Sunday, April 22, 2018

மனசு போல வாழ்க்கை- 20: கற்கண்டுச் சுவைதானே கல்வி!

Published : 04 Aug 2015 12:15 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்




படிப்பது மாணவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது, படிப்பதை நினைவில் வைத்துக் கொள்வதும் அதைச் சிறப்பாக தேர்வில் எழுதுவதும்தான்.

அறிவுத்திறன் அபாரமாக உள்ள பல பிள்ளைகள்கூட தேர்வுகளில் சிறப்பாகச் செய்வதில்லை. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தவே சிரமப்படுவதாகக் குறைபடுகின்றனர். என்ன படித்தாலும் தேர்வு நேரத்தில் பதற்றப்படுவதாகச் சொல்லும் மாணவர்களை நிறைய இருக்கிறார்கள். ஒரு தேர்வில் சற்று மதிப்பெண்கள் குறைந்தாலே வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைப்பதும் தெரிகிறது. பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் வேறு அந்த மாதிரி நினைக்க வைக்கின்றனர். மாணவர்கள் சிறப்பாகப் படிக்க, தேர்வெழுத நம் நேர்மறை சிந்தனை முறையான அஃபர்மேஷனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்!

உளவியல் வன்முறை

இன்று மாணவர்களைப் பந்தயக் குதிரைகள் போல ஆக்கிக்கொண்டிருக்கிறோம். பெற்றோரின் பெருமை காக்கவும், பள்ளியின் ‘ரிசல்ட்’ காக்கவும், நண்பர்கள் மத்தியில் மானம் காக்கவும் அவர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் துடிக்கிறார்கள். சுதந்திரமான போக்கில் படிக்கும், தேர்வெழுதும் நிலை இன்று இல்லை. அவர்கள் சுய மதிப்பு தொடர்ந்து காயப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பல பள்ளிகளில் பேதப்படுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் தண்டிப்பதையும் படிப்பதற்கான கிரியா ஊக்கிகளாக பயன்படுத்தி வருகிறார்கள். மின்சாரக் கம்பிக்குப் பயந்து சொன்னதைச் செய்யும் சர்க்கஸ் மிருகம் போலத் தண்டனையிலிருந்தும் அவமானத்திலிருந்தும் தப்பிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். மதிப்பெண்களுக்குத் தக்கவாறு செக் ஷன் பிரிப்பது, பெஞ்சுகள் அமைப்பது, மரியாதை கொடுப்பது எனச் செய்வதாகப் பல பெற்றோர்கள் புகார் கொடுக்கிறார்கள். உடல்ரீதியான தாக்குதல்கள் வகுப்பறைகளில் குறைந்திருந்தாலும், உளவியல் வன்முறைக்குக் குறைவில்லை.

பொய்ச் சமூகங்கள்

பல ஆசிரியர்கள், படிக்காத மாணவர்கள் என்றால் அவர்களை மட்டமாக நடத்துகிறார்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களில் பெற்றோர்கள் கூனிக் குறுகி நிற்பதைப் பார்க்கிறோம். தான் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்ற எண்ணத்தை ஒரு மாணவனுக்கு மிக எளிமையாக ஒரு ஆசிரியரால் ஏற்படுத்த முடியும். அவ்வளவு வலிமையான ஆயுதம் ஆசிரியர்களிடம் உள்ளது. திட்டுவதை விடப் புறக்கணித்தல் மிக மோசமானது. ஒப்பிட்டுப் பேசுவது, படிக்காததால் பெற்றோருக்கு அவமானம் எனச் சொல்லி மறுக வைப்பது எனும் அணுகுமுறைகள் மாணவர்கள் மன நிலையை முழுவதுமாக எதிர்மறையாகத் திருப்பி விடுகின்றன.

தொழில்நுட்பத்தால் கவனக்குறைவு இன்று எல்லா வயதினருக்கும் வந்துவிட்டது. ஸ்மார்ட் ஃபோனைக் கைக்குழந்தையைப் பார்ப்பது போலச் சதா அதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். விக்கினால் கூட வாட்ஸ் அப்பில் வீடியோ எடுத்து அனுப்பிவிடுகிறார்கள். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் இன்ஸ்டாகிராமும் பல பொய் சமூகங்களை வடிவமைத்துவருகின்றன. டி.வியில் சதா சர்வ காலமும் ஏதோ ஒரு சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது. தேர்வு நேரத்தில்தான் 20-20 விளையாடுவார்கள் அல்லது மோட்டோ ஜி.பி. ரேஸில் பைக் ஓட்டுகிறார்கள். படிப்பிலிருந்து கவனத்தை சிதற வைக்கக் கோடிக் காரணங்கள் உண்டு. நம் காலத்தில் இவை இருந்ததில்லை. ஆதலால் ஆதரவோடும் புரிதலோடும் நம் பிள்ளைகளை அணுகுவது முக்கியம்.

ஆசையோடு படித்தல் என்பது மிக முக்கியம். ஆனால் பிடிக்காத பாடம் அல்லது பிடிக்காத குரூப் எனும்போது ஆசையை விடப் பயமும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. கணக்குப் படிக்காவிட்டால் குடி முழுகிப் போய்விடும் என்று சொல்லி வராத பாடத்தில் போட்டு வாழ்க்கையைக் கெடுத்த பல பெற்றோர்களை எனக்குத் தெரியும்.

சம்மதிக்காமல்

கற்றல் இங்கு அயர்ச்சியையும் மன உளைச்சலையும் தருவதால் மாணவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் குறைந்து தோல்வி பயமும் மன நெருக்கடியும் இயல்பாக வந்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் மாணவர்களின் தற்கொலை முயற்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு என் நேரடி விண்ணப்பம் இதுதான்: உங்கள் வாழ்க்கையில் கல்வி ஒரு அங்கம். அதை ரசித்துச் செய்ய முடியும். அதன் வெற்றி தோல்விகள் நீங்கள் நினைக்கும் அளவுக்கு வாழ்க்கையை மாற்றிப் போடாது. உங்களுக்கான படிப்பை, வேலையை, துறையைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள். உங்களுக்கு யாரும் போட்டி அல்ல. நீங்கள் சம்மதிக்காமல் யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாது. உங்களால் எதையும் செய்ய முடியும். அதை நீங்கள் எக்காலத்திலும் மறக்கக் கூடாது.

பயமில்லாமல் ஆசையோடு எந்தக் கட்டாயமுமின்றிப் படிப்பது காலத்துக்கும் நிலைக்கும். புரிந்து படிக்கவும் உதவும். படித்ததைச் செயல்படுத்தவும் நம்பிக்கை தரும். பிறருக்காகப் படிப்பதை விடுத்துத் தனக்காகப் படிக்கையில் ஊக்கம் தானாக வரும்.

படிப்பது தியானம் போல. அது உள்ளுக்குள் நிகழும் ரசவாதம். அதை உணர்ந்து ரசித்து அனுபவித்துச் செய்ய முடியும்.

விடுமுறை நாளில் படுத்தவாறு கையில் காபியுடன் பிடித்த கதைப் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பது போலப் பாடப் புத்தகத்தையும் மனம் லயித்துப் படிக்க முடியும்.

‘கற்பது கல்லை உடைப்பது போலல்ல; கற்கண்டு சுவைப்பது போல’ என்பதை மனம் நம்பும்போது கற்றல் அனுபவம் ஒரு சுக அனுபவமே!

மாணவர்கள் கீழ்க்கண்ட அஃபர்மேஷன்களை பயன்படுத்தலாம்:

“நான் முழு ஆர்வத்துடனும் கவனத்துடனும் கற்கிறேன்.”

“நான் என் மீது பூரண சுய மதிப்பும் நம்பிக்கையும் கொள்கிறேன்.”

“நான் எல்லாத் தேர்வுகளிலும் என் அதிகபட்சத் திறமையை வெளிப்படுத்துகிறேன்.”

“நான் விரும்பிய துறையை ஏற்று, அதில் சிறப்பாகக் கற்கிறேன்.”

“நான் படிப்பது தொடர்பான அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளியேற்றுகிறேன்.”

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
குருட்டு' பக்தி!

- தென்கச்சி சுவாமிநாதன்

 
. கர்ணனின் கதையை மாணவர்களிடையே விளக்கிக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியர்.

''தன் குருநாதரின் மேல் அதீத பக்தி கொண்டிருந்தவன் கர்ணன். ஒருமுறை, அவனின் ஆசிரியரான பரசுராமன், சற்று நேரம் களைப்பாற எண்ணினார். இதை உணர்ந்த கர்ணன், அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தான். உடனே, அவனது ஒரு தொடையில் தலை வைத்துப் படுத்த பரசுராமன் சற்று நேரத்தில் தூங்கிப் போனார்.

இந்த நிலையில், கர்ணனின் மற்றொரு தொடையின் மீது வந்து அமர்ந்த காட்டு வண்டு ஒன்று, அவன் தொடையைத் துளைக்க ஆரம்பித்தது. ரத்தம் பொங்கியது. பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். சிறிது அசைந்தாலும் குருநாதரின் தூக்கம் கெட்டு விடுமே என்ற எண்ணம் அவனுக்கு.

ஆம்! ஆசிரியர் அமைதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக, தனக்கு ஏற்பட்ட அந்த சித்ரவதையை தாங்கிக் கொண்டான் அந்த மாணவன்!''

- கதையைக் கூறி முடித்த ஆசிரியர், ''என் அருமை மாணவர்களே... நீங்களும் கர்ணனைப் போன்று உங்கள் ஆசிரியரின் மீது பக்தி செலுத்த வேண்டும். செய்வீர்களா?'' என்று கேட்டார்.

''நிச்சயம் செய்வோம்!'' - ஒட்டு மொத்த மாணவர்களும் உரக்கக் குரல் கொடுத்தனர்.

மகிழ்ச்சியடைந்த ஆசிரியர் தொடர்ந்தார்...

''சரி... நானும் பரசுராமனைப்போல் உங்களின் தொடையில் தலை வைத்துப் படுத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, கர்ணனுக்கு நிகழ்ந்தது போலவே உங்கள் தொடையையும் வண்டு துளைத்தால் என்ன செய்வீர்கள்?''

மாணவர்கள் பதில் சொன்னார்கள் ''நாங்களும் அவனைப் போலவே பல்லைக் கடிச்சிக்கிட்டு வலியைப் பொறுத்துக்குவோம்!''

உற்சாகம் அடைந்த ஆசிரியர் ஆர்வத்துடன் கேட்டார் ''ஏன் அப்படிச் செய்யணும்?''

மாணவர்கள் சொன்னார்கள்... ''நீங்க முழிச்சிக்கிட்டா பாடம் நடத்த ஆரம்பிச்சுடுவீங்களே... அதான்!''

- இந்த குருபக்தியை போன்றுதான் இன்றைக்கு சிலரது தெய்வ பக்தியும் இருக்கிறது.

ஆண்டவன் பேரைச் சொல்லி தங்களை வருத்திக் கொள்கிறார்கள். அதன் நோக்கம், 'இதை விட பெரிய வருத்தம் ஏதும் வந்துவிடக் கூடாதே' என்பதுதான்.

அழகான இயற்கைக் காட்சியைப் பார்க்கிறோம்.அதன்மேல் ஒரு காதல் பிறக்கிறது. உடனே, அந்த இயற்கைக் காட்சியிடம் இருந்து எதையாவது நாம் எதிர்பார்க்கிறோமா? அல்லது அதுதான் நம்மிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறதா?

அதுமாதிரிதான் கடவுளையும் நாம் நேசிக்க வேண்டும். நம்மால் அவரை நேசிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை வரவேண்டும். அதற்குப் பெயர்தான் பக்தி என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கடவுளே உங்கள் தொடையில் தலை வைத்துப் படுத்தாலும், அவருக்காக நீங்கள் எந்தத் துன்பத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை!
பதின் பருவம் புதிர் பருவமா? - இதுவும் ஒரு போதைதான்

Published : 26 Mar 2016 12:11 IST
 
டாக்டர் ஆர்.காட்சன்





காற்று புக முடியாத இடங்களில்கூட நுழைந்துவிடும் இணையதளம், அலைக்கற்றைகள் பெற்றோரின் கண்களை மறைத்துவிடுவதில் ஆச்சரியமில்லை. சில வருடங்களுக்கு முன்வரை வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளைப் பெற்றோர் நேரடியாகக் கண்காணிக்க முடிந்தது. “இவ்வளவு நேரம் ரோட்டில் நின்று என்ன கதை பேசுற” என்று பெற்றோரோ, ‘‘உங்க பையன் பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு பொண்ணுகிட்ட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்ததைப் பார்த்தேனே’’என்று அப்பாவிடம் போட்டுக்கொடுக்கும் அண்ணாச்சியோ இணைய உலகத்தில் நடப்பதைக் கண்காணிக்க முடியாது. அதுவும் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் இணையதளம், மொபைல் போனை அவர்கள் பயன்படுத்துவதற்கு நேரம் காலம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இணைய போதை

இணைய அடிமைத்தனத்தை (Internet addiction) பற்றி மருத்துவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘என்ன பாஸ் நீங்க, எதை எடுத்தாலும் அடிமைத்தனம்னு சொல்றீங்க, மனநலப் பாதிப்புன்னு சொல்றீங்க. அதனால எத்தனை நல்ல விஷயங்கள் கிடைக்குது, நீங்க இப்படிச் சொன்னா நாங்க என்னதான் பண்றது?’என்று கேட்டார். அவர் கேட்டதில் நியாயம் இருக்கத்தான் செய்தது. வலைதளம் என்பது சமீபகாலமாக மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது உண்மைதான். ரயில், பஸ் டிக்கெட் புக் செய்வதிலிருந்து வரன் பார்ப்பதுவரை பல்வேறு அன்றாட தேவைகளுக்கு இணையதளம் மற்றும் மொபைல்போன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

ஆனால், நம் கண்களை மறைக்கும் விஷயமாக, பலருடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒன்றாகவும் அது மாறிவருவதைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். பெரும்பாலோர் குடிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, ‘மது' ஒரு போதை வஸ்துவே இல்லை என்று சொல்லிவிட முடியாதில்லையா? (பார்க்க: பெட்டிச் செய்தி)

பிரச்சினையின் தீவிரம்

புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் 8-18 வயதுக்கு உட்பட்ட இளம்பருவத்தினரில் 23 சதவீதம் பேர் இணையதளம் அல்லது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். சீனாவில் 13 சதவீதம் வளர்இளம் பருவத்தினர் இணையதள அடிமைகளாக உள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்களில் மேற்கத்திய நாடுகளுக்குக் குறைச்சலில்லாமல் இந்தியாவும் இடம்பெற்றிருப்பது மட்டுமல்லாமல், இணையதளத்தைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடான சீனாவுக்கு அடுத்துப் பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துவருவது பெருமைக்குரிய விஷயமல்ல, முன்னெச்சரிக்கையோடு அணுகவேண்டிய விஷயமும்கூட.

தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி சுமார் இரண்டு சதவீதம் சிறார்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை பெறும் அளவுக்கு இணையதளம் மற்றும் கணினிகளுக்கு (ஸ்மார்ட் போன் உட்பட) அடிமையாக மாறியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி. இத்தனை விரிவாக இதைப் பரிசீலிக்க வேண்டியதற்கான காரணம் ‘மொபைல்போன், இணையதளம் போன்றவை அப்படி என்ன செய்துவிடும்?’ என்று நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

எளிதில் அடிமையாவது யார்?

இணையதளத்தைப் பயன்படுத்தும் எல்லோரும் அதற்கு அடிமையாகிவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எவ்வாறு கிருமிகள் எளிதில் தாக்குகின்றனவோ, அதுபோலச் சில குறிப்பிட்ட பிரச்சினையுள்ள வளர்இளம் பருவத்தினர் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பின்வரும் வகையினர் அதிகம் பாதிக்கப்படக் கூடும்.

>> மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

>> இயற்கையாகவே அதிகப் பதற்றத் தன்மை உள்ளவர்கள்.

>> கூச்ச சுபாவம் உள்ளவர்கள்.

>> படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள்.

>> கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள்.

>> சமூகப் பழக்கங்கள் குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கும் குழந்தைகள்.

>> அதிகத் துறுதுறுப்பு மற்றும் கவனக் குறைவு நோயால் பாதிக்கப்படும் சிறார்கள் (ADHD).

>> மிதமான அளவு ஆட்டிசம் (Autism) பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

>> தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.

>> அதிக வேலைப்பளு மற்றும் படிப்பு திணிக்கப்படும் சிறார்கள்.

>> சிறு வயதிலேயே சமூக விரோதச் செயல்கள் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகும் வளர்இளம் பருவத்தினர்.


எது இணைய அடிமைத்தனம்?

இணையதளம் மற்றும் ஸ்மார்ட் போனைக் கல்வி, தொழில் பொழுதுபோக்கு போன்ற காரணங்களுக்காக அன்றாடம் பயன்படுத்துவது அடிமைத்தனம் அல்ல. ஆனால், அதைத் தவிர மற்ற நேரங்களில் பின்வரும் காரணங்களுக்காக ஒருவர் அதிகம் பயன்படுத்தினால், அவர் இணையத்துக்கு அடிமையானதாக எடுத்துக்கொள்ளலாம்:

>> நாளுக்கு நாள் இணையதளம் (பேஸ்புக், வாட்ஸ்அப் உட்பட) பயன்படுத்தும் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்லுதல்.

>> ஆரம்பத்தில் தீர்மானித்த நேரத்தை விட அதிக நேரம் சென்ற பின்னும் கட்டுப்படுத்த முடியாத தன்மை.

>> அதிக நேரம் செலவழித்தால்தான் திருப்தி என்ற தன்மை அல்லது இணையதளப் பயன்பாட்டுக்காக ஒரு அப்ளிகேஷனையோ, மொபைல் போன், லேப்டாப், டேப்களில் திருப்தியில்லாமல் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பது.

>> வலைதளத்தில் நேரம் விரயமாவதால் படிப்பு, விளையாட்டு, பிறருடன் நேரடியாகச் செலவிடும் நேரம் உட்பட மற்ற முக்கிய வேலைகளைப் புறக்கணிக்க ஆரம்பிப்பது.

>> வலைதளத்தில் நேரம் விரயமாவதால் படிப்பு, விளையாட்டு, பிறருடன் நேரடியாகச் செலவிடும் நேரம் உட்பட மற்ற முக்கிய வேலைகளைப் புறக்கணிக்க ஆரம்பிப்பது.

>> பெற்றோரிடம் இணையப் பயன்பாட்டைப் பற்றிய தகவல்களை மறைப்பது அல்லது பொய் சொல்வது.

>> அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது தெரிந்தும், விட முடியாத நிலை.

>> இணையதளத் தொடர்பு மற்றும் மொபைல் போன் இல்லாமல் ஒருநாள் இருந்தாலும் எதையோ பறிகொடுத்த உணர்வு, எரிச்சல், கோபம், மன உளைச்சல், தூக்கமின்மை, பதற்ற உணர்வு, உடல் மற்றும் மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவது.

>>படிப்பு உட்பட வாழ்க்கையின் மற்றப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு வடிகாலாக, இணையதளச் செயல்பாடுகளை அணுகுவது.
மனதுக்கு இல்லை வயது!- 17:04:14

Published : 17 Apr 2014 12:01 IST

பேராசிரியர்கள் இராம.சீனுவாசன்
வே.ராஜி சுகுமார்

நாற்பது வயதை கடக்கும் ஒவ்வொருவருக்கும் அறுபது வயது முதல் தனது பொருளாதார தேவையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற அச்சம் கலந்த சந்தேகம் இருக்கும். பிரச்சினையை எதிர்கொள்வதுதான் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே வழி.

நாற்பது வயதில் உள்ள நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வாழ மாதம் முப்பதாயிரம் ரூபாய் தேவை என்று வைத்துக்கொள்வோம். விலைவாசியில் எந்த மாற்றமும் இல்லை என்றால் 20 ஆண்டுகளுக்கு பின்பும் உங்களுக்கு மாதம் முப்பதாயிரம் ரூபாய் இருந்தால் போதுமானது. ஆனால், விலையேற்றம் நடந்தே தீரும். ஆண்டுக்கு 7 சதவீதம் விலையேற்றமாக வைத்துக்கொண்டால்கூட 20 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தது மாத செலவுக்கு 1.20 லட்சம் ரூபாய் தேவை.

அப்படி எனில் 1.20 லட்சம் மாத வட்டி வரக்கூடிய அளவுக்கு உங்களது சேமிப்பு அன்றைய தினம் எவ்வளவு இருக்க வேண்டும்? மாதம் 1.20 லட்சம் ரூபாய் வட்டி வருவாய் வர வேண்டும் என்றால் வருடத்திற்கு 14.40 லட்சம் ரூபாய் கிடைக்கும். வட்டி ஏழு சதவீதம் என்று வைத்துக்கொண்டால் உங்களிடம் அறுபது வயதில் இரண்டு கோடி ரூபாய் முதலீடு இருக்க வேண்டும். ஆக, உங்கள் செலவுகள் நீங்கலாக நீங்கள் இன்னும் 20 ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபாய் சேமிக்க வேண்டும். இதற்கு ஆண்டுதோறும் 4.80 லட்சம் ரூபாயை 7 சதவீத வட்டியில் முதலீடு செய்யவேண்டும்.

அறுபது வயதுக்கு மேல் வருடம் 7 சதவீதம் விலையேற்றமும், உங்களது மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும்போது, உங்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் கூடுதலாக பணம் தேவைப்படும். இதனை சமாளிக்க மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்படலாம். மனம் தளர வேண்டாம். இத்தனையையும் சமாளிக்க வழிகள் உண்டு!

ஒவ்வொரு நாள் காலையும் சீக்கிரம் படுக்கையை விட்டு எழும்போது அன்றைய தினத்தில் நமக்கு வேலை செய்ய கூடுதல் நேரம் கிடைக்கும். அதைப்போலதான் சேமிப்பும். சீக்கிரமே சேமிக்க ஆரம்பியுங்கள்.

பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம். மேலே சொன்னதுபோல் இரண்டு கோடியை இருபது ஆண்டுகளில் சேமிக்க ஆண்டுக்கு 4.80 லட்சம் ரூபாய் தேவை. இதையே நீங்கள் முப்பது வயதிலிருந்தே ஆரம்பித்தால் ஆண்டுக்கு 2.12 லட்சம் ரூபாய் சேமித்தாலே போதும்.

இது எப்படி சாத்தியம்? முப்பது வயதில் ஆண்டுக்கு 2.12 லட்சம் ரூபாய் சேமித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அது 29 லட்சம் ரூபாயாக மாறும். அதனை அடுத்த 20 ஆண்டுகளில் மீண்டும் முதலீடு செய்தால், அதுமட்டுமே ஒரு கோடி ரூபாயைத் தாண்டும். தொலைநோக்கு பார்வையிலான இளமையில் சேமிப்பு என்பது எவ்வளவு அவசியம் என்பது இப்போது புரிந்திருக்கும்!
மனதுக்கு இல்லை வயது: பொஸஸிவ் மனப்பான்மை

Published : 26 Apr 2014 10:29 IST

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

அந்தப் பெண் என்னிடம் மிகவும் வருத்தத்துடன் சொன்னார், ‘‘என் மகன் நான் சொல்வதைக் கேட்கவே மாட்டேன் என்கிறான். இப்பவே இப்படி என்றால் நாளை கல்யாணம் ஆனதும் என்னை மதிக்கவே மாட்டானே?’’ என்றார். ‘‘உங்களைப் பார்த்தால் கல்யாண வயதில் மகன் இருப்பதுபோலத் தெரியவில்லையே’’ என்றேன். அவர் சொன்னார்.. ‘‘என் மகனுக்கு ஏழு வயசுதான் ஆகுது’’.

இளம் வயதிலேயே இப்படி என்றால் வயதான பெற்றோரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

வயதானால் ஏற்படும் அதிர்ச்சிகளில் முதன்மையானது அவர்களது பிள்ளைகள் பெற்றோரின் உதவியை எதிர்பார்க்காமலேயே தாங்களே பல விஷயங்களை முடிவு செய்யத் தொடங்குவதுதான். பலரும் நமது பிள்ளைகளை நமது உடமைகளில் ஒன்றாகக் கருதுகிறோம். கார், செல்போன், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற உடமைகளை எல்லோரிடமும் காட்டிப் பெருமிதம் அடைவதுபோல, நம் பிள்ளைகளையும் எல்லோரும் வியக்கும் வண்ணம் காட்டிப் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.

இந்தப் பொஸஸிவ் (Possessive) மனப்பான்மையே பின்னால் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆன பிறகு பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. நம் உடமை ஒன்றை வேறு யாரோ எடுத்துக்கொண்டதாகக் கருதுவதே இதற்கு மூலகாரணம்.

அது மட்டுமின்றி, பிள்ளைகளை நம் உடல் உறுப்புகளில் ஒன்றுபோலவே கருதுகிறோம். உடல் உறுப்புகள் நாம் நினைத்தபடி செயல்படும். தூக்கவேண்டும் என்றால் நம் கை தூக்கும்.. ஓட வேண்டும் என்று நினைத்தால் கால்கள் ஓடத் தொடங்கும். பிள்ளைகளும் அப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் அப்படி செயல்படுவார்களா? மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நம்முடைய ஒரு பகுதி அல்ல. அவர்கள் தனித்துவம் மிக்கவர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டு.

இன்னும் சிலரால் தங்களது பிள்ளைகளால் சுயமாக தங்களைக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதையே நம்ப முடியாது. அவர்களுக்கான உணவு, உடை முதல் வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளை எடுப்பதுவரை எல்லா முடிவுகளையும் பெற்றோரே எடுப்பார்கள். தங்களது குழந்தைகள் எந்த ரிஸ்க் எடுப்பதற்கும் அனுமதிக்க மாட்டார்கள். இதுபோல அதிகமாகப் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டவர்கள் சுயமாக முடிவெடுக்கவே பயப்படத் தொடங்குவார்கள்.

‘‘குழந்தைகள் நம் சொத்துக்கள் அல்ல. நம் மூலமாக உலகுக்கு வந்தவர்கள். அவ்வளவுதான்’’ - இது கலீல் கிப்ரானின் வாக்கு. நான் செய்த தவறுகளை என் மகன், மகள் செய்யக் கூடாது என்று எண்ணிப் பாதுகாத்தால் நீங்கள் பெற்ற அனுபவ அறிவு அவனுக்கு, அவளுக்குக் கிடைக்காமல் போய்விடும். கையிலேயே ஏந்திக்கொண்டிருந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.

பல கோடி ரூபாய் செலவில் செய்த ஏவுகணையாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில் குறிப்பிட்ட பாகங் களைக் கழற்றிவிட்டால்தான் வானில் பறக்க முடியும்.
மனதுக்கு இல்லை வயது!- 19:04:14

Published : 19 Apr 2014 11:15 IST

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

வயதான அம்மாள் ஒருவர் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார். அவரது மகனும் மருமகளும் அவரைத் துடைத்து, சுத்தப்படுத்தி, உணவூட்டி மிகவும் அன்புடன் கவனித்து வந்தனர். ஒருநாள் அந்த அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார். ‘‘ஏனம்மா கவலைப்படுகிறீர்கள். இது எங்கள் கடமைதான்’’ என்றனர் மகனும் மருமகளும். அதற்கு அந்த அம்மையார் சொன்னார், ‘‘நான் அதற்குக் கவலைப்படவில்லை. நீயும் உன் மனைவியும் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறீர்கள். உங்கள் வயதான காலத்தில் உன் மகனும் மருமகளும் உன்னை இப்படிப் பார்த்துக் கொள்வார்களா என்று நினைத்துக் கவலைப்பட்டு அழுகிறேன்’’ என்றாராம்.

முதுமை என்பதை தானும் மற்றவரும் சுமக்கும் ஒரு பெருஞ்சுமையாக சிலர் நினைக்கின்றனர். உண்மையில் முதுமை என்பது தனக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி.. ஒரு சுமையல்ல. அது பல ஆண்டுகள் உழைத்த பிறகு நமக்குப் பிடித்த விஷயங்களை, நமக்குப் பிடித்த நேரத்தில் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரு வசந்தகாலம்.

முதுமை என்றால் பழசாவது என்றும் பொருள் அல்ல. முதுமை என்றால் முதிர்ச்சி அடைதல் என்று பொருள். 1900-ம் ஆண்டு மனிதனின் சராசரி வயது 35தான். இப்போது அது கிட்டத்தட்ட 70 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம். இது 2050-ம் ஆண்டு 50 சதவீதமாக உயரும் என்பது முதியோருக்கான மகிழ்ச்சியான செய்தி.

நினைத்துப் பாருங்கள்.. ஒரு நாட்டின் 50 சதவீத மக்கள் தங்களைச் சுமையாகவும், எஞ்சியுள்ள வாழ்நாளைக் கசப்பானதாகவும் நினைத்தால் என்ன ஆவது?

புகழ்பெற்ற வயலின் மேதை யெஹுதி மெனுஹினை (Yehudi Menuhin) ஒருமுறை கேட்டார்கள், ‘‘ஒரு பரபரப்பான வயலின் கச்சேரிக்குப் பின் என்ன செய்து ரிலாக்ஸ் செய்வீர்கள்?’’ என்று. அதற்கு அவர் சொன்னார், ‘‘சூடா ஒரு கப் டீ சாப்பிடுவேன். அப்புறம் எனக்கே எனக்காக வயலின் வாசிக்கத் தொடங்குவேன்’’ என்று.

முதுமைக் காலமும் அப்படியே. உங்களுக்கே உங்களுக்கான இசையை இசைக்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு ஊரிலும் பூங்காக்கள் அல்லது அமைதியான பொது இடங்கள் உண்டு.

அங்கு சென்று பாருங்கள். உங்களைப் போலவே முதியோர் ஆங்காங்கே பேச யாருமற்று தனியாக இருப்பார்கள். அவர்களுடன் சென்று உரையாடுங்கள். ஒரு குழுவை ஒருங்கிணையுங்கள். இத்தனை காலம் நீங்கள் கற்ற கல்வியை, அனுபவத்தை, கலையை, திறமைகளை அங்கு வரும் இளைய தலைமுறையினருக்கு கற்பியுங்கள்.

நூறு பேர் வராவிட்டாலும் ஐந்து பேர் வந்தால் போதும். யோகா தெரிந்தால் யோகா வகுப்புகள் எடுக்கலாம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியா? குடும்ப அட்டை பெறுதல், ஓட்டு போடும் முறை, வருமானச் சான்று, இடச் சான்று பெறுதல் ஆகியவற்றில் உள்ள நேர்மையான நடைமுறைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். அப்புறம் பாருங்கள்.. உலகமே புதியதாகிவிடும்!
மனதுக்கு இல்லை வயது | ஏப்ரல் 23, 2014

Published : 23 Apr 2014 09:07 IST

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

தி  இந்து  தமிழ்

ஜெராக்ஸ் கடைக்கு ஒரு பெரியவர் சென்றார். கடைக்காரரிடம் சென்று ‘‘தம்பி! ஜெராக்ஸோ கிராக்ஸோ சொல்றாங்களே அது ஒண்ணு எடுக்கணும்’’ என்றார். ‘‘தாராளமா எடுக்கலாம் பெரியவரே! குடுங்க!’’ என்றார் கடைக்காரர். உடனே பெரியவர், ‘‘இந்த மிஷின்ல தமிழ்லயும் ஜெராக்ஸ் எடுக்க முடியுமா? இல்லை, இங்கிலீஷ் மட்டும்தானா?’’ என்றார்.

இன்னொருவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, ‘‘சென்னையில் இருந்து திருநெல்வேலி வந்திருக்கிறேன்’’ என்றேன். அதற்கு அவர், ‘‘உங்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்ப வேண்டும். அதைச் சென்னை முகவரிக்கு அனுப்பவா? அல்லது நெல்லை முகவரிக்கா?’’ என்று அப்பாவியாகக் கேட்டார். இதுபோல, தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வதிலும் பயன்படுத்துவதிலும் வயதானவர்களுக்கு பல சிரமங்கள் இருக்கின்றன.

இன்று தகவல் தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியில் இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் வயதானவர்கள் பலரும் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆர்வமின்றியும் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களைக் கண்டு பயத்துடனும் இருக்கின்றனர். தொழில்நுட்ப அச்சம் (Technophobia) என்று அழைக்கப்படும் இந்தப் பயம் வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இவர்கள் ‘என்ன இருந்தாலும் அந்த காலம்போல் வருமா?’ ‘இதெல்லாம் என்ன வளர்ச்சி?’ என்றெல்லாம் கூறி புதுத் தொழில்நுட்பங்களை எதிர்ப்பார்கள்.

இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு முதல் காரணம் ஆர்வமின்மை. ‘இதையெல்லாம் இனிமேல் எதற்காக நாம் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்ற மனப்பான்மையே இதற்குக் காரணம். ஐந்து வயதுப் பொடியன் ஐ-பேடில் புகுந்து விளையாடுவதற்குக் காரணம் குழந்தைகளிடம் இருக்கும் ஆர்வம்தான். வயதானாலும் அந்தக் குழந்தைத்தனத்தை தொலைக்காமல் இருப்பவர்களே புது விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இரண்டாவது காரணம் இந்தத் தொழில்நுட்பங்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றன. வயதானால் மூளை கொஞ்சம் மெதுவாகத்தான் புரிந்து கொடுக்கும். ஆனால் பையனோ, பேரனோ நல்ல மூடில் இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் பழகிவிடலாம். ‘இது கூடத் தெரியாதா?’ என்று கேலி செய்து விடுவார்களோ என்று எண்ண வேண்டாம். எல்லோரும் இந்தக் கட்டத்தைக் கடந்துதான் வந்திருப்பார்கள்.

அதேபோல, இவற்றைத் தவறாக உபயோகித்து ஏதேனும் சேதப்படுத்தி விடுவோமோ, தகவல்களை அழித்துவிடுவோமோ என்றெல்லாம் பயந்து பயன்படுத்தாமல் விட்டு விடுவார்கள். நீங்களாக ஐ-பேடை மாடியிலிருந்து தூக்கி எறியாதவரை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவையெல்லாம் மிகையான பயங்களே.

ஆனால் எல்லோரும் இப்படி இருப்பதில்லை. சிட்னியில் இருக்கும் பேத்திக்குச் சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து ‘வத்தக் குழம்பு செய்வது எப்படி?’ என்று ஸ்கைப் மூலம் நேரடியாகப் பாடம் எடுக்கும் பாட்டிகளும், வெப் கேமரா மூலம் பேத்திகளுக்குக் கதை சொல்லும் தாத்தாக்களும் இருக்கின்றனர். அவர்களே காலத்தை வென்றவர்கள்.

NEWS TODAY 25.12.2025