Monday, January 15, 2018

17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது

தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டபோது வெளியான செய்தியை, இந்தாண்டு ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை என்று தவறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த செய்தி உண்மையல்ல, யாரும் நம்ப வேண்டாம் என அந்த தனியார் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

*நன்றி - புதியதலைமுறை.
டிஜிட்டல் போதை 14: தனியே… தன்னந்தனியே..!

Published : 23 Dec 2017 11:54 IST


வினோத் ஆறுமுகம்




சமீபத்தில், அமெரிக்காவில் 13 வயது சிறுவன் தன்னிடமிருந்து ஸ்மார்ட்போனைப் பிடுங்கி வைத்துக்கொண்ட தன் பாட்டியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டான் என்ற செய்தி வெளியானது. எந்நேரமும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் பள்ளிக்குக்கூடச் செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் பாட்டி அவனைக் கண்டித்து ஸ்மார்ட்போனை வாங்கி ஒளித்து வைத்துவிட்டார். விளைவு… சிறுவன் இப்போது சிறார் சீர்திருத்தப் பள்ளியில்!

இந்த ஆண்டு ஏப்ரலில் இதேபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ராஜ் என்பவர், தன் குடும்பத்தினர் அனைவருக்கும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார். அவர் மருத்துவம் படிக்க வேண்டும் எனக் குடும்பம் கட்டளையிட்டது. ஆனால் இவருக்கோ வரலாறு படிக்க வேண்டும் என்று ஆசை. அதிலிருந்து தப்பிக்க நினைத்த அவர், குடும்பத்தையே கொன்றுவிட்டார். பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அவர் அதிகமாக வீடியோ கேம் விளையாடும் பழக்கம் உள்ளவர் என்பது தெரிய வந்தது.

மூளையைப் பாதிக்கும் மூர்க்கம்

வீடியோ கேம்களில் ‘மேன்ஹன்ட்’ (மனித வேட்டை) வகையறா வீடியோ கேம்கள் மிகவும் கொடூரமானவை. இவை, பல நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டன. அதுபோன்ற வீடியோ கேம்களில் உள்ள மூர்க்கத்தனத்தைக் கட்டுப்படுத்தாதவரை, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம்.

மேற்கண்ட சம்பவங்களைப் போன்று, வீடியோ கேம்களால் உந்தப்பட்டு நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து உளவியளாலர்கள் கூறும்போது, ‘மூர்க்கமான வீடியோ கேம்கள் விளையாடினால் மெல்ல அது நம் மூளையையும் மனதையும் பாதிக்கும். வெல்வதற்காகக் கொலைகூட செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும். இந்த மாதிரியான நேரத்தில் அவர்களுக்குச் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. இதனால், அவர்கள் மனிதத் தன்மையை இழக்க நேரிடுகிறது’ என்கிறார்கள்.

காப்பாற்றும் சமூகம்

எந்நேரமும் வீடியோ கேம் விளையாடுபவர்கள், மிக எளிதாகச் சமூகத்திடமிருந்து தனிமைப்பட்டு விடுவார்கள். இப்படி தனிமைப்படுதல் அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் கேடானது. மனிதர்கள், சமூக விலங்குகள்தான். சமூகம்தான் நம் பாதுகாப்பு, அதுதான் நம்மை இதுவரை காப்பற்றி வந்திருக்கிறது. இனியும் காப்பாற்றும்.

ஆனால், வீடியோ கேம்கள் வந்தபின் பிள்ளைகள் சமூகத்துடன் உறவாடுவதும் விளையாடுவதும் குறைந்துவிட்டது. இவ்வாறு நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பதன் பாதிப்புகளை அவர்கள் எளிதில் உணர்வதில்லை. தொடர்ந்து அறைக்குள் அடைந்து கிடப்பதே நம்மை மனச்சோர்வுக்குள்ளாக்கும். இயற்கையைச் சுற்றி இருப்பதுதான் நமக்கு நன்மை. அது இயல்பாகவே நம்மை மனச்சோர்வில்லாமல் வைக்கும்.

அதிகரிக்கும் அட்ரினலைன்

பொதுவாக, நண்பர்களுடன் இணைந்து விளையாடும் விளையாட்டுக்களைப் போன்று வீடியோ கேம்களில் ‘குழு விளையாட்டுக்கள்’ வருவதில்லை. காரணம், குழு விளையாட்டுக்களை விளையாடும்போது அதற்கு நிறையத் திட்டமிட வேண்டும். உடல் உழைப்பு வேண்டும். ஓய்வு கிடைக்கும். அது எல்லா நேரமும் நம் அட்ரினலினை அதிகமாக்குவதில்லை. மாறாக வீடியோ கேம்கள் எந்நேரமும் நம் அட்ரினலினை அதிக அளவில் சுரக்கச் செய்கின்றன. நம்மைத் தனிமைப் படுத்துகிறது.

சிறுவர்கள் பலரை அவர்கள் குடும்பத்தினர் பூங்காவுக்கும் பீச்சுக்கும் அழைத்துத்தான் வருகிறார்கள். ஆனால் அங்கும் அவர்கள் தங்கள் தலையைக் குனிந்தபடியே வேறு ஒரு உலகில் தம்மை ஆழ்த்திக்கொள்கிறார்கள். இதனால், கடலும் காடும் பச்சைப் பூங்காவும் அவர்களுக்கு மிகவும் போர் அடித்துவிடுகிறது.

கட்டுரையாளர்,டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு: write2vinod11@gmail.com
விவாதக் களம்: ஆண்கள் திருந்தும் நாளே பெண்ணுக்குத் திருநாள்

Published : 14 Jan 2018 11:03 IST




கடந்த வாரம் வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுத்தளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய, ‘பெண்களைத் துரத்தும் நெருப்பு’ கட்டுரையையொட்டி, பெண்களைப் பார்த்ததுமே விழித்துக்கொள்கிற ஆண் மனம் குறித்துக் கேட்டிருந்தோம். பெண்களை எப்போதும் துரத்தும் இந்த நெருப்பில் இருந்து பெண்கள் எப்படி மீள்வது என்றும் கேட்டிருந்தோம். ஆண்களாகத் திருந்தினால்தான் உண்டு எனப் பலரும் சொல்லியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு...

பல நேரங்களில் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை என்பதே வேதனையான உண்மை. ஆண் எப்படி விரும்பினாலும் இசைந்து போக வேண்டும் எனத் தமது மகளுக்கு அறிவுரை சொல்லும் தாய்மார்களே இன்றும் நம் சமூகத்தில் நிறைந்திருக்கிறார்கள். பெண்களுக்குரிய இடம் அவர்களுக்கு இன்னமும் முழுதாகத் தரப்படவில்லை. பெண்களின் விருப்பத்தை அறிந்து அணுகுவதே ஆண்மைக்கு அழகு என்பதை ஆண்கள் உணர வேண்டும். ஒரு பெண்ணுக்குத் தன் விருப்பத்தை மீறி ஆட்கொள்ளப்படுவது போன்ற கொடுமை வேறில்லை. திரையரங்கின் இருளில் இடுப்பில் தடவிய கைகளால் அருவருப்பு கொண்டு வீட்டுக்கு வந்த கையோடு குளித்துப் பல நாட்கள் மன உளைச்சலோடு அலைந்த தோழியின் நினைவு இன்றும் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

- இரா.பொன்னரசி, வேலூர்.

ஆணின் காமம் ஒரு பெண்ணின் மீது முதலில் பார்வையின் வழியே பாய்கிறது. வக்கிர எண்ணம் கொண்ட ஆணின் கண்களாலேயே பெண் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதும் உண்டு. ஒரு பெண்ணைப் பார்க்கும்போது காமம் மறைந்து சகோதரியாகவும் தாயாகவும் பார்க்கும் நிலை என்று வருகிறதோ அன்றுதான் பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படும். சுதந்திரமாக வெளியே வரும் பெண் எதற்கும் துணிந்து சம்மதிப்பாள் எனும் எண்ணம் கொண்டிருக்கும் ஆண்களே இங்கு அதிகம். திருமணப் பந்தத்தில் இணைந்து வாழும் ஆண், பெண்ணின் காமம் வரைமுறையுடன் இருக்கும்வரை பிரச்சினையில்லை. எல்லையற்ற காமமே அப்பாவிப் பெண்களை விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.

ஆண்களின் பாலியல் உணர்வைத் தூண்ட உதவும் வலைத்தளங்கள் இங்கு ஏராளம். இவற்றை மீறி ஒரு ஆண் வளர்க்கப்படும் முறையே அவனைப் பெண்களைப் புரிந்துகொள்ள வைக்கிறது.

பெற்றோர் பெரும்பாலான நேரத்தைத் தங்கள் மகனுடன் கழிக்க வேண்டும். பார்க்கும் பெண்களின் மீதான மதிப்பை அதிகரிக்க அவர்களைத் தங்கள் தாயின் இடத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் மகனுக்கு நல்ல வழிகாட்டியாகவும் பெண்ணின் வலிகளை உணர்த்தி நல்ல ஆசானாகவும் மாற வேண்டும். பொதுவெளிகளில் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டுப் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஆண்களைத் தகுந்த தண்டனைகள் மூலம் எச்சரிக்கலாம்.

- சுபா, சேலம்.

பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இரவு, பகல், நேரம், காலம் போன்றவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எப்போது ஓர் ஆண் ஒரு பெண்ணால் தன்னை எதிர்க்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறானோ அப்போதுதான் அவன் இந்த வக்கிரத்தைச் செய்யத் துணிகிறான். பெண்ணைப் போகப் பொருளாக நினைப்பது, அவளைப் பலவீனமானவளாக எண்ணுவது ஆகியவற்றின் விளைவுதான் இது. அதனால் பெண்கள் உடலளவிலும் பலமானவர்கள் என்று புரியவைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சில ஆண்டுகளுக்கு முன் என் நெருங்கிய தோழி ஒருவர் இரவு எட்டு மணியளவில் ஒன்றிரண்டு ஆட்கள் மட்டுமே இருந்த பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவன் ஒரு ஐநூறு ரூபாய்த்தாளை தோழியிடம் நீட்டி தவறாகப் பேசியிருக்கிறான். அவ்வளவுதான். என் தோழி பதறிப்போய் அருகில் நின்றிருந்த ஆட்டோவில் தாவி ஏறி, கை கால்கள் நடுங்க வீட்டுக்குப் போயிருக்கிறார். பல நாட்கள் காய்ச்சலுக்குப் பிறகு உடம்பு தேறினாலும் மனம் தேறப் பல மாதங்கள் பிடித்தன. எத்தனையோ பேர் அங்கு நின்றிருக்கத் தன்னிடம் அவன் அப்படிக் கேட்டதால் தன்னிடம்தான் ஏதோ குறை உள்ளதைப் போல் அவர் குமைந்ததைத்தான் தாங்கவே முடியவில்லை. குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதையும் அப்பாவிகள் அவதிப்படுவதையும் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. பெண்ணின் உடல் வலிமையைப் புரியவைப்பதுடன் ஊடகங்களும் தைரியமான பெண்களை அடிக்கடி வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் நிலை வந்தால் இத்தகைய கொடூரங்கள் குறையக்கூடும்.

- ஜே.லூர்து, மதுரை.

தலை குனிந்து நட, அதுதான் பெண்ணுக்கு அழகு என்று சொல்லிச் சொல்லியே பெண்ணினத்துக்குத் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டோம். அதனால்தான் பிரச்சினையெனும் வெயிலைத் தாங்க முடியாத முதுகெலும்பற்ற புழுவாகப் பெண் துடித்துப்போகிறாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அனைத்தும் புனைகதைகளுக்கு மட்டுமே சாத்தியப்படும். எதையும் எதிர்த்து நிற்கச் சொல்லிப் பெண்களைத் துணிச்சலோடு வளர்க்க வேண்டும்.

- எஸ். சரோஜா சங்கரலிங்கம், காமாட்சிபுரம்.

பெண்களைத் தகாத வார்த்தைகளால் புண்படுத்தும் கூட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தி சொன்ன காலத்துக்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ? ஆண் குழந்தைகளை நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.

- ப. பீர் இலாஹி, உத்தமபாளையம்.

பெண்கள் எந்த அளவுக்குத் துணிச்சலோடு எதிர்க்கிறார்களோ அப்போதுதான் அந்த நெருப்பு விலகி மட்டுமல்லே விட்டே ஓடிவிடும். சட்டப் பாதுகாப்பைவிட சுய பாதுகாப்பும் சில வேளைகளில் அவசியம். 




- பொன்.கருணாநிதி, கோட்டூர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒவ்வொரு வீட்டிலும் இருந்துதான் தொடங்க வேண்டும். பெண்ணுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்து வளர்க்கும் சமூகம், ஆண்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதில்லை. எப்போதும் பெண்களின் கட்டுப்பாடு குறித்தும் சுய பாதுகாப்பு குறித்தும் பேசும் நாம், ஆண்களிடம் இருக்க வேண்டிய நல்லொழுக்கம் குறித்து வாயே திறப்பதில்லை. ஆணின் தேவைக்காகப் பிறந்தவள் அல்ல பெண் என்பது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் புரிகிற நாளில்தான் இந்த நெருப்பு அணையும்.

- பிரதீபா.

ஆண், பெண் உறவு இன்று எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனால், சில ஆண்கள் பெண்கள் மீது நடத்தும் அருவருக்கத்தக்கச் செயல்பாடுகளை மன்னிக்கவே முடியாது. கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் உறவுசார் ஆலோசனைகள் வழங்கலாம். வளர்ந்தவர்களுக்கு மனநல ஆலோசனைகள் அளிக்கலாம்.

- மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

தாய்வழிச் சமூக அமைப்பு உடையாமல் இருக்கிற இடங்களில் பெண்ணுக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ராகுல சாங்கிருத்யாயன் போன்றோரின் எழுத்துகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன. உடையிலும் பெயரிலும்கூட ஆண், பெண் வேறுபாடு இருக்கக் கூடாதெனப் பெரியார் சொன்னார். இதெல்லாம் நடக்கிற நாள்தான் பெண்களுக்கான திருநாளாக அமையும்.

- சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.

பெண் சமூகத்தையே எரிக்கும் நெருப்பாக ஆண் மனம் செயல்பட ஊடகங்களும் தொலைக்காட்சியும் காரணமாக இருக்கின்றன. போதுமான புரிதல் இல்லாமல் விதைக்கப்படுகிற சிறுபொறிதான் நாளடைவில் பெருந்தீயாகக் கொழுந்துவிட்டு எரிகிறது.

- உஷா முத்துராமன், திருநகர்.

வாய்ப்பு கிடைக்கும்வரை எல்லா ஆண்களும் ராமன்தான் என்ற சொலவடை, ஆண்களின் மனோபாவத்துக்குச் சான்று. இந்தப் பழமொழி ஆண்களுக்கு அவமானமாக இல்லையா? தன் ரத்த உறவுகளைப் பார்த்து விழித்துக்கொள்ளாத ஆண் மனம், பிற பெண்களைப் பார்த்ததும் விழித்துக்கொள்ளுமா? பெண்களைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும் மனோபாவத்தை யார் மாற்ற வேண்டும்?

பெண்ணை உடலாக, சதையாக மட்டுமே நினைக்கும் கேவலமான மனப்போக்கை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். கணவன் என்ற ஒரே காரணத்துக்காக வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மனோபாவத்தைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட பெண்களைத் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லாமல் இந்தச் சமுதாயம் திருந்த வேண்டும். பெண் இரண்டாம் பாலினம் என்ற கருத்து மாற வேண்டும். பாலியல் சார்ந்த ஆரோக்கியமான விவாதங்கள் ஊடகங்களில் நடத்தப்பட வேண்டும். இதைக் கேலிச்சிரிப்புடன் பார்க்காமல் அறிவுபூர்வமாக அணுகித் தீர்வு காண வேண்டும்.

சிறுவயது முதலே பெண் என்பவள் சக உயிர், என்ற உணர்வை உணவோடு ஊட்டி ஆண்களை வளர்க்க வேண்டும். குடும்பத்திலுள்ள பெண்களை ஓர் ஆண் எவ்வாறு நடத்துகிறான் என்பதைப் பார்த்துத்தான் அந்த வீட்டு ஆண் குழந்தை கற்றுக்கொள்கிறான். முதலில் குடும்பத்தைச் சீர்திருத்துவோம். மெல்ல மெல்லச் சமுதாய மாற்றம் தானே நிகழும்.

- தேஜஸ், கோவை.

ஆண், பெண் இருவரும் மனிதப் பிறவி என்றாலும் ஆண், பெண்ணைச் சீண்டுவதையும் தீண்டுவதையுமே விரும்புகிறான். மனைவி என்றாலும் மனம் விரும்பிய போதெல்லாம் அவளை இச்சைக்கு ஆட்படுத்திக்கொள்கிறான். வெளியில் பிற பெண்களைக் கண்டாலும் அவன் சபலப்படாமல் இருப்பதில்லை. பேச வாய்ப்பில்லாத பெண்களை உரசிப் பார்க்க முயல்கிறான். பேச வாய்ப்புள்ள பெண்களிடம் உரையாடலிலேயே உறவாடிவிடுகிறான். பெண்கள் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது.

- பொன். குமார், சேலம்.

பெண்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது இயல்பானது. பாலியல் ஈர்ப்பின் தன்மை ஆணுக்கு ஆண் வேறுபடுகிறது. அது வரம்பைத் தாண்டும்போது தவறான செயல்களில் ஈடுபடவைக்கிறது. எல்லா ஆண்களையும் நல்லவர்களாகப் பார்ப்பதைத் தவிர்த்து ஆண்களின் இயல்பு அறிந்து எச்சரிக்கை உணர்வுடன் கையாள்வதே புத்திசாலித்தனம்.

- கே.ராமனாதன், மதுரை.

எல்லா ஆண்களிடமும் அந்த நெருப்பு இல்லை. சில ஆண்கள் பொதுவெளியில் கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள். இன்னும் மிகச் சொற்பமான ஆண்கள் பெண்ணோடு தனித்திருக்கும்போதும் பண்பாடு தவறுவதில்லை. ஆனால், பெரும்பாலான ஆண்களின் காமப்பார்வையும் ஆக்டோபஸ் கரங்களும் பெண்ணைச் சுற்றுகின்றன. எத்தனை வயதானாலும் ஆணின் கீழ்த்தர வக்கிரம் குறைவதே இல்லை. இந்தப் பிரச்சினையைச் சட்டம் சார்ந்து பார்க்காமல் உளவியல்ரீதியாகப் பார்த்தால் இணை தேடும் மிருக உணர்வின் நீட்சி எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், கல்வியாலும் வளர்ப்பாலும் போதனையாலும் இந்த உணர்வைக் கட்டுக்குள் வைக்கவும் கண்ணியம் காக்கவும் முடியும். பாதிப்புக்குள்ளாகும் பெண்ணின் மௌனமே அத்துமீறும் ஆண்களுக்கு வசதியாகிவிடுகிறது. முதல் தொடுதலின்போதே எச்சரிப்பது அல்லது பெற்றோரிடமோ உரிய இடத்திலோ புகார் செய்வது பாதுகாப்பு.

திரைப்படங்கள் காலம் காலமாகப் பெண்ணைக் கிண்டல் செய்வதே காதலுக்கு அடித்தளம் என்று காட்சிப்படுத்தி இளைஞர்களின் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டன. பெண்களைக் கிண்டல் செய்தல், பின்தொடர்தல் இவற்றுக்கெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், கடுந்தண்டனையும் உண்டு. ஆண்களின் வக்கிரப் போக்கு மாறாதவரை, மாற்றப்படாதவரை இதுவே தீர்வு.

- ஜி. அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

அடக்கிவைக்கப்பட்ட காமம் ஒரு சிலரிடம் அடங்காமல் போய்விடுகிறது. பார்த்தவுடன் காமம் என்று சொல்வதைவிட அதை அப்போதே அடைய வேண்டும் என்ற வெறிதான் சில ஆண்களிடம் கூடவே பிறந்துவிடுகிறது. அதுதான் இதுபோன்ற செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. பெண் எதிர்த்துப் பேசமாட்டாள் என்ற தைரியம்தான் இவர்களுக்கான முதலீடு. இந்த நெருப்பைப் பகிரங்கமாகப் பொதுத்தளங்களில் போட்டுடைத்துச் சீர் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. பெண்கள் துணிய வேண்டும்.

- பி.கே. ஜீவன், கும்பகோணம்.

ஆதார் எண் கொடுக்காதவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு துண்டிப்பு

2018-01-14@ 00:43:29
 

சென்னை: சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மானிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் படிப்படியாக மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இணைப்பு பெற்றுள்ள அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் வலியுறுத்தின. அதிலும் டிச.31ம் தேதிக்குள் ஆதார் எண் வழங்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் எச்சரித்தன. இந்நிலையில், அரசின் எந்த திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில், ‘ஆதார் எண் கட்டாயம் என்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக’ உறுதி அளித்தது. ஆனால், ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உட்பட அனைத்து மத்திய அரசு நிறுவனங்களும், மாநில அரசு நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன. அதற்கு ஏற்ப, ஆதார் எண்ணை இணைக்காத  வாடிக்கையாளர்களின்  எரிவாயு இணைப்பை துண்டித்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி முகவர்களிடம் கேட்டால், ‘ஆதார் எண் கொடுத்தால் ஒரு வாரத்தில் மீண்டும் இணைப்பு புதுப்பிக்கப்படும்’ என்று சொல்கின்றனர்.
விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ - சினிமா விமரிசனம்

By சுரேஷ் கண்ணன் | Published on : 13th January 2018 04:22 PM

சமீபத்திய ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ‘ஓர் இல்லத்தரசி தன் வாழ்நாளில் சுட்ட தோசைகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும்?” என்பது போல. இதையே தமிழ் இயக்குநர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் போல. இன்னமும் எத்தனை காலத்திற்கு அரைத்த மாவையே அரைத்து அதே தோசையையே திரும்பத் திரும்ப சுடுவார்கள்?

ஓர் ஆச்சரியமான கிளைமாக்ஸ் தவிர்த்து, எளிதில் யூகிக்கக்கூடிய தேய்வழக்கு காட்சிகளுடன் சலிப்பூட்டுகிற இன்னொரு அடிதடி மசாலாதான் ‘ஸ்கெட்ச்’

கார் பைனாஸ் முதலாளியிடம் பணிபுரிபவர் விக்ரம். வட்டி கட்டாத நபர்களின் வாகனங்களைத் திறமையாக ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தூக்கி வருவதில் விற்பன்னர். ரெளடிகள் மற்றும் காவல்துறையினரின் பகையை ஒருசேரச் சம்பாதித்துக் கொள்கிறார்.

ராயபுரம் குமார் என்கிற பிரபலமான ரெளடியின் ‘ராசி’யான கார், தன்னுடைய முதலாளிக்குச் சொந்தமானது என்கிற பழைய கதையை அறிந்தவுடன் முதலாளி விசுவாசத்துடன் மிகுந்த ஆபத்துக்கிடையில் அதைக் கடத்தி வருகிறார். புதையல் தோண்ட பூதம் கிளம்பிய கதையாக, பிரச்னைகள் அவரைத் தொடர்கின்றன. அவரது நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்யப்படுகிறார்கள்.

அவர்களைத் தேடி விக்ரம் செல்லும் பயணமே மீதியுள்ள திரைப்படம். பல காட்சிகளில் அடுத்து என்னவாகும் என்பதை எளிதாக யூகிக்க முடிந்தாலும் எவரும் எதிர்பாராத திருப்பத்துடன் திரைக்கதையை அமைத்த இயக்குநருக்கு பாராட்டு. ஆனால் அதற்கான காரணம் போதுமான அளவிற்கான நம்பகத்தன்மையுடன் அமையவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.

ஜெமினி, பீமா போன்ற படங்களில் கையாண்டுவிட்ட அதே மாதிரியான கரடுமுரடான ரெளடி பாத்திரம் விக்ரமிற்கு. இத்திரைப்படத்தில் அவருக்கு எவ்விதச் சவாலும் இல்லாததால் மிக எளிதாக இடது கையில் தன் பாத்திரத்தை அநாயசமாகக் கையாண்டிருக்கிறார். இத்தனை திறமையான நடிகர், ஏன் இத்தனை பலவீனமான திரைக்கதைகளாகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிற ஆதங்கம் தோன்றாமல் இல்லை.

ஆனால் மனிதர் இந்த வயதிலும் இத்தனை சுறுசுறுப்பாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் நிறைய திரைப்படங்களில் பார்த்து சலித்த காட்சிகள்தான் என்றாலும் ‘நடிகர்’ விக்ரம் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பது ஆறுதல்.

நாயகியாக தமன்னா.. தமிழ் சினிமாவின் வழக்கமான பாத்திரம். இவரை விடவும் இவரது தோழியாக வருகிற ஸ்ரீபிரியங்கா கவர்கிறார்.

சேட்டு முதலாளியாக ஹரீஷ் பரேடி. எத்தனை திறமையான நடிகர். இவருக்கும் அதிக சவாலான காட்சிகள் இல்லை. ஸ்ரீமன், சூரி, ஆர்.கே.சுரேஷ், வேலராமமூர்த்தி என்று பல நடிகர்கள் இருந்தாலும் ஒருவர் கூட மனதில் தங்கவில்லை. அவரவர்களின் காட்சிகளில் தோன்றி விட்டுச் செல்கிறார்கள்.



இசை எஸ்.தமன். மெதுவாக உருண்டு வந்து கொண்டிருக்கும் ரோடு ரோலரின் இடையே பாறாங்கல்லை வைத்து தடுப்பது போல சோம்பலான காட்சிகளின் இடையே இடையூறாக வந்து எரிச்சலூட்டும் பாடல்கள். சில மெட்டுக்களை ஏற்கெனவே கேட்ட மாதிரியே இருக்கிறது. பின்னணி இசை பரபரப்பாக அமைந்திருப்பது ஆறுதலான விஷயம்.

வடசென்னை என்றாலே ரெளடிகள், சமூக விரோதிகள் நிறைந்திருக்கும், குற்றங்கள் நிகழும் இடம் என்கிற பொதுப்புத்தி சார்ந்த கற்பிதத்தை இந்தப்படமும் கண்மூடித்தனமாக பின்பற்றியிருக்கிறது. ‘சிறார்களை பணியிடங்களில் சேர்ப்பதின் மூலம் இளம் குற்றவாளிகளை உருவாக்காதீர்கள்’ என்று கடைசியில் இயக்குநர் சொல்கிற ‘திடீர்’ உபதேசம் அதுவரையான காட்சிகளுக்கு எவ்விதத்திலும் பொருத்தமில்லாமல் சிரிப்பை வரவழைக்கிறது.

‘ஸ்கெட்ச்’ என்றால் வடசென்னை வழக்கில் பொதுவாக ஒருவரைக் கொலை செய்வதற்காகத் திறமையாக திட்டம் தீட்டுவது.. அப்படியொரு வார்த்தையை கார்களை எடுக்கும் விஷயத்திற்காக அநாவசியமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தனை புத்திசாலித்தனமான நாயகன், தன்னைச் சுற்றியுள்ள ஆபத்தைச் சிறிதளவும் யூகித்திருக்க மாட்டான் என்பதும், இவனுடைய நற்குணத்தை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் தர்க்கம் இல்லாமல் இடிக்கிறது.

கணினி யுகத்திலும் தீர்ந்து போன ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்ட பலவீனமான திரைக்கதையை இயக்குநர் விஜய்சந்தரும் நடிகர் விக்ரமும் நம்பியது ஆச்சர்யம்.
சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ – சினிமா விமரிசனம்

By சுரேஷ் கண்ணன் | Published on : 12th January 2018 04:27 PM |

சிபிஐ அதிகாரி பணியைத் தன்னுடைய கனவாக வைத்திருக்கும் ஒருவனுக்கு அத்துறையில் நிகழும் ஊழல் காரணமாக அந்த வாய்ப்பு தரப்படுவதில்லை. எனவே தானே ஒரு போலி அதிகாரியாக மாறுகிறான். ‘ரெய்ட்’ என்கிற பெயரில் ஊழல்வாதிகளிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்து நல்லவர்களுக்குத் தருகிறான். ராபின்ஹூட், காக்கிச்சட்டை, ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்களின் அதே வகை ‘கரு’ தான்.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் 2013-ல் வெளிவந்த ‘Special 26’ என்கிற ஹிந்திப்படத்தின் தமிழ்வடிவம்தான் இது. ஹிந்தியில் இருந்த நம்பகத்தன்மையும் குற்றத்தின் அழகியலும் தமிழில் பெரும்பான்மையாகச் சிதைந்திருப்பது சோகம்.

சிபிஐ அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்தவர் தம்பிராமையா. அதே அலுவலகத்தில் தன்னுடைய மகன் சூர்யாவை ஓர் அதிகாரியாக்கிப் பார்க்க வேண்டுமென்பது அவருடைய ஆசை. அது நிறைவேறுவதில் ஒரு பெரிய தடை இருக்கிறது. அங்கு உயர் அதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன் வாங்கும் லஞ்சத்தை, தம்பி ராமையா மொட்டைக் கடிதத்தின் மூலம் காட்டிக் கொடுக்க முயல, அதிகாரியால் பழிவாங்கப்பட்டு பணியை இழக்கிறார்.

தன்னுடைய நேர்காணலிலும் அந்த அதிகாரி சிக்கலை ஏற்படுத்துவார் என்று சூர்யா யூகிக்கிறார். நினைத்தபடியே நடக்கிறது. இதே போன்ற ஊழலால் காவல்துறையில் பணி கிடைக்காமல் இறக்கும் தன் நண்பனின் மரணம் வேறு சூர்யாவிற்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஊழலின் காரணமாக தகுதியுள்ளவர்கள் வேலை கிடைக்காமல் அவதிப்படுவதும் தகுதியற்றவர்கள் முன்னேறும் சூழலை எதிர்க்க நினைக்கிறார்.

எனவே சிபிஐ அதிகாரிகளின் அடையாளத்தில் ஒரு போலியான குழுவை அமைத்து ஊழல்களின் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ரெய்டுகள் மூலம் கைப்பற்றுகிறார். தங்கள் துறையின் பெயரால் நிகழும் தொடர் மோசடிகளைக் கண்டு ஒரிஜினல் சிபிஐ பதறுகிறது. குற்றவாளிகளை மோப்பம் தேடி அலைந்து கிட்டத்தட்ட நெருங்கி விடுகிறது.

இந்நிலையில் தன் கூட இருப்பவர்களுக்காக ஒரு பெரிய அளவிலான கொள்ளையில் ஈடுபட நினைக்கிறார் சூர்யா. அவர்களைச் சுற்றி வளைக்க சிபிஐ தயாராக நிற்கிறது.

பிறகு என்னவானது என்பதை விறுவிறுப்பு குறைவாக சொல்லியிருக்கிறார்கள்.

நச்சினார்க்கினியன் என்கிற அழகான பெயர் சூர்யாவிற்கு. ‘இவர்களுக்கு வயசே ஆகாதோ” என்று நினைக்க வைக்கும் நாயகர்களில் முதன்மையானவராக இவரைச் சொல்லலாம். விசையுறு பந்தினைப் போல திரையெங்கும் பாய்கிறார். படத்தின் துவக்கத்தில் வரும் துள்ளலிசைப் பாடல் உட்பட அனைத்து பாடல்களிலும் ரகளையாக நடனம் புரிகிறார். படத்தின் பெரும்பான்மையான சுமை இவர் மீது இருப்பதால் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக இவரது தோரணைகள் கம்பீரம்.

ஏறத்தாழ சூர்யாவிற்கு இணையாகக் கலக்கியிருப்பவர் சுரேஷ் மேனன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையில் எதிர்நாயகனாக அட்டகாசம் செய்திருக்கிறார். (இயக்குநர் கெளதம் மேனனின் குரல் இவரது பாத்திரத்திற்குப் பெரிய பலம்). ஒரு பக்கம் மிக அநாயசமாகவும் தெனாவெட்டாகவும் தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதும், இன்னொரு புறம் மூத்த அதிகாரியிடம் பணிந்து பதறுவதும் என சிறப்பான பங்களிப்பு. ‘உத்தமன்’ என்று இந்தப் பாத்திரத்திற்கு பெயர் சூட்டியிருப்பது குறும்பு.

குறிஞ்சிவேந்தன் என்கிற இன்னொரு அழகான தமிழ் பெயரில் உள்ள பாத்திரம் கார்த்திக். சிபிஐ உயர் அதிகாரி. இவரையும் நீண்ட காலத்திற்குப் பிறகு திரையில் பார்ப்பதால் சற்று ஆச்சரியம் தோன்றுகிறது. அவ்வளவே. ஓய்ந்து போன வயசான கார்த்திக்கைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.

ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, நந்தா, கலையரசன், சத்யன், ஆனந்தராஜ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ‘எனக்கு எதிரியே என் வாய்தான்’ என்கிற ஆர்.ஜே.பாலாஜி சிறிது புன்னகைக்க வைக்கிறார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்கிற பழைய கிளாசிக் காமெடியை நினைவுகூர வைப்பது போல் பெட்ரோமாக்ஸ் லைட்டை பார்க்கும் போதெல்லாம் ‘மேன்டிலை’ செந்தில் உடைப்பதை வேறு வழியின்றி நகைச்சுவை என்று நினைத்துக் கொள்ளலாம். சிறிது நேரம் வந்தாலும் ஆனந்தராஜ் ரசிக்க வைக்கிறார்.



முதல் பாதியில் விறுவிறுப்பாக நகர்கிற திரைப்படம், இரண்டாம் பாதியில் இடையூறாகத் துவங்கும் ‘டூயட்’ பாடலுடன் நொண்டியடிக்கிறது.

பொதுவாக விக்னேஷ் சிவனின் திரைப்படங்களில் ‘ப்ளாக் ஹியூமரின்’ தேசலான சாயல் இருக்கும். இதிலும் சில இடங்களில் தென்படுகிறது. தன் தந்தையான தம்பி ராமையா தற்கொலை செய்து கொண்டாரோ என்று சூர்யா பதறியழும் போது நடக்கும் திருப்பம் சிரிக்க வைக்கிறது. சிபிஐ அதிகாரிகளுக்கான நேர்காணலில் ‘நான் ஊழல்வாதிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளுவேன்’ என்று ஆவேசமாக சொல்பவரின் பெயர் ‘சசிகலா’. இரட்டை அர்த்த தொனி கொண்ட நகைச்சுவைகளும் இருக்கின்றன.

‘சொடக்கு மேல சொடக்குப் போடுது’, ‘நானா தானா’ ஆகிய பாடல்களுக்குப் பார்வையாளர்கள் அதிஉற்சாகம் கொள்ளும்படி ரகளையாக இசையமைத்திருக்கிறார் அனிருத். பரபரப்பான காட்சிகளுக்கேற்றபடி விறுவிறுப்பான பின்னணி இசையையும் தரத் தவறவில்லை.

இத்திரைப்படத்தின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாக கலை இயக்குநரின் பணியைச் சொல்ல வேண்டும். எண்பதுகளில் நடக்கும் சம்பவங்கள் என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் சினிமா சுவரொட்டிகள், கட்அவுட்கள், பழைய மாநகரப் பேருந்துகள், கோல்ட் ஸ்பாட் குளிர்பானம், பியட், அம்பாசிடர் கார்கள். பஜாஜ் ஸ்கூட்டர் என்று பின்னணியின் நம்பகத்தன்மைக்காக அசாதாரணமான
உழைப்பைத் தந்திருக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணனின் காமிரா, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் போன்ற நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு படத்திற்குப் பலமாக அமைந்திருக்கின்றன.

நீரஜ் பாண்டே இயக்கிய ஹிந்தி வடிவத்தோடு (special 26) தமிழ் வடிவத்தை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஹிந்தி திரைப்படத்தில் நிகழும் ரெய்டுகள் நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கும். பூனை-எலி விளையாட்டில் அமைந்த திரைக்கதை, அக்ஷய் குமார், அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய் போன்ற அற்புதமான நடிகர்களின் பங்களிப்பு என்று பெரும்பாலான அம்சங்கள் நிறைவாக அமைந்திருக்கும். குறிப்பாக ஹிந்தியில் மிக இயல்பாக அமைந்த கிளைமாக்ஸ் காட்சி தமிழில் அதீதமாகிச் சிதைந்திருக்கிறது. தமிழ் வடிவத்தில் வணிக அம்சங்கள் தூக்கலாக இருக்கின்றன.

‘தானா சேர்ந்த கூட்டம்’ என்கிற தலைப்பு இத்திரைப்படத்திற்கு எப்படி பொருந்துகிறது என்பது அந்த ‘சிவனுக்கே’ வெளிச்சம்.

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்: குருமூர்த்தி பேச்சு

   

By DIN | Published on : 14th January 2018 10:00 PM |


சென்னை: ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்று வரும் துக்ளக் இதழின் 48வது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி பேசினார்.

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்.

தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல் என்றும் கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது என்றவர் கழகங்களின் தொடர்ச்சியாகவே கமல் அரசியலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது என கூறினார்.

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும் தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது என விமர்சித்தார்.

மேலும் திமுக, அதிமுகவால் இளைஞர்களை ஈர்க்க முடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். இலவசம் மற்றும் மானியங்களால்தான் தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஹிந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டிஎன்ஏவில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளனர்

ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 12-இல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், குழாயடி சண்டை போல் இருந்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பணப்பட்டுவாடா செய்தது வெளிப்படையாகவே தெரிகிறது. தினகரன் வெற்றி பெற்றதற்கு திமுகதான் காரணம் என்றவர் திமுக விலை போகியுள்ளது என்று குருமூர்த்தி பேசினார்.

NEWS TODAY 11.06.2026