Saturday, April 7, 2018

தி.நகரில் கைப்பையை பறிக்க முயன்ற வழிப்பறி இளைஞர் கைது: சாமர்த்தியமாக இழுத்து வீசிய இளம்பெண்ணுக்கு பாராட்டு

Published : 06 Apr 2018 15:25 IST



கைப்பையை பறித்து கைதான ராஜ்கிரண் படம்: சிறப்பு ஏற்பாடு

தி.நகரில் சாலையில் நடந்துசென்ற இளம்பெண்ணிடம் கைப்பையைப் பறிக்க முயன்ற மோட்டார் சைக்கிள் இளைஞரை சாமர்த்தியமாக இழுத்து கீழே வீசினார் இளம்பெண். காயத்துடன் கீழே விழுந்த நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் இளமுருகன் (48), இவரது மகள் விஜய்பாரதி (25). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர் மனோஜ் என்பவரும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் நடந்து வந்துள்ளனர்.


பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்த இருவரைம் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் வட்டமடித்தபடி கவனித்து வந்துள்ளனர். விஜய்பாரதி கைப்பையை தோளில் மாட்டியபடி நடேசன் பார்க் அருகில் நண்பருடன் பேசியபடி வந்துள்ளார். அப்போது பல்சர் வாகனத்தில் வந்தவர்கள் திடீரென அவரது கைப்பையைப் பறித்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத விஜய்பாரதி சமயோசிதமாக செயல்பட்டு சட்டென்று கைப்பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பையைப் பிடித்து இழுத்த இளைஞரை சட்டென்று இழுத்து கீழே தள்ளினார். இதில் மற்ற இருவர் வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்க, கைப்பையை பிடுங்கிய இளைஞர் தரதரவென்று இழுத்துச்செல்லப்பட்டார்.

பின்னர் அவர் மோட்டார் சைக்கிள் பிடியை விடப் பார்க்கும் சமயத்தில் அக்கம் பக்கத்தவர் அவரை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தில் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற இருவரும் ஓடிவிட்டனர். சிக்கிய நபரை போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர், விசாரணையில் அவர் பெயர் ராஜ்கிரண் (23) என்றும், தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலை குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.

போலீஸார் தப்பி ஓடிய மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். வழக்கமாக இதுபோன்ற சம்பவங்களில் பெண்கள் கீழே விழுந்து காயமடைவார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் இளம்பெண் விஜய்பாரதி உறுதியாக நின்று வழிப்பறி கொள்ளையனை இழுத்து கீழே தள்ளி உள்ளதை பொதுமக்கள் பாராட்டினர்.
பெற்ற தாயின் உடலை 2 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்திருந்த பயங்கரம்; கணவரும் உடந்தை: போலீஸுக்கே புரியாத புதிர்

Published : 05 Apr 2018 19:08 IST



படம். | ட்விட்டர் ஏ.என்.ஐ.

கொல்கத்தாவில் இறந்த 84 வயது மூதாட்டியின் உடலை மகனும், கணவனும் சேர்ந்து குளிர்ப்பதனப் பெட்டியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்பதில் போலீஸாரும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

துப்பு கிடைத்ததன் அடிப்படையில் பெஹாலாவில் உள்ள வீட்டுக்கு போலீஸார் ரெய்டு மேற்கொள்ள அங்கு ஃப்ரிட்ஜில் மூதாட்டியின் உடல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக 46 வயது மகன் ஷுபபிரதா மஜூம்தார் வயதான தந்தை கோபால் மஜூம்தார் ஆகியோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது, ஆனாலும் தந்தையும் மகனும் இறந்த உடலை ஏன் இப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதன் காரணத்தை அறிய போலீஸார் போராடி வருகின்றனர். இதுவரை அவர்களுக்கும் புரியாத புதிராக இது இருந்து வருகிறது.

மூதாட்டி பினா மஜூம்தார் 2015 ஏப்ரல் 7 ஆம் தேதி பாலாநந்தா மருத்துவமனையில் இறந்து போனார், அவருக்கு உடலில் சர்க்கரை அளவு கடுமையாகக் குறைய இறந்து போயுள்ளார். குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்து சென்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பது சரியாக ஒருவருக்கும் விளங்கவில்லை. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல்களின் படி அக்கம்பக்கத்தினர் பினா மஜூம்தாருக்கு என்னவானது என்று கூறும்போது, பிணக்கிடங்கில் இருப்பதாகவும், “அமைதிச் சொர்க்கத்தில்’ அவர் இருப்பதாகவும் மகன் கூறிவந்திருக்கிறார்.

இந்நிலையில் போலீசார் கைப்பற்றிய பினா மஜூம்தார் உடல் கிழிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. அது எதற்காக என்பது பிரேதப்பரிசோதனை முடிந்த பிறகே தெரியும் என்கின்றனர் போலீசார். மேலும் வீட்டில் புரியாத வகையில், வடிவங்களில் சில கண்டெய்னர்களும் காணப்பட்டுள்ளன. இவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மகன் தோல் தொழில்நுட்பப் பட்டப்படிப்பாளர், இவர் தாயின் உடலிலிருந்து குடல்களை அப்புறப்படுத்தி பிறகு உடலை பதனப்படுத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இது குறித்த முதற்கட்ட விசாரணையில், தாய் பினா மஜும்தார் இந்திய உணவுக்கார்ப்பரேஷனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், இவருக்கு மாத பென்ஷனே ரூ.50,000 என்று கூறப்படுகிறது, தாய் இறந்த பிறகும் அவரது டெபிட் கார்டு மூலம் பென்ஷன் தொகையை மகன் எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. தாய் உயிருடன் இருப்பதாக சான்றிதழ் அளித்திருப்பதும் புரியாத புதிராக இருந்து வருகிறது.

தந்தையும் மகனும் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, இதனால் இறந்தவரை மீண்டும் உயிர் பிழைக்க வைக்கலாம் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த வழக்கை எப்படிக்கொண்டு செல்வது என்பதில் கொல்கத்தா போலீஸாருக்கு பெரும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலி; ஓட்டிய சிறுவனும் உயிரிழப்பு: 18 வயதுக்கு குறைவானவருக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்குப் பதிவு

Published : 05 Apr 2018 22:01 IST

சென்னை




விபத்தில் உயிரிழந்த ரோஹித், விபத்துக்குள்ளான மோட்டார் பைக் படம்: சிறப்பு ஏற்பாடு

திருமங்கலத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவன், இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஓட்டிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் வாகனம் ஓட்ட அனுமதித்த தாயார்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதிக் குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேசன்(45). இவரது மனைவி மீனா (40). இவர்களுக்கு ரோஹித்(16) என்ற மகன் உள்ளார். அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இவருக்கு பெற்றோர் பல்சர் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கித் தந்துள்ளனர். அந்த பல்சர் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை தன்னுடன் பள்ளியில் பயிலும் மாணவியையும் ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்றுள்ளார்.

அம்பத்தூர் எஸ்டேட் அருகே மோட்டார் சைக்கிள் வேகமாகச் சென்றபோது சாலையைக் கடந்த பழைய திருமங்கலத்தைச் சேர்ந்த பாபு (30) பாபு என்பவர் மீது மோத அவர் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ரோஹித், அவரது தோழி மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இருசக்கர வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது. பாபு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ரோஹித்தும் அவரது தோழியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு 11.45 மணி அளவில் ரோஹித்தும் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது பள்ளித்தோழி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

16 வயதே ஆன ரோஹித் மீதும், சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்தற்காக அவரது தாயார் மீனா மீதும்( அவர் பெயரில் வாகனம் வாங்கப்பட்டுள்ளது) திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது பிரிவு 279, 304 (A),338,337 IPC & alter at 279,304 (A) 2counts, 337 Ipc. Sec 4 r/w 181 MV Act, sec 5 r/w 180 MV Act. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னையில் முதல்முறையாக 18 வயதுக்கு கீழ் உள்ளவரை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் ஏற்கெனவே இது போன்ற வழக்கில் 3 மாதம் வரை பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டில்லிவாசிகளை திணறடித்த புழுதிப்புயல்

Updated : ஏப் 07, 2018 05:15 | Added : ஏப் 07, 2018 05:09 |




புதுடில்லி: தநைகர் டில்லியில் நேற்று மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. டில்லியின் அக்பர்சாலை, ராஜேந்திர பிசாரத் மார்க், ஆர்.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருள் சூழ்ந்து வேகமான காற்றுடன் புழுதி புயல் வீசியது.இதனால் வாகன ஓட்டிகள் திணறினர..புழுதிப்புயல் நீண்ட நேரம் நீடித்ததால், நேற்று மாலை 5.45 மணி முதல் இரவு 7.25 மணி வரை பல்வேறு விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மானாமதுரையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

Added : ஏப் 07, 2018 01:02

மானாமதுரை: மானாமதுரையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எனமின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் மின்சாரம் வந்தது. தற்போது மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயில் காலம் என்பதால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது மானாமதுரை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட சிறு பழுதின் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டது, தற்போது அதனை சரிசெய்து வருகிறோம், என்றார்.

வகுப்பறையில் உருண்ட போதை ஆசிரியர்: பெற்றோர் புகார்

Added : ஏப் 07, 2018 01:24




திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மேலப்பூவந்தி அரசு உயர்நிலைப் பள்ளி, 220 மாணவர்கள், 13 ஆசிரியர்களுடன் செயல்படுகிறது.

தலைமை ஆசிரியர் பணியிடம் ஒரு ஆண்டாக காலியாக உள்ளது. ஆசிரியர் சிவகுருநாதன் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார். நேற்று, விளையாட்டு ஆசிரியர் ரஜினிகாந்த், போதையில் பள்ளிக்கு வந்ததுடன், வகுப்பறையில் படுத்து உருண்டார். பெற்றோர் புகாரின் படி, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'மாஜி' துணைவேந்தரிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்

Added : ஏப் 07, 2018 04:20

சென்னை:லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், ராஜாராமின் வங்கி லாக்கரில் இருந்து, 4 கிலோ தங்கத்தை, போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர், ராஜாராம். இவர், 2013 - 16ல், சென்னை, அண்ணா பல்கலையின், துணை வேந்தராக பணியாற்றினார்.அப்போது, தகுதி இல்லாத, 54 பேருக்கு, பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி வழங்க பரிந்துரைத்து உள்ளார்.அதற்காக, ஒவ்வொரு வரிடமும், 40 லட்சம்ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளார்.

புகார் வந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், தேனி மற்றும் சென்னையில் உள்ள, ராஜாராமுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.ராஜாராமிடம் பணம் கொடுத்து, பணியில் சேர்ந்த, ஜெயஸ்ரீ, ஹெலன் கலாவதி, பாலமுருகன், மந்தாகனி உள்ளிட்டோர் வீடுகளிலும், அண்ணா பல்கலையில், ராஜாராம் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் தேனி வங்கிகளில் உள்ள லாக்கர்களில், ராஜாராம் வைத்திருந்த, இரண்டு கிலோ தங்கக் கட்டிகள், 2 கிலோ நகைகள் என, நான்கு கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.ராஜாராம் மனைவி பெயரில், 22 பஸ்கள் வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக, ராஜாராம் வாங்கி குவித்துள்ள சொத்து விபர பட்டியல் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

NEWS TODAY 21.12.2025