Friday, November 3, 2017

இப்படியும் ஏமாற்றுகிறார்கள்! உஷார் ரிப்போர்ட்!


By ஹரிஹரசுதன் தங்கவேலு  |   Published on : 02nd November 2017 01:25 PM 
scam

உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா என்ற போர்வையில் ஒரு மாஸ்டர் மைண்ட் மோசடியை நிகழ்த்தி, சுமார் 1.30 லட்சத்தை ஒரு இளைஞரின் ICICI சேலரி அக்கவுண்டில் இருந்து திருடியிருக்கிறார்கள், இதற்கும் அந்த பட்டதாரி வாலிபர் சமீபத்திய பின் நம்பர் கேட்கும் மோசடிகள், க்ரெடிட் கார்டு மோசடிகள் எல்லாவற்றையும் தெரிந்து மிக கவனமாகவே இருந்திருக்கிறார், இருந்தும் இந்த ஆதார் எண் இணைக்க வேண்டி தினசரி வரும் அழைப்புகள் போல இதுவும் இருந்ததால் ஏமாந்துவிட்டார், என்ன நடந்தது?
'வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா ?”
'இல்லைங்க , இன்னும் இல்லை'
'சார்! அரசு உத்தரவுப்படி இன்னும் சில நாட்களுக்குள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், நீங்கள் விரும்பினால் இந்த அழைப்பின் வழியாகவே உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம், உங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா ?”
'இருக்கு, சொன்னா போதுங்களா, நீங்களே அப்டேட் பண்ணிடுவீங்களா ?”
'நிச்சயமாக சார், உங்களுக்கு உதவுவதற்க்காவே இந்த வசதி, உங்கள் ஆதார் எண்ணை சொல்லுங்கள்!” (ஆதார் எண்ணை சொல்கிறார்,)
'ஆதார் எண் தந்தத்திற்கு நன்றி, உங்கள் எண் இந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுவிட்டது வாழ்த்துக்கள், இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதை செய்தால் மட்டுமே நீங்கள் தான் இந்த மொபைல் எண் உபயோகிப்பாளர் என எங்களால் உறுதி செய்துகொள்ளமுடியும்,”
’என்ன பண்ணணும்ங்க?’
'உங்களது சிம் கார்டில் உள்ள 20 இலக்க சிம் எண்னை மெஸேஜில் SIM என டைப் செய்து ஏர்டெல்லின் 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அனுப்பவும், அனுப்பிய பிறகே உங்கள் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுமையடையும்’
’(யோசிக்கிறார்) 'மேடம் ! சிம்மு போனுக்குள் இருக்குது, அந்த நம்பர் எனக்கு தெரியாதுங்களே’
'கவலை வேண்டாம் சார், உங்கள் சிம் நம்பரை இப்போது உங்களுக்கு மெஸேஜில் அனுப்பியுள்ளேன், அதை அப்படியே 121 என்ற எங்களது சேவை மைய எண்ணிற்கு அனுப்பவும், நன்றி’
'121 க்கு தானுங்க அனுப்பனும், வேற எங்கியும் இல்லீங்களே, ஏன்னா ஊர் பூரா முடிச்சவிக்கு பசங்க புதுபுதுசா ஏமாத்தறானுக, அதான் கேக்குறங்க’
'சார், இது ஏர்டெல்லின் அதிகார பூர்வ அழைப்பு, 121 எங்களது அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை மையம், அதற்க்கு மட்டுமே அனுப்பினால் போதும். நன்றி’
இப்படி நமக்கு ஒரு போன் வந்தா எத்தனை பேர் 121-க்கு சிம் நம்பர் அனுப்பியிருப்போம், கிட்டத்தட்ட எல்லோருமே, இல்லையா? அதே போலத்தான் இவரும் அனுப்பியிருக்கிறார், அனுப்பிய சிலமணிநேரங்களில் இவரது அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து 10000, 20000 என சரமாரிக்கு பணம் உருவப்பட்டு, இவர் சேர்த்து வைத்திருந்த Fixed Deposits உட்பட 1.30 லட்சங்களை மொத்தமாக 18 மணி நேரத்தில் அபேஸ் பண்ணிவிட்டார்கள், ஐயோ, இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா, சாத்தியமே1
உங்கள் வங்கி கணக்குகளின் இணைய சேவை பாஸ்வேர்ட் மாற்றுவது, ஏடிஎம் பின் நம்பர் மாற்றுவது, புதிய அக்கவுண்டகளை இணைத்தல், பண பரிமாற்றம் என எதை இணைத்தாலும், மாற்றினாலும் அவை எல்லாமே ஒன்றே ஒன்றை அடிப்படையாக கொண்டே மாற்ற முடியும், அது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP, அந்த OTP-யை பெற்றே மேற்சொன்ன மோசடியை நிகழ்த்தியிருக்கிறார்கள், எப்படி ?
ஏர்டெல் 3G-யில் இருந்து 4G சிம்முக்கு உங்கள் எண்ணை மாறுங்கள், ஃப்ரீ ஃப்ரீ என ஊர் பூரா கூவிக் கொண்டிருக்கிறது, இதற்காக ஒரு சேவையை தொடங்கியது, வாடிக்கையாளருக்கு இலவசமாக 4G சிம் கார்டுகளை தர தொடங்கியது, அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், SIM என டைப் செய்து 20 இலக்க புது சிம் எண்னை 121 க்கு அனுப்பிவிட்டால் இரண்டு மணிநேரத்தில் புதிதாக தரப்பட்ட 4G சிம்மில் உங்கள் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும், பழைய சிம்மை தூக்கி போட்டுவிட்டு இதை செருகி 4G தரத்தில் உபோயோகிக்கலாம்.
இந்த சேவையை தான் இந்த திருடர்கள் உபயோகித்து கொண்டனர், ‘எனக்கு சிம் நம்பர் தெரியாதுங்க’ என்ன சொல்லியதும் அவர்கள் அனுப்பினார்கள் பாருங்கள் ஒரு சிம் நம்பர், அது உங்கள் போனில் நீங்கள் பேசி கொண்டிருக்கும் சிம்மின் 20 இலக்க எண் அல்ல, அவர்கள் கை வசம் ஆக்டிவேட் ஆக தயார் நிலையில் உள்ள ஒரு 4G சிம். அவர்கள் அனுப்பிய மெஸேஜை 121 க்கு நீங்கள் அனுப்பியதால் சிலமணி நேரங்களில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவர்கள் சிம்மில் உங்கள் எண் ஆக்டிவேட் ஆகிவிடும், பிறகு OTP என்ன, உலகமே உங்களிடம் பேச நினைத்தாலும் எல்லா அழைப்புகளும் அவனுக்குத் தான் போகும். எவ்வளவு எளிமையாக, நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்!
மேற்சொன்ன மோசடியில் முதல் 3000 உருவப்பட்ட போதே ICICI க்கு சொல்லி அக்கவுண்ட்டை தற்காலிகமாக முடக்க சொல்லியிருக்கிறார் இளைஞர், ஆனால் ICICI தேமே என 18 மணிநேரம் தேவுடு காக்க, அதற்குள் மொத்த வைப்பு தொகையையும் சுருட்டிவிட்டார்கள், இந்த மாதிரி நூதன, எளிமையான, மிக மிக நம்பிக்கை தரும் வகையில் நீங்களும் ஏமாற்றப்படலாம், எக்காரணம் கொண்டும் உங்கள் சிம் கார்ட் நம்பர் உட்பட, OTP எண், PIN நம்பர் போன்றவைகளை யாரிடமும் பகிராதீர்கள், மோசடி பேர்வழிகளிடம் இருந்து, கவனமாக உங்கள் கையிருப்பை காத்திடுங்கள். நன்றி.
நன்றி : ஹரிஹரசுதன் தங்கவேலு / ஷான் கருப்பசாமி 

6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


By DIN  |   Published on : 03rd November 2017 04:49 AM  |

rain-flood


தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

வெள்ளக்காடானது சென்னை


By DIN  |   Published on : 03rd November 2017 04:43 AM  
chennai
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையச் சாலையில் வெள்ளத்தில் நீந்தி வரும் கார் .

சென்னையில் வியாழக்கிழமை (நவ.2) மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை (நவ.3) காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி அதன் அளவு அதிகரித்து பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
154 மி.மீ. மழை: வானிலை ஆராய்ச்சி மைய கணக்கீட்டு அளவின்படி வியாழக்கிழமை (நவ.2) காலை 8.30 மணி முதல் நள்ளிரவு வரை 154 மி.மீ. மழை பதிவானது; மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (நவ.3) காலை 8.30 மணிக்கு (12 மணி நேரம்) கணக்கிடும்போது, 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 200 மில்லி மீட்டரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையின் விகிதமும் அதிகரிப்பு: வியாழக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியபோது அதன் விகிதம் 1 மணி நேரத்துக்கு 7 சதவீதமாக இருந்தது; வியாழக்கிழமை இரவு மழையின் விகிதம் 1 மணி நேரத்துக்கு 10 சதவீதம் என அதிகரித்து நள்ளிரவில் 20 சதவீதத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் மின் வெட்டு: மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க சென்னை நகரின் பல இடங்களில் வியாழக்கிழமை இரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் வரை சாலையின் இருபுறமும் மழை நீர் வெள்ளம் போன்று தேங்கி நின்றது. இதனால், தலைமைச் செயலகம், நீதிமன்றம், துறைமுகம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் என முக்கிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிகளை முடித்து வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பொது மக்களும் ஆங்காங்கே வெகு நேரம் காத்திருந்தனர்.
பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்: கனமழை காரணமாக, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை பாரிமுனையில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் ரயில்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன. அலுவலகப் பணிகளை முடித்து சென்னை கடற்கரை, கோட்டை ரயில் நிலையங்களில் இருந்து மாலை 6 மணிக்கு ரயில் ஏறிய பல ஊழியர்கள் இரவு 9 மணிக்கே வீடுகளுக்குச் சென்று சேர்ந்தனர். 

மாயமான வருமான வரி அதிகாரி சிறு காயங்களுடன் மீட்பு

கிருஷ்ணகிரி: காணாமல் போன, கோவை வருமான வரி அதிகாரி, கிருஷ்ணகிரி அருகே காயங்களுடன் மீட்கப்பட்டார். கோவை, பீளமேடு கவுதமபுரியை சேர்ந்தவர் சிவக்குமார், 38; கோவை வருமானவரி அலுவலகத்தில், துணை ஆணையராக பணிபுரிகிறார். கடந்த மாதம், 13ல் அலுவலகம் சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. அவரின் தம்பி ராம்குமார் புகாரின்படி, பீளமேடு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அச்ச மங்கலம் கூட்ரோடு அருகில், உடலில் சிறு காயங்களுடன் சிவக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியே ரோந்து சென்ற ஊர்க்காவல்படையினர் அவரை மீட்டு, கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில், போலீசார் சேர்த்தனர். ராம்குமாருக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ஒப்படைத்தனர்.

குப்பையில், 'ஆதார்' அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி


குப்பையில், 'ஆதார்' அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், குப்பையில் வீசப்பட்டு கிடந்த, 'ஆதார்' அட்டைகள் மற்றும் முக்கிய கடிதங்களை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி, பழைய பேட்டை பகுதியில், நேற்று காலை, குப்பை அள்ளும் பணியில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். நேதாஜி சாலையில், மூன்று பிளாஸ்டிக் பைகளில் வீசப்பட்டிருந்த குப்பையை அள்ளும் போது, ஆதார் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்ததை பார்த்தனர். பையை கீழே கொட்டி பார்த்த போது, ஏராளமான கடிதங்களும், பிரிக்கப்படாத ஆதார் அட்டைகளும் இருந்தன. அவை, கனகமுட்லு தபால் அலுவலகத்தில் இருந்து, பொதுமக்களுக்கு வழங்க எடுத்து வந்தவை என்பது தெரிந்தது. மேலும், 50க்கும் மேற்பட்ட ஒரிஜினல் ஆதார் அட்டைகள், வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய, ஏ.டி.எம்., கார்டின் பின் எண்கள், நகை அடமான கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய கடைசி நாளுக்கான அழைப்பு கடிதங்கள் கிடந்தன. அத்துடன், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டண விபர கடிதங்கள், எல்.ஐ.சி., கடிதங்கள் என, முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், பிரிக்கப்படாமல், பண்டல்களாக கட்டி போடப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி கோட்ட தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர், சுப்பாராவ் கூறுகையில், ''குப்பையில் வீசப்பட்ட கடிதங்கள் மற்றும் ஆவணங்கள், 2015 மற்றும், 2016ல் டெலிவரி செய்ய வேண்டியவை. ''இது எவ்வாறு நடந்தது என, துறை ரீதியாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையில் வீசப்பட்ட கடிதங்களை, டெலிவரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

மணக்கோலத்தில் தேர்வெழுதிய பாலிடெக்னிக் மாணவி


மணக்கோலத்தில் தேர்வெழுதிய பாலிடெக்னிக் மாணவி
விழுப்புரம்: பாலிடெக்னிக் மாணவி, மணக்கோலத்தில் வந்து, தேர்வு எழுதினார்.
விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்தை சேர்ந்த வினோதினி; கப்பியாம்புலியூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 26ம் தேதி துவங்கிய, தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கான வாரிய தேர்வை எழுதி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, வினோதினிக்கு, கடலுார் மாவட்டம், திருவந்திபுரத்தில் திருமணம் நடந்தது. இதைதொடர்ந்து, நேற்று நடந்த, 'டிஜிட்டல் கம்யூனிகேஷன்' தேர்வை எழுதுவதற்காக மணமகள் புறப்பட்டார். காலை, 9:00 மணிக்கு, வினோதினி மணக்கோலத்தில், தன் கணவருடன் காரில் வந்து, தேர்வு எழுதினார்.

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


சென்னை: 'வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - ௪ தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும், குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளுக்கும், வி.ஏ.ஓ., பதவிக்கும், பத்தாம் வகுப்பு தான் 
கல்வித் தகுதி.இரண்டு பதவிகளுக்கும், தனியாக தேர்வு நடத்தும்போது, குரூப் - 4 பணிகளுக்கு, 15லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கின்றனர். வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - ௪ தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர்.
தனியாக நடத்தும்போது, ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. இரண்டு தேர்வுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க, அதிக செலவாகிறது.
இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், மறு பதவிக்கு, மற்றொரு தேர்வு எழுதுவது தெரிகிறது.
எனவே, குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளில், வி.ஏ.ஓ., தேர்வையும் இணைத்து. ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப் - 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், வி.ஏ.ஓ., தேர்விலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, பயிற்சி குறித்த பகுதி, தேர்வுக்கான பாடத் திட்டத்தில் தேவை இல்லை என, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்து உள்ளது.

NEWS TODAY 01.07.2026