Thursday, April 12, 2018

டிஜிட்டல் போதை 29: செல்ஃபி: சுய(ம்) நலமா?

Published : 07 Apr 2018 10:55 IST

வினோத் ஆறுமுகம்




ஒரு நல்ல போட்டோவுக்காக நீங்கள் என்ன விலை தருவீர்கள்? இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் அதிகபட்ச விலையை, அதாவது உயிரையே தருகிறார்கள். சுற்றுலாத் தலங்களில் சமீபகாலமாகக் காவல்துறைக்குப் பெரும் தலைவலியாக இருப்பது செல்ஃபி மரணங்கள்தாம். ஒரு நல்ல செல்ஃபி எடுத்து, தனது ஃபேஸ்புக்கிலோ இன்ஸ்டாகிராமிலோ பகிர்ந்து சில லைக்குகள் வாங்கும் ஆர்வத்தில் அல்லது வெறியில் மதியிழந்து இவர்கள் மரணமடைகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் செல்ஃபி மோகம் காரணமாக இத்தகைய பலிகள் அதிகரித்து வருவதைப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரு பக்கம் மரணம் பயமுறுத்துகிறது என்றால், உளவியல் ஆய்வாளர்களோ செல்ஃபி வெறியால் நார்சிஸம் (சுயமோகம்), சைக்கோபாத் (ஆளுமைக் கோளாறு) போன்ற மனநோய்கள் அதிகமாகி வருவதாகக் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாகப் பதின் வயது இளைஞர்கள் தங்கள் படங்கள் சமூக ஊடகங்களில் ஏற்படுத்தும் வினைகள், எதிர்வினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது.

உளவியல் காரணம் என்ன?

அமெரிக்காவில் ஒரு வகுப்பறையில் ஆசிரியரும் ஒரே ஒரு மாணவரும் மட்டும் இருந்தார்கள். அந்த ஆசிரியர் கர்ப்பமாக இருந்தார். திடீரென்று அந்த ஆசிரியருக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. வலியால் துடித்துக்கொண்டிருந்தார். உடனே அங்கே இருந்த மாணவன் செய்த முதல் காரியம் செல்ஃபி எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததுதான்!

இந்தச் செய்தியை மறுநாள் பிரசுரித்த பத்திரிகைகள் ஆங்கிலத்தில் ‘செல்ஃபி’ஷ்’ (சுயநல செல்ஃபி) எனத் தலைப்பிட்டிருந்தன. ஒருவர் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தபோது, அதை செல்ஃபி எடுத்த அந்த மாணவனின் மனநிலை என்ன? அவன் ஏன் அப்படிச் செய்தான்? உளவியல்ரீதியாக இதற்குக் காரணம் இருக்கிறது.

பதின் வயது என்பது ஒருவருக்குச் சுய அடையாளத்தை உருவாக்கும் பருவம். நான் யார், இந்த உலகில் என் அடையாளம் என்ன என்று மனது சிந்திக்கத் தொடங்கும். அது மட்டுமல்ல. பதின் பருவம் என்பது தன் இணையைத் தேடும் பருவமும்கூட. தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மத்தியில், இந்த இரு காரணங்களுக்காக எதையாவது செய்து தம் இருப்பைப் பதின் வயதினர் உறுதிசெய்வது வழக்கம்.

படமாகவே காட்டும் ஆர்வம்

ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது தன் இருப்பை உணர்த்துவது, அதாவது, ‘ஏய்… நான் அங்கேதான் இருந்தேன்!’ என்று சொல்ல முனைவதுதான் செல்ஃபி மோகத்துக்கு அடிப்படை. அநாவசியத் தகவல் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில், தான் ஒரு தகவலைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறேன் என்பது மட்டுமல்ல, ‘நான் அந்த இடத்திலேயே இருந்தேன்’ என்று செல்ஃபி நிரூபிப்பதால், கூடுதலாகத் தன் மீது மற்றவர்களின் கவனத்தைக் குவிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

அண்ணா சாலையில் பேருந்து பள்ளத்தில் விழுகிறது, அதை செல்ஃபி எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் மற்றவர்களின் கவனம் தன் மீது திரும்பும் என்ற ஒரு அற்ப மகிழ்ச்சி. இது போன்ற பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

காட்சிப் பொருளா நாம்..?

அடுத்து, செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு இன்னொரு முக்கியக் காரணம், ‘என்னை இப்படி ஏற்றுக்கொள்வாயா?’ என்று பிறரின் அங்கீகாரத்துக்காக ஏங்குகிற மனநிலை. இது மற்றவர்கள் முன் நம்மைக் காட்சிப் பொருளாக்கும் மனநிலை. இது ஒருவரின் சுயகவுரவத்தைக் கூட்ட மேற்கொள்ளும் நடவடிக்கை. அழகான இடத்திலோ ஒரு பிரபலத்துடனோ செல்ஃபி எடுத்து மற்றவர்கள் முன் தன்னைக் காட்சிப் பொருளாகப் பகிர்வது. அது பெறும் ‘லைக்’குகளைக் கொண்டு தன்னுடைய சுயகவுரவம் அதிகரித்துவிட்டதாக நம்பிக்கொள்வது.

அப்படி மற்றவர்கள் ‘லைக்’ செய்யவில்லை என்றால், மனச்சோர்வு கொள்கிறார்கள் இளைஞர்கள். இந்த செல்ஃபி மனச்சோர்வு என்பது இன்னொரு புதிய பிரச்சினை. அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com
மருத்துவ உலகின் காலாட்படை!

Published : 07 Apr 2018 10:54 IST


மு. வீராசாமி

 

உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7

‘திருமணமான பிறகு நன்றாகச் சாப்பிட வேண்டும். அதுவும் முக்கியமாகக் கருவுற்ற காலத்தில். அப்போதுதான் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்!’

- கனிவு மிகுந்த இந்த வார்த்தைகளை, அங்கே கூடியிருந்த கருவுற்ற தாய்மார்களிடையே மிகவும் நிதானமாகச் சொல்லிக்கொண்டிருந்தார் அந்தக் கிராம சுகாதார செவிலி. பொருளாதாரத்தில் பின்தங்கிய கருவுற்ற தாய்மார்களுக்கு, அரசு 12 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்குகிறது. அதன் முக்கிய நோக்கமே, அந்தத் தாய்மார்கள் பிரசவ காலத்தில் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான். ஊட்டச்சத்துமிக்க உணவு, பழங்கள் சாப்பிடுவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், பலர் அதைச் சீட்டுப்பணம் சேமிப்பதற்கும் நகைநட்டு வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இது குறித்து, தாய்மார்களிடையே அந்தச் செவிலி பேசும்போது, “உங்களில் சிலர் அந்த மாதிரி செய்வதை நாங்கள் பார்க்கிறோம். இன்னும் சிலர் வீட்டுக் கடனை அடைப்பதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள். இனி அப்படிச் செய்யாதீர்கள். அந்தப் பணத்தைக் கொண்டு கருவுற்ற காலத்தில் நன்றாகச் சாப்பிடுங்கள்” எனும்போது, அதில் சிறிது அக்கறையும் கண்டிப்பும் கலந்திருந்தன.
நலத்திட்டத் தூண்கள்

கருவுற்ற காலத்தில் நன்றாகச் சாப்பிட்டால்தான் ரத்த சோகை ஏற்படாது. இல்லையென்றால் கைகால் சோர்ந்துபோய், குழந்தை பிறப்பு காலத்தில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். வழக்கமாகச் சாப்பிடும் உணவைக் காட்டிலும் கூடுதலாக உட்கொள்ள வேண்டும்.

நேரப்படி சாப்பிடுவதும் செவிலியர் தரும் சத்து மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்வதும் முக்கியம். கருவுற்ற காலத்தில், தாய் நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதும் அவசியம். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். கருவுற்றது உறுதி செய்யப்பட்டவுடன் படுத்து உறங்கிக்கொண்டே இருக்காமல் சின்னச் சின்ன வேலைகளைச் செய்துகொண்டே இருப்பதும் முக்கியம். சுகப்பிரவசத்துக்கு இது உதவும்.

இந்தக் கருத்துகளை எல்லாம், உறவினர் ஒருவர் எடுத்துச் சொல்வதுபோல அந்தச் செவிலி சொல்லிக்கொண்டிருந்தார். இவரைப் போன்ற கரிசனம் மிக்க செவிலியரால்தான், பல கிராமங்களில் ‘தாய்-சேய் நலத் திட்டம்’ முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது. அதனாலேயே இவர்களின் பணி, போற்றுதலுக்குரியது. இத்தகைய சுகாதாரப் பணியாளர்களை நாம் ‘மருத்துவ உலகின் காலாட்படை’ என்று சொல்லலாம்.

திடீர்ப் பிரச்சினைகள்

மருந்து என்பது நோயைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், சில நேரம் மருந்து விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு. ஏன் மரணம்கூட ஏற்படலாம். மருத்துவ உலகில் இது தவிர்க்க முடியாது.

பக்க விளைவு என்றோ ஒவ்வாமை என்றோ அதற்குக் காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. பென்சிலின், அற்புதமான ஒரு ஆன்டிபயாடிக் மருந்து. பல நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாக உச்சத்தில் இருந்தது. ஆனால், அதுவே ஒரு காலகட்டத்தில் மோசமான மரணங்களை உண்டாக்கி, மருத்துவ உலகை அச்சத்தில் ஆழ்த்தவும் செய்தது.

சில ஆண்டுகளுக்கு முன்புகூட போலியோ சொட்டு மருந்து முகாமில் சில குழந்தைகளுக்குப் பிரச்சினை ஏற்பட்டது நினைவிருக்கலாம். இந்தப் பிரச்சினை மாநிலம் முழுவதும் இங்கொன்றும் அங்கென்றுமாகப் பரவி மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் பிரச்சினையைத் தைரியமாக எதிர்கொண்டு, பொறுமையாக மக்களிடையே அமைதியை ஏற்படுத்தி சொட்டு மருந்தைத் திறம்பட வழங்கியதில் சுகாதாரப் பணியாளர்களின் பங்கு அபரிமிதமானது.


இடைவெளி குறைப்பு

கிராம மக்களுக்கு ஆத்திர அவசரம் என்றால் அரசு மருத்துவனைதான் புகலிடம். அது கைகால் வலியாகட்டும், காய்ச்சல், வயிற்றுப்போக்காக இருக்கட்டும், அவர்களுக்கு எல்லாமே உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் கண் கண்ட கோயில்.

பெண்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்பு பின்னிப் பிணைந்தது. கருவுற்றது முதல் குழந்தைப்பேறுக்குப் பிறகு குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதுவரை பெண்களுக்கும் சுகாதார நிலையங்களுக்கும் இடையேயான தொடர்பு, ஒரு தொடர் நிகழ்வாக இருக்கிறது.

பிரசவம் என்பது பெண்களைப் பொறுத்த வரையில் மறுபிறப்புப் போன்றது. இதனால்தான் கருவுற்ற தாய்மார்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நிகழ்வைச் சிறப்பாக நடத்துகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய காரணங்களால், பெண்கள் பலருக்கு இந்த வாய்ப்பு பெரும்பாலும் அமைவதில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சமுதாயத்துக்கும் உள்ள இடைவெளியைப் போக்கவும் ஒரு இணக்கமான சூழலுக்கு வழிவகுக்கவும் இதுபோன்ற வளைகாப்பு நிகழ்ச்சிகள் வழிவகுக்கின்றன.

போற்றுவோம்

இப்போதும் உணவுப் பொருட்களில் கலப்படம் எவையும் செய்யப்பட்டுள்ளனவா? தரமானதாக இருக்கிறதா? காலாவதியான பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறார்களா? சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கிறதா? கொசு பரவுவதற்கு வாய்ப்பாகத் தண்ணீர் எங்கேனும் தேங்கி இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்ய சுகாதாரப் பணியாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த உலக சுகாதாரப் பணியாளர்கள் வாரத்தில் (ஏப்ரல் 8 முதல் 12 வரை) அவர்களின் பணியை நினைவுகூர்ந்து அங்கீகரிப்பதோடு, வாய்ப்புக் கிடைக்கும்போது போற்றவும் செய்வோம்.

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

இந்து திருமணச் சட்டப்படி பெண்ணின் சம்மதம் பெறாத திருமணம் செல்லாது: உச்ச நீதிமன்றம் விளக்கம்

Published : 12 Apr 2018 08:25 IST

புதுடெல்லி



இந்து திருமணச் சட்டப்படி பெண்ணின் சம்மதம் பெறாத திருமணம் செல்லாது என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

கர்நாடகா அரசியல்வாதி ஒருவர் தனது மகளின் விருப்பத்துக்கு மாறாக, கட்டாயத் திருமணம் செய்துவைத்தார். இதையடுத்து கர்நாடகாவை விட்டு வெளியேறிய அப்பெண் தற்போது டெல்லியில் தங்கியுள்ளார். மேலும் டெல்லி மகளிர் ஆணைய உதவியுடன் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

அவர் தனது மனுவில், மணப்பெண் சம்மதம் இல்லாத இந்து திருமணங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரினார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “திருமணத்துக்கு மணப்பெண் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது இந்து திருமணச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஒரு பெண்ணை ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தியோ திருமணம் செய்துவைத்தால் அத்திருமணம் செல்லாது என்பது இந்து திருமணச் சட்டத்தில் ஏற்கெனவே தெளிவாக உள்ளது. எனவே புதிய உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. இது தொடர்பாக சிவில் நீதிமன்றங்களே உண்மையை ஆராய்ந்து முடிவு எடுக்கலாம்” என்று குறிப்பிட்டனர்.

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டனர். வழக்கை மே 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தந்தையை கவனிக்காத மகன் சொத்துப்பதிவு ரத்து

Added : ஏப் 12, 2018 00:51

பழநி: தந்தையை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்தை மீட்டு, தந்தையிடம் ஒப்படைக்க, சப் - கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.பழநி அருகே, கொழுமங்கொண்டானைச் சேர்ந்தவர் ராமசாமி, 75. இவருக்கு, இரண்டு மகள்கள், ஒரு மகன். மகன் மகுடீஸ்வரனுக்கு, தன் பெயரில் இருந்த, 4 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார்.சாப்பாட்டுக்கு சிரமப்படுவதாகவும், சொத்தை வாங்கிய பின், தன்னை பராமரிக்காமல் மகன் ஏமாற்றி விட்டதாகவும், பழநி, சப் - கலெக்டர் அருண்ராஜிடம் ராமசாமி புகார் அளித்தார். வி.ஏ.ஓ., விசாரணையில், சொத்தை எழுதி வாங்கியதும், ராமசாமியை, அவரது மகன் பராமரிக்காதது தெரிந்தது.இதையடுத்து, தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டப்படி, கீரனுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய, சப் - கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.அருண்ராஜ் கூறுகையில், ''பெற்றோரிடம் சொத்தை பெற்று, வயதான காலத்தில் பராமரிக்காமல் தவிக்க விடும் மகன்கள் குறித்து, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

Added : ஏப் 12, 2018 00:52

சென்னை: வைகை எக்ஸ்பிரஸ், 16ம் தேதி வரை, நேரம் மாற்றி இயக்கப்படுகிறது.சென்னை எழும்பூரில் இருந்து, மதுரைக்கு, தினமும், பகல், 1:40 மணிக்கு இயக்கப்படும், வைகை எக்ஸ்பிரஸ், இன்று முதல், 16ம் தேதி வரை, பகல், 2:40 மணிக்கு இயக்கப்பட உள்ளது.இப்பாதையில், ஓட்டிவாக்கம் - கல்குழி ரயில் நிலையங்கள் இடையே, பாதை பராமரிப்பு பணி நடப்பதால், நேரம் மாற்றி இயக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

Added : ஏப் 12, 2018 00:29

ரேஷன் கடைகள், வரும், வெள்ளி முதல் ஞாயிற்றுக் கிழமை வரை செயல்படாது.தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வார ஞாயிற்றுக்கிழமை, கடைகள் செயல்படும். மேலும், பொங்கல், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட, 10 நாட்களுக்கு, பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.அதன்படி, வரும் வெள்ளிக் கிழமை வார விடுமுறை; சனிக்கிழமை, தமிழ் புத்தாண்டு தினம் மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் வருவதால், அன்றைய தினங்கள், ரேஷன் கடைகள் செயல்படாது. மேலும், இந்த வார ஞாயிறும், கடை திறக்கப்படாது.

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இம்மாதம், 1ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை வந்ததால், அன்று, ரேஷன் கடைகள் செயல்பட்டன; கடந்த, 8ம் தேதி வந்த ஞாயிறும், கடைகள் இயங்கின. 'அதனால், வரும் ஞாயிறு விடுமுறை. எனவே, 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை, ரேஷன் கடைகள் செயல்படாது' என்றார்.

- நமது நிருபர் -

எம்.சி.ஐ., விதியில் தளர்வு : அரசு டாக்டர்களுக்கு, 'லக்'

Added : ஏப் 12, 2018 00:25

இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யின், விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அரசு டாக்டர்களுக்கு, இந்தாண்டு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., படிப்புகளுக்கு, 1,641 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள, 50 சதவீத இடங்கள், தமிழக அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்றம், எம்.சி.ஐ., விதிமுறைகளின்படி, கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டது. மலைப்புற மற்றும் எளிதில் அணுக முடியாத, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, அவர்கள் பணி அனுபவத்தை கணக்கிட்டு, 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன், 10 முதல், 30 சதவீத மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க, அரசாணை உள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 'மலைப்பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகளுடன் சேர்த்து, கிராமப்புற பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கும், 10 முதல், 30 சதவீத கூடுதல் மதிப்பெண்கள் வழங்கலாம்' என, எம்.சி.ஐ., விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'எம்.சி.ஐ., விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அரசு டாக்டர்களுக்கு, கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.'நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
- நமது நிருபர் -

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...