்தின் உதவியால், ஒருவரின் கார்டை முறைகேடாக கடை ஊழியரோ, வேறு எவரோ பயன்படுத்தி, பொருள் வாங்குவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. மானியம் விரயமாவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும், 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் குறித்த, போதுமான விழிப்புணர்வு இல்லாததால், இன்னும் பலர் தங்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் எண்களை, ரேஷன் கடைகளில் இணைக்காமல் உள்ளனர்.

இது குறித்து, மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 83 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதை தவிர, முகவரி சான்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் ரேஷன்கார்டுகள், 4500 உள்ளன. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி, 95 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் இது குறித்து அறியாதவர்களே, மீதமுள்ள ஐந்து சதவீதம் பேர். ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாகவும், கடைகளில் அறிவிப்புகள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.விரைவில், அனைவரும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவர். மாவட்டத்தில் இதுவரை, 6 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு, 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவர்களுக்கான கார்டு, சென்னையில் அச்சிடப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் அச்சிட்டு வந்து விடும். அதன்பின் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில், எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. ரேஷன் பொருள் தேவைப்படும் ஏழைகளுக்கு, பொருட்கள் கிடைப்பதில் தடை எதுவும் இருக்காது.

இணையமே துணை!
இந்த இணைய பயன் பாட்டின் மற்றொரு பயனாக, நீண்ட நாட்களாக ரேஷன் பொருள் வாங்க முடியாதவர்கள், அது குறித்து, வழங்கல் துறைக்கு தெரிவிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.tnepds.gov.in எனும் வழங்கல் துறையின் இணையதளத்தில், இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் வெளியூர் செல்வோர், இதற்கான பல்வேறு தலைப்புகளில், 'உரிமை விட்டுக்கொடுத்தல்' (Give it up) என்ற தலைப்பை தேர்வு செய்து விட்டால் போதும்.

இதன் வாயிலாக, மீண்டும் திரும்பி வரும் வரை, ரேஷன் பொருட்களை முடக்கி வைக்கலாம். விடுமுறை முடிந்து திரும்பியவுடன், மீண்டும் அந்த தலைப்பை நீக்கி விட்டு, பொருட்கள் வாங்கலாம். விடுமுறை காலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காததால், ரேஷன் கார்டு ரத்து மற்றும் 'ஸ்டாப் சப்ளை' நடவடிக்கைகளை, இதன் வாயிலாக தடுக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆனால், இந்த வழிமுறை குறித்து, யாருக்கும் தெரியாததாலோ என்னவோ, இதுவரை எவரும் விண்ணப்பித்ததாகத் தெரியவில்லை. இதற்கு, ஒரு முறை 'கிவ் இட் அப்' கொடுத்து விட்டால், மீண்டும் திரும்பப் பெற முடியுமா என்ற அச்சம், மக்களிடம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பயத்தைப் போக்கி, இது ஒரு நல்ல திட்டம் என்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், உணவு வழங்கல் துறைக்கு உள்ளது.

யார் மீது தவறு?

கோவை மாவட்டத்தில், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்கும் பணி தாமதமாகி வருவது, இது கிடைக்காத மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எல்லா தகவல்களையும் சரியாகக் கொடுத்தும், தவறான புகைப்படம், பிழைகளுடன் பெயர் என 'ஸ்மார்ட் கார்டு'கள் தவறுதலாக வருகின்றன. இந்த தவறுகளை திருத்தம் செய்யவும், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகப் பணியை வேகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் கடமை.-நமது நிருபர்-
 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்,போராட்டம்,வாபஸ்

மதுரை:உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையால், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் உத்தரவாதம் அளித்தன. நேற்று மதியம், 2:00 மணி முதல் வேலைக்குத் திரும்பவும், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும், 21ம் தேதி ஆஜராகவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின், காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு தாக்கல் செய்தேன். செப்., 7ல் நீதிபதிகள், 'வேலை நிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.

ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி, தலைமைச் செயலர் அறிவிப்பு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அவமதிப்பு வழக்கு

மனுவை, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, நேற்று காலை, 10:45 மணிக்கு விசாரித்தது.அவமதிப்பு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாஸ், தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தலைவர் மோசஸ் ஆகியோர் ஆஜராகி, தாக்கல் செய்த மனு:

நீதிமன்ற உத்தரவை மீறுவதோ, அவமதிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள், ஏழு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரதிநிதிகள். எங்களுக்கு, 2006ல், திருத்தப்பட்ட சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. 2016 ஜன., 1 முதல் சம்பளத்தை உயர்த்தியிருக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் உயர்த்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கடந்த, 2016 பிப்ரவரி, 19ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'மத்திய அரசு

ஊழியர்களுக்கான ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், உடனடியாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த படும். 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களை, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கொண்டுவர குழு அமைக்கப்படும். குழு பரிந்துரைத்த, நான்கு மாதங்களில் முடிவு செய்யப்படும். தற்காலிக ஊழியர்கள் வரன்முறைப்படுத்தப்படுவர்' என,அறிவித்தார். இவ்விவகாரத்தில், இதுவரை நடவடிக்கை இல்லை. 2016 மத்தியில், ஏழாவது சம்பளக் கமிஷனின் சம்பள உயர்வு அமல்படுத்தபட்டது.

பேச்சுக்கு அழைப்பு

தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தவில்லை. அரசுடன் பேச்சு நடந்தது; அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். கோரிக்கைகளை வலியுறுத்தி,போராட்டம் நடத்தினோம். 9ம் தேதி, ஈரோட்டில் முதல்வர் முன்னிலையில், பேச்சு நடத்த அழைப்பு வந்தது.அங்கு வெளியில் வந்த ஒரு அமைச்சர், 'இவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளனர்' என, பேட்டியளித்தார்.

நாங்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இடையூறின்றி போராட்டம் நடத்துகிறோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.

நீதிபதிகள்: சட்டரீதியாக தீர்வு காண, இதர வழிகள் உள்ளன. ஏன் போராட்டத்தை கையில் எடுத்துள்ளீர்கள். உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும். வேலை நிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர்வது தவறு. அரசு அலுவலகங்களுக்குள் சமைத்துச் சாப்பிட்டு, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு கூறி, சற்று நேரம் விசாரணையை ஒத்திவைத்தனர்.மீண்டும் பகல், 11:15 மணிக்கு நீதிபதிகள் விசாரித்தனர்.

சங்கங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்: பொதுக்குழுவை கூட்டி, முடிவெடுக்க அவகாசம் அளிக்க வேண்டும்.

சங்க நிர்வாகிகள்: எங்கள் பிரச்னையையும் கருத்தில் கொள்ளுங்கள்.

நீதிபதிகள்: இது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. முதலில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண நாங்களும் விரும்புகிறோம். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால், தமிழக அரசின் தலைமைச் செயலரை இங்கு வரவழைத்து, உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உதவுகிறோம்.

வாபஸ் பெறாவிடில், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். கலெக்டர் அலுவலகங்களில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டிய நிலைஏற்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

பின், சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

போராட்டத்திற்கான அறிவிப்பு, ஜாக்டோ- ஜியோ மூலம் வெளியானது. காலவரையற்ற வேலை நிறுத்தம் மூலம் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை தொடர்கின்றனர்.

அரசு அலுவலகங்களை தனி நபர் சொத்து போல் பாவித்துள்ளனர். அரசு அலுவலகங்களில் காலை, இரவு தங்கி, போராட்டத்தை தொடர எவ்வித உரிமையும் இல்லை. அரசு அலுவலகங்கள் ஒன்றும் ஓய்வறை அல்ல; அது மக்களுக்கான இடம்.

அரசு ஊழியர்கள், மக்களுக்கான அதிபதி போல செயல்படக் கூடாது. கலெக்டர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான இடம். தற்போது, மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் நிவாரணம் கோரி, அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், அரசு அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ஊழியர்கள் கொண்டு வந்துள்ளதால், மக்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

ஊழியர் சங்கங்கங்கள், 'கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும்' என்கின்றன. வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவது குறித்து, பொதுக்குழு கூடி முடிவெடுப்பதாக சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நாங்கள் ஏற்கனவே வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளோம். இந்நிலையில், பொதுக்குழுவை கூட்டி, வாபஸ் பெற வேண்டும் என்ற கேள்வியே கிடையாது. முதலில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.சங்கங்கள் சார்பில், 'வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.

இதில், நிரந்தரத் தீர்வு தேவை. அதற்காக நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம்' என்கின்றனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'நிரந்தரத் தீர்வு காண, அரசு தேவையான முயற்சிகளைச் செய்தது. ஊழியர்களின் போராட்டத்தால் தீர்வு எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்.

இவ்விவகாரத்தில், அரசின் முடிவை தெளிவுபடுத்தும் வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும், 21ல், இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். 

இக்கால கட்டத்தில், ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரை மற்றும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு முயற்சி எடுத்திருக்க வேண்டும். வேலை நிறுத்தத்தை கைவிட்டு, இன்று மதியம், 2:00 மணிக்கு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Friday, September 15, 2017

விவாதம்: மாதவிடாயை ஏன் மறைக்க வேண்டும்?

Published : 03 Sep 2017 11:40 IST





சில துளி ரத்தம் தன் மகளின் உயிரையே பறித்துவிடும் என்று அந்தப் பெற்றோருக்குத் தெரியாது. தனது சுடுசொல், ஒரு பிஞ்சு மாணவியின் உயிரைக் குடித்துவிடும் என்று அந்த ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். இப்படிச் சிலரின் அறியாமையும் அலட்சியமும் பல குழந்தைகளைப் பலிவாங்கியபடி இருக்கின்றன. அதற்குச் சமீபத்திய சான்று, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி.

ஏழாம் வகுப்பு படித்த அந்த மாணவிக்கு அன்று மாதவிடாய். எத்தனை கவனமாக இருந்தும் ஆடை நனைந்து அது நாற்காலியையும் நனைத்துவிட்டது. அதைப் பார்த்த ஆசிரியர் கோபத்தில் சத்தம்போட, மனம் உடைந்துபோனார் அந்த மாணவி. வீட்டுக்கு வந்தவர் மறுநாள் அதிகாலை யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டார். ‘நான் செத்தே ஆக வேண்டும்’ என்று அந்த மாணவி தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதிவைத்திருக்கிறார். ஏன் சாக வேண்டும் அந்தச் சிறுமி? மாதவிடாயும் உதிரப் போக்கும் உயிரைப் பறிக்கும் காரணிகளா?

அம்மாவின் வலி தெரியுமா?

இதெல்லாம் பொருட்படுத்தக்கூடிய சம்பவமே இல்லை என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால், இந்தச் சிறுமியைப் போல் பல பெண் குழந்தைகளும் பெண்களும் ஒவ்வொரு மாதமும் செத்துச் செத்துப் பிழைக்கிறார்கள்.

“அந்தக் காலத்தில் என் அம்மாவும் பாட்டியும் எப்படிக் கட்டுக்கோப்புடன் வாழ்ந்தார்கள் தெரியுமா?” என்ற ஒப்பீட்டுடன் எழுப்பப்படும் கேள்வியைவிடக் கேவலம் வேறில்லை. அவர்களை அன்போடு அணுகிக் கேட்டிருந்தால், அவர்களும் இப்படிப் பல்லாயிரம் வேதனைக் கதைகளை பகிர்ந்திருப்பார்கள். மாதவிடாய் காலத்துத் துணியை மறைத்துவைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் கூரையில் செருகிவைத்த கிராமத்துப் பெண்கள் ஏராளம். காலையில் வயலுக்குக் கிளம்புகிற அவசரத்தில் அவற்றை உதறிப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பிலாமல் கூரையில் இருந்து அப்படியே எடுத்துப் பயன்படுத்தி, அவற்றில் பதுங்கியிருந்த விஷப் பூச்சிகள் கடித்து மாண்டுபோன பெண்களும் உண்டு.

கழனிக் காட்டில் நாள் முழுக்க வேலை செய்யும்போது, மாதவிடாய்த் துணியை மாற்ற வழியிருக்காது. காலையில் பயன்படுத்திய அந்தத் துணியையே அலசிப் பிழிந்து பயன்படுத்தும் பெண்களைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மாதவிடாய்த் துணி உரசுவதால் இரண்டு தொடைகளிலும் ரத்தம் கசிய, ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாமல் கால்களை அகட்டி நடக்கிற பெண்களின் வேதனை உணர்ந்த யாரும், ‘பெண்கள் மாதவிடாய் குறித்துப் பேசலாமா?’ என்று கேட்க மாட்டார்கள்.

மாதவிடாய் நாட்களில் ‘தீட்டு’, ‘வீட்டு விலக்கு’, ‘தூரம்’ என்று சொல்லப்பட்டு வீட்டுக்கு ஒதுக்குப்புறத்திலோ ஊருக்கு ஒதுக்குப்புறத்திலோ பாதுகாப்பற்ற பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு, பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளான பெண்களும் நம் நாட்டில் நிறைய உண்டு. இப்படி ஒதுக்கிவைப்பது இன்று நவீனத்துவம் அடைந்திருக்கிறதே தவிர, முற்றிலும் ஒழிந்துவிடவில்லை.

மாறிவிட்ட வாழ்க்கை முறை

அன்றைய வாழ்க்கை முறை பல பெண்களுக்கு உடல் வலுவைக் கொடுத்திருந்தது. அதனால் மாதவிடாய் நேரத்து வலியை, அவர்களால் ஓரளவுக்குச் சமாளித்திருக்க முடியும். ஆனால், ஒப்பிடவே முடியாத அளவுக்கு இன்றைய நிலை மோசமாக இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், ரசாயன வீரிய உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு, நெருக்கடியான வாழ்க்கை முறை போன்றவற்றால் இன்றைக்கு பத்து அல்லது அதற்குக் குறைவான வயதில் பல சிறுமிகள் பருவமடைகின்றனர். பல பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, கருப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளிட்ட சிக்கல்கள் இளம் வயதிலேயே ஏற்படுகின்றன. முப்பது வயதைக் கடந்த பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு மாதமும் கருப்பையோடு போராடியபடியேதான் வாழ்கிறார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டும் சமாளித்தபடியும்தான் பெண்கள் வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது மனிதத்தன்மையற்ற செயல்.

மாணவிகளின் துயரம்

மாதவிடாய் நாட்களில் பள்ளி மாணவிகள் படும்பாட்டை வார்த்தைகளில் எளிதாக அடக்கிவிட முடியாது. பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை இருந்தாலும் அவற்றில் பெயரளவுக்குக்கூடத் தண்ணீர் வருவதில்லை. பயன்படுத்திய நாப்கின்களை அகற்ற மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகள் இருப்பதில்லை. இப்படிப் பல இல்லைகளுக்கு நடுவேதான் லட்சக்கணக்கான மாணவிகள் மாதவிடாயைக் கடந்துவர வேண்டியிருக்கிறது.

எனக்குத் தெரிந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தினமும் வீட்டில் இருந்து நான்கு பெரிய பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச் செல்வார். காரணம் கேட்டபோது பள்ளியில் தண்ணீர் வசதி இல்லை என்றார். அப்போது அங்கே படிக்கும் மாணவிகளின் நிலை? “என்ன செய்யறது? கிராமமா இருக்கறதால பக்கத்துல இருக்கற பசங்களோட வீட்டுக்குப் போயிட்டு வருவாங்க” என்றார். இந்த நிலையில்தான் இன்று பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பின்னணியில்தான் மாதவிடாயை நாம் அணுக வேண்டியுள்ளது.

எது அந்தரங்கம்?

ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இப்படிப் பெண்கள் பணிபுரியும் பல இடங்களில் பெண்களுக்கான கழிப்பறைகள் குறைந்தபட்ச சுகாதாரத்துடன்கூட இருப்பதில்லை. அலுவலகங்களில் பணியாற்றுகிற பெண்களின் நிலையே இப்படியென்றால் கட்டிட வேலை செய்யும் பெண்கள், காய்கறி விற்பவர், வீடு வீடாகச் சென்று பொருட்கள் விற்பவர் போன்றோரின் நிலைமை நம் கற்பனைக்கு எட்டாதது.

பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்துக்கு உதவும் எந்த அடிப்படை ஏற்பாடுகளும் இல்லாத சமூகத்தில், “பெண்கள் மாதவிடாய் குறித்துப் பேசக் கூடாது. மாதவிடாய் மிகவும் அந்தரங்கமானது” என்பது போன்ற பிற்போக்கு கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். வளர்ச்சியின் ஒரு அங்கம்தான் மாதவிடாய். ஒருவர் வளர வளர உயரம் அதிகரிப்பது, மீசை வளர்வது போன்றவை எல்லாம் எத்தனை இயல்பானவையோ அத்தனை இயல்பான நிகழ்வுதான் மாதவிடாயும். அவற்றையெல்லாம் பெருமையாக நினைக்கிற நம்மில் பலரும், மாதவிடாய், உதிரப்போக்கு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே அருவருக்கிறோம்.

ஆண்களின் பங்கு அவசியம்

மாதவிடாய், மாதவிடாய் சுகாதாரம் குறித்துப் பெரும்பாலான பெற்றோருக்கே விழிப்புணர்வு இல்லாதபோது அவர்கள் எப்படித் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வார்கள்? இருபாலரும் படிக்கும் பல பள்ளிகளிலும் மாதவிடாய் சுழற்சி, இனப்பெருக்க அமைப்பு போன்ற பாடங்களும் நடத்தப்படுவதில்லை.

“மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் மாதவிடாய் குறித்த சரியான வழிகாட்டுதல் அவசியம். பாலின சமத்துவம், உடற்கூறு, பாலியல் கல்வி போன்றவை பள்ளியிலேயே கற்றுத்தரப்பட வேண்டும். குழந்தைகளுக்கு உணர்வுகளைக் கையாளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். பள்ளியில் பருவமடைகிற அல்லது மாதவிடாய் ஏற்படுகிற குழந்தைகள் மீது அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் இருந்த கரிசனம் தற்போது இருப்பதில்லை.

அதிக உதிரப்போக்கு இருந்தால் ஆடை நனையத்தான் செய்யும். அதற்கு அந்தக் குழந்தைகள் என்ன செய்வார்கள்?” என்று கேட்கிறார் சென்னையைச் சேர்ந்த மேம்பாட்டு ஆலோசகரும் ஆய்வாளருமான கீதா நாராயணன்.

மாதவிடாயும் உதிரப் போக்கும் பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுதான். அதைப் பொத்திப் பொத்தி மறைத்துவைக்கத் தேவையில்லை, அருவருக்கவும் தேவையில்லை. அடுத்தவருக்குத் தெரிந்தால் அவமானமாகிவிடுமே என்ற நினைப்பு தேவையற்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஏற்பாடுகள் குறித்தும் கட்டாயம் சொல்லித்தர வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்கிற மனப்பக்குவத்துடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

அப்பா, அண்ணன், கணவன், பள்ளியில் உடன் பயிலும் நண்பன், அலுவலக நண்பன் என்று அனைவரிடமும் பெண்கள் தயக்கமின்றி மாதவிடாய் குறித்துப் பேச ஆரம்பிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தவறு என்ற மூடநம்பிக்கையை தொடர்வதன் மூலம், பெண்ணாகப் பிறப்பதே தவறு என்று சொல்வதாகத்தான் அர்த்தம் கொள்ள முடிகிறது. மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களில் பெண்கள் படும் வேதனை குறித்தும் உணர்ந்த ஆண்கள் அதைக் கேலிக்குரியதாகவோ கிளர்ச்சிக்குரியதாகவோ அணுக மாட்டார்கள். ஏனென்றால், மாதவிடாய் வலிகளை சமாளிக்கவும் கடந்துவரவும் ஆண்களின் துணையும் புரிதலும் பெண்களுக்கு அவசியம்.

நீங்க என்ன சொல்றீங்க?

தோழிகளே, மாதவிடாய் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் கற்பிதங்களை எப்படிக் களைவது? குடும்பத்திலும் சமூகத்திலும் எத்தகைய மாற்றம் தேவை? இதில் உங்கள் அனுபவம் என்ன? கருத்து என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

NEWS TO DAY 16.07.2026