Wednesday, April 18, 2018

பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேட்டி
By DIN | Published on : 18th April 2018 04:25 AM



பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்றும் தமக்கே அதிகாரம் இருப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள தனது மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ளேன். கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஆளுநராகப் பொறுப்பேற்றேன். நானும் பத்திரிகையாளராக இருந்துள்ளேன். ஒருசில கல்லூரிகளில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக செய்தித்தாள்கள் வழியாக திங்கள்கிழமை அறிந்து கொண்டேன். இது மிகவும் ஆபத்தான பிரச்னை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழக் கூடாது. இப்பிரச்னையில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.
ஒரு நபர் விசாரணை: அருப்புக்கோட்டை விவகாரம் தொடர்பாக விசாரித்து என்னிடம் (ஆளுநர்) அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.சந்தானத்தைக் கொண்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் மிகவும் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். அவர் தனது அறிக்கையை இம்மாத இறுதிக்குள் அளிப்பார்.

ஆணையம் அமைக்க உரிமை: வேந்தராக உள்ளதால் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகள் விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கத் தேவையான ஆணையங்களை அமைக்க எனக்கு அதிகாரம் உள்ளது. இதனிடையே, பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவை துணைவேந்தர் கலைத்துள்ளார். நான் அமைத்துள்ள ஒரு நபர் ஆணையமே தீவிரமாக விசாரணை மேற்கொள்ளும். இந்தப் பிரச்னையில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகத்தைக் கூட பார்த்ததில்லை: அருப்புக்கோட்டை பேராசிரியை எனது பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறுகிறீர்கள். பல்கலைக்கழகங்கள், கல்லூரி நிகழ்ச்சிகளில் பலரும் பங்கேற்பார்கள். நிகழ்ச்சிகளை நடத்துவோர் இங்கும், அங்கும் செல்வார்கள். நீங்கள் (பத்திரிகையாளர்கள்) குறிப்பிடும் பேராசிரியை முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை.

சிபிஐ தேவையில்லை: பேராசிரியை தொடர்பான பிரச்னையில் எனது பெயரை இணைத்துப் பேசுவது அபத்தமானது-அடிப்படை ஆதாரமற்றது. இந்தப் பிரச்னையை விசாரிக்க சிபிஐ தேவையில்லை. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியைக் கொண்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நான் வயதில் மிக மூத்தவன். எனக்கு 78 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. எனக்கு பேரன்கள் மட்டுமல்லாது, அந்தப் பேரன்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
எனக்கே அதிகாரம் உள்ளது: விசாரணை ஆணையத்தை நான் தன்னிச்சையாக அமைத்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பேட்டி அளித்ததாகக் கூறுகிறீர்கள். இது தொடர்பாக ஆளுநருக்கான வழிகாட்டிக் கையேடு (நூலாசிரியர்-எஸ்எஸ் உபாத்யாயா) என்ற புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் வேந்தர், அதாவது ஆளுநர் என்பவர் சுயாட்சி அதிகாரம் பெற்றவர். எனவே, துணை வேந்தர் நியமனங்களில் மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. மேலும், பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு ஒருபோதும் தலையிட முடியாது. இது உயர்கல்வித் துறை சட்ட விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணையத்தில் பெண் இல்லாதது ஏன்?: பேராசிரியை தொடர்பான பிரச்னை என்பதால் விசாரணை ஆணையத்தின் தலைவராக பெண் இல்லாதது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். ஓய்வு பெற்ற மிக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை விசாரணை ஆணையத் தலைவராக நியமித்துள்ளோம். எனவே, அவர் தனக்கு உதவி தேவைப்பட்டால் பெண் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
பேராசிரியை விவகாரம் தொடர்பாக, மாநில அரசின் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறையினர் அவர்களது பணியைச் செய்வார்கள். விசாரணை ஆணையத்தின் அறிக்கையை 15 நாள்களுக்குள் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன் உங்களுக்கும் அது அளிக்கப்படும். ஆளுநர் மாளிகையின் நடவடிக்கைகள், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை முறையைப் பின்பற்ற விரும்புகிறேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டவன்: அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரத்தில் அரசியல் கட்சியினர் என்மீது குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் அவர்களது பணியைச் செய்கிறார்கள். நான் எனது பணியை செய்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அருப்புக்கோட்டை கல்லூரி பிரச்னை போன்று எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்து யோசித்து வருகிறேன் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

இந்தச் சந்திப்பின் போது, ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லதுரை, பதிவாளர் வி.சின்னையா உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்




அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

ஏப்ரல் 18, 2018, 06:24 AM
ஹூஸ்டன்,

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.

பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பார்பரா புஷ் தனது 92-வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 பாலியல், புகாரில், ஆதாரமற்றது, என்கிறார், கவர்னர்,மறுப்பு

தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததுடன், இதுபோன்ற குற்றச்சாட்டு கூறுவதை, 'நான்சென்ஸ்' என்றும் கண்டித்தார். பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின், 'ஆடியோ' விவகாரத்தில், வெளிப்படையாக பேசினார். இந்த விவகாரம் குறித்து, ஒரு நபர் கமிஷன் விசாரணை நடக்கும் என்றும்,தேவைப்பட்டால், சி.பி.ஐ., விசாரிக்கும் என்றும் அறிவித்தார். மேலும், இதுபோன்ற தவறுகளை வேரறுக்க, தனி நடைமுறை உருவாக்கப்படும் என்றும், உறுதியாக தெரிவித்தார்.



சென்னை, ராஜ்பவனில், கவர்னர் நேற்று அளித்த பேட்டி:நான் கவர்னராக பதவியேற்று, ஆறு மாதங்கள் முடிகிறது. ஒரு பெண்ணின், தொலைபேசி பேச்சு தொடர்பான பிரச்னையில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சந்தானம் தலைமையில், ஒரு நபர் விசாரணைக் குழு
அமைக்கப்பட்டுள்ளது.

அவர் சிறந்த அதிகாரி; நேர்மையாக விசாரணை நடத்தி, 15 நாட்களில், அறிக்கை தாக்கல் செய்வார். அந்த அறிக்கை, எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல், பத்திரிகைகளுக்கு வழங்கப்படும்.தேவைப்பட்டால், செய்தியாளர் சந்திப்பு நடத்துவோம். மதுரை காமராஜர் பல்கலை, எங்கள் அனுமதி இல்லாமல், விசாரணை குழுவை அமைத்தது. விசாரணை யின் பாதை மாறாமலிருக்க, அந்தக் குழு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில், யாருக்கு தொடர்பிருந் தாலும், அவர்கள், எந்த அதிகாரத்தில் இருந்தாலும், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரக் குழந்தைகள்:

அந்த பெண்ணின் பேச்சில், கவர்னர் பெயர் இருப்பதாக கூறுகிறீர்கள். இதெல்லாம், முட்டாள்தனமான, 'நான்சென்ஸ்' பேச்சு. நான், 78 வயதானவன். எனக்கு பேரக் குழந்தைகள், கொள்ளு பேரக் குழந்தைகள்
உள்ளனர். மூத்த குடிமகனான, என்பெயரை, யாரும் தவறாக பயன்படுத்த கூடாது. இந்த குற்றச்சாட்டை கூறுவோருக்கு, 'கவர்னர்' என்ற, மரியாதை கூடவா இல்லை.நீங்கள் கூறும் பெண்ணை, நான் பார்த்தது கிடையாது; அவர் முகம் கூட, எனக்கு தெரியாது. இது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

என்னைப் பற்றி நாட்டு மக்களுக்கு, நன்றாகத் தெரியும். எம்.பி.,யாக இருந்துள்ளேன்; உங்களைப் போன்று, நானும்பத்திரிகையாளன். என் மீதான குற்றச்சாட்டை புறக்கணிக்கிறேன். என் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில், தவறாக பேச வேண்டாம். இந்த பிரச்னையை பொறுத்தவரை, பல்கலை வேந்தர் என்ற அடிப்படையில், விசாரணைக் குழு அமைக்க, எனக்கு முழு அதிகாரம் உள்ளது.அந்த அடிப்படையில், விசாரணைக் குழுவை அமைத்துள்ளேன். விசாரணையில், யாருடைய தலையீடும் இருக்காது.

மதுரை, காமராஜர் பல்கலை துணை வேந்தர், பதிவாளர் மற்றும் உயர் கல்வித் துறையினர் அனைவரும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவர். விசாரணை குழுவில், பெண் ஒருவர் இடம்பெற வேண்டும் என்றால், எந்த தடையுமில்லை. விசாரணை அதிகாரி, சந்தானம், சுதந்திரமாக முடிவு எடுத்துக் கொள்ளலாம்.விசாரணை குழு அமைப்பது தொடர்பாக, மாநில அமைச்சர்களிடம், கலந்தாலோசிக்க வேண்டியதில்லை. கவர்னருக்கு, அனைத்து அதிகாரமும் உள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக, பத்திரிகையாளர் கள் உட்பட, யார் வேண்டுமானாலும், என்னை விசாரிக்கலாம்.விசாரணை முடிந்த பின், தேவைப்பட்டால், அரசியல் கட்சிகள் கேட்பது போல, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடவும், நான் தயாராக உள்ளேன். எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என்பதால், ராஜினாமா தேவையில்லை.

நடவடிக்கை

நான் கவர்னராக பதவியேற்ற பின், உயர் கல்வி துறையில், முறைகேடுகள் மற்றும் பிரச்னை களை தீர்க்க, தேவையான நடவடிக்கை
எடுத்து வருகிறேன். இதற்காக, தனி நடைமுறை ஒன்றை தயாரித்துள்ளேன். விரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கும் வகை யில், அந்த நடைமுறை அமல்படுத்தப் படும்.

துணை வேந்தர்கள் நியமனங்களில், எந்த குறுக்கீடுகளும் இல்லாமல், தகுதியானவர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலை துணை வேந்தர் நியமனத்திலும், முழுமையான ஆய்வுக்கு பிறகே, நியமனம் நடந்தது. நான், ஐந்து துணை வேந்தர்களை நியமித்துள்ளேன். அதில், இருவர் மட்டுமே, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, நேற்று, மத்திய அமைச்சர், நிதின் கட்கரியுடன் பேசினேன். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, 'ஸ்கீம்' எனப்படும், செயல் திட்டம் அமைப்பது தொடர்பான நடவடிக்கை கள் துவங்கி உள்ளதாக, அவர் தெரிவித்தார். காவிரி பிரச்னை, என் இதயம் போன்றது. அதனால், மிக கவலையுடன், தமிழகத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்.

இங்கு பதவியேற்றவுடன், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திலும், தமிழகத்தின் முக்கிய நீராதார பிரச்னைகளுக்கு, சாதகமான நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டு உள்ளேன். இதில் ஏற்படும் முன்னேற்றங்களை, மாநில அரசுக்கு,அவ்வப்போது தெரிவிக்கிறேன். அரசு திட்டங்கள் குறித்து, மாவட்டந்தோறும் நேரடியாக, ஆய்வு செய்கிறேன். அப்போது, மத்திய திட்டங்கள், மாநில திட்டங்கள் என பாராமல், மக்களுக்கான திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்கிறேன்.

என் வேலையை, நான் செய்கிறேன். அரசியல் கட்சியினர், அவர்களுடைய வேலையை செய்கின்றனர்.கவர்னர் மாளிகைக்கு, என்னை சந்திக்க வருவோர், எந்த தடையும் இல்லாமல் வந்து சந்திக்கலாம். முன்னர், பல தடைகள் இருந்தன. அப்படிப்பட்ட அதிகாரிகளை எல்லாம், அனுப்பி விட்டோம். இப்போது, செயலரோ, மற்ற அதிகாரிகளோ, என்னை சந்திப்பதற்கு, எந்த குறுக்கீடும் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால், அவர்களும் மாற்றப்படுவர்.இவ்வாறு கவர்னர் கூறினார்.

சட்ட புத்தகம்!

மாநில அரசின் அதிகாரத்தை மீறுவதாக கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, கவர்னர்,   பன்வாரிலால் புரோஹித், இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகங்களை எடுத்து காண்பித்தார். பின், 'தி கவர்னர் கைடு' என்ற, வழிகாட்டி புத்தகத்தை காண்பித்து, கவர்னருக்குள்ள உச்சபட்ச அதிகாரங்களை வாசித்தார். அவர் கூறுகையில், ''என் நடவடிக் கைகள் முழுவதும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதாகவே இருக்கும்,'' என்றார்.

- நமது நிருபர் -

 


முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் நிறுத்தி வைப்பு

Added : ஏப் 18, 2018 01:57

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கான, அகில இந்திய கவுன்சிலிங் நடைமுறைகள், உடனடியாக நிறுத்தப்படுவதாக, மத்திய அரசின் மருத்துவ கவுன்சிலிங் குழு அறிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கான, முதற்கட்ட கவுன்சிலிங், மார்ச், 27ல் நடந்தது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஏப்., 13ல் நடைபெற்றது; 14ல், முடிவுகள் வெளியிடப்பட்டன.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங் நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக, மத்திய அரசின், மருத்துவ கவுன்சிலிங் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கவுன்சிலிங் குழு வெளியிட்ட அறிவிப்பு:மத்திய சுகாதாரத்துறை, மத்திய சுகாதார சேவைகள் இயக்கம், மருத்துவ கவுன்சிலிங் குழு ஆகிய மூன்றால் நடத்தப்படும், முதுநிலை மருத்துவமாணவர் சேர்க்கை உள்ளிட்ட, அகில இந்திய கவுன்சிலிங் நடை முறைகளை நிறுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், ஏப்., 14ல் வெளியிடப்பட்ட, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிவுகளின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட, அனைத்து கவுன்சிலிங் நடைமுறைகளும், உடனடியாக நிறுத்தப்படுகின்றன.முதற்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று, இடங்களை பெற்ற மாணவர்கள், அந்த இடங்களைகைவிடும் தகவலை, கல்லுாரி நிர்வாகங்களிடம், ஏப்., 19 மாலை, 5:00 மணி வரை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
ஏர்டெல், 'நெட்வொர்க் ஜாம்' ; மாறும் முடிவில் வாடிக்கையாளர்கள்

Added : ஏப் 18, 2018 01:26

கோவை: தமிழகத்தில், சில வாரங்களாக, ஏர்டெல் மொபைல்போன், 'நெட்வொர்க்' கிடைக்காமல், பல லட்சம் வாடிக்கையாளர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.நாட்டின் பல்வேறு இடங்களில், மொபைல்போன் நெட்வொர்க் சேவை, 20 நாட்களுக்கு மேலாக சரிவர கிடைக்கவில்லை என, பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

ஒரு நெட்வொர்க்கில் இருந்து, மற்றொரு நெட்வொர்க்கில் உள்ள மொபைல் எண்ணுக்கு அழைக்க வேண்டுமெனில், பலமுறை முயற்சி செய்த பின், இணைப்பு கிடைக்கிறது; சில சமயம் அதுவும் கிடைப்பதில்லை.மேலும், 4ஜி சிம்மில், 2ஜி சேவை தான் கிடைக்கிறது என்று, 'நெட்டிசன்'கள் தரப்பிலும் கடும் அதிருப்தி கிளம்பி வருகிறது. 'சிக்னல் முழுமையாக இருந்தும், கால் செய்ய முடியவில்லை' என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து, கோவை தொலைத்தொடர்புத்துறை கண்காணிப்பு மற்றும் புகார் பிரிவு இணை இயக்குனர் குப்புசாமி கூறியதாவது:

தற்போது, ஏர்செல் வாடிக்கையாளர்கள், 32 லட்சம் பேர் ஏர்டெல்லில் இணைந்துள்ளனர். வோடபோன் நெட்வொர்க்கிற்கு, 27 லட்சம் பேரும், பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கிற்கு, எட்டு லட்சம் பேரும் மாறியுள்ளனர். குறுகிய கால இடைவெளியில், பெருவாரியான வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கிற்கு மாறும் போது, இத்தகைய நெட்வொர்க் பிரச்னை ஏற்படுவது வழக்கம்.தமிழகத்தில், 27 ஆயிரம் மொபைல் போன் டவர்கள் உள்ளன. இதில், 9,000 டவர்களில், பிற ஆபரேட்டர்கள் அவரவர் ஆன்டனாவை பொருத்தி, கூட்டாக நெட்வொர்க் சேவை வழங்குகின்றனர்.இவ்வாறு பகிர்ந்து அளிக்கும் நெட்வொர்க் வழியே, ஒரு குறிப்பிட்ட அளவு அழைப்புகள் மட்டுமே செல்ல முடியும். தவறும் பட்சத்தில் நெட்வொர்க் நெரிசல் ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில், 'சர்க்யூட்' செயலிழக்கும் போது, இதுபோன்ற பிரச்னை ஏற்படுகின்றன. இது தற்காலிக பிரச்னைதான். அதிகபட்சம், இரண்டு முதல், மூன்று வாரங்களில் சீராகிவிடும். ஒவ்வொரு நெட்வொர்க்கும் தினசரி கண்காணிக்க வேண்டும் என, தனியார் மொபைல் போன் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். நெட்வொர்க் ஜங்ஷன்களை தனியார் நிறுவனங்கள் அதிகரித்தால் இதுபோன்ற பிரச்னையை தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'பிற மொபைல் போன் நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது, அதன் வாடிக்கையாளர்களை கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறி ஈர்க்கும் ஏர்டெல் நிறுவனம், அதற்கான அடிப்படை தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தவில்லை

. 'இதனால், மொபைல் போனில் தொடர்பு கொள்ளும்போது, 'நெட்வொர்க் பிஸி' என்று வருகிறது. இதன் காரணமாக, வேறு நிறுவனத்துக்கு மாறும் முடிவில் உள்ளோம்' என்றனர்.'சிக்னல் பிரச்னையா?'தனியார் மொபைல்போன் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஜியோவை தொடர்ந்து, மற்ற தனியார் மொபைல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களும், இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் வசதிகளை அளித்து வருகின்றன. இதனால், வாய்ஸ் கால் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை, மாலை, இரவு சமயங்களில் டிராபிக் அதிகமாகும்போது அழைப்பு இணைக்கப்படுவதில் பிரச்னை உள்ளது. இவற்றை சீராக்கும் முயற்சியில், தனியார் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. சிக்னலில் பிரச்னை என்றால் மொபைலை, 'ரீ- ஸ்டார்ட்' செய்து பயன்படுத்த வேண்டும்,' என்றார்.
பிரசவ, 'வார்டாக' மாறிய ரயில் பெட்டி

Added : ஏப் 18, 2018 00:50

சிதாபூர்: உத்தர பிரதேசத்தில், திடீரென கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ரயில் பெட்டி, பிரசவ வார்டாக மாற்றப்பட்டு, அழகான ஆண் குழந்தை பிறந்தது.உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்தவர், சுமன் தேவி. கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக, சமீபத்தில், தன் கணவருடன், கோரக்பூருக்கு, ரயிலில் சென்றார்.இந்நிலையில், சிதாபூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், தேவிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இவரது கணவர், இது குறித்து, ரயில் நிலைய அதிகாரியிடம் தெரிவித்தார்.அவர், உடனடியாக டாக்டர்களை அழைத்து, ரயில் பெட்டியை, பிரசவ வார்டாக மாற்றினார். ரயில் பெட்டியிலிருந்த பெண் பயணியர் உதவியுடன், தேவிக்கு, டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். இதில், அவருக்கு, அழகான ஆண் குழந்தை பிறந்தது.இதையடுத்து, 'ஆம்புலன்ஸ்' வரவழைக்கப்பட்டு, தேவியும், குழந்தையும், மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
'நீட்' தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

Added : ஏப் 18, 2018 04:21




புதுடில்லி : மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, மே, 5ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்வுக்கான, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது;

* தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, தேர்வறைக்கு வர வேண்டும். சோதனைக்கு பின்பே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.

* மாணவர்கள், அரைக்கை சட்டையுடன், பேன்ட்டும், மாணவியர், சுடிதார் ஆடைகளையும் அணியலாம்

* ஆடைகளில், பெரிய பொத்தான்கள், பேட்ஜ், கிளிப் உள்ளிட்டவை இருக்கக் கூடாது. மாணவியர், தலையில், பூ வைத்து வரக் கூடாது

* மாணவர்கள் செருப்பு மட்டுமே அணிய வேண்டும்; ஷூ அணிந்து வரக் கூடாது. மாணவியர், குதிகால்கள் மறைக்கும் வகையிலான காலணிகளை அணிந்து வரக் கூடாது.

Advertisement

NEWS TODAY 28.06.2026