Saturday, November 25, 2017


சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்


Added : நவ 24, 2017 20:13 



  சென்னை: சேகர்ரெட்டி வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் சேகர் ரெட்டி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு பரிந்துரைக்கும் படி கடிதம் எழுதி உள்ளார்.

சட்ட விரோதமாக ரூ.34 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை பதுக்கியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி ரமேஷ் விசாரணை நடத்தி வந்தார். தன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும்படி சென்னை ஐகோரட்டில் சேகர் ரெட்டி வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சி.பி.ஐ., வழக்கின் அடிப்படையில் மட்டுமே அமலாக்கத்துறை தன்மீது வழக்குபதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தன் பெயரில் பட்டியலிடப்பட்ட வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு ரமேஷ் பரிந்துரைத்துள்ளார்.


டிச., 2ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை

Added : நவ 25, 2017 04:47



சென்னை: தமிழகத்தில், முதல் சனிக்கிழமையான, டிச., 2ல், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், மிலாது நபியையொட்டி, டிச., 1ல் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. பின், அரசின் தலைமை ஹாஜி அறிவுரைப்படி, மிலாது நபி, விடுமுறையை, டிச., 2க்கு மாற்றப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, டிச., 2 அன்று, செலாவணி முறிச்சட்டம் - 1881ன் கீழ், தமிழகத்தில், பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில், மாதத்தின் முதல் சனிக்கிழமையான, டிச., 2- ல், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இத்தகவலை, பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.


சசிகுமார் ஒத்துழைப்பு கொடுக்காததால் அன்புசெழியனை பிடிப்பதில் தாமதம் போலீஸ் உத்தரவிட்டதால் சசிகுமார் திங்கட்கிழமை ஆஜராகிறார்




நடிகர் சசிகுமார் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு தராததால் தலைமறைவான பைனான்சியர் அன்புசெழியனை பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

நவம்பர் 25, 2017, 05:15 AM

பூந்தமல்லி,

நடிகர் சசிகுமார் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு தராததால் தலைமறைவான பைனான்சியர் அன்புசெழியனை பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்தனர். நேரில் ஆஜராக உத்தரவிட்டதை தொடர்ந்து சசிகுமார் திங்கட்கிழமை ஆஜராகிறார்.

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் (வயது 43) வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தார். இவர் சசிகுமார் நடத்திவரும் ‘கம்பெனி புரடக்சன்’ நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராகவும் இருந்துவந்தார்.

கடன் தொல்லையால் கடந்த 21–ந் தேதி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடிதத்தில், தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனே காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் முதல்கட்டமாக அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரு பிரிவினர் மதுரைக்கும், மற்றொரு பிரிவினர் ராமநாதபுரத்துக்கும் சென்று அன்புசெழியனை தீவிரமாக தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த அன்புசெழியன் தலைமறைவாகி உள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிவோர் என அனைவரும் தலைமறைவாகி உள்ளனர். சசிகுமார் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் தலைமறைவாக உள்ள அன்புசெழியனை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சசிகுமார் புகார் செய்த அன்று இரவே அன்புசெழியன் செல்போனை சுவிட்ச்–ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். கடைசியாக அவரது செல்போன் தியாகராயநகரில் இருப்பதாக காட்டியது. அன்புசெழியனிடம் இருந்து சசிகுமார் தரப்பினர் எவ்வளவு பணம் கடனாக வாங்கினார்கள். அதற்காக என்ன சொத்து ஆவணங்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் தரப்பில் இருந்து இந்த தகவல்களை அளித்தால் தான் இந்த வழக்கை மேற்கொண்டு வேறு பிரிவுக்கு மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். இதுகுறித்து சசிகுமார் தரப்பிடம் கேட்டபோது, அவர்கள் இதுவரை நேரில் வரவில்லை. இதனால் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அசோக்குமாரின் இறுதிச்சடங்குகள் முடிந்து, அதற்கான காரியம் எல்லாம் முடிந்த பிறகுதான் ஊரைவிட்டு வெளியே வரவேண்டும் என்பது அவர்களின் சம்பிரதாயம் என்பதால் திங்கட்கிழமை நேரில் ஆஜராவதாக சசிகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் திங்கட்கிழமை நேரில் ஆஜராகி இந்த சம்பவம் குறித்து உரிய தகவல் கொடுத்த பிறகு தான் இந்த வழக்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியும். ஆனாலும் தலைமறைவாக உள்ள அன்புசெழியனை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
பல கேள்விகளுக்கு விடை சொல்லப்போகும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்




ஆர்.கே.நகர் என்று கூறப்படும் சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதிக்கு டிசம்பர் 21–ந்தேதி வியாழக் கிழமை அன்று தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

நவம்பர் 25 2017, 03:00 AM ஆர்.கே.நகர் என்று கூறப்படும் சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதிக்கு டிசம்பர் 21–ந்தேதி வியாழக் கிழமை அன்று தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரண்டு முறை வெற்றிபெற்ற தொகுதி. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுப்பட்டு, இரட்டைஇலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டு, 1989–ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, இரு அணிகளும் ஒன்றாக இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றது. அதுபோல ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முதலில் ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிளவுப்பட்டநிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கும் கொடுக்கப்படவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் போட்டியிட்ட மதுசூதன னுக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும், சசிகலா அணியில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும் வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு இந்த தொகுதியில் பணமழையும், பரிசுமழையும் பெருமளவில் பெய்தது. தேர்தல் கமி‌ஷனும் எவ்வளவோ நடவடிக்கை எடுத்து பார்த்தது. மத்தியபடை வந்தது. பார்வையாளர்கள் ஏராள மானவர்கள் நியமிக்கப்பட்டனர். எல்லாவற்றையும்மீறி பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகும் எதையும் நிறுத்த முடியவில்லை. இதையடுத்து தேர்தல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் கமி‌ஷன் நிறுத்தியது. பிறகு சசிகலா அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தனியாகப் பிரிந்து, சசிகலா அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் தனியாக செயல்பட்டன. சிறிது காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தது. இந்தநிலையில், இரட்டைஇலை சின்னம் எங்களுக்கு வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஒருபக்கம், டி.டி.வி.தினகரன் தரப்பினர் மற்றொரு பக்கம் தேர்தல் கமி‌ஷனிடம் மனு செய்தனர். இரு தரப்பினரிடமும் தீவிர விசாரணை நடத்திய தேர்தல் கமி‌ஷன், அ.தி.மு.க.வின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற–பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு இருப்பதால் அவர்களுக்கே இரட்டை இலை சின்னம், கட்சிப்பெயர், கொடியை பயன்படுத்தும் அனுமதி எல்லாவற்றையும் வழங்கி தீர்ப்பு வழங்கியது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்றும் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார். இதற்கிடையே, சின்னம் ஒதுக்கீடு தொடர்பான ஏதேனும் விசாரணை நடந்து தீர்ப்பு அறிவிக்கும்முன், தங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என்ற வகையிலான ‘கேவியட்மனு’ ஒன்றை ஓ.பன்னீர்செல்வம் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுமா? என்ற நிலையில், நேற்று காலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு நடக்கப் போகும் முதல் தேர்தல். கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பதற்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல். எம்.ஜி.ஆர். மறைந்த தினத்தன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்போகும் தேர்தல். ஏற்கனவே இந்த தொகுதியில் பணமழை, பரிசுமழை தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பாடம் படித்து விட்டது. ஒருதொகுதியில் எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டுமென்றால், என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? என்று தேர்தல் கமி‌ஷனுக்கு இப்போது நன்றாகத் தெரிந்திருக்கும். இந்த தேர்தல் எந்தவித முறை கேடுக்கும் இடம் கொடுக்காது. நிச்சயமாக ஜனநாயக முறைப்படி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருக்கிறது. அடுத்த சில நாட்களில் எந்தெந்த கட்சிகளின் சார்பில் யார்–யார் வேட்பாளர்கள்?, இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிடுமா?, அப்படி போட்டியிட்டால் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடப்போகிறாரா?, நேர்மையான தேர்தல் நடக்கும் பட்சத்தில் யாருக்கு எவ்வளவு பலம், எந்தெந்த கட்சிகள் யார்–யாருடன் கூட்டணி சேரும்? என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை கூறப்போகும் தேர்தலாக இது அமையும்.

டிசம்பர் 21-ந் தேதி ஓட்டுப்பதிவு ஆர்.கே.நகர் தேர்தல் ஏற்பாடு தொடங்கியது



ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வ மாக அறிவித்து இருக்கிறது.

நவம்பர் 25, 2017, 05:45 AM புதுடெல்லி,

ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது.

அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. பண பட்டுவாடா புகார் காரணமாக அந்த இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.

இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வந்தது.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதன்படி ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற டிசம்பர் 21-ந் தேதி (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை வருகிற 27-ந் தேதி (திங்கட் கிழமை) வெளியிடப்படுகிறது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற 7-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு டிசம்பர் 21-ந் நடைபெறும். டிசம்பர் 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்காளர்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகைச் சீட்டு முறையும் அமல்படுத்தப்படுகிறது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ-மின்சார ரெயில்களில் பயணம்




சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் மாநகர பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகியவற்றில் பயணிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

நவம்பர் 25, 2017, 04:45 AM சென்னை

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசியதாவது:-

சென்னை நகரில் ‘ஷேர் ஆட்டோ’வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.வசதி உள்ளது. சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது.

சென்னையில் 2015-ம் ஆண்டு வெள்ளம் பாதித்தபோதும் மெட்ரோ ரெயில் எந்த தடையுமின்றி இயங்கியது. அப்போது மின்தடை ஏற்பட்டிருந்தாலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது.

அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும். மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டப்பணிகள் மாதவரம்-சிறுசேரி, ஆயிரம்விளக்கு-கோயம்பேடு, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 107.55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது.

வருகிற நிதி ஆண்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அதன்பின்னர் கடன் வாங்குதல், டெண்டர் விடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 2025-ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் முடிவடையும் என்று நம்புகிறோம்.

சென்டிரல் ரெயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, பல்லவன் பாலம் உள்ளிட்ட இடங்களில் தினசரி 6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதசாரிகள் கடக்கிறார்கள். எனவே அவர்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக ரிப்பன் மாளிகையில் இருந்து ஒருங்கிணைந்த நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய மிகப்பெரிய சுரங்கப்பாதை வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள், மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடந்துவருகிறது. வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.

வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்துவிடும். அதன்பின்னர் வடசென்னையை நோக்கி மக்கள் நகர தொடங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Friday, November 24, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

 ராகினி ஆத்ம வெண்டி மு.

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்' எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல்செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 07.07.2026