Monday, February 5, 2018

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கைது விவகாரம் தொடர்பாக நாளை ஆளுநரிடம் அறிக்கை தாக்கல்

தினகரன் 5 hrs ago

கோவை : லஞ்ச புகாரில் கைதான துணைவேந்தர் கணபதி குறித்த அறிக்கையை நாளை ஆளுநரிடம் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. ஆளுநரிடம் அறிக்கை அளிக்கப்பட்டதும் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோவை பாரதியார் பல்கலைகழகத்தை நிர்வகிக்க நிர்வாக குழு ஒன்றை அமைக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பாரதியார் பல்கலை.யில் அம்பலமாகும் ஊழல்கள்: 300 கல்வி மையம் தொடங்கியதில் முறைகேடு: இயக்குனர் மீது வழக்கு பதிவு

தமிழ் முரசு 

கோவை: பாரதியர் பல்கலைக்கழகம் மூலம் மாநிலம் முழுவதும் 300 கல்வி மையங்கள் தொடங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளதால், அக்கல்வி மைய இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு லஞ்சம் வாங்கிக்கொடுக்க உதவியதாக இப்பல்கலைக்கழக வேதியியல் பிரிவு பேராசிரியர் தர்மராஜனும் அன்றையதினம் கைதுசெய்யப்பட்டார்.

இவர்கள், மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்பு பிரிவு (7), (12), (13/1/D) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இவர்கள் இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த இரு தினங்களாக சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள், குறிப்பேடுகள், டைரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

துணை வேந்தர் கணபதியின் வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 44 பவுன் நகை ஆகியவை இருந்தது. இதற்கு முறையான கணக்கு தெரிவித்ததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்யவில்லை.

இதற்கிடையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் இப்பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

அதாவது, பாரதியார் பல்கலைக்கழம் சார்பில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் விதிமீறி தொலைதூர கல்வி மையம் அமைக்க துணை வேந்தர் கணபதி அனுமதி அளித்துள்ளார். மொத்தம் 300க்கும் மேற்பட்ட தொலைதூர கல்வி மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு மைய பொறுப்பாளர்களிடமிருந்து தலா ரூ. 10 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இம்மையம் அமைக்க துணை வேந்தருடன், இம்மைய இயக்குனர் மதிவாணன் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தற்போது புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

அதனால், அவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். அத்துடன், துணை வேந்தர் கணபதி கைதாகும்போது, லஞ்ச பணத்தை செப்டிக் டேங்கில் போட்டு, தடயங்களை மறைத்ததாக துணை வேந்தரின் மனைவி சொர்ணலதா மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மதிவாணன் மீதான ஆதாரங்களை சேகரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

துணைவேந்தர் போலீஸ் பிடியில் சிக்கியதால் அவருடன் முறைகேட்டில் தொடர்பு வைத்திருந்த பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

துணைவேந்தரை அடிக்கடி சந்திக்கும் நபர்கள், பணி நியமனத்திற்கு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் என தெரிகிறது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதி கடந்த 2 நாளாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதால் மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.

நிறுவனர் நாள் விழா ரத்து: இதற்கிடையில், பாரதியார் பல்கலைக்கழக நிறுவனர் நாள் விழா இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருந்தது. இவ்விழாவுக்கு துணை வேந்தர் கணபதி தலைமை தாங்குவார் என அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், லஞ்ச வழக்கில் துணை வேந்தர் கைதாகி விட்டதால் இவ்விழா ரத்து செய்யப்பட்டது. வேறு ஒரு தேதியில் நடைபெறும் என பதிவாளர் வனிதா (பொறுப்பு) அறிவித்துள்ளார்.

துணை வேந்தர் சிறையில் இருப்பதால் இவரே பல்கலைக்கழக துணை வேந்தராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

கொசுக்கடி. . . !
இதற்கிடையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை வேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோருக்கு சிறையில் சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த சலுகைகளும் அளிக்கப்படவில்லை.

அதனால், கடந்த இரு தினங்களாக சிறையில் கொசுக்கடியால் துணைவேந்தர் அவதிப்பட்டுள்ளார். இரவில் தூக்கம் இல்லை எனவும் அவரை பார்க்க சென்ற வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.

உயர்கல்வித்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம்: தமிழகம் முழுவதும் துணை வேந்தர் நியமனம் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் பணி நியமனம் செய்வதில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக புகார்கள் எழுந்தன.

ஆனால் இந்தப் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தகுதியற்றவர்களுக்கு துணை வேந்தர் பதவி வழங்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஆனால் இந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வெளிப்படையாகவே துணை வேந்தர்கள், பேராசிரியர் உட்பட பல பதவிகளுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு நிரப்புகின்றனர்.

ஒவ்வொரு பதவிக்கும் குறைந்தது ரூ. 10 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு பதவிகளை நிரப்புகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பணம் வாங்கிக் கொண்டு நிரப்பிய பதவிகளை ரத்து செய்ய வேண்டும்? பணம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்? தற்போதைய குழப்பமான சூழ்நிலையை சரி செய்ய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்போதுதான் கல்வித்துறை சீரமைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி

Published : 04 Feb 2018 16:03 IST




ஊத்தங்கரை அருகே ஓடும் ரயிலில் இருந்து வாலிபரை கீழே தள்ளிவிட்டு அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கருதப்படும் திருநங்கை கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, கைதுக்கு பயந்து எலிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் நேற்று (சனிக்கிழமை) வாலிபர் ஒருவர் திருநங்கையால் ஓடும் ரயிலிருந்து தள்ளிவிடப்பட்டதில் இறந்தார். காப்பாற்றப்போன நண்பருக்கும் காயம் ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்திய நாராயணன் (32), இவரும் இவரது நண்பர் கரம் வீர் பாபுவும் அவர்கள் நண்பர்கள் சிலரும் வேலைதேடி திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

கிருஷ்ணகிரியிலிருந்து ரயிலில் பயணம் செய்துள்ளனர். படிகட்டு ஓரம் தரையில் அமர்ந்து இருவரும் பயணம் செய்துள்ளனர்.

ரயில் ஊத்தங்கரை நிலையத்திலிருந்து புறப்பட்டு சாமல்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ரயிலில் ஏறிய திருநங்கைகள் ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டு வசூல் செய்து கொண்டு வந்தனர்.

சத்தியநாராயணனிடம் வந்து பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் எதுவும் இல்லை தானே வேலை தேடித்தான் போகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒரு திருநங்கை பணம் இல்லாதவன் எதுக்குடா ரயிலில் வருகிறாய் என எட்டி உதைத்துள்ளார்.

இதில் ஓடும் ரயிலிலிருந்து சத்தியநாராயணன் அலறியபடி கீழே விழுந்துள்ளார். இதில் விழுந்த வேகத்தில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

நண்பரை தள்ளிவிட்டதில் பதற்றமடைந்து அவரை காப்பாற்ற ரயிலிருந்து குதித்த நண்பர் கரம் வீர் பாபுவும் பலத்த காயமடைந்தார். கீழே விழுந்த பாபு தலையில் பலத்த காயத்துடன் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிக ரத்த இழப்பு சுயநினைவு இழந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே ரயிலில் இருந்த திருநங்கைகளை பிடிக்க வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு சேலம் கோட்ட ரயில்வே போலீஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் வாலிபர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த திருநங்கை ராகுல் (எ) சுவேதா என்பவர் போலீஸ் கைதுக்கு பயந்து உடனடியாக தப்பித்துச் சென்றார்.

திருப்பத்தூர் ஜெய்பீம் நகரில் வசித்து வரும் அவர் வீட்டுக்கு சென்றதும் தற்கொலை செய்து கொள்வதற்காக எலிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ளவர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை தேறினார்.

இதனிடையே சுவேதாவை கைது செய்ய சேலம் ரயில்வே போலீஸார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அவரை கைது செய்தனர்.

திருநங்கை அமைப்பு கண்டனம்:

திருப்பத்தூர் திருநங்கை அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த செயலை கண்டித்துள்ளனர்.

திருநங்கைகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலையில் அவர்கள் மறுவாழ்வுக்காக எங்கள் அமைப்புகளும், நல்ல உள்ளங்களும் பாடுபட்டு வருகின்றோம். ஆனால் சிலபேர் இது போன்று செய்வதால் ஒட்டுமொத்த திருநங்கைகளே மோசம் என்பது போல் வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

இது திருநங்கைகள் குறித்த சமூகப்பார்வையையும், அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்தையும் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.

இதே போல் சுவேதாவுடன் ரயிலில் உடன் சென்ற திருநங்கைகளும் அவரது செயலை கண்டித்துள்ளனர். தாங்கள் அவ்வாறு நடக்கவில்லை தனிப்பட்ட அவரது நடத்தையை தாங்களும் கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
திருநங்கைகள் கொடூரம்: ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட வாலிபர் பலி, நண்பர் படுகாயம்

Published : 03 Feb 2018 20:00 IST

சேலம்



கிருஷ்ணகிரி அருகே திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து ஆந்திர இளைஞரை தள்ளிவிட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனிருந்த நண்பருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு திருநங்கைகள் செய்யும் அட்டகாசம் பரிச்சயம். சமூகம் பரிவுடன் பார்க்க வேண்டிய திருநங்கைகளில் ஒரு சில திருநங்கைகள் யாசகம் என்ற பெயரில் ரயில்களில் செய்யும் அட்டகாசம் அளவிட முடியாதது.

கையை தட்டி உரிமையுடன் பிச்சை கேட்பார்கள். தராவிட்டால் எங்கே அவமானப்படுத்தி விடுவார்களோ என்று பயந்தே பலரும் பணத்தை கொடுத்து விடுவார்கள். குறைந்தப்பட்சம் 10 ரூபாய் கொடுத்தால் தான் போவார்கள். கும்பலாக ரயில் பெட்டிகளில் ஏறும் இவர்களை போலீஸாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

இது தமிழகம் முழுதும் அனைத்து ரயில்களிலும் அன்றாடம் நடக்கும் வாடிக்கையான நிகழ்வுதான். ஆனால் அதன் உச்சகட்டமாக கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் இன்று வாலிபர் ஒருவர் திருநங்கைகளால் ஓடும் ரயிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். காப்பாற்றப்போன நண்பருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்திய நாராயணன்(32), இவரும் இவரது நண்பர் காரம் வீரம் பாபுவும் அவர்கள் நண்பர்கள் சிலரும் வேலைத்தேடி திருப்பூருக்கு வந்துள்ளனர். கிருஷ்ணகிரியிலிருந்து ரயிலில் பயணம் செய்துள்ளனர். படிகட்டு ஓரம் தரையில் அமர்ந்து இருவரும் பயணம் செய்துள்ளனர்.

ரயில் ஊத்தங்கரை ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு சாமல்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்துள்ளது. அப்போது ரயிலில் பணம் கேட்டு ஏறிய திருநங்கைகள் ஒவ்வொருவரிடமும் வசூல் செய்துக்கொண்டு சத்தியநாராயணனிடம் வந்து பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் எதுவும் இல்லை நானே வேலைத்தேடித்தான் போகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர் பணம் இல்லாதவன் எதுக்குடா ரயிலில் வருகிறாய் என எட்டி உதைத்துள்ளார். இதில் ஓடும் ரயிலிருந்து சத்திய நாராயணன் அலறியபடி கீழே விழுந்துள்ளார். இதில் விழுந்த வேகத்தில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

நண்பரை தள்ளிவிட்டதில் பதற்றமடைந்து அவரை காப்பாற்ற ரயிலிருந்து குதித்த நண்பர் காரம் வீரம் பாபுவும் பலத்த காயமடைந்துள்ளார். கீழே விழுந்த காரம் வீரம் பாபு தலையில் பலத்த காயத்துடன் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அதிக ரத்த இழப்பு சுயநினைவு இழந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே ரயிலில் இருந்த திருநங்கைகளை பிடிக்க வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு சேலம் அருகே அவர்களை போலீஸார் மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் போலி சாதி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த 11,700 அரசு ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்

Published : 05 Feb 2018 07:26 IST

மும்பை




போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த 11,700 மகாராஷ்டிர அரசு ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினர் என போலி சாதி சான்றிதழ் கொடுத்து ஏராளமானோர் மாநில அரசு பணியில் சேர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் சிலர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டது. போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் யாராவது சேர்ந்திருந்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் 11,700 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி மகாராஷ்டிர அரசில் வேலைக்குச் சேர்ந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் போலி சாதி சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப் பிரச்சினையை எப்படிக் கையாள்வது தொடர்பாக மகாராஷ்டிர அரசு குழப்பத்தில் உள்ளது.

அவர்களை பணிநீக்கம் செய்தால் அவர்களது கோபத்தை அரசு சம்பாதிக்கும். இதனால் இந்த விஷயத்தை கையாள்வது எப்படி என்பது குறித்து மகாராஷ்டிர அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. போலி சான்றிதழ் கொடுத்து கிளார்க்காக பணியில் சேர்ந்தவர்களில் பலர் தற்போது துணைச் செயலர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை பணிநீக்கம் செய்தால், ஒரே நேரத்தில் அதிக அளவில் வேலையை இழக்கும் அரசு ஊழியர்கள் இவர்களாகத்தான் இருப்பர்.

இதுதொடர்பாக சட்டத்துறையிடமும், அட்வகேட் ஜெனரலிடமும் ஆலோசனை நடத்தியது மகாராஷ்டிர அரசு.

இதுகுறித்து மகாராஷ்டிர அரசு தலைமைச் செயலர் சுமித் முல்லிக் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றும். இதில் சந்தேகமில்லை. இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரலும், சட்டத்துறையும், அரசுக்கு போதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளன. எனவே அரசு ஊழியர்களைக் காப்பாற்றுவதற்கு வழியில்லை என்று தெரிகிறது” என்றார்.

இதனால் மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள் எப்போது வேலை பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் போனுக்கான இலவச அழைப்பு சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Published : 05 Feb 2018 10:16 IST

சென்னை






பிஎஸ்என்எல் நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்த தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி (லேண்ட்லைன்) தொலைபேசி இணைப்புகள் மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் அளவில்லா இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் சேவையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு தரை வழி தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் தரை வழி தொலைபேசியில் இருந்து அளவில்லா எண்ணற்ற இலவச அழைப்புகளை (அன்லிமிடெட் ப்ரீ வாய்ஸ் கால்) மேற்கொள்ளும் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், இம்மாதம் 1-ம் தேதி முதல் இச்சேவையை ரத்து செய்ய உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும், பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கும் பொருந் தும் எனத் தெரிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 12 மில்லியன் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ஏற்கெனவே, இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை தரைவழி தொலைபேசி இணைப்பு மூலம் இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் சேவை, இரவு 10.30 மணி முதல் காலை 6 வரை என குறைக்கப்பட்டது. ஏற்கெனவே, அதிருப்தியில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, வாடிக்கையாளர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று, தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி (லேண்ட்லைன்) தொலைபேசி இணைப்பு மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் அளவில்லா இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் சேவை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 14.02.2026