Wednesday, February 7, 2018

பணம் கையில் தங்கவில்லையா - இதைப் படிங்க! #Savings

ஜெ.சரவணன்


VIKATAN  



பணம் கையில் இருக்கிறதோ இல்லையோ, செலவுகளுக்குப் பஞ்சமே இல்லாத வாழ்க்கைமுறையில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவசியச் செலவுகளான வாடகை, உணவு, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை எல்லாம் தாண்டி மாதம் ஒரு புது டிரெஸ், வாரம் ஒரு படம், பெரிய ஹோட்டலில் சாப்பாடு, பார்க், பீச். இவை தவிர வருடத்துக்குச் சிலமுறையேனும் சுற்றுலா. இப்படி நாம் செய்யும் செலவுகள்தான் இந்தியப் பொருளாதாரத்தையே தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன; வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. ஆனால், நம்முடைய நிதி நிலை எப்படி இருக்கிறது? நாடு வளர்கிறது... நாம் வளர்கிறோமா?

இந்தக் கேள்விக்கு நம்மிடம்தான் பதில் இருக்கிறது. வருமானம் என்பது செலவு செய்யத்தான் என்றாலும், சேமிப்பு, முதலீடு, வருமானத்தைப் பெருக்குதலும் அடங்கும். ஆனால் சேமிக்கவோ, முதலீடு செய்யவோ நம்மிடம் பணம் தங்க வேண்டும் அல்லவா?

‘இப்படி வந்தது, எப்படிப் போச்சுன்னே தெரியலை’ இதுதான் சம்பளதாரர்கள் பெரும்பாலோரின் புலம்பல். நம் பணத்தை நாம்தான் செலவுசெய்கிறோம். ஆனால், நம்முடைய செலவுகளைத் திட்டமிடாதபோது எப்படிச் செலவானது என்றே தெரியாது.

பணத்தை எப்படி நம்மிடம் தங்கவைப்பது? பட்ஜெட் போட்டு செலவுசெய்தால், பணத்தை எளிதில் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

முதலில் பேனா-பேப்பர் எடுத்து, கடந்த மாதம் நீங்கள் என்னென்ன செலவுகள் செய்தீர்கள் என்பதை ஒரு பட்டியலிடுங்கள். நீங்கள் பட்டியலில் போட்டுள்ள செலவுகளைக் கூட்டினால் உங்கள் வருமானத்தில் பாதிகூட வராது. ஏனெனில், பல செலவுகளை நீங்கள் மறந்தேபோயிருப்பீர்கள். வாடகை, உணவு தவிர பெரிதாக எதுவும் செலவாகவே தெரிவதில்லை. அப்படித் தெரியாமல் இஷ்டத்துக்குச் செய்யும் செலவுகள்தான் ஏராளம். வரும் மாதத்தில் நீங்கள் செய்யும் செலவுகளை அப்போதே குறித்துவைத்துக்கொள்ளுங்கள். அது பத்து ரூபாயாக இருந்தாலும் சரி. மாத இறுதியில் நீங்கள் குறித்துவைத்த செலவுகளை ஒருமுறை பாருங்கள். அதில் நீங்கள் என்னென்ன வீண்செலவுகளைச் செய்திருக்கிறீர்கள், குறைந்த செலவில் முடிக்கவேண்டியவற்றை கூடுதல் செலவாக்கியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும்.

ஆரோக்யமான உணவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவுசெய்யலாம். அதற்காக சூப்பர் மார்க்கெட்களில் பேக்கிங் செய்யப்பட்ட பொருள்கள்தான் ஆரோக்கியமானவை என அர்த்தம் அல்ல. முடிந்தவரை காய்கறிகள், மளிகைப் பொருள்களை உங்கள் அருகிலுள்ள சில்லறை வணிகர்களிடமே வாங்கிக்கொள்ளலாம். ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களைத் திட்டமிட்டு ஒரே முறை வாங்கி வைத்துவிடுவது செலவைக் குறைக்க உதவும். ஆனால், அவற்றைக் கெட்டுப்போகாமல் முறையாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் எத்தனை நாள் வரும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த அளவுக்கு மட்டும் வாங்குங்கள். அழுகிப்போய் தூக்கி எறியும் நிலைக்கு கொண்டுவர வேண்டாம்.

அடுத்து முக்கியமாக மின்சாரமும் காஸும். இரண்டும் ஆற்றல் சார்ந்த நுகர்வுகள். அவற்றை உற்பத்திசெய்ய எவ்வளவு செலவு செய்யவேண்டியிருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவை பற்றாக்குறையானால் பெறுவதற்கு அதிக செலவு செய்யவேண்டியிருக்கும். அது பற்றி நமக்கு என்ன கவலை என நினைக்க வேண்டாம். தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள், விசிறிகளை எல்லாம் அணைத்துவிடுங்கள். தேவையில்லாமல் காஸைத் திறந்துவிடுவது. உணவுப்பொருள்களை அடுப்பிலேயே அதிக நேரம் வைத்துவிட்டுக் கவனிக்காமல்விடுவது இவற்றையெல்லாம் தவிர்த்தால், உணவையும் பாதுகாக்கலாம், காஸ் வீணாவதையும் தவிர்க்கலாம். தண்ணீரும் இதில் அடங்கும். தண்ணீருக்காகக் கணிசமாகச் செலவுசெய்கிறோம். ஆனால், அதை நாம் உரிய முறையில் பயன்படுத்தத் தவறுகிறோம்.

வாகனங்களுக்காகப் பலரும் வீணாகச் செலவழிக்கிறோம். அதிக பணம் கொடுத்து ஸ்டைலுக்காக பைக் வாங்குவதால் மட்டும் பணம் வீணாவதில்லை. மைலேஜ் குறைவாக இருப்பதால் ஆகும் பெட்ரோல் செலவு, அவற்றைப் பராமரிக்க ஆகும் செலவு என வருமானத்துக்கு மீறிய வகையில் பணம் வீணாகிறது. பணம் படைத்தவர்களுக்கு அது சரிபட்டுவரும். சொற்ப வருமானத்தில் காலத்தை ஓட்டும் குடும்பங்களில் இவற்றைத் தவிர்க்கலாம். கையில் இருக்கும் பணத்தை ஆடம்பரத்துக்காக, பந்தாவுக்காகச் செலவு செய்யாமல் சேமிக்கவும் முதலீடும் செய்யலாம்.

குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருப்பது அவசியம்தான். அதற்காக சினிமா, சுற்றுலா, ஹோட்டலுக்குச் செல்வது போன்றவற்றில் தவறில்லை. இதனால் பெரும்பாலான எளியவர்கள் பிழைக்கிறார்கள். ஆனால், நம்முடைய திறன் அறிந்து அதற்கேற்ப திட்டமிடலாம். இவற்றுக்கெல்லாம் அதிகமாகச் செலவு செய்துவிட்டு, அத்தியாவசிய செலவுகளுக்குத் திண்டாடுவதில் அர்த்தமில்லை.

இவற்றையெல்லாம் புரிந்து, செயல்படுத்தினால் உங்கள் கையில் என்றும் பணம் தங்கும்.
மாணவர்களின் வகுப்பைத் தரையில் அமர்ந்து கவனித்த மாவட்ட ஆட்சியர் 

கார்த்திக்.சி
VIKATAN  

அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு மாணவிகள் இருவர் பாடம் எடுத்தனர். அதை மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கவனித்தார்.



திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து (தி பாத் கேளாபல் பப்ளிக் பள்ளி) வருகின்ற மாணவிகள் பூஜா, வைஷ்ணவி ஆகிய இருவரும் கல்வியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பராமரிப்பது, தூய்மை, புத்தக வாசிப்பு குறித்து பிற மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு பாடம் நடத்தினார்கள். இந்த வகுப்பறையில் மாணவர்களோடு சேர்ந்து மாவட்ட ஆட்சியர் க.அ.கந்தசாமி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஆகியோரும் வகுப்பைக் கவனித்தனர்.



மாணவிகள் தங்களை அறிமுகப்படுத்திய பின் சிங்கத்தின் கதையைக் கூறி வகுப்பை ஆரம்பித்தனர். கைக்கழுவும் பழக்கத்தின் அவசியத்தையும் பள்ளி வளாகம், வீடு, சுற்றுச்சூழலை எப்படி நாம் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினர்.
பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் வீடுகளிலிருந்து மக்கும் மற்றும் மக்காதக் குப்பைகளை எப்படிப் பிரிப்பது குறித்த செயல் விளக்கங்களையும் அளித்தனர். மேலும் மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி எவ்வாறு செடிகள், மரங்கள் வளர்க்கலாம் என்பதையும் மாணவிகள் கூறினர். நாளிதழ்கள், வார இதழ்களில் மாணவர்கள் தங்கள் திறமைகளைக் காட்ட வேண்டும்.

ஓவியங்களை வரைந்து நாளிதழ்களுக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் வரைந்த ஓவியம் உங்களின் பெயரோடு சேர்ந்து வெளியாகும்போது, நம்பிக்கை தானாகப் பெருகிவிடும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்தினர். இருவரும் பாடல் ஒன்றைப் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்திய பின், இறுதியாக அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, 'எனது அலுவலகத்துக்கு வந்தக் கடிதங்களில் வைஷ்ணவி மற்றும் பூஜா ஆகியோர் அனுப்பியக் கடிதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த இளம் வயதில் சமூகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் வியக்கத்தக்கது. இவர்களை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே இப்பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் நடத்தச் செய்தோம் என்றார்.

மாணவிகள் பூஜா மற்றும் வைஷ்ணவி கூறுகையில், 'அப்துல் கலாமின் கனவு, 2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான். இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் மாணவர்கள் நினைத்தால் அந்தக் கனவை நிஜமாக்க முடியும். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மாணவர்களின் பங்கு முக்கியமானது.

எங்களது ஆசை மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவது. நாங்கள் அனுப்பியக் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் படிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை கொடுத்த ஆட்சியர், பெற்றோர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்தனர்.
இந்த 12 தொழில்களைச் செய்யக் கூடாது'- இந்தியர்களுக்குத் தடை விதித்த சவுதி அரேபியா 

எம்.குமரேசன்

சவுதி அரேபியாவில், 12 தொழில்களில் ஈடுபட இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, செப்டம்பர் 11-ம் தேதி முதல் மருத்துவ உபகரணங்கள், கைக்கடிகாரங்கள் , கண் கண்ணாடி, எலெக்ட்ரானிக் பொருள்கள், கார் உதிரிப்பாகங்கள், கட்டடம் கட்டப் பயன்படும் பொருள்கள், ரெடிமேடு ஆடைகள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்ட 12 தொழில்களில் இந்தியர்கள் இனிமேல் ஈடுபட முடியாது.

சவுதி அரேபியாவில், 32 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். சவுதி அரேபியாவின் புதிய சட்டம் காரணமாக, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியத் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தத் தடை நீடிக்கும். கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக, அந்த நாட்டில் வேலைவாய்ப்பின்மை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சவுதி அரேபிய மக்களை இதுபோன்ற தொழில்களில் ஈடுபடவைக்கும் வகையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

  ஜெட்டாவில், எலெக்ட்ரானிக் கடை நடத்திவரும் முகமது ரஹ்மான், தற்போது கேரளாவுக்கு வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'புதிய சட்டத்தினால் இந்தியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது' என்றார்.
”தகுதி இல்லாதவர்கள் தேர்வு செய்யப்படுவதே ஊழலுக்குக் காரணம்!” - பல்கலைக்கழக ஊழல் குறித்து கல்வியாளர்கள் 

VIKATAN 

கா . புவனேஸ்வரி




உதவிப் பேராசிரியர் பதவிக்குப் பல்கலைக்கழகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்துவந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்ளிட்டவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதோடு இல்லாமல், சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதைத் தொடர்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், துணைவேந்தர் கணபதியின் கைதுவிவகாரம் தமிழகக் கல்வி நிலையங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து துணைவேந்தர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகின்ற சூழலில், கல்வி நிலையங்கள் மீதான நம்பிக்கை தகர்த்தெறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களிடம் பேசினோம்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, " பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல் என்பது இன்று...நேற்று... நடைபெறும் ஊழல் அல்ல. கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனுவை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கடிதத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணபதி ஒருவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை. நிறைய துணைவேந்தர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. கணபதியின் வழக்கை மையமாகவைத்தே அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யக்கூடிய பல்கலைகழகத் தேர்வுக் கமிட்டியில் நேர்மையான ஆட்களை நியமிக்க வேண்டும்.தேர்வுக் கமிட்டியில் இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி நேர்மையான துணைவேந்தர்களை அவர்கள் தேர்வுசெய்வார்கள்?

குறிப்பாகத் துணைவேந்தர் பதவிக்கான தகுதிகளைப் பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்து வைத்துள்ளது. அந்த விதிமுறைகளும், வரைறைகளும் வெறும் பேப்பரில்தான் உள்ளது. அதனை எந்தப் பல்கலைக்கழகத் தேர்வுக் கமிட்டியும் நடைமுறைப்படுத்துவதில்லை. தேர்வுக் கமிட்டியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆய்வியல் மாணவர்களாக இருக்கிறார்கள் அல்லது அரசியல் தலையீட்டுடன் இயங்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தேர்வுக் கமிட்டியில் இப்படிப்பட்ட நபர்கள் இருக்கும்போது, அவர்கள் இந்த மாதிரியான ஊழல்வாதிகளைத்தான் தேர்வுசெய்வார்கள்.

குறிப்பாக ஆளுநருக்கு நெருக்கமானவரா... கோடிக்கணக்கில் பணம் கொடுப்பாரா... அதிகாரவர்க்கத்தில் இவருடைய செல்வாக்கு எந்த நிலையில் உள்ளது என்பது போன்ற தகுதிகள்தான் இன்றைய துணைவேந்தர்களின் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பதவிக்கு வரும் அந்த நபர்கள், கொடுத்த பணத்தை எடுக்கும் வேலையைத்தான் பல்கலைக்கழகங்களில் செய்கிறார்களே தவிர, கல்விக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதில்லை.தேர்வுக் கமிட்டியும் எந்த விதிமுறையும் இல்லாமல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. துணைவேந்தர்கள் தேர்வு என்பதும் எந்த வரையறையும் இல்லாமல்தான் நடக்கிறது. அதனால், முதலில் தேர்வுக் கமிட்டியைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தேர்வுக் கமிட்டியில் நியமிக்கப்படும் ஆள்களின் தகுதி, திறமை மற்றும் இதுவரை எந்தப் புகாரிலும் சிக்காத நபரா என்பதைக் கண்டறிந்து நியமிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட நபர்களைக்கொண்டு தேர்வுக் கமிட்டி அமைத்தால் மட்டுமே நல்ல துணைவேந்தர்களை நாம் பெறமுடியும்'' என்றார் மிகத் தெளிவாக.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ''பல்கலைக்கழகம் என்பது ஆய்வியல் தொடர்புடையதாகவும் சமூகத் தொடர்புடையதாகவும் இருக்கக்கூடியவை. அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கக்கூடியவர், சமூக அக்கறையோடு இயங்கக்கூடியவராகவும், அறிவு நுணுக்கமுள்ளவராகவும் இருக்க வேண்டும். ஆனால், அம்மாதிரியான தகுதி என்பதே இங்கு வைக்கப்படுவதில்லை. டாக்டர் பட்டமும், பேராசிரியர் பணி அனுபவமும் தகுதியாக மட்டுமே பார்க்கப்படுகிறதே தவிர, அந்த நபருக்கு சமூக அக்கறை இருக்கிறதா என்பது தகுதியாக வைக்கப்படுவதில்லை. குறிப்பாக ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிற ஆய்வு என்பது, உலகநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விவாதப்பொருளாக அந்த ஆய்வு மாறவேண்டும். அப்படிப்பட்ட ஆய்வைத்தான் உலகத்தரம் வாய்ந்த ஆய்வாக எடுத்துக்கொள்ள முடியும். குறிப்பாக, ஒரு தாவரவியல் ஆய்வில் புதிய விஷயம் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த கண்டுபிடிப்பானது, உலகப் பல்கலைக்கழகங்களில் பேசப்படுகிற நிலையில் கல்வியாளர்களிடையே தகவல்தொடர்புகள் விரிவடையும். அப்படிப்பட்ட இடம்தான் பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சமூக அக்கறை, சமூகப் பார்வை, கல்வியில் புலமை உடையவர்களைத்தான் பேராசியராக நியமிக்க வேண்டும். அப்படிப்பட்ட பேராசியருக்குத் துணைவேந்தராக ஒருவர் வருகிறார் என்றால், அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை இன்றைய ஆளுநர்தான் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால், இன்றையச் சூழலில் அப்படியான எந்தத் தகுதியும் இல்லாமல் தேர்வு செய்வதன் விளைவே இப்படிபட்ட ஊழல்கள் நடக்கக் காரணம்" என்றார்.

இனி, வருங்காலத்திலாவது கல்வியாளர்கள் சொல்வதுபோல் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்களா?
ஹஜ் மானியம் ரத்து... உண்மை என்ன? கணக்கு வழக்குகளுடன் ஒரு விரிவான அலசல் #MustRead 
vikatan

கா . புவனேஸ்வரி

 



''யாருக்கு மானியம்... ஹஜ் பயணிகளுக்கா... ஏர் இந்தியாவுக்கா? மானியம் ரத்து என்பதைவிட, இந்த மானியம் என்பதே ஒரு ஏமாற்றுவேலை. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்கிறது. இதை வைத்து இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. உடனே இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்''-இஸ்லாமியர்களுக்கான ஹஜ் மானியம் என்பது அதிகாரபூர்வமாக தற்போது நீக்கப்பட்டிருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் பலரின் கோரிக்கை இதுவாகத்தான் இருக்கிறது.''இப்போதும்கூட மானியம் ரத்து என்பதுதான் பரபரப்புச் செய்தியாக மாற்றப்படுகிறதே தவிர, அதன் பலன், ஹஜ் பயணிகளுக்குக் கிடைக்கும் வகையில் செய்யவே இல்லை'' என்பதையே வலியுறுத்திக் கேட்கிறார்கள் அவர்கள்.'

'இதென்ன புதுக்கதை என்கிறீர்களா?'

கொஞ்சம் ஆழமாகப் புகுந்து பார்த்தால், கதை அப்படித்தான் போகிறது. அதாவது, ‘இஸ்லாமியர்களுக்கு ஹஜ் மானியம் கொடுப்பதுபோல கொடுத்துவிட்டு, அந்தப் பணத்தை அப்படியே ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குத் திருப்பிவிடும் வேலை நடக்கிறது' என்று அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கவே செய்கிறது.

இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஹஜ் என்பது ஐந்தாவது கடமை. சவுதி அரேபியாவிலிருக்கும் மக்காவில் உள்ள மசூதி உள்ளிட்ட சில முக்கியமான இடங்களுக்குச் சென்று தொழுகை செய்வதுதான் இந்தக் கடமை. முதல் நான்கு கடமைகள் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பொதுவானது. ஆனால், செலவு செய்வதற்கு வாய்ப்புள்ளவர்களின் கடமைதான் ஹஜ் பயணம். இஸ்லாமியர்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்திய அரசின் ஹஜ் மானியம்.



ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட அளவிலான பயணிகள் வரலாம் என்று சவுதி அரசாங்கத்திலிருந்து அனுமதி வழங்கப்படும். ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்பவர்களுக்கும், தனியார் ஏஜென்சி மூலமாகச் செல்பவர்களுக்கும் இந்த அனுமதி பிரித்து வழங்கப்படும். அதிக எண்ணிக்கையிலான இடங்கள் ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்பவர்களுக்குத்தான். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் ஹஜ் கமிட்டிகள், பயணிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பும். இந்தப் பயணத்தை ஹஜ் கமிட்டிகளே ஒருங்கிணைக்கும். தற்போதைய நிலையில், இதற்கான செலவு அதிகபட்சம் 2 லட்ச ரூபாய்க்குள்ளேயே அடங்கும். தனியார் ஹஜ் பயண ஏஜென்ஸி மூலமாகச் சென்றால் செலவு குறைந்தபட்சம் 3.5 அல்லது 4 லட்சம் முதல் தொடங்கும். அதிகபட்சம், அந்தப் பயணியின் தேவையைப் பொறுத்து முடிவாகும்.

தற்போது மானியம் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், “ஆரம்பத்திலிருந்தே இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனிதப் பயணத்துக்கான செலவுகள் குறித்து, ஆட்சியிலிருப்பவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்று வருத்தப்படும் தமிழ்நாடு தவுஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன், ''ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் மத்திய அரசு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறது (கடந்த ஆண்டு நிலவரப்படி). அதில், பயணம் மேற்கொள்ளும்போது 34 ஆயிரம் ரூபாய், உணவுக்கானது எனக் கூறி, ஜித்தாவில் இறங்கியவுடன் பயணிகளிடம் கொடுக்கப்படுகிறது. எஞ்சிய தொகையானது சவுதி உள்ளூர் போக்குவரத்து மற்றும் விமானக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. புனிதப் பயணம் மேற்கொள்ளும் எந்தப் பயணிக்கும் சவுதியில் உள்ளூர் போக்குவரத்துக்குக் கட்டணமே கிடையாது. ஆனால், அதை இவர்களால் எப்படி நிர்ணயம் செய்ய முடிகிறது எனத் தெரியவில்லை. மேலும் தனியார் விமானச் சேவைகளில் செல்லும் பயணிகளுக்குப் போக்குவரத்துச் செலவு 20 அல்லது 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகிறது.



34 ஆயிரம் ரூபாயை உணவுக்காகக் கொடுத்தபின், மீதமுள்ள ரூபாய்க்கு என்ன செலவு செய்யப்படுகிறது என்ற கணக்கே கொடுக்கப்படுவதில்லை. அப்படியிருக்கும்போது, இதில் மானியம் எவ்வளவு? போக்குவரத்துக் கட்டணம் எவ்வளவு? என்பதையெல்லாம் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும். ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்லும் பயணிகள், ஏர் இந்தியா மூலமாக மட்டுமே செல்லமுடியும். தனியார் விமானப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது விதியாகவே இருக்கிறது. இனி, ஹஜ் பயணிகளின் பட்டியலை மட்டும் வெளியிட்டுவிட்டு, அவர்களுடைய பயணச் செலவில் மத்திய அரசு தலையிடாமல் இருந்தாலே நன்மைதான்'' என்று சொன்னார்.

சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கஸாலி, அரபு நாடுகளுக்கு அடிக்கடி பயணம் சென்றுவரக்கூடியவர். அவரிடம் இதைப் பற்றி கேட்டபோது, ''மக்கா, மதீனா உட்பட அரபு நாடுகளில் அநேக இடங்கள் உண்டு. என்றாலும், பக்ரீத் நேரத்தில் மேற்கொள்ளப்படும் பயணம்தான் ஹஜ். மற்ற நாள்களில் செல்வது உம்ரா. வசதி இருப்பவர்கள் இந்தப் பயணத்தைச் செய்யாமல் இருப்பதும் தவறு... வசதியில்லாததால் கடன் வாங்கி கடமையைச் செய்வதும் தவறு. குறைந்தபட்சம் 15 நாள்களும் அதிகபட்சம் 40 நாள்களும் வசதியைப் பொறுத்து இப்பயணம் மேற்கொள்ளப்படும். வசதிமிக்கவர்கள் பல தடவை செல்வதும் உண்டு. இந்தப் பயணத்தை மேற்கொள்பவர்கள், அவர்களுடைய பெயருடன் ஹாஜி என்கிற அடைமொழியைச் சேர்த்து விளிக்கப்படுவார்கள்.

தற்போது மானியம் இல்லை என்றாகிவிட்ட பிறகு, சுமார் 200 பேர் சேர்ந்து சார்ட்டட் விமானத்தைச் சொந்தமாக எடுத்துச்சென்றால், இன்னும்கூட பயணக் கட்டணம் குறையும். கப்பல் பயணத்துக்கு வழி வகை செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது நல்ல திட்டமே. இதை விரைந்து நிறைவேற்ற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

'தனியார் ஏஜென்ஸிகள் சுமாராக 4 லட்ச ரூபாய்க்கும் மேல் வசூலிக்கிறார்கள். ஹஜ் கமிட்டி மூலமான பயணமோ... 2 லட்ச ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது எனும்போது, விருப்பப்பட்ட விமானத்தில் செல்கிறோம் என்று கூறினால்... வசதியற்ற பயணிகளும் கூடுதலாக 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்குமே?' என்ற கேள்விக்கு, பதில் தந்தார், புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தைச் சேர்ந்த இப்ராஹிம் ஜே.இ, ''நான் ஹஜ் கமிட்டி மூலமாக அங்கே சென்று வந்திருக்கிறேன். அவர்களும் சிறப்பான ஏற்பாடுகளைத்தான் செய்வார்கள். ஆனால், சிற்சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதை நாம்தான் சமாளிக்க வேண்டும். உதாரணமாக உள்ளூர் போக்குவரத்துக்குச் சமயத்தில் கூடுதலாகச் செலவு செய்யவேண்டியதுகூட வரலாம். ஆனால், தனியார் மூலமாகச் செல்லும்போது, அவர்கள் கூடுதலாகப் பணம் வசூலிப்பதால் சிரமமில்லாமல் போய்விடும்.

முதலில் மானியம் என்பதே ஏர் இந்தியாவுக்குத்தான் செல்கிறது. அதிகபட்சமாக விமானக் கட்டணம் 40 ஆயிரத்துக்கும் மேல் வராது. ஆனால், ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்லும்போது, அதை 60 ஆயிரம் 70 ஆயிரம் என்று உயர்த்திவிடுவதுதான் பிரச்னையாக இருக்கிறது. இல்லையென்றால் இன்னமும் செலவு குறையும் என்பதே உண்மை. எனவே, எந்த விமானத்தில் வேண்டுமானாலும் செல்லலாம் என்று விதியை மாற்றிவிட்டு, வழக்கம்போல மற்ற ஏற்பாடுகளை ஹஜ் கமிட்டியே பார்த்துக்கொள்ளும் என்கிற வகையில் ஏற்பாடு செய்துவிட்டால், செலவு கூடாது... குறையவே செய்யும்.

அதேபோல, ஹஜ் பயணத்துக்காக 500 கோடி மானியமாகத் தரப்படுகிறது. இதை சிறுபான்மையினப் பெண் குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடப்போகிறோம் என்று சொல்கிறார்கள். இது நல்லவிஷயமே. ஆனால், அந்த 500 கோடி என்பது ஹஜ் மானியம் என்று சொல்வதைவிட, ஹஜ் சமயத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுவந்த 500 கோடி என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்'' என்று சொன்னார்.

ஹஜ் பயணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்யும் சென்னையிலிருக்கும் தனியார் டிராவல் ஏஜென்ஸியைச் சேர்ந்த நாசரிடம் பேசியபோது, ''ஹஜ் கமிட்டியின் கட்டணத்தோடு ஒப்பிடும்போது, எங்களுடைய கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகள் மற்றும் வசதிகளை நாங்கள் செய்து தருகிறோம். குறிப்பாக உணவு, தங்கும் விடுதி, வழிகாட்டி, போக்குவரத்து என அனைத்துமே சிறப்பாக இருக்கும். ஒரு பயணிக்கு அதிகபட்சமாக 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறோம்.

சாதாரண நாள்களில் ஜித்தா (சவுதி) சென்று வர 30 ஆயிரம்தான் கட்டணம். ஆனால், ஹஜ் சமயத்தில் இதை 60 ஆயிரம் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்று ஏர் இந்தியா நிறுவனத்தினர் ஏற்றிவிடுகிறார்கள். தனியார் விமானங்களும் இதைப் பின்பற்றி ஏற்றிவிடுகின்றன. இதனால்தான் எங்களைப் போன்ற தனியார் ஏஜென்ஸிகளுக்கான கட்டணம் உயர்கிறது. இதுவே வழக்கமான கட்டணம் என்றால், எங்களுடைய கட்டணமும் குறைவாகவே இருக்கும்'' என்று சொன்னார் நாசர்.

இதுதொடர்பாக ஹஜ் கமிட்டி உறுப்பினர்களிடம் பேசலாம் என்று முயற்சி செய்தபோது யாரும் பேசுவதற்கு முன்வரவில்லை. ஒருவர் மட்டும் தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாதவராக, ''சொல்லப்படும் புகார்களில் உண்மை இருக்கிறது. மானியத் தொகையானது ஏர் இந்தியாவுக்குத்தான் செல்கிறது. ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்பவர்களுக்கு 88 ஆயிரம் ரூபாய் வரை பயணக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் 16 ஆயிரம் ரூபாயை மானியமாக வழங்குவதாக மத்திய அரசு கூறுகிறது. கணக்குப் போட்டுப் பார்த்தால், அதிகபட்சமாக பயணக்கட்டணம் 60 ஆயிரம் என வைத்துக்கொண்டாலே மீதி 28 ஆயிரம் ரூபாய் வருகிறது. இதில் 16 ஆயிரம் ரூபாய் மானியம் என்கிற பெயரில் வழங்கப்படுகிறது. இது விமான நிறுவனத்துக்கே செல்கிறது. இதுபோக மீதி 12 ஆயிரம் ரூபாயும் பயணிகளிடமிருந்து பறித்து விமான நிறுவனத்துக்கே வழங்கப்படுகிறது'' என்று சொன்னார்.

 மானியம் எவ்வளவு... அது எங்கே போகிறது என்று இத்தனை காலமாகத் தெரியாதிருந்த நிலையில், தற்போது விமானக் கட்டணமாகத்தான் செல்கிறது என்று இஸ்லாமியர்கள் தரப்பில் கணக்குப் போட்டுக் கூறுகிறார்கள். இதை ஹஜ் கமிட்டியிலிருப்பவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, அவர்களின் கோரிக்கையின்படி இன்றைய வியாபார உலகில் எந்த விமானத்திலும் பறக்கலாம் என்கிற அனுமதியை வழங்கிவிட்டால், செலவுகள் இன்னமும் குறையுமே. மானியத்தை ரத்து செய்துவிட்டது பிஜேபி அரசு என்கிற குற்றச்சாட்டுக்கும் வழியில்லாமல் போகுமே. இதைச் செய்ய அரசுக்கு என்ன தயக்கம்?.
உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்! 

VIKATAN 

கார்க்கிபவா



ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது. அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது.

இந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற பயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.

இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

1) முதலில் 'https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்.

2) 'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.



3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்.

4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.

5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல்களை என்டர் செய்யவும்.

6) இந்தப் பக்கத்தில் Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்)



7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்

8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கலாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)

9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்.

10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்ற தகவல்கள் வரும்.

ஒருவேளை, எந்த டிரான்ஸாக்‌ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்.

11ம் தேதி, 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்


Added : பிப் 07, 2018 00:20

அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351 இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 494; இளநிலை உதவியாளர் பணியில், 4,301; தட்டச்சர் பணியில், 3,463 என, எட்டு வகை பதவிகளில், 9,351 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான, குரூப் - 4 போட்டி தேர்வு, வரும், 11ம் தேதி நடக்கிறது.இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். தேர்வை, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். குரூப் - 4 தேர்வுகளில், இதுவரை, 12 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த தேர்வில், கிராம நிர்வாக அதிகாரி பதவியும் சேர்க்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டியுள்ளது.மாநிலம் முழுவதும், 3,500 மையங்களில் தேர்வு அறைகள் அமைக்கப்பட உள்ளன; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். பெரும்பாலான தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதேபோல், தேர்வு அறைகளில், வீடியோ பதிவும் எடுக்கப்பட உள்ளது.தேர்வுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், பல்வேறு தனியார் பயிற்சி மையங்கள், தனியார் அறக்கட்டளை நிறுவனங்கள் உள்ளிட்டவை, குரூப் - 4 தேர்வுக்கு சிறப்பு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பல்வேறு மையங்களில், தினமும் மாதிரி தேர்வு வைத்து, தேர்வர்கள் தயார் செய்யப்படுகின்றனர்.
- நமது நிருபர் -

NEWS TODAY 14.02.2026