Monday, November 6, 2017


மழைக்கால விடுமுறை நிறைவு : பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு


மழைக்கால தொடர் விடுமுறை முடிந்து, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இன்று, இடை தேர்வுகள் துவங்குகின்றன. தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். 
சென்ற வாரம் திங்களன்று மட்டுமே, பள்ளிகள் செயல்பட்டன. வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், அக்., ௩௦, செவ்வாய் முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, கனமழை குறைந்து விட்ட நிலையில், இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் வரமுடியாத அளவுக்கு, வெள்ளப்பெருக்கு உள்ள பகுதி பள்ளிகளும், வளாகத்தில் தண்ணீர் தேங்கிய பள்ளிகள் மட்டுமே இன்று இயங்காது.
இதை, அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ள, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இன்று பள்ளிகள் துவங்கும் போது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வும் துவங்குகிறது. அதேநேரத்தில், மழை பாதித்த பகுதிகளில், பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை, உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் அகற்றி, நிலைமையை சீர் செய்யவும், அதிகாரிகள் வலியுறுத்திஉள்ளனர்.

- நமது நிருபர் -


ஆறு டிக்கெட் முன்பதிவு: ஆதார் அவசியமில்லை - ரயில்வே அறிவிப்பு


'மாதத்தில் ஆறு டிக்கெட் வரை, முன்பதிவு செய்யும் பயணியருக்கு, ஆதார் எண் அவசியமில்லை' என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வேயும், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து, பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மிகம், சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்களில், பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர். இதர ரயில்களில் செல்வோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்திலும், அனுமதி பெற்ற முகவர்கள் மூலமும், 'இ - டிக்கெட்' பெற்று பயணித்து வருகின்றனர். டிஜிட்டல் மயமாக்கம், பயணியர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பயணியர், ஆதார் எண் பதிவு செய்ய, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமீபகாலமாக, பணம் சம்பாதிக்கும் நோக்கில், அனுமதியற்ற போலி முகவர்கள் அதிகரிப்பு, டிக்கெட் விற்பனையில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் அதிகரித்தன. இவற்றை கட்டுப்படுத்த, ஆறு டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவுசெய்யும் பயணியருக்கு, ஆதார் எண் அவசியம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சில முகவர்கள், கமிஷன் நோக்கில் அதிகமான டிக்கெட்டு கள் முன்பதிவு செய்து, விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுகின்றன. போலி முகவர்களால் பயணியர் ஏமாற்றத்துக்கும் ஆளாகின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இணையதளத்தில் ஆதார் பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. மாதத்தில் ஆறு டிக்கெட்கள் பெறுவோருக்கு, ஆதார் அவசியமில்லை; அதற்குமேல், ஆதார் பதிவு அவசியம்,'' என்றார்.

- நமது நிருபர் -
மழைக்கு தேசிய நெடுஞ்சாலைகள், 'அவுட்'  சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறல்
மழையால், தேசிய நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறி வருகின்றன.




சென்னையை, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுடன் இணைக்கும் வகையில், 4,994 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப் பட்டு உள்ளன. இதில், சென்னை - திருச்சி, சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, தேசிய நெடுஞ் சாலைகள் முக்கியமானவை.

இச்சாலைகள் வழியாக, நாள் தோறும்ஏராளமான சரக்கு வாகனங்கள் சென்னை வந்து செல்கின்றன. பயணியர் போக்குவரத்திற்கான அரசு மற்றும் ஆம்னி பஸ்களும் வருகின்றன.இச் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, பல்வேறுஇடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை பராமரிப்பு பணிகளை செய்து, சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, தனியார் நிறுவனங் களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்நிறுவனங்கள் சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஏற்கனவே, முறையான பராமரிப்பின்றி கிடந்த சாலைகள், மழையால் மேலும் சேதம் அடைந்துள்ளன.

பல இடங்களில், அபாய பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர்தேங்கி உள்ளது. சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், சென்னை - கோல் கட்டா தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், அதிகம் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றில், வாகனங்கள் தள்ளாடியபடியே
பயணிக்கின்றன; ஆங்காங்கே, வாகனங்கள் பழுதாகியும் நிற்கின்றன.

எனவே, இச்சாலைகளில் பயணிக்கும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின் றனர். போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், சாலைகளை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 102வது பிறந்த நாள் கோலாகலம்

 5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 102வது பிறந்த நாள் கோலாகலம்
கோபி:கோபி அருகே, ஐந்து தலைமுறை கண்ட மூதாட்டி, 102வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரமாயாள், 102; இவரது கணவர், 40 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தம்பதிக்கு, மூன்று மகன்கள்; நான்கு மகள்கள். இவர்களில், ஒரு மகன், இரண்டு மகள்கள் இறந்து விட்டனர். மற்றவர்கள் உள்ளூரில், குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

கடந்த, 1915ல் பிறந்த பெரமாயாளுக்கு, நேற்று, 102வது பிறந்த நாள். இரண்டு மகன், இரண்டு மகள், ஏழு பேரன்கள், ஆறு பேத்திகள், ஏழு கொள்ளு பேரன்கள், ஒன்பது கொள்ளு பேத்திகள் ஆகியோர், பாட்டி வீட்டுக்கு நேற்று சென்றனர். 5 கிலோ கேக் வேட்டி, பெரமாயாளின் பிறந்த நாளை கொண்டாடினர். அனைவரும், பெரமாயாளிடம் ஆசி பெற்றனர்.

பெரமாயாளின் வாரிசுகள் கூறியதாவது:

எங்கள் பாட்டி பெரமாயாள் வழியில், இது ஐந்தாவது தலைமுறையாகும். 102 வயதை தொட்ட பாட்டிக்கு இதுவரை பிறந்தநாள் கொண்டாடியதில்லை. அவரின் வயது முதிர்வை கணக்கில் கொண்டு, பிறந்தநாள் விழா கொண்டாடினோம்.பாட்டி இதுவரை, உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனை சென்றதில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் பார்வை, காது கேட்கும் திறன் என எந்த குறையுமின்றி உள்ளார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பெரமாயாள் கூறுகையில், ''எனக்கு, 102வது பிறந்த நாள் கொண்டாடிய, மகன், மகள், பேரன் மற்றும் பேத்திகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.



கரையை கடந்தது, 'டாம்ரே' புயல்  இயல்புக்கு திரும்பியது வங்க கடல்

வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் மையம் கொண்டிருந்த, 'டாம்ரே' புயல், வியட்நாம் அருகே, பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது. அதனால், வங்கக் கடலின் சூழல் இயல்பு நிலைக்கு மாறியுள்ளதால், விடாது கொட்டிய அடைமழை விலகியுள்ளது.




தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, அக்., ௨௭ல் துவங்கி, ௨௯ல் தீவிரம் அடைந்தது. சென்னை முதல் நாகை வரை, கனமழை கொட்டியது. மழைக்கு காரணமான, காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர், ௧ல், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு நகரும் என, கணக்கிடப்பட்டது. ஆனால், நகராமல், நவ., 2ல் மிககன மழை கொட்டியது.

ஒரே நாள் இரவில், ஐந்து மணி நேரம் பெய்த தால், சென்னை மெரினாவில், அதிகபட்சமாக 30செ.மீ., மழை பதிவானது. பின், நேற்று முன் தினம் இரவு வரை மிதமாகவும், சில நேரங் களில் கனமழையும் தொடர்ந்தது. இந்த தொடர் மழைக்கும், அடைமழைக்கும், வங்கக் கடலின்

சூழல் மாறியதே காரணம் என, வானிலை மற்றும் கடலியல் நிபுணர்கள் கூறினர். அதாவது, வங்கக் கடலை ஒட்டிய, தென் சீன கடலில் சுழன்று வந்த, டாம்ரே புயலால், வங்கக் கடலில் இருந்து மேக கூட்டங்கள் நகர முடியவில்லை;

அவை, தமிழககடற்பகுதியை சுற்றி வந்ததே, அதிக மழை பெய்யகாரணம் என்றனர்.'டாம்ரே புயல், நவ., 4ல் கரையை கடக்கும் வரை, சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் கன மழை தொடரும்.'புயல் கரையை கடந்தால், ஞாயிறு முதல் நிலைமை சீராகும்' என்றும் கூறினர்.அதன்படி,நேற்று முன்தினம் இரவு, டாம்ரே புயல், வியட்நாமில் பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது.

இதையடுத்து,தென் சீன கடலிலும், அதையொட்டிய வங்கக் கடலிலும், கொஞ்சம் கொஞ்சமாக கடல் சூழல் மாறியுள்ளது. இதனால், மீண்டும் காற்றின் சுழற்சி இயல்பு நிலைக்கு மாறி, மேக கூட்டங்கள் நகர்ந்து வருகின்றன.

சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதியும், தாழ்வு நிலையாக வலு குறைந்து, தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு நகர்ந்துள்ளது. எனவே, சென்னை உள்ளிட்ட வட கிழக்கு கடலோர மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த, அடைமழை விலகி உள்ளது. இனி, வழக்கமான பருவமழை, டிசம்பர் முதல் வாரம் வரை நீடிக்கும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

'தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அடைமழை இருக்காது; மிதமான மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின், மண்டல துணை பொது இயக்குனர், பாகுலேயன் தம்பி நேற்று கூறியதாவது:வங்கக் கடலின், வட கிழக்கு பகுதி யில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடா மற்றும் ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் அருகே, தென் கிழக்கு கடலோர பகுதிக்கு இடையே, தற்போது மையம் கொண்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மழை வதந்தியை பரப்பாதீர்!: பாலச்சந்திரன் வேண்டுகோள்

மழை,வதந்தி,பரப்பாதீர்,பாலச்சந்திரன்,வேண்டுகோள்
பொள்ளாச்சி: ''மழை குறித்து, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், அவர் அளித்த பேட்டி: வட கிழக்கு பருவமழை, தமிழகத்தின் முக்கிய காலமாகும். 27ம் தேதி முதல், கடலோர மாவட்டங்களில், வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வளி மண்டலத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில், இரு நாட்களுக்குள், மழை குறைய வாய்ப்புள்ளது. 

கடலில் நில நடுக்கம் ஏற்பட்டால், சுனாமி போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என கணிக்க முடியும். தற்போது, கணிக்க முடியாது. வானிலை மையம், தொடர்ந்து மழை குறித்து கணித்து, சரியான தகவல்களை தெரிவித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு சிலர், 100 செ.மீ., வரை மழை பொழியும் என்பது போன்ற ஆதாரபூர்வமற்ற தகவல்களை பரப்புகின்றனர். இது போன்ற தகவல்களால், மக்கள் பீதியடைகின்றனர். பேரிடர் காலங்களில், மக்களுக்கு உதவும் வகையில், தகவல்களை பரப்பலாம். இதுபோன்று பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற பெண் கைது
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தீவைத்து உயிரோடு கொல்ல முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 06, 2017, 05:00 AM

ராஜபாளையம்,காதல் ராஜபாளையம் வேட்டைபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(வயது45). இவரது கணவர் சுந்தரமகாலிங்கம் 15 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன்(21) வசித்து வருகிறார். டிப்ளமோ படித்து முடித்த கற்பகஜோதி அந்தப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நூற்பாலையில் வேலை செய்யும் ஒருவருடன் கற்பகஜோதிக்கு காதல் மலர்ந்துள்ளது. இது தாயார் பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்துள்ளார். ஆனால் காதலை கைவிட கற்பகஜோதி மறுத்து தாயுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் பாக்கியலட்சுமி காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் காதலில் உறுதியாக இருந்த கற்பகஜோதி அதற்கு இடையூறாக இருக்கும் தாயாரை கொலை செய்ய துணிந்தார்.

வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை எடுத்து தாயாரின் மீது ஊற்றி தீவைத்து விட்டார். உடல் கருகிய பாக்கியலட்சுமி கூச்சல் எழுப்பினார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் சிவகாசியில் உள்ள தீக்காய தடுப்பு பிரிவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

NEWS TODAY 03.07.2026