Saturday, November 4, 2017


துணைவேந்தருக்கு எதிரான வழக்கு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் தாக்கப்பட்டது தொடர்பாக, தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கை வாபஸ் பெற்றதால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் (ஓய்வு) சீனிவாசன். பல்கலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாகக்கூறி போராடினார். 2014 மே 16 காலை 6:30 மணிக்கு நடைப்பயிற்சி சென்றபோது, 
சீனிவாசன் தாக்கப்பட்டார்.
அப்போதைய துணைவேந்தர் கல்யாணி, பதிவாளர் முத்துமாணிக்கம், இளைஞர் நலத்துறை தலைவர் செல்லத்துரை (தற்போது துணைவேந்தர்), பி.ஆர்.ஓ., அறிவழகன், ஓய்வு பெற்ற ஊழியர் செல்வராஜ் உட்பட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சீனிவாசன், 'எனக்கும், சாட்சிகளுக்கும் மிரட்டல் வருகிறது. போலீசார் பாதுகாப்பு அளிக்க 
வேண்டும். 
நடுநிலையான விசாரணை நடத்தி, வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. அதில் தற்போது கோரும் நிவாரணம் தொடர்பாக கூடுதல் மனு செய்யலாம். புதிதாக தனி மனு தாக்கல் செய்து, நிவாரணம் கோருவது ஏற்புடையதல்ல. இம்மனு நிலைநிற்கத்தக்கதல்ல,'' என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றதால், நீதிபதி தள்ளுபடி செய்தார்.

குரூப் - 1 தேர்வு பட்டியல் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு


சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 1 தேர்வில், தேர்வானவர்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கையான சுவப்னா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், '2015ல், 68 பணிகளுக்கான, குரூப் -1 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. தேர்வுக்கான விடைத்தாள் ெவளியானதால், அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இதுகுறித்து விசாரணை நடத்த, போலீசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'தேர்வாணையம் தரப்பில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை' என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும், தனியார், 'டிவி'யில் ெவளியான விடைத்தாளும், தேர்வாணையம் அளித்த விடைத்தாளும், ஒரே மாதிரியாக உள்ளதாகவும், ஒரே இயந்திரத்தில் அச்சிடப்பட்டதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, குரூப் -1 தேர்வில், தேர்வானவர்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளிவைத்தார்.

எம்.பி.பி.எஸ்.,க்கு தேர்வானவர்களின் விபரங்கள் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: மருத்துவ படிப்புக்கு, தேர்வானவர்களின் விபரங்களை தாக்கல் செய்யும்படி, தேர்வுக்குழு செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, நீரஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:திருச்சியில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில், எனக்கு இடம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்துக்கான தகுதி பட்டியலில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இடம் பெற்றனர். அண்டை மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தை சொந்த ஊராக காட்டி, அதற்கான சான்றிதழ் அடிப்படையில், மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.முறையாக தேர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்த தவறு நடந்திருக்காது. அதிகாரிகளின் அலட்சியத்தால், சென்னையில், எனக்கு இடம் கிடைக்கவில்லை. சென்னையில் மட்டும், அண்டை மாநிலங்களை சேர்ந்த, ௧௦௦க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு, என்னை மாற்றும்படி கேட்டும், எந்த பதிலும் இல்லை. எனவே, சென்னையில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு, மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி, கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

சென்னை மருத்துவ கல்லுாரியில், அண்டை மாநிலங்களை சேர்ந்த, ௧௦௪ மாணவர்களும், தமிழகத்தை சேர்ந்த மற்ற கல்லுாரிகளில், ௪௪௦ மாணவர்களும் சேர்ந்திருப்பதாக, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். சொந்த ஊருக்கான சான்றிதழை, தாசில்தார் வழங்கியிருப்பதால், வருவாய் துறை செயலரை, வழக்கில் சேர்க்கிறேன்.

மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள் அடங்கிய கோப்பு மற்றும் ஆவணங்களை, தேர்வுக் குழு செயலர், தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

'பார்சல்' பொருட்கள் சேதம் :இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை;பார்சலில் அனுப்பிய, வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்ததால், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.சென்னையில், தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிய காஞ்சனா என்பவர், கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னையிலிருந்து வீட்டு உபயோக பொருட்களை கொண்டு வருவதற்கு, குளத்துாரிலுள்ள 'பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்' என்ற தனியார் நிறுவனத்தில், 2013, மே., 30ல் புக்கிங் செய்தார்.
இதற்காக, ரூ.13 ஆயிரத்து 500 கட்டணம் கொடுத்தார். பார்சலில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. உடைந்த பொருட்களுக்கு இழப்பீடு கேட்டபோது கொடுக்க மறுத்தனர். கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில், காஞ்சனா வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த நீதிமன்ற தலைவர் செங்கோட்டையன், சேதமடைந்த பொருட்கள் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாயும், வழக்கு செலவிற்கு மூவாயிரம் ரூபாயும் வழங்க பார்சல் புக்கிங் நிறுவனத்துக்கு நேற்று உத்தரவிட்டார்.

செல்லாத நோட்டு, 'டிபாசிட்' விவகாரம் : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்


புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய அனுமதி கோரும், 14 வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன சட்ட அமர்வுக்கு, உச்ச நீதிமன்றம் மாற்றி உள்ளது.
புழக்கத்தில் இருந்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016 நவ., 8ல் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய முடியாத, 14 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு விசாரித்தது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு செல்லாது என, அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு, ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. 
அந்த வழக்குகளுடன், 'டிபாசிட்' செய்ய அனுமதி கோரும் வழக்குகளையும் விசாரிக்கும் வகையில், இந்த, 14 வழக்குகளும், ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுவதாக, மூன்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

தொலைதூர கல்வி திட்டத்தில் தொழில்நுட்ப கல்விக்கு தடை


புதுடில்லி: 'தொழில்நுட்ப கல்வியை, தொலைதுார கல்வி திட்டத்தில் வழங்கக் கூடாது' என, பல்கலைக்கழகங்களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
நாட்டில் செயல்படும், மத்திய, மாநில பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைகள், நேரடியாகவும், கல்லுாரிகள் வாயிலாகவும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்கி வருகின்றன. அவற்றில் சில பல்கலைகள், தொலைதுார கல்வி திட்டத்தில், மாணவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பளிக்கின்றன.சில தனியார் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைகள், தொலைதுார கல்வி திட்டத்தில், பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டங்களை வழங்குவதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:தொலைதுார கல்வி திட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கற்பிப்பதை ஏற்க முடியாது. பல தனியார் பல்கலைகள், தொலைதுார கல்வி திட்டத்தில், பி.இ., - பி.டெக்., பட்டங்களை வழங்கியுள்ளன. இவ்வகை பட்டங்கள் செல்லாது

வரும், 2018 - 19 முதல், இவ்வகை கல்வி திட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. 2001 முதல், தொலைதுார கல்வி திட்டத்தில் வழங்கப்பட்ட, அனைத்து தொழில்நுட்ப பட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் சார்பில் நடத்தப்படும், ஸ்கிரீனிங் டெஸ்டில், அவர்கள் வெற்றி பெற வேண்டும். இரண்டு வாய்ப்புகளுக்குள், இதில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆர்.ஐ.,க்கு அறை : வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'


புவனகிரி: வருவாய் ஆய்வாளரை தாக்கிய, வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் சங்கர், பரங்கிப்பேட்டை வருவாய் கோட்டத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள் பற்றிய விபரங்களை, கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டிருந்தார். சேந்திரக்கிள்ளை, வி.ஏ.ஓ., அலெக்சாண்டர், ஆக்கிரமிப்பு விபரங்களை தரவில்லை. இது தொடர்பாக கேட்டபோது, ஆத்திரமடைந்த அலெக்சாண்டர், சங்கரின் கன்னத்தில் அறைந்தார். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, அலெக்சாண்டரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், அலெக்சாண்டரை, 'சஸ்பெண்ட்' செய்து, சிதம்பரம், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், நேற்று உத்தரவிட்டார்.

NEWS TODAY 01.07.2026