Wednesday, May 9, 2018

'நீட்' தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு

Added : மே 09, 2018 01:18

'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம் பெற்றதால், பிளஸ் 1க்கு முக்கியத்துவம் அளித்து பாடம் நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும், மே, 6ல் நடந்தது. விண்ணப்பித்திருந்த, 13.27 லட்சம் மாணவர்களில், 96 சதவீதமான, 12.73 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர். மூன்று மணி நேரம் நடந்த தேர்வில், மூன்று பாடங்களில் இருந்து, 180 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது. இதில், வேதியியல் மற்றும் உயிரியல் கேள்விகள் எளிதாகவும், இயற்பியல் கேள்விகள் கடினமாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தவறான விடைக்கு, 'மைனஸ் மார்க்' உண்டு என்பதால், தங்களுக்கு நன்கு தெரிந்த விடைகளை மட்டும், மாணவர்கள் எழுதியுள்ளனர். இயற்பியலில் பெரும்பாலான கேள்விகள் புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் இருந்ததால், அவற்றுக்கு தவறான விடை எழுதி, மதிப்பெண் குறைந்து விடக்கூடாது என, மாணவர்கள் பதில் எழுதாமல் விட்டுள்ளனர்.

இந்நிலையில், நீட் வினாத்தாள் குறித்து, பல்வேறு பயிற்சி மையங்கள், ஆய்வு நடத்தியுள்ளன. அதன்படி, வினாத்தாளில், பிளஸ் 2வுக்கு நிகராக, பிளஸ் 1 கேள்விகள் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, 'டாப்பர் டாட் காம்' இணைய பயிற்சி நிறுவனத்தின், துணை தலைவர் ராஜசேகர் ராட்ரே வெளியிட்ட ஆய்வில், 'இந்தாண்டு, நீட் தேர்வு வினாத்தாள் கொஞ்சம் எளிதாக இருந்தது. 'மற்ற பாடங்களை விட, இயற்பியல் பாடம் மிக கடினமாக இருந்தது' என, குறிப்பிட்டுள்ளார்.

பிளஸ் 2 பாடத்திட்டத்தில், இயற்பியலில், 24 கேள்விகள்; வேதியியலில், 20; உயிரியலில், 46 கேள்விகள் என, மொத்தம், 90 கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றுள்ளன. இதற்கு நிகராக, பிளஸ் 1 பாடத்திட்டத்திலும், இயற்பியலில், 21; வேதியியலில், 25 மற்றும் உயிரியலில், 44 கேள்விகள் என, 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

இயற்பியலில், 34; வேதியியலில், 24 மற்றும் உயிரியலில், 48 கேள்விகள் எளிதாக இருந்துள்ளன. மூன்று பாடங்களிலும் சேர்த்து, 12 கேள்விகள், மிக கடினமாகவும்; 62 கேள்விகள் சமாளிக்கும் வகையிலும் இருந்ததாக, பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில், பிளஸ் 2 பாடத்துக்கு நிகராக, பிளஸ் 1 பாட அம்சங்கள் இடம் பெற்றதால், பிளஸ் 1 பாடத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

- நமது நிருபர் -
எம்.ஜி.ஆர்., பல்கலையில் டாக்டர்களுக்கு புதிய படிப்பு

Added : மே 08, 2018 23:38

சென்னை,: டாக்டர்களின் நிர்வாக திறனை மேம்படுத்தும், புதிய படிப்பை துவக்க, ஆஸ்திரேலியா நாட்டின் சுகாதார துறையுடன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதார துறை ஒத்துழைப்புடன், 'பெலோஷிப்' என்ற, புதிய படிப்பு துவக்கப்பட உள்ளது. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம், பல்கலையில், நேற்று கையெழுத்தானது.பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னிலையில், பதிவாளர் பாலசுப்ரமணியன், ஆஸ்திரேலியா சுகாதார சேவை மைய தலைவர் நீல்பாங் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த படிப்பு, சுகாதார துறையிலும், மருத்துவமனைகளிலும், நிர்வாக பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், தங்கள் மேலாண்மை திறனையும், தலைமை பண்பையும் மேம்படுத்தி கொள்ள வழிவகை செய்யும் என, பல்கலை தெரிவித்துள்ளது.


241 டாக்டர்களுக்கு விருது

Added : மே 08, 2018 23:37

சென்னை: குடும்ப நலத்துறையில், சிறப்பாக பணியாற்றிய, 241 டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், விருதுகள் வழங்கி கவுரவித்தார்.தமிழக குடும்ப நல பிரிவில், மூன்று ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய, டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு, விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில், நேற்று நடந்தது. இதில், 241 டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் விருதுகள் வழங்கினார்.

பின், அமைச்சர் பேசியதாவது: தமிழகம் முழுவதும், 13 ஆயிரத்து, 882 மருத்துவ மையங்களில், குடும்ப நல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில், ஏழு ஆண்டுகளில், 21.60 லட்சம் பேருக்கு, குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 26.17 லட்சம் பெண்கள், கருத்தடை வளையங்கள் பொருத்தி உள்ளனர். இதன் காரணமாக, மூன்று கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.மூன்று மாதத்துக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும், 'மெட்ரோக்சி புரொஜெஸ்ட்ரோன் அசிடேட்' என்ற கருத்தடை ஊசியால், 3,078 பேர் பயனடைந்துள்ளனர்.'சாயா' என்ற கருத்தடை மாத்திரையால், 4,446 பேர் பயனடைந்துள்ளனர். குடும்ப நல துறையில் சிறப்பாக செயல்படும் டாக்டர்களுக்கு, தொடர்ந்து விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கமல் பித்தலாட்டக்காரர் : வைகோ சான்றிதழ்

Added : மே 08, 2018 23:41 | 

தஞ்சாவூர்: ''நடிகர் கமலின் பித்தலாட்டம் தற்போது வெளிப்பட்டு வருகிறது,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தஞ்சாவூர், திருநாகேஸ்வரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், வைகோ பேசியதாவது:மகனுடன், 'நீட்' தேர்வுக்கு சென்ற கிருஷ்ணசாமி, எர்ணாகுளத்தில் மாரடைப்பில் இறந்தார். இந்த தகவல், காலை, 10:20 மணிக்கு எனக்கு வந்தது; 10:30 மணிக்கே, கேரளா கவர்னர் சதாசிவத்திடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டேன். அவர் உத்தரவை அடுத்து, எர்ணாகுளம் கலெக்டர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதை நான், காலை, 10:45 மணிக்கு பேட்டியாக தெரிவித்தேன்.ஆனால், நடிகர் கமல் மதியம், 2:21 மணிக்கு ஒரு, 'டுவிட்' போடுகிறார். அதில், 'கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஐ.ஜி.,யிடம் பேசினேன். இறந்த கிருஷ்ணசாமியின் உடலை அனுப்ப, கேட்டுக் கொண்டேன். அந்த குடும்பத்திற்கான செலவை ஏற்றுக் கொள்வேன்' என கூறியுள்ளார்.அவர் பேசியிருக்கலாம்; ஆனால் காலை, 10:30 மணிக்கு கவர்னரிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அதை மறைத்து, தானே அனைத்து ஏற்பாடுகளை செய்வதற்கு காரணம் என்பது போல், பித்தலாட்டத்தில் கமல் இறங்கிஉள்ளார்.அரசியலில், இவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி. ரஜினியை தனிப்பட்ட முறையில், நல்ல மனிதர் என மதிக்கிறேன். ஆனால், கமலின் பித்தலாட்டம் தற்போது வெளிப்பட்டு வருகிறது.இவ்வாறு வைகோ பேசினார்.


மாவட்ட செய்திகள் 

ராஜபாளையத்தில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு





ராஜபாளையத்தில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீீசார் தேடி வருகின்றனர்.

மே 08, 2018, 03:00 AM
ராஜபாளையம்,

ராஜபாளையம் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பி.எஸ்.கே.நகரைச் சேர்ந்த வர் கணேசன (வயது55)். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் வசித்து வரும் மகனின் புதிய வீட்டின் திறப்பு விழாவிற்காக மனைவி, மகளுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை ஊர் திரும்பிய கணேசன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 18 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

தகவல் அறிந்து சென்ற தெற்கு போலீீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங் களைச் சேகரித்து வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் அலெக்ஸ் வரவழைக்கப்பட்டது. அது திருடு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்கேயே நின்று விட்டது.














தாம்பரம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது டிரைவர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்



தாம்பரம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்.

மே 08, 2018, 04:00 AM

படப்பை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் குகன். இவர் தனக்கு சொந்தமான காரை சென்னையில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த காரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 27) என்பவர் ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் தாம்பரத்தை அடுத்த கிஷ்கிந்தா சுற்றுலா பூங்காவில் இருந்து ஒரு குழந்தை உள்பட 3 பேரை காரில் ஏற்றிக்கொண்டு வண்டலூர் பூங்கா நோக்கி செந்தில்குமார் சென்றுகொண்டு இருந்தார்.

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் அருகே உள்ள எருமையூர் அருகே வந்தபோது, நடுரோட்டில் திடீரென காரில் இருந்த ‘ஹாரன்’ தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த டிரைவர், உடனே காரை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கியபோது காரில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

கார் தீப்பிடித்து எரிந்தது

பதற்றம் அடைந்த டிரைவர், காரில் இருந்தவர்களை உடனடியாக கீழே இறக்கி விட்டார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காரில் புகை வந்ததும் உடனே கீழே இறங்கியதால் டிரைவர் உள்பட 4 பேரும் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தலையங்கம்
பேச்சுவார்த்தைதான் தீர்வு   09.05.2018




தமிழ்நாட்டின் மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின்படி, 7 கோடியே 21 லட்சமாகும். இதில் அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர் மற்றும் அரசில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் 7.42 லட்சம் பேர்.

மே 09 2018, 03:00 அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான சமவேலைக்கு சமஊதியம் என்பதை அமல்படுத்தவேண்டும்.

ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும்.

பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அமல்படுத்துதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதியம், கணினி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படவேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் ரொக்கமாக வழங்கிடவேண்டும் என்பதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

இப்போது இறுதியாக நேற்று தலைமை செயலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். இதையொட்டி, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தலைவர்களை கைது செய்திருந்தது.

இந்தநிலையில், அரசின் சார்பில் தங்கள் நிதிநிலையை விளக்கி அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளார்.

2017–2018–ம் ஆண்டில் அரசின் மொத்த வரிவருவாய் ரூ.93,795 கோடியாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பளச்செலவு மட்டும் ரூ.45,006 கோடியாகும். இதுதவிர ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஓய்வூதிய தொகை ரூ.20,397 கோடி. ஆகமொத்தம் ரூ.65,403 கோடி நிர்வாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்காக சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த வரிவருவாயில் சுமார் 70 சதவீதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சிபணிகளுக்காக பெற்றுள்ள கடனுக்கான வட்டிசெலவு 24 சதவீதம். மீதமுள்ள 6 சதவீதம் மாநில வரிவருவாயுடன், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வரிபகிர்வு உள்பட ரூ.41,600 கோடியைக்கொண்டு தான் தமிழ்நாடு அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று அதில் தெள்ளத்தெளிவாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டு சேப்பாக்கம் வந்தநேரத்திலும், வரும் வழியிலும் ஏராளமான ஆண்–பெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் கண்காணிப்பு, தடையையும் மீறி பலர் ஆங்காங்கு குவிந்தனர். இதுபோன்ற நிலையை அரசும் சரி, ஊழியர்களும் சரி தவிர்த்து இருக்கலாம்.

அரசு எந்திரம் என்ற சக்கரத்துக்கு அச்சாணி போன்றவர்கள் அரசு ஊழியர்கள். இந்த சக்கரம் இலகுவாக சத்தமில்லாமல் சுழல துணைபுரியும் உராய்வை தடுக்கும் மசகு எண்ணெய் போன்றது இருவருக்கும் இடையே உள்ள நல்லுறவு. எனவே, இத்தகைய போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் போன்ற நல்லுறவை கெடுக்கும் முயற்சிகளை இருசாராரும் தவிர்த்து, பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

NEWS TODAY 30.12.2025