Thursday, November 2, 2017

தாம்பரம் பகுதிகளில் கனமழை ரெயில் நிலையம், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு



தாம்பரம் பகுதிகளில் பெய்த கனமழையால் ரெயில் நிலையம், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நவம்பர் 01, 2017, 04:45 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலைவரை கனமழை பெய்தது. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை முழுவதும் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்துக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் நிரம்பியதால் போக்குவரத்து முடங்கியது. தாம்பரம்–வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். சேலையூர் பகுதி ஏரியில் மழைநீர் நிரம்பி சிட்லபாக்கம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டனர். சேலையூர்–அகரம்தென் பிரதான சாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்தனர்.

திருவஞ்சேரி, மப்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. நெடுஞ்சாலை துறையினர் முறையாக கால்வாய்களை அமைக்காததால் தான் மழைநீர் தேங்கி நிற்பதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலையூர் போலீசார் உடனே அங்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மழைநீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

தாம்பரம்–முடிச்சூர் சாலையில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் சென்றது. இதனால் கவுல் பஜார் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் சிக்னல் கிடைக்காமல் சானடோரியம் அருகே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோல் செங்கல்பட்டில் இருந்து வந்த ரெயில்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன.

பல்லாவரம் காமராஜர் நகர் பகுதியில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் மழை நீரோடு கலந்து வீடுகளில் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பகுதிகளை காஞ்சீபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா, கலெக்டர் பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். கழிவுநீர் செல்வதை தடுக்க பொதுமக்கள் 6 மாதமாக கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி, அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலையூர் ஏரி, திருவஞ்சேரி பகுதிகளையும் கண்காணிப்பு அலுவலர் அமுதா, கலெக்டர் பொன்னையா ஆகியோர் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உத்தரவிட்டனர்.

பலத்த மழை காரணமாக தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு முழுவதும் மழைநீர் தேங்கியது. இதனால் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு மருத்துவமனையின் உட்பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

பொழிச்சலூர் ஊராட்சி 9–வது வார்டு தாங்கல் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியதால் பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சங்கர் நகர் போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தாம்பரம் அருகே வரதராஜபுரம் ஊராட்சி மகாலட்சுமி நகர், பி.டி.சி. காலனி, முல்லை நகர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 3 அடிக்கு மேல் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. அஷ்டலட்சுமி நகர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீர் வீடுகளில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியேறினர்.

தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற பரிசல் படகை வருவாய் துறையினர் அப்பகுதிக்கு கொண்டு வந்தனர். வெள்ளத்தில் தவித்த மக்கள் பரிசல் மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுவரப்பட்டனர். அப்பகுதியில் வருவாய் துறையினரும், போலீசாரும் தொடர்ந்து முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...