Thursday, November 2, 2017

தாம்பரம் பகுதிகளில் கனமழை ரெயில் நிலையம், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு



தாம்பரம் பகுதிகளில் பெய்த கனமழையால் ரெயில் நிலையம், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நவம்பர் 01, 2017, 04:45 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலைவரை கனமழை பெய்தது. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை முழுவதும் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்துக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் நிரம்பியதால் போக்குவரத்து முடங்கியது. தாம்பரம்–வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். சேலையூர் பகுதி ஏரியில் மழைநீர் நிரம்பி சிட்லபாக்கம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டனர். சேலையூர்–அகரம்தென் பிரதான சாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்தனர்.

திருவஞ்சேரி, மப்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. நெடுஞ்சாலை துறையினர் முறையாக கால்வாய்களை அமைக்காததால் தான் மழைநீர் தேங்கி நிற்பதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலையூர் போலீசார் உடனே அங்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மழைநீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

தாம்பரம்–முடிச்சூர் சாலையில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் சென்றது. இதனால் கவுல் பஜார் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் சிக்னல் கிடைக்காமல் சானடோரியம் அருகே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோல் செங்கல்பட்டில் இருந்து வந்த ரெயில்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன.

பல்லாவரம் காமராஜர் நகர் பகுதியில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் மழை நீரோடு கலந்து வீடுகளில் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பகுதிகளை காஞ்சீபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா, கலெக்டர் பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். கழிவுநீர் செல்வதை தடுக்க பொதுமக்கள் 6 மாதமாக கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி, அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலையூர் ஏரி, திருவஞ்சேரி பகுதிகளையும் கண்காணிப்பு அலுவலர் அமுதா, கலெக்டர் பொன்னையா ஆகியோர் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உத்தரவிட்டனர்.

பலத்த மழை காரணமாக தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு முழுவதும் மழைநீர் தேங்கியது. இதனால் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு மருத்துவமனையின் உட்பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

பொழிச்சலூர் ஊராட்சி 9–வது வார்டு தாங்கல் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியதால் பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சங்கர் நகர் போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தாம்பரம் அருகே வரதராஜபுரம் ஊராட்சி மகாலட்சுமி நகர், பி.டி.சி. காலனி, முல்லை நகர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 3 அடிக்கு மேல் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. அஷ்டலட்சுமி நகர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீர் வீடுகளில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியேறினர்.

தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற பரிசல் படகை வருவாய் துறையினர் அப்பகுதிக்கு கொண்டு வந்தனர். வெள்ளத்தில் தவித்த மக்கள் பரிசல் மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுவரப்பட்டனர். அப்பகுதியில் வருவாய் துறையினரும், போலீசாரும் தொடர்ந்து முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Wednesday, November 1, 2017


குழந்தைகளைக் காப்பாற்ற உயிரிழந்த சுகந்தி டீச்சரின் குடும்பம் எப்படி இருக்கிறது? #VikatanExclusive

வி.எஸ்.சரவணன்


மறதி என்பது பெருநோயாக நம்மைப் பீடித்திருந்தாலும் ஆசிரியை சுகந்தியை மறந்துவிட முடியுமா?



2009 டிசம்பர் 3...

பனி சூழ்ந்த காலை. சுகமாக உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை, வலுக்கட்டாயமாக எழுப்பினார்கள் தாய்மார்கள். பல் துலக்கி குளிப்பாட்டி, கெஞ்சி உணவூட்டும்போதே, வாசலில் பள்ளி வேன் சத்தம் கேட்டது. வேதாரண்யம் வட்டம், கரியாபட்டினம், 'கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி'க்கு அழைத்துச்செல்லும் வேன் அது. அழுத குழந்தைகளுக்கு மாலையில் சாக்லேட் வாங்கித் தருவதாக உத்தரவாதம் தந்து, முத்தம் தந்து வேனில் ஏற்றிவிட்டார்கள். அவர்களில் பலருக்குத் தெரியாது, தங்கள் குழந்தையின் சிரிப்பை இனி பார்க்க முடியாது என்பது.

வேனில் 20 குழந்தைகள், பாதுகாப்புக்குச் சுகந்தி டீச்சர், ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை, சுகந்தி. எளிய குடும்பத்தில் பிறந்து, விரும்பி ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தவர். மழை மெல்லிய சாரலாய் தூறிக்கொண்டிருந்தது. அதை வேடிக்கை பார்த்தவாறும் பாட்டுப் பாடியவாறும் இருக்கும் குழந்தைகளைச் சுமந்து செல்கிறது வேன்.



பனையடிகுத்தகை சாலை அருகே செல்லும்போது ஓட்டுநரின் மொபைல் சிணுங்குகிறது.. எடுத்துப் பேசியவாறே ஓட்டுகிறார். திடீரென அவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய வேன், அருகிலிருந்த குளத்துக்குள் பாய்ந்தது. குளத்தில் 20 அடிக்கும் மேல் நீர் இருந்ததால், விழுந்த வேகத்தில் வேன் மூழ்கத் தொடங்குகிறது. உள்ளிருந்த குழந்தைகளுக்கும் ஆசிரியைச் சுகந்திக்கும் அதிர்ச்சியிலிருந்து சுதாரித்து உதவிக் குரல் எழுப்பவும் அவகாசமில்லை. குழந்தைகள் வேனுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து நீரைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். 20 குழந்தைகளுமே எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பவர்கள்.

ஆசிரியை சுகந்தி, வேன் ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். தன் பலம் முழுவதையும் திரட்டி செயலில் இறங்கும் சுகந்தி, ஒவ்வொரு குழந்தையாகப் பிடித்து கரைக்குக் கொண்டு வருகிறார். நீரின் ஆழத்திலிருந்து குழந்தையை மீட்டுவருவது எவ்வளவு சவாலானது. ஆனாலும், தன் உயிர் பற்றி துளியும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் குளத்தின் ஆழத்துக்குச் செல்கிறார் சுகந்தி. தன் உயிரின் இறுதி மூச்சுக் காற்று அந்தக் குளத்தின் நீரில் கலக்கும் வரை, குழந்தைகளைக் காப்பாற்றப் போராடினார். இறுதியில், குழந்தைகளை நேசித்து, அன்பு பாராட்டி, கல்வி போதித்த அந்த ஆசிரியை, குளத்தின் நீருக்குத் தன் உயிரை ஒப்படைத்துவிடுகிறார். அதற்குள் சத்தம் கேட்டு, அந்தப் பகுதி பொதுமக்கள் கூடிவிட்டார்கள். அவர்களைப் பார்த்த ஓட்டுநர், தப்பித்து ஓடிவிடுகிறார். என்ன நடந்தாலும் பரவாயில்லை எனக் குழந்தைகளை மீட்க, இறுதி வரை உதவுகிறார் கிளினர். 20 குழந்தைகளில் 11 குழந்தைகள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றனர். 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்துபோனார்கள்.

இந்த நிகழ்வு கேட்பவரைக் கண்ணீரில் உறைந்துபோகச் செய்தது. ஊடகங்கள் வழியே கேட்டவர்களும் பார்த்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியை சுகந்தியை மானசீகமாக வாழ்த்தினார்கள். அவரின் இறப்பை, தன் வீட்டில் ஒருவரின் மரணமாக உணர்ந்தார்கள். வேதாரண்யம் வட்டம், நாகக்குடையான் கிராமத்தில் மாரியப்பன், அன்னலெட்சுமி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் சுகந்தி. அவருக்கு ஓர் அக்கா, ஒரு தம்பி. எளிமையான குடும்பம். ஆனாலும் படிப்புமீது ஆர்வம்கொண்ட சுகந்தி 10, 12-ம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றார். மேல் படிப்புக்குக் குடும்பச் சூழல் இடம் தராவிட்டாலும், சிரமப்பட்டு ஆசிரியர் பயிற்சியை முடித்தார். 78 சதவிகிதம் பெற்று, முதல் இடத்தில் தேர்ச்சியடைந்தார். மிகச் சொற்பமான சம்பளம் என்றாலும், தன் லட்சியப் பணியான ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்துகொண்டிருந்தார். மாலை நேரத்தில் தன் வீட்டின் அருகே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக டியூஷனும் எடுத்துக்கொண்டிருந்தார்.

படிப்பு ஏழ்மையை விரட்டும் என பிள்ளைகளைப் படிக்கவைத்த பெற்றோருக்குச் சுகந்தியின் மரணம் பேரிடியாக விழுந்தது. தூக்கி வளர்த்த பெண்ணை, சடலமாகப் பார்க்க நேரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். வருத்தத்தைப்போலவே வறுமையும் குடும்பத்தைச் சூழ்ந்தது. சுகந்திக்கு அறிஞர் அண்ணா விருதும் 25,000 ரூபாய் பணமும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. சுகந்தி மரணத்தின்போது என்ன நடந்தது, என்னென்ன வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவை என்னவாயிற்று என சுகந்தியின் தம்பி ராஜ்மோகனிடம் பேசினோம்.

“சுகந்தி அக்கா இறந்ததிலிருந்து வீடு வீடாகவே இல்லை. எட்டு வருஷம் ஆயிடுச்சு. ஆனாலும், அந்த வலி இப்பவும் இருக்கு. அப்பா ஊரில் கிடைக்கும் ஏதாச்சும் வேலைகளுக்குப் போவாங்க... அம்மா நிலைமைதான் ரொம்ப கஷ்டம். கல்யாணம், காட்சின்னு போகிற இடங்களில் அக்காவோடு படிச்சவங்க, தங்கள் குழந்தையோடு வந்திருக்கிறதைப் பார்த்துட்டு வந்து அழுவாங்க. 'நம்ம சுகந்திக்கும் இந்நேரம் குழந்தைகளோடு சந்தோஷமாக இருந்திருப்பாளே'னு சொல்லிட்டே இருப்பாங்க. ரொம்ப சிரமப்பட்டுத்தான் பெரிய அக்கா கல்யாணத்தை முடிச்சோம். அவங்க டெம்பரவரியா ஒரு வேலைக்குப் போயிட்டிருக்காங்க. நான் கோயம்புத்தூரில் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். சுகந்தி அக்கா இறந்தப்போ, கலெக்டர் ஆபீஸிலிருந்து வந்தாங்க...'' என்ற ராஜ்மோகன், பேச்சை நிறுத்தி, கலெக்டர் வந்திருந்தாரா என யோசிக்கிறார். அருகிலிருந்து அம்மாவிடம் கேட்கிறார். வந்ததாக அவர் சொன்னதும் தொடர்கிறார்.

''கவர்மென்ட் தந்த ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தார். எனக்கு அரசு வேலை வாங்கித் தர்றதா சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, எட்டு வருஷமாக அலையறோம். எதுவும் நடக்கலை. 'டிப்ளமோதான் படிச்சிருக்கே, அரசு வேலை எதுவும் கிடைக்காது'னு சொல்றாங்க. இருந்தாலும் நம்பிக்கையோடு முயற்சி பண்ணிட்டிருக்கேன். அந்த வேலை கிடைச்சா குடும்பத்துக்கு உதவியா இருக்கும்" என்றவர், அம்மாவிடம் சுகந்தி பற்றிப் பேசச் சொல்கிறார். ஆனால், ''சுகந்தி...'' என்று பெயரை ஆரம்பித்ததுமே வார்த்தை வராமல் அழத் தொடங்கிவிட்டார் அந்தத் தாய்.



சுகந்தியின் தியாகத்தைப் பற்றி ஆவணமாக்கும் முயற்சியில் 'சுகந்தி டீச்சர்' எனும் சிறுநூலை வெளியிட்டுள்ளார் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பாபு எழில்தாசன், "நான் அவங்க வீட்டுக்குப் போகும் ஒவ்வொரு முறையும் மனசுக்கு கஷ்டமாக இருக்கும். சுகந்தி டீச்சரோட இழப்பு அந்தக் குடும்பத்துக்கு ஈடே செய்ய முடியாதது" என்கிறார். (இப்படங்கள் அந்நூலிலிருந்து எடுக்கப்பட்டவை)

தன் உயிரையே கொடுத்து 11 குழந்தைகளைக் காப்பாற்றிய சுகந்தி குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்வது ஓர் அரசின் கடமை. நிறைவேற்றுவார்களா?

''ஜெயலலிதாவின் 75 அப்போலோ நாள்கள்!’’ ஆவணங்களைக் கேட்கிறார் ஆறுமுகசாமி

MUTHUKRISHNAN S

ஜெயலலிதா மரணத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்களை வெளிக்கொண்டுவர நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், 'ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம்' என்று அறிவித்துள்ளது. 75 நாள்கள் என்னென்ன நடந்தது என்பது தொடர்பாக தகவல் வைத்திருப்போர் விசாரணை ஆணையத்துக்கு அந்தத் தகவலைச் சத்திய பிரமாண உறுதிமொழிப் பத்திரவடிவில் கொடுக்கலாம்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மருத்துவனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகாததால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஓ.பன்னீர்செல்வமும், ''நீதி விசாரணை வேண்டும்'' எனக் குரல் கொடுத்தார்.



இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி, சில தினங்களுக்கு முன்னர் விசாரணை ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்று விசாரணையைத் தொடங்கினார். இந்நிலையில் 'நீதியரசர் ஆறுமுகசாமி, விசாரணை ஆணையத்தின் அதிகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் நா.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ''ஜெயலலிதாவின் அகால மரணம் குறித்து விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது. அதன் அதிகாரவரம்பு, '22.09.2016 அன்று காலஞ்சென்ற முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் அவர் துரதிஷ்டவசமாக இறந்த நாளான 5.12.2016 வரை அவருக்கு அளிக்கப்பட்ட அடுத்தடுத்த சிகிச்சைகள் குறித்தும் விசாரணை செய்தல்" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இந்தப் பொருண்மை குறித்து தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித் தொடர்பு உடையவர்களும், அதுகுறித்து அவர்களுக்குத் தெரிந்த தகவலை சத்தியப் பிரமாண உறுதிமொழிப் பத்திரவடிவத்தில் (அசல் மற்றும் இரு நகல்களுடன்) தகுந்த ஆவணங்கள் இருப்பின், 'மாண்புமிகு நீதியரசர் திரு அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், முதல் தளம், கலாஸ் மகால் புராதன கட்டடம், எழிலகம் அருகில், சேப்பாக்கம், சென்னை 600 005 (Email ID -justicearumughaswamycoi@gmail.com) என்ற முகவரியில் அமைந்துள்ள ஆணையத்திடம் 2017-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக, நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்கெனவே தொடங்கி விட்டார். பொறுப்பேற்ற பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸூக்குக் கிடைக்கும் பதில் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை அவர் தொடங்கவுள்ளார். மேலும், நேற்று வரை விசாரணை ஆணையத்திற்கு, பல்வேறு தகவல்களுடன் கூடிய 20 பதிவுத்தபால்கள் வந்துள்ளன. இந்நிலையில்தான் இந்த அறிவிக்கையை விசாரணை ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் தனது பணிகளைத் தொடங்கிவிட்டது. ஆணையத்திடம் அளிக்கப்படும் ஆதாரங்கள், அரசியலில் என்னென்ன பூதாகரங்களைக் கிளப்பப்போகிறதோ...?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!

கார்த்திக்.சி

கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. படிப்படியாகப் பருவமழையின் வேகம் அதிகரித்து, கடந்த மூன்று நாளாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. முக்கியமாக சென்னை மாவட்டம் மிதக்க ஆரம்பித்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இந்த ஒரு நாள் மழைக்கே ஆங்காங்கு மழை வெள்ளம் தேங்கியது.



சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் சரிசெய்வதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடாததாலும், சில இடங்களில் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் இருந்ததாலும் மழைநீர் தேங்கி போக்குவரத்தை முடக்கியது. அதனால், கடந்த இரு தினங்களாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
‘அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே... நீங்க எப்பவும் இப்படித்தானா... இப்படித்தான் எப்பவுமா..?!’

எஸ்.கிருபாகரன்



வடிவேலு நடித்துள்ள காமெடிக் காட்சி அது... மாணவனான அவர், வகுப்பறையில் அரிசி தின்று ஆசிரியர் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் மாட்டிக்கொள்வார். அடுத்தக் காட்சியில், அவர் அதே அரிசியை மென்று தின்பார். ஆனால், ஆசிரியர் அதைக் கண்டுவிடாதபடி சாதுர்யமாக உண்பார். குழம்பிப்போய் இறுதியாக வடிவேலுவிடமே சரண்டராகும் வெண்ணிற ஆடை மூர்த்தி, ''எப்படிடா சத்தம் வராம அரசியைத் திங்கறே?'' எனக் காரணம் கேட்பார். அப்போது வடிவேலு, ''இப்படித்தான் சார்...'' என தன் பாக்கெட்டில் அரிசியைக் கொட்டி வகுப்பறை குடத்திலிருந்து தண்ணீர் கொண்டுவந்து தன் பாக்கெட்டில் ஊற்றுவார். ''அரிசி ஊறியபின் சாப்பிட்டா சத்தமே வராது சார்'' என தொழில்நுட்பத்தையும் விவரிப்பார்.

தமிழக அரசியலில், இந்த அரிசியைப்போல்தான் கடந்த காலத்தில் அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். வடிவேலுவைப்போல், தன் அமைச்சர்களின் அரைகுறை சத்தம் வெளியே கேட்டுவிடாதபடி ஜெயலலிதா சர்வாதிகாரம் எனும் தண்ணீர் ஊற்றி சத்தமின்றி வைத்திருந்திருக்கிறார் என்பது இப்போது மேடைக்கு மேடை அமைச்சர்கள் பேசிவருவதைப் பார்க்கும்போது புலப்படுகிறது.

அமைச்சர்களின் அரைகுறை பேச்சால் தன் ஆட்சி அதிகாரத்துக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை அடக்கி ஆண்டு அதன்மூலம் வரலாறு தனக்களித்த சர்வாதிகாரி என்ற பெயரையும் தியாக உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறார் ஜெயலலிதா என்பது இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது மக்களுக்கு.

கேலி செய்யும் அளவுக்கு அ.தி.மு.க அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தை முரண்பாடாகப் பேசிவந்தாலும் அத்தனை அமைச்சர்களுக்கும் டஃப் கொடுக்கும் போட்டியாளர் திண்டுக்கல் சீனிவாசன்தான். மற்றவர்களின் உளறல் அவர்களுக்கு எதிராக மாறுகிறது என்றால், திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு கட்சியையே காவு கொடுப்பதாக உள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் முரணான பேச்சுகளை புத்தகமாகவே எழுதலாம். ஆனால், இப்போதைக்கு வாசகர்களுக்கு அவரது சர்ச்சை பேச்சுகளில் ஒரு சிலவற்றை மட்டும் தொகுத்துக் காட்டலாம்...

அ.தி.மு.க-விலிருந்து ஓ.பன்னீர்செல்வம் முரண்பட்டு தனி அணியாக அரசியல் செய்துவந்த சமயத்தில், அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி (ஜெயலலிதா பிறந்தநாள்) ஒன்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்தது. அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன்,




"அம்மா இறப்புல மர்மம் இருப்பதாகத் தேவையில்லாம சிலர் சர்ச்சையைக் கிளப்புறாங்க. அம்மா மருத்துவமனையில இருந்தப்ப தினமும் என்ன நடந்ததுன்னு வீடியோ எடுத்திருக்கோம். அதையும் உங்களுக்கு காட்றோம்னு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திலயெல்லாம் சொல்லியிருக்காங்க. எதுக்கு இதை உங்களுக்குச் சொல்றேன்னா, இங்க நம்ம கணவர் இருக்காங்க, அவருக்கு பலகோடி சொத்து இருக்கும்... அவரைக் கொலைபண்ணிட்டா, அவரோட சொத்து தனக்கு வந்திடும்னு எந்தப் பொண்ணும் நினைக்கமாட்டா.

அம்மாவைப் பொறுத்தவரை, 30 வருஷமாகத் தன்னுடைய உயிர்த் தோழியாக, சின்னம்மாவை உடன் வைத்திருந்தார். தன்னோட 32 வயசுல அம்மாகிட்ட சேர்ந்தாங்க சின்னம்மா. இன்னிக்கு அவருக்கு 62 வயசாச்சு. இன்னிக்கு அக்கா மகன், அண்ணன் மகன், தங்கச்சி மகள்னு சொல்றாங்க இல்ல... சொத்துக்கு ஆசைப்பட்டு அப்படி சொல்கிற பலபேரை அம்மா நமக்கு காமிச்சதில்லை... சொன்னதில்லை. சரி சின்னபிள்ளைக போகட்டும். ஆனா, அம்மா அவங்க அவங்களுக்கு என்ன செய்யணுமோ அத்தனையும் செஞ்சிட்டாங்க.

அம்மா ஆஸ்பத்திரியில இருந்தபோது நடந்த இடைத்தேர்தல்ல அவங்களால கையெழுத்துப் போடமுடியாத சூழ்நிலையில் ரேகை வெச்சு, எங்களையெல்லாம் கூப்பிட்டு, நல்லபடியா வேலைபார்த்து ஜெயிச்சுட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வெச்சாங்க. அந்த தேர்தல்ல ஜெயிச்சதும், அதை டி.வி-யில பார்த்துட்டு, அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டு மூன்று வகையான இனிப்பு கொடுத்துட்டு, நான் அறிக்கைமட்டும்தான் கொடுத்திருந்தேன். நீங்கள்லாம் நல்லா வேலைபார்த்து, வேட்பாளர்களை ஜெயிக்க வெச்சிருக்கீங்க. இது எம்.ஜி.ஆருக்கு கிடைச்ச சாதனைன்னு சொன்னாங்க. அப்பக்கூட எனக்கு கிடைச்ச சாதனைன்னு அம்மா சொல்லல. ஆக மகிழ்ச்சியா இருந்தாங்க.

ஆஸ்பத்திரியில ஒருவாரம், பத்துநாள் இருக்கறவங்களைப் பாத்தா, சேவ் பண்ணாம, தலைக்கு மைப்போடாம ஆளே அடையாளம் தெரியாம மாறிடுவாங்க. இதே பிரச்னைதான் அம்மாவுக்கும். சினிமா கதாநாயகியாக, தலைவராக நாம் பார்த்த அம்மா ஆஸ்பிட்டல்ல ஊசி, மருந்தால் முகங்கள் கருப்பேறிச்சு. அப்பவும்கூட போட்டோ எடுத்துப்போடலாம்னு அப்போலா ஆஸ்பத்திரி சேர்மன் மற்றும் எங்களைப் போன்றவர்கள் எல்லாம், ‘அம்மா, நீங்க நலமா இருக்கீங்கங்கிறதைப் போட்டோ எடுத்து பேப்பர்ல போடலாமா?'னு கேட்டோம். அதுக்கு அவங்க, ‘சீனிவாசன், நீங்கள்லாம் இதுக்கு முன்னாடி என்னை எப்படி பார்த்திருக்கீங்க. இப்ப நான் இருக்கற நிலை என்ன? நான் உடல்நிலை தேறி, குளிச்சி முழுகி, நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு, நானே வந்து வெளிய நின்னு எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்வேன். அதுவரைக்கும் பொறுமையாக இருங்க. பெண்கள், 'அம்மா இப்படி ஆகிட்டாங்களே'னு நினைப்பாங்க. அதுனால உடல் தேறி வரட்டும் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் புகைப்படம் எடுக்காதீங்க'னு சொல்லிட்டாங்க. அஞ்சி நாளைக்கு ஒருதடவை, பத்து நாளைக்கு ஒருதடவை நாங்கள்லாம் சந்திச்சுப் பேசிக்கிட்டிருந்தோம். திடீர்ன்னு அவங்களுக்கு மாரடைப்பு வந்ததுனால இறந்துட்டாங்க” எனக் கண்ணீர் விட்டார்.



மக்களின் பிரதிநிதியான ஓர் அமைச்சரின் இந்தப்பேச்சு மக்களிடம் போய்ச்சேர்ந்த 6 மாதங்களில், அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைந்துவிட்டன. அப்போது அதே திண்டுக்கல்லில் நடந்த 'அண்ணா பிறந்தநாள் விழா' பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ''ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை. சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்கவிடவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், 'அவர் இட்லி சாப்பிட்டார் சட்னி சாப்பிட்டார்' என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய். ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து சசிகலா குடும்பம் கூறச்சொன்னதைத்தான் வெளியில் சொன்னோம். மூத்த அமைச்சர் என்ற முறையில் உண்மையைக் கூற வேண்டிய கட்டாயம் இப்போது எனக்கு உள்ளது” என நல்லபிள்ளையாக மன்னிப்புக் கேட்டார்.

ஜெயலலிதாவின் மரணம் மர்மமானதாகப் பேசப்பட்டுவந்த நிலையில் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் சர்வசாதாரணமாக 'நாங்கள் பொய்சொன்னோம்' எனக் கூறுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு மாறானது இது என்பதைப்பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. எதிர் முகாமை சங்கடப்படுத்த தன் அமைச்சர் பொறுப்பின் கண்ணியத்தைக் காற்றில் பறக்கவிட்டார் அவர்.

சீனிவாசனின் இந்தப் பேச்சுக்குப் பதிலடியாக சசிகலா தரப்பில் பதிலளித்த தினகரன், ''பதவிக்காகத்தான் அவர் இப்படிப் பேசுகிறார்'' என சாதாரணமாகச் சொல்லி விஷயத்தை முடித்துக்கொண்டது இன்னொரு அதிர்ச்சி.

அ.தி.மு.க-வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும்கூட உலகளவில், தமிழர்களிடையே இன்றளவும் கொண்டாடப்படும் தலைவராக இருக்கிறார் அவர். இன்றும் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

அவரது நூற்றாண்டு விழாவை அரசு சார்பில், கொண்டாட முடிவெடுத்த தமிழக அரசு, ஜூன் 30-ம் தேதி தொடங்கி 2018-ம் ஆண்டு ஜனவரி வரைக் கொண்டாட அறிவிப்பு செய்தது. மதுரையில், இதன் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், ''எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாவுக்கு வெளிமாநிலத் தலைவர்களை அழைக்கும் திட்டம் உள்ளதா'' எனப் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு, ''எம்.ஜி.ஆரைத் தமிழகத்தைத் தவிர்த்து யாருக்குத் தெரியும்? அதனால் அழைக்கும் திட்டம் இல்லை'' என கூலாகப் பதிலளித்தார் சீனிவாசன். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பதில் அ.தி.மு.க தொண்டர்களையும் எம்.ஜி.ஆரின் ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்தது.



சமூக வலைதளங்கள் மற்றும் பல திசைகளிலிருந்தும் அமைச்சர் சீனிவாசனுக்கு கண்டனக் கணைகள் வந்தன. ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன், ''எம்.ஜி.ஆரின் புகழுக்குக் களங்கம் விளைவித்த திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கவேண்டும்'' என கொதித்துப் பேட்டியளித்தார். மேலும் டி.டி.வி தினகரன் மற்றும் சில மூத்த அமைச்சர்கள் ''ஏற்கெனவே கட்சிக்குள் பிரச்னை உருவாகி உள்ள நிலையில், இது தேவையா'' என அவரைக் கண்டித்ததாகத் தெரிகிறது.

தன்பேச்சுக்கு எழுந்த எதிர்வினையைக் கண்டு பயந்துபோனவர், “ ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு, அவரோடு இருந்தவர்களையும், அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களையும் அழைப்போம். அவரைப் பற்றி அறியாதவர்களை, அழைக்க வேண்டுமா' என்ற அர்த்தத்தில் நான் கருத்து தெரிவித்தேன். அதை, ஊடகங்கள், தவறாக வெளியிட்டுள்ளன. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என இரண்டு தலைவர்களையும், உயிருக்கும் மேலாக நேசித்து வருகிறேன். எனவே, எம்.ஜி.ஆர் குறித்து நான் சொன்னதாக வந்த செய்தி தவறானது'' எனப் பல்டி அடித்தார் திண்டுக்கல் சீனிவாசன்.

தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் கவர்னர் வீட்டுக்கும் தினகரன் வீட்டுக்குமாக ஆட்சியைக் கலைக்கச்சொல்லி மனுக்களுடன் அலைந்துகொண்டிருந்தபோது அதுபற்றி திண்டுக்கல் சீனிவாசனிடம் கருத்துக் கேட்கப்பட்டது. “எங்களுக்கு போதிய எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்கு. அப்படியே கடைசி நேரத்துல ஒண்ணு ரெண்டு குறைஞ்சாலும் அதை எப்படி சரிகட்டணும்னு எங்களுக்கு தெரியும்...அதான் பெரியவங்க சொல்லியிருக்காங்களே... பாதாளம் வரைக்கும் பாயும்னு” எனச் சர்வசாதாரணமாகப் பத்திரிகையாளர்களிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், அமைச்சரோ அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் அடுத்த கேள்விக்கு போய்விட்டார்.

இதுமட்டும்தானா... கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி வனத்துறை சார்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், 6 மாதங்களுக்கு முன் ஜெயலலிதா சென்னையில் டெங்கு போன்ற காய்ச்சல் தீர நிலவேம்புக் கஷாயம்குடிக்க வேண்டும் எனக் கூறியதாகவும் அதைச் சாப்பிட்டதன் மூலம் மக்கள் தொற்றுநோயிலிருந்து தங்களைக் காத்துக்கொண்டதாகக் கூறி பகீர் கிளப்பினார். நேற்றுவரை அம்மா அம்மா என உருகியவர், இப்போது அம்மாவை 'ஆவி'யாக்கிவிட்டதை எண்ணி தொண்டர்கள் வேதனைப்படுவதைத் தவிர எண்ண செய்துவிட முடியும்.

கடந்த மாதம் கொளப்பாக்கத்தில் நடந்த அரசு விழாவொன்றில் கலந்துகொண்ட அவர், "காய்கறிகள், கீரைகளில்தான் சத்துகள் அதிகம். சிக்கன், மட்டன் எல்லாம் வேஸ்ட். மட்டன், சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். சைவ உணவுகள் சாப்பிட்டால்தான் உடல் இளைக்கும்'' எனப் பேசினார். 'மருத்துவ ரீதியாக இது பல வாதப்பிரதிவாதங்களை கொண்டுள்ள நிலையில், ஒரு மாநில அமைச்சர் போகிற போக்கில், இப்படி அடித்துவிடுவது நியாயமா?' என மருத்துவ உலகில் சர்ச்சை எழுந்தது.

அமைச்சரின் 'பொறுப்புஉணர்வு' அத்துடன் முடிந்ததா என்றால் இல்லை... டெங்கு காய்ச்சலால் தமிழகம் கடந்த இரு மாதங்களாக அதகளப்பட்டுக்கொண்டிருக்க, கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “திண்டுக்கல்லில் 4 பேர் வைரஸ் காய்ச்சலில்தான் இறந்தனர். டெங்குவால் யாரும் இறக்கவில்லை” எனச் சொல்லிவைத்தார். டெங்குவால் 36 பேரை இழந்த திண்டுக்கல் மக்கள் இந்தப் பதிலால் எரிச்சலடைந்தனர். ஆனால், 5 தினங்கள் கழிந்த பின்னர், ''அது என்ன ஜுரமோ எனக்குத் தெரியாது” எனப் பல்டி அடித்தார்.



இறுதியாக (?) கடந்த சில தினங்களுக்கு முன் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் டெங்குவுக்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசியவர், ''துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து டெங்கு தொடர்பாக ஆய்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தார்'' எனச் சொல்லி மேடையில் இருந்தவர்களை ஜெர்க் அடையவைத்தார். 'ஒரு மாநிலத்தின் அமைச்சருக்கு நாட்டின் பிரதமர் யார் என்றுகூடவாத் தெரியாது?' எனக் கூட்டத்தில் முணுமுணுப்பு எழுந்தாலும் தான் தவறாகப் பிரதமர் பெயரை உச்சரித்துவிட்டதைக்கூட உணராமல் பேச்சைத் தொடர்ந்தார் அமைச்சர். அமைச்சரின் இந்தப் பேச்சு வீடியோ வடிவில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் துவைத்து எடுக்கப்படுகிறது.

அ.தி.மு.க-வின் சீனியர் என்பதைத்தாண்டி இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்றுக்கொண்ட ஒருவரின் இத்தகைய முரண்பாடான பேச்சுகள் பொறுப்பற்றத்தனமானது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான பேச்சுகளில் அவர் எல்லை தாண்டி பேசியிருப்பது, தண்டனைக்குரிய குற்றமும்கூட. உலகம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவகாரத்தில், ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையைத் திசைமாற்றுகிற வகையிலிருந்த அவரது பேச்சுகள் நேற்றுவரை பொறுப்பற்றத்தனம். இன்று ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணைத் தொடங்கியுள்ள நிலையில், அது ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் உள்ள சந்தேகங்களை அவிழ்க்கும் சாட்சியம்.

தன் பொறுப்பற்றப் பேச்சாலும் நடவடிக்கைகளாலும் விசாரணை கமிஷன் முன்பு நிச்சயம் அவர் பதில் சொல்ல வேண்டியதிருக்கும். அதுவரை அவரது பொறுப்பற்றத்தனத்துக்கு வாக்காளர்களாக நாமும் கொஞ்சம் கொஞ்சம் வருந்தத்தான் வேண்டியிருக்கிறது!

திண்டுக்கல் சீனிவாசன் வாய்க்கு அவர் சொந்த ஊரில் புகழ்பெற்ற பூட்டைப் போட்டால்தான் கட்சி பிழைக்கும் என்கிறார்கள் சொந்தக்கட்சியினரே!

Hike personal accident cover: HC

High Court says amount awarded in motor accident cases paltry

Wondering how compulsory personal accident cover for those who pay insurance premium could be restricted to just Rs. 1 lakh in case of two-wheelers and Rs. 2 lakh in case of four-wheelers, the Madras High Court has directed the Insurance Regulatory and Development Authority (IRDA) to consider raising the quantum to Rs. 15 lakh.
Justices R. Subbiah and A.D. Jagadish Chandira issued the direction while partly allowing an appeal preferred by an insurance company, challenging the award of Rs. 51.37 lakh by a motor accidents claims tribunal in Neyveli to the family of a motorist who died in a road accident. The judges ordered that the family was entitled to only Rs. 1 lakh.
Pointing out that the accident occurred without the intervention of any other vehicle on the road, the judges said that in such cases, the families of the victims would be entitled only to the amount covered under personal accident cover and not the third party insurance cover which was usually on the higher side.

Only 11 fail to clear test for sanitary workers

2,300 candidates make it to next round

The Madras High Court is now faced with the daunting task of conducting practical tests for almost all candidates who appeared for the written test for filling up 68 sweeper and 59 sanitary worker posts, as just 11 out of 2,357 candidates failed to score the minimum qualifying marks.
A woman candidate, J. Priya, was the only one to have scored 50 out of 50 marks in the written test. Nevertheless, 1,104 candidates scored between 40 and 49 marks, thereby diminishing the chances of all others to get selected for the posts even if they manage to get good scores in the practical test as well as the interview.
Court sources said there was also an equal chance of those who had scored well in the written test not making it to the final selection list, since every successful candidate would have to necessarily score the minimum qualifying mark of five out of 25 marks in the practical test and three out of 10 marks in the interview.
Not expressing surprise over most of the candidates having scored good marks in the written test, a court official said the bilingual question paper (with 35 questions on general knowledge and 15 on general Tamil) was set only at the level of understanding of an individual who would have passed Class VIII.
When did India attain Independence? Which telephone number would you dial to call the police? Who is popularly known as Kappalottiya Tamilan ? Which is the chief judicial authority of India? Which is our national tree? Who built Kallanai? were some of the multiple choice questions asked in the written test.
One of the current affairs questions was: Who is the incumbent Vice President of India? And curiously, the question paper itself had misspelt the name of M. Venkaiah Naidu as “Hon’ble Vengaiah Naidu.”
The other options provided for the question were: “Hon’ble Thameem Ansari, Hon’ble Kalleswaran and Hon’ble N.T. Thivari.”

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...