Sunday, April 22, 2018

பிசியோதெரபி சேர்க்கை; யோகா படித்தால் முன்னுரிமை

Added : ஏப் 21, 2018 20:33

கோவை:யோகா பாடத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு, பிசியோதெரபி பட்டப்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) அறிவித்துள்ளது.

யு.ஜி.சி., சார்பில், யோகா படித்தவர்களுக்கு பிசியோதெரபி பட்டப்படிப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க சிறப்புக் குழு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, புதிய அறிவிப்பு யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

குறைந்தபட்சம் ஓராண்டு யோகா பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு, பிசியோதெரபி பட்டப்படிப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், தகுதிகள் உள்ளிட்டவை சக மாணவர்கள் போலவே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.எதிர்வரும் மாணவர்கள் சேர்க்கை செயல்பாடுகளில் இவ்வழிகாட்டுதல்களை செயல்படுத்தவும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளுக்கு இதுகுறித்து தெளிவுபடுத்தவும், பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

Added : ஏப் 22, 2018 05:05

மூணாறு: கேரளா, மூணாறில் கோடைசுற்றுலா சீசன் துவங்கியபோதும் பயணிகளின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.முக்கிய சுற்றுலாப்பகுதியான மூணாறுக்கு ஆண்டு முழுவதும் பயணிகள் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும்.ஆனால் இந்தாண்டு பயணிகளின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. மாட்டுபட்டியில், படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை பார்க்க ஒரு நாளைக்கு சராசரியாக 2,500 முதல் 3,000 பயணிகள் வந்து செல்வர். ஆனால் நேற்று முன்தினம் 928 பேர் மட்டும் வந்தனர். ஜூலையில் குறிஞ்சி பூக்கள் பூக்கும் நேரத்தில் கேரள பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தொடர் போராட்டம் நடப்பதால் பயணிகள் வருகை குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மணிக்கு 2 ரூபாய் வாடகை சைக்கிள் திட்டம்

Added : ஏப் 21, 2018 19:40

லக்னோ:லக்னோவில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒரு மணி நேரத்துக்கு, இரண்டு ரூபாய் கட்டணத்தில், வாடகை சைக்கிள் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று முன்தினம், லக்னோவில், ஒரு மணி நேரத்துக்கு, இரண்டு ரூபாய் கட்டணத்தில், வாடகை சைக்கிள் திட்டத்தை, மேயர் சம்யுக்தா துவக்கி வைத்தார்.

இது குறித்து, சுற்றுச்சூழல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாடகை சைக்கிள் வசதியை பயன்படுத்த விரும்புவோர், தங்கள், 'ஸ்மார்ட்' போனில், 'ஜூம்கார்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்; அதில், உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, வாடகை சைக்கிள் வசதியை பெறலாம்.

ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய இந்த சைக்கிள்களின் பூட்டை, ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி திறக்கலாம். கட்டணத்தை, 'பே - டிஎம்' மூலம் செலுத்த வேண்டும். முதல் கட்டமாக, 12 இடங்களில், வாடகை சைக்கிள் வசதி கிடைக்கும்.

சைக்கிளை எடுத்துச் செல்வோர், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே, திரும்ப ஒப்படைக்க வேண்டும். விரைவில் அனைத்து இடங்களிலும் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த வசதி, 24 மணி நேரமும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
கழிப்பறை கட்டாத அரசு ஊழியருக்கு சம்பளம், 'கட்'

Added : ஏப் 22, 2018 01:17 |



ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
லடாக்கின் லே மற்றும் கார்கில் மாவட்டங்கள், காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள ஷோபியான் மற்றும் ஸ்ரீநகர் ஆகியவை திறந்தவெளி கழிப்பறை இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், அனந்தநாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில், கழிப்பறை கட்டும் பணி, 100 சதவீதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிஷ்த்வார் மாவட்டத்தில், கழிப்பறை கட்டும் பணி, 57 சதவீதத்தை எட்டியுள்ளது. இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டது; அப்போது, 616 ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்படாதது தெரியவந்தது. இதையடுத்து, கழிப்பறை கட்டும் வரை, அந்த ஊழியர்களின் மாத சம்பளத்தை நிறுத்தும்படி, மாவட்ட அபிவிருத்தி ஆணையர், அங்கிரேஸ் சிங் ராணா உத்தரவிட்டார்.


  12 ,வயதுக்குட்பட்ட, சிறுமியரை, பலாத்காரம், செய்பவருக்கு... தூக்கு!
22.04.2018  dinamalar

புதுடில்லி:நாடு முழுவதும், அதிர்ச்சி தரும் வகையில், பாலியல் கொடுமைகள் அரங்கேறி வரும் நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, துாக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர், நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.





ஜம்மு - காஷ்மீரின், கத்துவா மாவட்டத்தில், எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உ.பி.,யைச் சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.இதையடுத்து, பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தை களை பாதுகாக்கும், 'பாக்ஸோ' சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம், மத்திய அரசு,12 வயதுக்கு உட்பட்ட சிறுமி யரை,பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தெரிவித்தது. இந்நிலையில், மோடி தலைமையில், அவசர அமைச்சரவை கூட்டம்,

நடந்தது. கூட்ட முடிவில், சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிப்பது மற்றும் அதில் வழங்கப்படும் தண்டனை குறித்து, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அவை வருமாறு:பெண்களை பலாத்காரம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஏழு ஆண்டு சிறை தண்டனையை, 10 ஆண்டு அல்லது ஆயுள் தண்டனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்கில், தற்போது, 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.இது, 20 ஆண்டுகளாக உயர்த்தப் படும். அது, மேலும் நீட்டிக்கப்பட்டு, குற்றவாளி, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் கடுமையாக்கப்படும்.

தவிர, 12 வயதுக்கு உட்பட்டசிறுமியர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட் டால், தற்போது, 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அது, ஆயுள் அல்லது துாக்கு தண்டனையாக உயர்த்தப்படும்.சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்குகளை, அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேல் முறையீட்டு மனுக்களை, ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்தில், ஜாமின் வழங்கு வதிலும் சில கட்டுப்பாடுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.இதன்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு, முன் ஜாமின் கிடையாது. குற்றஞ்சாட்டப்பட்டவர், ஜாமினுக்கு விண்ணப்பித்தால், அது பற்றி
 
முடிவெடுப்பதற்கு முன், அரசு வழக்கறிஞருக் கும், பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் ஒருவருக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும்.

இந்த சட்ட திருத்தம், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. விரைவில் இந்த மசோதாவை, பார்லி.,யில் தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்திய தண்டனை சட்டம், ஆதார சட்டம், குற்றவியல் நடை முறை சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடை சட்டம் ஆகியவற்றில்திருத்தம் செய்யப்பட்டு, இந்த சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட உள்ளது.

சிறப்பு ஏற்பாடுகள்

சிறுமியர் பாலியல் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த, சிறப்பு ஏற்பாடுகளாக, அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள்:

* மாநில அரசு மற்றும் உயர் நீதிமன்றங்களுடன் கலந்து ஆலோசித்து, விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். அரசு வழக்கறிஞர்கள் பதவிகள் புதிதாக உருவாக்கப்படும்

* பலாத்கார வழக்குகளுக்காகவே அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் கருவிகள் வழங்கப்படும்

* வழக்கை விரைவில் முடிக்கும் நோக்கில், தேவையான உதவிக்கு ஆட்கள் வழங்கப்படும்

* அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பாலியல் பலாத்கார வழக்குகளுக்காகவே, சிறப்பு தடயவியல் பரிசோதனைக்கூடம் அமைக்கப்படும்

அதிர செய்த பாலியல் வழக்குகள்

ஜன., 2018: ஜம்மு - காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில், எட்டு வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு உணவு வழங்கப்படாததால், பசி மயக்கத்தில் இருந்த சிறுமியை, பலமுறை பலாத்காரம் செய்து, தலையில் கல்லைப் போட்டு கொடியவர்கள் கொடூரமாக கொன்றனர்

ஜூன், 2017: உ.பி.,யில் உள்ள உன்னாவ் என்ற இடத்தில், 17 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்டிச., 2012: தலைநகர், டில்லியில், 23 வயது மருத்துவ மாணவி, நிர்பயா, ஓடும் பஸ்சில் ஆறு பேரால், பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தது, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அசத்தல்!  சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை
ஐந்து நவீன வசதிகள் விரைவில் அறிமுகம்


dinamalar 22.04.2018

புதுடில்லி:தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்களை நிறுத்தி பணம் செலுத்தும் நடைமுறைக்கு பதிலாக, ஐந்து நவீன வசதிகளை, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. மொபைல் போன், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், எளிதாக, சுங்கக் கட்டணத்தை செலுத்தும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வர உள்ளது.





நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நீண்ட துார சாலை வழி பயணங் கள் எளிதாகி, நேரம் மிச்சமானது. ஆனால், வழியெங்கும் வரும் சுங்கச் சாவடிகளில் நிறுத்தி நிறுத்தி, சுங்கக் கட்டணம் செலுத்து வது, தங்கள் பயண நேரத்தை அதிகரிப்பதாக, பயணியர் தெரிவித்தனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால், கடுமை யான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஐந்து நவீன திட்டங்களை செயல்படுத்த உள்ளது.இவை, டில்லி - மும்பை, டில்லி - சண்டிகர், டில்லி - கோல்கட்டா மற்றும் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை களில், முதல்கட்டமாக பரிசோதிக்கப்பட உள்ளன.

'மொபைல் ஆப்'

இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 'மொபைல் ஆப்' எனப்படும், மொபைல் போன் செயலியை, விரைவில் அறிமுகப்படுத்த

முடிவு செய்துள்ளது. தேசிய நெடுஞ் சாலையில் பயணம் செய்வோர், அந்த செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதில், பெயர், வாகன எண் உட்பட, கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். தகவல்கள் உடனடியாக சரிபார்க்கப் பட்டு, அந்த செயலி செயல்படத் துவங்கும்.

இதில், இரு வகையாக சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த முடியும். முதலாவதாக, உங்கள்வங்கிக் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்த செயலியில் உள்ள, 'இ - வாலட்'டில் சேமித்து வைக்க வேண்டும்.

வெளியூர் பயணம் புறப்படுவதற்கு முன், நீங்கள் செல்லும் இடத்தை, அந்த செயலியில் குறிப்பிட் டால், வழியில் எத்தனை சுங்கச்சாவடிகள் உள்ளன, மொத்தம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என, தெரிந்து விடும். அதை புறப்படு வதற்கு முன், மொத்தமாக செலுத்தி விடலாம்.ஒவ்வொரு சுங்கச்சாவடியை நெருங்கும் போதும், உங்கள் மொபைல் போனுக்கு, 'க்யூ.ஆர். கோட்' எனப்படும், சங்கேத குறியீடு அனுப்பப்படும்; அதை, சுங்கச் சாவடியில், 'ஸ்கேன்' செய்து, செல்ல வேண்டும்.

இரண்டாவது, இந்த செயலியை, யூ.பி.ஐ., எனப்படும், மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த பணப் பரிவர்த்த னைக்கான நடைமுறையுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம், வங்கிக் கணக்கில் இருந்து, சுங்கக் கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.

தனி வரிசை

இது மட்டும் அல்லாமல், 'வை - பை' அல்லது, 'ப்ளூடூத்' தொழில்நுட்ப உதவியுடன், வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு மூலம், சுங்கக் கட்டணத்தைசெலுத்தும் முறையும் பரிசோதிக்கப் பட உள்ளது. இந்த வசதியை பெற விரும்பும் வாகனங்களுக்கு, தனி வரிசை ஒதுக்கப்படும்.இது தவிர, தைவான் போன்ற நாடுகளில் உள்ள தானியங்கி முறையும் பரிசோதிக்கப்பட உள்ளது. இதில், சுங்கச்சாவடிகளே இருக்காது.

நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்,

  தானியங்கி ஸ்கேனிங் கருவி வைக்கப்படும். அனைத்து வாகனங்களிலும், 'சென்சார்' பொருத்தப்படும்.ஸ்கேனிங் கருவியை வாகனம் கடந்து செல்லும் போது, 'சென்சார்' உதவியுடன், சுங்கக் கட்டணம், தானாகவே கழித்துக் கொள்ளப்படும். 'நம் ஊரில் இருக்கும் வாகன எண்ணிக்கையை ஒப்பிடும் போது, இது சற்று கடினமான முயற்சி' என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

'தரமான சேவை பெற செலவு செய்யலாமே'

'நவீன முறையை செயல்படுத்த, அதிகம் செல விட வேண்டியிருக்கும். இவ்வளவு தொகை செலவு செய்வதற்கு, சுங்கக் கட்டண முறை யையே ரத்து செய்ய முடியாதா...' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரியிடம், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் கூறியதாவது:

நெடுஞ்சாலைகளில், சுங்கக் கட்டணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு வாய்ப்பே இல்லை. நாம் நிறைய நெடுஞ்சாலைகள் அமைக்க வேண்டிஉள்ளது; அதற்கு நிறைய முதலீடுகள் தேவைப்படுகின்றன.ஆனால், நம்மிடம் அதற்கான நிதி இல்லை.

நம்மிடம், ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கான நெடுஞ்சாலைப் பணிகள் உள்ளன. ஆனால், நம் ஆண்டு பட்ஜெட் தொகை, 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. தரமான சேவைகளுக்கு, மக்கள் பணம் கொடுத்து தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு



பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஏப்ரல் 22, 2018, 03:30 AM

சென்னை,

மலைக்கிராமங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், மகப்பேறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு எடுத்திருந்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து டாக்டர் அருணா உள்பட 6 அரசு பெண் டாக்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதே கோரிக்கை தொடர்பாக வேறு சிலர் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி, பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.

அருணா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்யநாதன், ‘மகப்பேறு விடுப்பு எடுக்க பெண் டாக்டர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், கூடுதல் மதிப்பெண் கேட்க முடியாது. நீதிபதிகள் இருவிதமான உத்தரவுகள் பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

இதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்து, ‘பெண் ஊழியர்களையும், அவர்களின் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே அந்த விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருத்தில் கொண்டு, மருத்துவ மேற்படிப்பிற்கான சலுகை மதிப்பெண்களை அரசு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

NEWS TODAY 25.12.2025