Friday, February 9, 2018

மே 6-இல் நீட் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி

By DIN | Published on : 09th February 2018 01:45 AM |

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான "நீட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுக்கான அறிவிக்கையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது. வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாகும். விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் "நீட்' தகுதித் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் நாடு முழுதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த ஆண்டு தடையின்றித் தேர்வு நடந்தது.
இதனால், தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இத்தேர்வுக்குத் தயார் செய்வதற்காக, தமிழக அரசு இலவசப் பயிற்சி மையங்களை அமைத்து பயிற்சியளித்து வருகிறது. முதல் கட்டமாக 100 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு எப்போது?: இந்தச்சூழலில் 2018-ஆம் ஆண்டுக்கான தேர்வு மே 6-இல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்தத் தேர்வில் பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 180 கொள்குறி தேர்வு முறை (நான்கு விடைகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது) அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

தகுதி: தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களாக இருந்தால் இந்த மூன்று பாடங்களிலும் 40 சதவீத மதிப்பெண்களுடனும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு: தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 25.

ஆதார் கட்டாயம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகும். விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டவர்களாக இருந்தால் கடவுச் சீட்டு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?: தேர்வுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 750. இதர பிரிவு மாணவர்களுக்கு கட்டணம் ரூ. 1,400.

ஆன்-லைன் விண்ணப்பம்: நீட் தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., இணையதளத்தின் (www.cbseneet.nic.in) வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

12 ஜோதிர்லிங்க தரிசனம் தொடக்கம்

By DIN | Published on : 09th February 2018 04:28 AM |

12 ஜோதிர் லிங்க தரிசனத்தை தொடங்கி வைத்த (இடமிருந்து) பரதநாட்டிய கலைஞர் பார்வதி கண்டசாலா, விஜிபி சந்தோஷம், பிரம்மா குமாரிகள் அடையாறு கிளை பொறுப்பாளர் சகோதரி முத்துமணி, பிரம்மா குமாரி மூத்த சகோதரி கலாவத பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்கங்களின் தரிசனம் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதை பொதுமக்கள் வரும் 14-ஆம் தேதி வரை தரிசிக்க முடியும்.

வள்ளுவர் கோட்டத்தில் வியாழக்கிழமை நடந்த தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களான வி.ஜி. சந்தோஷம், டாக்டர் எச். வி. ஹண்டே , தி.நகர் ராமகிருஷ்ண மடத்தின் பொருளாளர் சுவாமி யதுநாதநந்தா, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்களும் பங்கேற்றனர்.

இராஜயோக ஞான விளக்கம்: அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்கங்களின் தரிசனத்தை அடுத்து இராஜயோக ஞான விளக்கம் படக் கண்காட்சியாகவும், விடியோ காட்சியாகவும் காண்பிக்கப்படுகிறது. அதன் பிறகு 5 நிமிஷம் அமர்ந்து தியானிக்க, பிரத்யேக தியானக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
அனுமதி இலவசம்: காலை 8 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த லிங்க தரிசனத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.
இங்கு ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் தாய்மார்களுக்கான விளக்கு தியானம், திருநங்கைகளுக்கான தனி நிகழ்ச்சி, தேர்வு பயத்தை நீக்கும் வழிகள் என்னும் மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சி, தமிழ் படைப்பாளிகள், அறிஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி, மன அழுத்தத்துக்கு விடை கொடுப்போம் என்னும் பொது நிகழ்ச்சி, அர்ச்சகர்கள், ஓதுவார்கள், உபன்யாசகர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி, கலைத்துறையினருக்கான நிகழ்ச்சி, ஓய்வு பெற்ற முதியோருக்காக முதுமையை வெல்வோம் நிகழ்ச்சி, தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான நிகழ்ச்சி என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், மாலை 6 மணி முதல் அஷ்டலஷ்மி, நவதேவிகள் மற்றும் கைலாச திருக்காட்சி போன்றவை தத்ரூப காட்சிகளாக அரங்கேற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
பொன்னும் ஆடையும் அல்லாத பொன்னாடை!

By சிவா. சித்தார்த்தன் | Published on : 08th February 2018 03:23 AM

DINAMANI

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கட்சிக் கூட்டம், அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினரை சிறப்பிக்கும் வகையில், சாதாரண நூலால் தயாரிக்கப்பட்ட சால்வை அல்லது ரோஜா மாலையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அணிவிப்பதுதான் நடைமுறையில் இருந்து வந்தது. பின்னர் காலமாற்றத்தால் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்ட பருத்தியாலான சால்வைகளை சிறப்பு விருந்தினருக்கும், மற்றவர்களுக்கு நூல் அல்லது கதர் துண்டையும் அணிவிப்பார்கள். 1980-களில் பெரும்பாலான எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்களின் தோள்களில் நிரந்தரமாக சால்வைகள் இடம் பிடித்திருந்தது.

நூல், பருத்தி, கம்பளி, ஜரிகை என பலவகையில் சால்வைகள் இருந்தாலும், தேவையான விலையில் வேலைப்பாடு, வண்ணம், நேர்த்தி, பளபளப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றது ஜரிகை சால்வைதான் என்பதால் அதற்கு மவுசு அதிகம். அதனால்தானோ என்னவோ, உச்சபட்ச பதவியிலிருந்து சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் வரை, மிகமிக முக்கிய பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தங்கள் தகுதி, வசதிக்கேற்ற விலையில் வாங்கி அணிவித்து தங்களின் மகிழ்ச்சியையும் மரியாதையையும் வெளிப்படுத்துகின்றனர்.

அண்மையில், ஒரு கல்வி நிறுவனத்தில் நிகழ்ச்சி முடிந்த பின், அதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர், தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வையை மடித்தபோது, விரலில் ரத்தம் வந்துவிட்டது. அவருக்குப் போர்த்திய சால்வையைப் பரிசோதித்தபோது, அதன் நான்கு முனைகளிலும் குண்டூசி குத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது, அருகிலிருந்த அந்தக் கல்வி நிலையத்தின் ஊழியரிடம், சால்வையில் ஊசி எப்படி வந்தது என்று கேட்ட போது, சில நாள்களுக்கு முன் நடைபெற்ற விழாவில், மேடையில் வைத்திருந்த டீப்பாயின் மேல் அலங்காரமாக இந்த சால்வையைத்தான் விரித்துப் போட்டிருந்ததாக யதார்த்தமாக தெரிவித்தார்.

இப்போதெல்லாம் சில அரசியல் கூட்டங்கள், அரசு மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், "சால்வை அணிவிக்காதீர்கள், அதற்கு பதிலாக புத்தகங்கள், கட்சிக்கு நிதி, தாங்கள் நடத்தும் இதழ்களுக்கு நன்கொடை அல்லது தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்குங்கள்' என்று வெளிப்படையாகவே வேண்டுகோள் வைக்கின்றனர். இதனை ஏற்று ஒரு சிலர்தான் நிதி, நன்கொடை, சந்தா வழங்குகின்றனர். ஆனால், சால்வை அணிவிப்பவர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை.

தற்போது எந்தவிழா என்றாலும் சால்வை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. விழாவில் அணிவிக்கப்படும் சால்வைகளை சிறப்பு விருந்தினரின் உதவியாளர் கனகச்சிதமாக சேகரித்து, மடித்து மூட்டையாகக் கட்டி, அவர்கள் வந்த வாகன த்தில் ஏற்றி வைத்துவிடுவார். வீட்டுக்கு சென்ற பின், இவைகளைத் தரம், ரகம் வாரியாகப் பிரித்து, தங்களுக்கு வேண்டிய ஜவுளிக்கடைக்கு விற்பனை செய்யப்பட்டு, மறு விற்பனைக்குச் சென்று விடும் என்ற ரகசியம் பொதுஜனங்களுக்குத் தெரியுமா?

இதனைப் பார்க்கும்போது, சிறு வயதில் மாட்டுப் பொங்கல் அன்று இரவு நடைபெறும் வழக்கம் நினைவு வருகிறது. தாங்கள் பால் கறக்கும் வீடுகளுக்கு, தங்களின் வசதிக்கேற்ப தாரை தப்பட்டை, குறத்தி நடனம், நையாண்டி மேளம் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வருவார்கள். அவர்கள் மாடுகளுக்கு பூஜை செய்து சாமி கும்பிட்டபின், வீட்டின் உரிமையாளர் வழங்கும் வேஷ்டி, துண்டு, ரொக்கம் பெற்றுக்கொள்வார்கள். பின், தங்களுக்கு கிடைத்த வேஷ்டி, துண்டினை கழுத்தில் மாலைபோல் அணிந்துகொண்டு அடுத்தடுத்த வீடுகளுக்குச் செல்வார்கள். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வேஷ்டி, துண்டுகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும்.

மற்றொரு நிகழ்ச்சியும் இங்கு கூறலாம். இறந்தவருக்கு கருமாதி அல்லது படத்திறப்பு செய்யும்போது, அவரின் ஆண் வாரிசுகளை வரிசையாக உட்கார வைத்து, சொந்த பந்தங்கள் மரியாதை செய்வதாகக் கூறி, வேஷ்டி, சட்டை அளிப்பார்கள். பின்னர், இதனை ஒன்றாக கட்டி சைக்கிள் கேரியரில் வைத்து எடுத்துச்செல்வார்கள். இதில் யாருடைய துணி மூட்டை உயரமாக இருக்கிறது என போட்டி போட்டு பேசிக்கொண்டு வருவோம் சிறுவயதில். மாட்டுப் பொங்கலுக்கு வழங்கிய துணியானாலும், வாரிசுகளுக்கு வந்த செய்முறை துணியானாலும் மறு விற்பனைக்கு ஜவுளிக் கடைக்கு சென்றடைவதில்லை.
பொன்னாடை அணிவித்து கெüரவிப்பது என்பது மிகப் பழைய பாரம்பரியம்தான். ஆனால் இன்று அதன் பொருளறியாது, வெறும் சடங்காக மாறிப் போய்விட்டது. இதில் விலை குறைவான, மிக மலிவான போலிகள் வேறு! தோளில் போட்டுக்கொள்ளவும், முகம் துடைக்கவும், குளித்த பிறகு துவட்டவும், முடியாதது மட்டுமல்ல, வேறு எதற்கும் பயன்படாத, இன்றைய மலிவான பொன்னாடை என்ற ஜரிகை சால்வையை ஆடையாக தைத்து உடுத்தவும் முடியாது, அழகு நகை ஆபரணமாக அணிந்து கொள்ளவும் முடியாது!

எனவே எல்லா நிகழ்ச்சிகளிலும் அதை ஒரு சடங்காக அணிவிப்பவர்கள் மறு சிந்தனை செய்யுங்கள். சடங்குப் பொன்னாடைகளைத் தவிர்த்து, இதர "பயனுள்ள' பரிசுகளை அளிக்கலாம்!

எந்தப் பயனும் இல்லாத பொன்னாடைகளைத் தவிர்த்து, வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிடவும், அடுத்த தலைமுறைக்கு நூல்களின் அவசியத்தை உணர்த்திடவும், நாம் ஒவ்வொருவரும் நேசிக்க, பாராட்ட, வாழ்த்த, சிறப்பிக்க நினைப்பவர்களுக்குப் புத்தகங்களை வழங்குவோம். அடுத்த சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக இருப்போம்.
சென்னை ரவுடிகள் சேலத்தில் பதுங்கல்? : உளவு போலீசார் கண்காணிப்பு தீவிரம்

Added : பிப் 09, 2018 01:16

சேலம்: சென்னை ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க துவங்கியதால், அவர்கள், சேலம், ஏற்காடு ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளதாக கிடைத்த தகவல்படி, உளவு போலீசார், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னையைச் சேர்ந்த, பிரபல ரவுடி பினு, 45. இவனது பிறந்த நாளை, கடந்த, 6ல், ரவுடிகள் கும்பல், மது, ஆட்டம், பாட்டத்துடன், காஞ்சிபுரம் அருகே கொண்டாடினர். அப்போது, போலீசார் சுற்றிவளைத்து, 75 ரவுடிகளை பிடித்தனர். ஆனால், பினு, அவனது கூட்டாளிகள் கனகு, விக்கி ஆகியோர் தலைமையில், 25 பேர் தப்பினர். அவர்களை பிடிக்க, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், தமிழகம் - ஆந்திரா எல்லையான குப்பம், வேலுார் மாவட்டம் - குடியாத்தம், சேலம் மாவட்டம் - ஏற்காடு, கோவை ஆகிய இடங்களில் தலைமறைவாக பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் கருதினர். அதேநேரம், பினுவின் மொபைல் எண்ணை ஆய்வு செய்ததில், 10 நாட்களுக்கு முன், ஏற்காடு வந்து சென்றது தெரிந்தது. அதை, பிடிபட்ட சக ரவுடிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்காடு, சேலம் மாநகரில், ரவுடிகளின் நடமாட்டம் குறித்து, உளவுப்பிரிவு போலீசார், எஸ்.பி.சி.ஐ.டி., நுண்ணறிவு பிரிவு, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீசார், கண்காணிப்பை தீவிரப்படுத்திஉள்ளனர்.அது மட்டுமின்றி, சேலம் மாநகரம், மாவட்டத்தில் உள்ள ரவுடிகளில், சென்னை ரவுடிகளுடன் தொடர்புடையவர்கள் பட்டியல் தயாரித்து, அவர்களிடம் விசாரிக்க, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:சென்னை தனிப்படை போலீசார், கோவை, பாலக்காடு, திருச்சூரில் முகாமிட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். சேலத்துக்கு யாரும் வரவில்லை. அதேநேரம், ரவுடிகளை கண்காணிக்கும் ஓ.சி.யு., பிரிவுக்கு மட்டும், சில தகவல்களை தெரிவித்துள்ளனர். அவர்கள், ரகசிய விசாரணை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பினு, சேலம் வந்து, கல்லீரல் டாக்டரிடம் சிகிச்சை பெற்றது குறித்து விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஆறு தனிப்படை அமைப்பு சென்னையில் ரவுடிகள் பிடிபட்ட போது, அவர்களில் சிலர் தப்பி தலைமறைவாகி உள்ளனர்.

இதில் பங்கேற்ற வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய ரவுடிகளும், தங்களின் கூட்டாளிகளுடன், அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து, சென்னையில் இருந்து, ஆறு தனிப்படை போலீசார், வேலுார் வந்து, விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில், ரவுடிகள் சிலர், சோளிங்கர், அரக்கோணம் வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு தப்பிச் சென்றதாகவும், அவர்கள் அங்குள்ள செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை சுட்டுப் பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மருத்துவ கல்லூரி கேட்டு கடிதம்

Added : பிப் 09, 2018 01:07

'நாடு முழுவதும், மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு, ஒரு மருத்துவக் கல்லுாரி வீதம், புதிதாக, 24 மருத்துவக் கல்லுாரிகள் அமைக்கப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் மோடி அரசு அறிவித்தது.தமிழகத்தில், மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு, ஒரு மருத்துவக் கல்லுாரி இருக்கிறது. மேலும், நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவ படிப்பு இடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான். இங்கு, 22 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. மேலும், ஒரு பல் மருத்துவக் கல்லுாரியை துவக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளில், தமிழகத்திற்கு ஒரு மருத்துவக் கல்லுாரி கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 'மத்திய அரசு அமைக்கவுள்ள, மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றை, தமிழகத்தில் துவங்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு, ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவங்குவதை, தமிழக அரசு வரவேற்கிறது. தமிழகம், மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது.ஆனாலும், ராமநாதபுரம், விருதுநகர் போன்ற, 13 மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் இல்லை. எனவே, மத்திய அரசு அமைக்கும் புதிய மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்று, இந்த மாவட்டங்களில் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
கவர்னர் மாளிகையை பார்க்க தினமும் மக்களுக்கு அனுமதி

Added : பிப் 09, 2018 00:57

சென்னை : கவர்னர் மாளிகையை, இன்று முதல் தினமும் மாலையில், பொதுமக்கள் சுற்றிப் பார்க்க, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி வழங்கி உள்ளார்.சென்னையில் உள்ள கவர்னர் மாளிகை, 157 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாளிகையை சுற்றி, ஏராளமான மரங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளன. பல்வேறு வகையான மான்களும் வளாகத்தை சுற்றி வருகின்றன; பாரம்பரியமான கட்டடங்களும் உள்ளன. கவர்னர் மாளிகைக்குள், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தமிழக பொறுப்பு கவர்னராக வித்யாசாகர் ராவ் இருந்தபோது, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில், பொதுமக்கள், கவர்னர் மாளிகையை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கினர். தற்போதைய கவர்னர், பன்வாரிலால் புரோஹித், தினமும் பொதுமக்கள், மாணவ, மாணவியர், கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க, அனுமதி வழங்கி உள்ளார். இன்று முதல் அனைத்து நாட்களிலும், மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை, பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.அவர்கள் கவர்னர் மாளிகையில், ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடம், கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் தர்பார் அரங்கம், மான்கள் சுற்றி திரியும் புல்வெளி, வனப்பகுதி ஆகியவற்றை, பேட்டரி காரில் சென்று பார்வையிடலாம். கவர்னர் மாளிகையை சுற்றிப் பார்க்க விரும்புவோர், http://www.tnrajbhavan.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்;

 ஒருவருக்கு, 25 ரூபாய் கட்டணம். பிப்ரவரி வரையிலான முன்பதிவு முடிந்து விட்டதால், இணையதளத்தில், தற்போது, முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில், முன்பதிவு துவக்கப்படும் என, கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோவை : லஞ்சம் வாங்கியதால் கைதாகி, சிறையில் உள்ள, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர், கணபதி மற்றும் பேராசிரியர், தர்மராஜுக்கு, ஜாமின் வழங்க, லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சேபம் தெரிவித்தது. இதை ஏற்று, 'விசாரணை பாதிப்படையும்' எனக் கூறி, கோவை சிறப்பு நீதிமன்றம், இருவரின் ஜாமின் மனுக்களைதள்ளுபடி செய்து, அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி, 67; வேதியியல் துறை பேராசிரியர், தர்மராஜ், 53, ஆகியோர், பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி, உதவி பேராசிரியர், சுரேசிடம், 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, பிப்., 3ல் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணை

இருவரையும் ஜாமினில் விடுவிக்கக் கோரி, தாக்கல் செய்த மனு, கோவையில் உள்ள, லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜான்மினோ முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது:பணி நிரந்தரம் செய்வதற்காக, துணைவேந்தர் லஞ்சம் கேட்கவில்லை; எந்த காசோலையும் பெறவில்லை. லஞ்ச பணத்தை, துணைவேந்தர் வாங்கினார் என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை.

பணி நிரந்தரம் தொடர்பாக, துணைவேந்தர் மட்டும், தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.துறை தலைவர், சிண்டிகேட் ஒப்புதல் அளித்த பின், கடைசியாக தான், துணைவேந்தர் கையெழுத்து போடுவார். போலீசார் காசோலையை கைப்பற்றவில்லை. எப்.ஐ.ஆரில், எந்த வங்கி காசோலை, அதன் எண் எதுவும் குறிப்பிடவில்லை.

துணைவேந்தர் மீதான காழ்ப்புணர்வு காரணமாக, முன்னாள் பதிவாளர், மோகன், வேண்டு மென்றே சிக்க வைத்துள்ளார். இருவரையும் ஜாமினில் விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.

லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், அரசு வழக்கறிஞர், சிவகுமார் வாதிட்டதாவது: துணைவேந்தர் துாண்டுதலின்படி, பேராசிரியர், தர்மராஜ், போனில் அழைத்து சுரேஷிடம், 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். அப்போது, பதிவாளர் பொறுப்பிலிருந்த மோகன், 'பணம் கொடுக்க வேண்டாம்; தகுதி, திறமை அடிப்படையில் வேலை கிடைக்கும்' என, சுரேஷிடம் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி, 2016 நவ., 23ல், திறமை அடிப்படையில், உதவி பேராசிரியராக சுரேஷ் நியமிக்கப்பட்ட பின், மோகன், பதிவாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.அதன்பின், 'பணி நிரந்தரமாக வேண்டும் என்றால், பணம் கொடுத்து தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால், உங்களுக்கு எதிராக, 'ரிப்போர்ட்' எழுதி, பணியில் இருந்து வெளியேற்றி விடுவோம்' என, துணைவேந்தரும், பேராசிரியரும் மிரட்டி உள்ளனர்.

விண்ணப்பம் முதல், பணி நிரந்தரம் வரை, தொடர்ச்சியாக லஞ்சம் கேட்டபடியே இருந்துள்ளனர். எனவே, துணைவேந்தருக்கு தொடர்பு இல்லை என்பதை ஏற்க முடியாது. முழு பணத்தை கொடுத்த பின், காசோலையை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளனர். அதன்படி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்துடன், 29 லட்சம் ரூபாய்க்கு, நான்கு காசோலைகளை, சுரேஷ் கொடுத்துள்ளார்.

அழிக்க முயற்சி

அவர்கள் பெற்ற காசோலையை, போலீசார் கைப்பற்றவில்லை. காசோலையை என்ன செய்தனர் என்பது குறித்து விசாரிக்க, போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளோம். லஞ்ச பணத்தை பெற்ற பின், துணைவேந்தர், அவரது மனைவிக்கு சைகை காட்டி, பணத்தை கிழித்து போட வைத்துள்ளார். போலீஸ் இருக்கும் போதே, ஆதாரத்தை அழிக்க முயன்றுள்ளனர்.

துணைவேந்தர் செல்வாக்குமிக்கவர். இவரை ஜாமினில் விடுவித்தால், சாட்சியை கலைத்து, ஆதாரத்தை அழித்து விடுவார்; விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார். எனவே, இவர்களை ஜாமினில் விடுவிக்கக் கூடாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.


இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜான்மினோ, விசாரணை பாதிப்படையும் என்பதை ஏற்று, இருவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய மனு மீதான விசாரணை, இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பொறுப்புகளை கவனிக்க மூவர் குழு!

பல்கலை துணைவேந்தர் கைது நடவடிக்கையை தொடர்ந்து, நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று, உயர்கல்வித்துறை செயலர், சுனில் பாலிவால் தலைமையில், அவசர சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டது. காலை, 11:30 மணி முதல் மதியம், 1:30 மணி வரை இக்கூட்டம் நடந்தது. பதிவாளர் வனிதா உட்பட, 16 சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் கூறியதாவது: பாரதியார் பல்கலை நிர்வாக பணிகளை கவனிக்க, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. என் தலைமையில், பல்கலை பயோ இன்பர்மெட்டிக்ஸ் துறைத் தலைவர் ஜெய குமார், கல்லுாரி பிரிவிலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுாரி, எலக்ட்ரானிக்ஸ் துறை இணை பேராசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 புதிய துணைவேந்தர் பதவியேற்கும் வரை, இக்குழு செயல்பாட்டில் இருக்கும். மேலும், ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் தர்மராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தொலைதுார கல்வி மைய இயக்குனர் பொறுப்பு வகிக்கும் மதிவாணன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, வேறு ஒருவரை தேர்வு செய்யஉள்ளோம். புகாரில் தொடர்புடைய அனைவர் மீதும், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு அறிவுறுத்தலின் படியே, ஊழல் தடுப்புத்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. 2016, நவ., மாதம், சிண்டிகேட் கூட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்தியும், அதை மீறி கூட்டம் நடத்தப்பட்டு, பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்தே சந்தேகத்தின் படி, விசாரணை முடுக்கிவிடப்பட்டு, தற்போதைய நிலையை அடைந்துள்ளது. மாநில ஊழல் தடுப்பு பிரிவினரின் விசாரணையில், எவ்வித சிக்கல்களும் இல்லை என்பதால், தற்போது, சி.பி.ஐ., விசாரணை அவசியமில்லை.

'கன்வீனியர்' குழுவுக்கு, துணைவேந்தருக்கு உரிய முழு அதிகாரமும் உண்டு. பல்கலையில், பதிவாளர் பணியிடம் உட்பட, பிற முக்கிய பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு தரப்பு கருத்துகளின் அடிப்படையில், பல்கலை தேர்வு வாரியக்குழு அமைக்க, அரசுடன் ஆலோசித்தும், பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டும் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு, பல்கலை செயல்பாடுகள் குறித்து, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பேராசிரியர்கள் பலர், சிண்டிகேட் உறுப்பினர்கள் மீதான அதிருப்தியை, உயர்கல்வித் துறை செயலர் முன், பதிவு செய்தனர்.

NEWS TODAY 14.02.2026