Sunday, August 5, 2018


ரேஷன் கார்டுகளில் பிழைஅலைக்கழிக்கப்படும் மக்கள்

Added : ஆக 04, 2018 23:49

பிழை திருத்தங்களுடன் உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளுக்கு மாற்றாக, புதிய கார்டுகள் வழங்க கோரி, உணவு வழங்கல் துறை அலுவலகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின், 'ஆதார்' விபரங்களுடன், தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 1.96 கோடி குடும்பங்களுக்கு, அந்த கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பல கார்டுகளில், உறுப்பினர் பெயரில் தவறு, தவறான முகவரி, குடும்ப தலைவர் பெயரில் தவறு என, ஏராளமான பிழைகள் உள்ளன.

அவற்றை சரி செய்து, அரசு, 'இ - சேவை' மையங்களில், மாற்று கார்டுகள் பெற்று கொள்ளும் வசதி இருந்தது.இ - சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு நிர்ணயித்த, 30 ரூபாய் கட்டணத்துடன், கூடுதல் பணம் வசூலித்தனர்.

எனவே, அங்கு மாற்று கார்டுகள் வழங்குவதை, அரசு சமீபத்தில் நிறுத்தியது. இதனால், உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், மாற்று கார்டு கேட்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்மார்ட் கார்டில் உள்ள பிழைகளை, பொது வினியோக திட்ட இணையதளத்தில் சரி செய்தால், புதிதாக மாறி விடும்; ஏற்கனவே உள்ள கார்டை பயன்படுத்தி, பொருட்கள் வாங்குவதில் பிரச்னை இல்லை என்றும், மக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்காத பலர், இ - சேவை மையங்களில், 30 ரூபாய் வாங்கி கொண்டு, மாற்று கார்டை வழங்கியது போல, உணவு வழங்கல் அலுவலகங்களிலும் வழங்கும்படி கேட்கின்றனர். ஒரு அலுவலகத்திற்கு, ஒரு நாளைக்கு, 50 மனுதாரர்கள் வருகின்றனர் என்றால், 45 பேர், மாற்று கார்டுக்காக வருகின்றனர்; பிரச்னைகளும் செய்கின்றனர். எனவே, மாற்று கார்டு வழங்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்




தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2018 05:15 AM
சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை (ரேஷன் கடை) அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடை ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டங் களை நடத்தி வருகிறோம்.

கடந்த பிப்ரவரி 24-ந் தேதி கூடிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தின் தீர்மானத்தின் படி, மார்ச் 9-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வது என்றும், அதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த தயாரிப்பு மண்டல மாநாடுகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை 10 மண்டல மாநாடுகள் நடைபெற்றது. விருகம்பாக்கம் மாநாட்டில், ஆகஸ்டு 6-ந் தேதி(நாளை) திங்கட்கிழமை வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ரேஷன் கடை ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ள சம வேலைக்கு சம ஊதியம், ஒரே துறை, எடை குறைவு இல்லாமல் பொருட்கள் வழங்குதல், சேதாரக் கழிவு அனுமதித்தல், பணி வரன்முறை, மானியத் தொகை விடுவித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைவரும் 6-ந் தேதி(நாளை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனவே அன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது.
மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள்: கோவை-சேலம் பயணிகள் ரெயில் 13 நாட்கள் ரத்து



 

 தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் 13 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 05, 2018 04:15 AM

சூரமங்கலம்,

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோவையில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயில்(வண்டி எண் 66602) மற்றும் சேலத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரெயில்(வண்டி எண் 66603) 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 13 நாட்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நாளை மறுநாள் மற்றும் 8-ந் தேதிகளில் ஆழப்புலா-தன்பாத்(வண்டி எண் 13352) எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை, திருப்பூர் ரெயில் நிலையங்களிடையே 1¼ மணி நேரம் நின்று தாமதமாக செல்லும். எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு செல்லும்(வண்டி எண் 12678) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், கோவை-திருப்பூர் ரெயில் நிலையம் இடையே 40 நிமிடம் நின்று செல்லும்.

11-ந் தேதி கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 12676) கோவை- திருப்பூர் ரெயில் நிலையங்களிடையே 1 மணி நேரம் நின்று செல்லும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 12244) கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களிடையே 40 நிமிடம் நின்று தாமதமாக செல்லும்.

12-ந் தேதி பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 22644) ஜோலார்பேட்டை-ஈரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே 1¼ மணி நேரம் நின்று தாமதமாக செல்லும். இந்த பணிகள் காரணமாக 22-ந் தேதி வரை முக்கிய ரெயில்கள் குறிப்பிட்ட இடங்களில் நின்று செல்லும்.இந்த தகவலை சேலம் கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.806 ஆக உயர்வு





கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்னையில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.806 ஆக உயர்ந்து உள்ளது. வங்கிக்கணக்கில் மானியமாக ரூ.336 செலுத்தப்படும்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2018 05:00 AM

சென்னை,

சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.806 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கடந்த சில மாதங்களை விட அதிகமாகும். 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் கடந்த ஜூலை மாதம் ரூ.770.50-க்கும், ஜூன் மாதம் ரூ.712.50-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த மாதம் (ஆகஸ்டு) கியாஸ் சிலிண்டர் விலை, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ரூ.35.50 உயர்ந்துள்ளது.

தற்போது சிலிண்டர் விலை ரூ.806 ஆக உள்ளது. இதில் ரூ.470 சிலிண்டர் விலையாகும். ரூ.336 மானியமாகும். இந்த தொகை சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட ஒரு சில நாட்களில் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.

கொல்கத்தாவில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.817 ஆகவும், மும்பையில் ரூ.764 ஆகவும், டெல்லியில் ரூ.789 ஆகவும் உள்ளது.

8 மாதங்களில் இல்லாத அளவுக்கு...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மாதம்) கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.750.50 ஆக இருந்தது. கடந்த 8 மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.800-யை தொட்டதில்லை. தற்போது சிலிண்டர் விலை ரூ.800-யை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2017-ம் ஆண்டு நவம்பரில் ரூ.665.50 ஆகவும், டிசம்பர் இறுதியில் ரூ.750 ஆகவும் இருந்தது.

அதேநேரத்தில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர்கள் விலை கடந்த மாதம் போலவே அதே விலையில் (ரூ.1,424) நீடிக்கிறது.

கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள்

சென்னையில் வீடுகளில் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் ஏஜென்சி ஊழியர்கள் சிலிண்டர் விலையுடன் சேர்ந்து ரூ.30 முதல் ரூ.40 வரை கூடுதலாக பெறுகின்றனர். இது குறித்து பொது மக்கள் பல முறை ஏஜென்சிகளுக்கு புகார் தெரிவித்தாலும் ஏனோ அவர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

Saturday, August 4, 2018


`தப்பைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்' - மறுகூட்டல் விவகாரத்தில் உமா அதிரடி 


எஸ்.மகேஷ்



``சென்னை அண்ணா பல்கலைக்கழக மறுகூட்டல் விவகாரத்தில் தப்பைக் கண்டுப்பிடித்ததே தேர்வு கட்டுப்பாட்டு பிரிவுதான்'' என்று உமா தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, மறுகூட்டல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மறுகூட்டல் விவகாரம் தொடர்பாக அவரிடம் பேசினோம்.

`` சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக நான், பணியாற்றியபோது, பல மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் கொண்டுவந்தேன். அதற்குதான் இப்போது பழிவாங்கப்படுவதாக கருதுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால் மறுகூட்டலில் நடந்த முறைகேட்டைக் கண்டுபிடித்ததே தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவுதான். ஆனால், உண்மைகள் மறைக்கப்பட்டு நானும் என் டீமும் பழிவாங்கப்பட்டுள்ளோம். என் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து துணைவேந்தரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன். அதற்குள் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இதிலிருந்து நிச்சயம் விடுபடுவேன்.

நான் லஞ்சம் வாங்கியதாகக் கூறும் குற்றச்சாட்டில் உண்மையல்ல. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த முறைகேட்டில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. முறைகேடுகள் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். கடந்த 2017-ம் ஆண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மீது தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு சந்தேகம் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்கள், தேர்வு எழுதியபோது பெற்ற மதிப்பெண்களுக்கும் மறுகூட்டலில் பெறப்பட்ட மதிப்பெண்களுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. வெளிப்படையாகத்தான் மறுகூட்டல் விவரங்களை வெளியிட்டேன். பத்து ஆண்டுகள் புள்ளி விவரங்களையும் தெரிவித்துள்ளேன். இதனால் மறைப்பதற்கு எதுவும் இல்லை. மூத்த அதிகாரிகள் ஒப்புதலுடன்தான் தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் நான் பணியாற்றினேன்.

பொதுவாக, விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களைப் பொறுத்து மதிப்பெண்கள் வேறுபடும். ஒரு தேர்வுத் தாளை இரண்டு ஆசிரியர்கள் திருத்தும்போது மதிப்பெண்கள் மாறுபடுவதுண்டு. 64 லட்சம் விடைத்தாள்களில் 6,000 விடைத்தாள்களில் மட்டுமே மதிப்பெண்கள் மாறுபட்டுள்ளன. 73,000 மாணவர்கள் மறுகூட்டலுக்குப்பின் தேர்ச்சி பெற்றதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக 1,040 தேர்வாளர்கள் மீது கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் இனி வரும் காலங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது, நடந்து பல மாதங்கள் கடந்தபிறகு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.
காவிரித்தாய்க்குக் காதோலை கருகமணி, சப்பரம் படைத்து வழிபடும் மக்கள்!


கே.குணசீலன்

க.சதீஷ்குமார்

என்.ஜி.மணிகண்டன்

ம.அரவிந்த்




திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டபப் படித்துறை. இரு கரைகளையும் நனைத்தபடி தவழ்ந்தோடிக் கொண்டிருக்கிறாள் காவிரித்தாய். படித்துறையில் தலைவாழை இலை போட்டு காதோலை கருகமணி, சப்பரம், மஞ்சள் கயிறு, பூ, பழங்கள் வைத்து படையலிட்டு காவிரித் தாயை வணங்கி மகிழ்கிறார்கள் மக்கள்.



ஆடிப்பெருக்கு விழா தஞ்சையின் பண்பாட்டு விழாக்களில் ஒன்று. அன்றைய தினம், தங்கள் வாழ்க்கையை வளமாக்கும் காவிரியைத் தாயாக உருவகப்படுத்தி படையலிட்டு வணங்குவார்கள் காவிரிப்படுகை மக்கள். புதுமணத் தம்பதிகள் காவிரியில் நீராடி இத்திருநாளைக் கொண்டாடுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக, ஆடிப்பெருக்கு தினம் தஞ்சைப்படுகை நிலப்பரப்பில் களைகட்டவில்லை. காரணம், காவிரியில் தண்ணீர் இல்லை. இந்தாண்டு, இயற்கையின் கருணையால் காவிரித்தாய் பூரிப்போடு நிறைந்தோடி வருகிறாள். புத்துணர்வோடு மக்கள் கூடி ஆடிப்பெருக்கைக் கொண்டாடினார்கள்.




மேட்டூரில் தொடங்கி பூம்புகார் வரையிலான காவிரிக் கரையில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே புதுமணத் தம்பதிகளும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக காவிரிக்கரையில் கூடினார்கள். படித்துறையில் தலைவாழை இலை போட்டு அரிசி, வெல்லம், எள், பொட்டுக்கடலை சேர்த்து கிளறி செய்யப்பட்ட காப்பரிசி, கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தாலி, காதோலை, கருகமணி, மரப்பலகையால் செய்யப்பட்ட சப்பரம் மற்றும் பழங்களைப் படைத்து காவிரித் தாய்க்குச் சமர்ப்பித்தனர்.

சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றைக் கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். பெண் குழந்தைகளுக்குக் கழுத்திலும் ஆண்களுக்குக் கையிலும் மஞ்சள் கயிற்றைக் கட்டி மகிழ்ந்தார்கள். புதுமணத் தம்பதிகள், புதிய மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, தாலியைக் கழட்டிவைத்து வணங்கியதோடு புதியத் தாலிச்சரடை மாற்றித் தங்கள் கணவர் கையாலேயே மீண்டும் கழுத்தில் கட்டிக்கொண்டார்கள். புதுமணத் தம்பதிகளின் கேலி கிண்டல், விளையாட்டுகளால் காவிரிக் கரை நெடுக கொண்டாட்டம் களைகட்டியிருந்தது.



இந்தக் கொண்டாட்டத்தில் பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளும் பங்கேற்று சப்பரம் இழுத்து மகிழ்ந்தனர். தேர் போல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் படம் ஒட்டப்பட்டிருக்கும். இந்தச் சப்பரத்தைக் கயிறு கட்டி இழுத்தபடி ஊரையே சுற்றி வலம் வந்து குழந்தைகள் மகிழ்ந்தனர்.

கரைபுரண்டு ஓடிவரும் காவிரித்தாயால் விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமன்றி சப்பரம், காதோலை, கருகமணி போன்ற ஆடிப்பெருக்குக்கான பொருள்கள் செய்பவர்களின் வாழ்க்கையும் மாறியிருக்கிறது.

கும்பகோணம் மடத்துத்தெரு படித்துறையில் காதோலை, கருகமணி விற்பனை செய்த ராஜேந்திரனிடம் பேசினோம். ``காதோலை, கருகமணி செய்வது ஒரு கைவினைத் தொழில். பனை ஓலையை வெட்டி, வெயிலில் நன்கு காயவைத்து, வண்ணம் கலந்த நீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் கொள்வோம். பனை ஓலைகள் வண்ணமாகிவிடும். பிறகு, சுருளாகச் சுற்றி, அதன்மேல் கறுப்பு நிற வளையலைப் பொறுத்தினால் கருகமணி ரெடி. இதோடு ஒரு குங்கும பாக்கெட்டையும் சேர்த்து விற்பனை செய்வோம். இதுதான் எங்க குடும்பத் தொழில்..." என்றார் அவர்.



``காதோலை,கருகமணியைக் காவிரித்தாய்க்கு ஏன் படைக்கிறோம்?"

``சிலப்பதிகாரத்தில் பனை ஓலையால் செய்யப்பட்ட தோடுகளைத்தான் பெண்கள் அணிகலனாக அணிந்திருந்தார்கள். இறைவனை நகைகளால் அலங்கரிப்பது நம் தொன்ம மரபு. அதன் தொடர்ச்சிதான் பனை ஓலையில் செய்யப்பட்ட காதோலையை காவிரிக்குப் படைப்பது. காவிரித்தாய் தளும்பிவரும் நாளான ஆடிப்பெருக்கு அன்று, மக்கள் திரண்டு காதோலை, கருகமணியைக் காவிரித்தாய்க்குப் படைத்து மரியாதை செய்து, அதை அந்தத் தண்ணீரிலேயே விட்டு நன்றி கூறுவார்கள்" என்கிறார் ரமேஷ் சிவம் குருக்கள்.

திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை அருகே சப்பரம் செய்து விற்பனை செய்துகொண்டிருந்த மணிகண்டனிடம் பேசினோம்.

``ஆடிப்பெருக்குப் பெரியவர்களுக்கான விழா மட்டுமல்ல... குழந்தைகளும் கொண்டாடி மகிழும் விழா. கரை புரண்டோடும் காவிரித்தாயைப் பெரியவர்கள் வணங்குவதை குழந்தைகள் காணவேண்டும். தண்ணீரை தெய்வமாக மதித்துப் போற்றுவதன் அவசியத்தைக் குழந்தைகள் உணர வேண்டும். அதற்காகத்தான் குழந்தைகளையும் அழைத்து வந்து கொண்டாடுகிறார்கள் மக்கள். திருவிழாக் காலங்களில் தெய்வங்களை அலங்காரம் செய்து தேரில் வைத்து நகர்வலம் வருவது வழக்கம். இதனால் அந்தத் தெய்வத்தின் மனம் மட்டுமன்றி மக்களின் மனமும் குளிரும்.

அதை உணர்த்தும் வகையில்தான் இந்தச் சப்பரம் இழுக்கும் மரபு தொடங்கியது. பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சப்பரம் வாங்கித்தந்து, இழுத்து விளையாடவிட்டு, படித்துறையில் வைத்து அவற்றுக்கு பூஜைகளும் செய்வார்கள்..." என்கிறார் அவர்.

இயற்கையின் பெருங்கருணையால் காவிரி கரைபுரண்டு ஓடி வருவதால் மக்கள் இந்த ஆடிப்பெருக்கை கோலாகலமாகக் கொண்டாடிக் களித்து வருகிறார்கள்..!

`விலையை விசாரித்தால் வாங்கியே தீரணும்!'- பயணிகளைத் தெறிக்கவிடும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள்


அருண் சின்னதுரை


'பழங்களின் விலையை விசாரித்தால், கண்டிப்பாக வாங்க வேண்டும்' என பயணிகளை மிரட்டும் மாட்டுத்தாவணி பழ வியாபாரி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி , சென்னை , தஞ்சாவூர் உள்ளிட்ட வெளியூர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு, மல்லிகைப் பூ, பாப்கான், ஜிகர்தண்டா, புத்தகங்கள் என்று பல்வேறு பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்துவருகின்றனர். பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கூடையில் நேரடியாக கொண்டுசென்று சிலர் பழங்களை விற்பனை செய்கின்றனர். அதில் ஒரு நபர், கைநிறைய பழங்களை அடிக்கிவைத்துக்கொண்டு பயணிகளிடம் பழத்தைக் காட்டுகிறார். பயணிகள் விலையை விசாரித்துவிட்டு பழத்தை வாங்கவில்லை என்றால், அவர்களை மரியாதை இல்லாமல் தரக் குறைவாகவும் , கோபமாகவும் திட்டித்தீர்க்கிறார். இதனால், பயணிகள் அவரின் மிரட்டலுக்குப் பயந்து பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கூறுகையில், " நான் திருச்சி செல்வதற்காக 'பாயின்ட் டூ பாயின்ட்' வண்டியில் அமர்ந்திருந்தேன் . பெயர் தெரியாத பழ வியாபாரி ஒருவர், கையில் ஆறு மாதுளைகளுடன் வந்து பழம் இருபது இருபது என்று அந்த பழங்களைக் காண்பித்தார். நான் இருபது ரூபாயைக் கொடுத்து பழங்களைக் கேட்டேன். அதை பிளாஸ்டிக் கவரில் போட்ட அவர், 250 எடு என்றார் . ஏன் என்று கேட்டதற்கு, இவ்வளவு பழத்தை 20 ரூபாய்க்கா கொடுப்பாங்க ஒரு எலுமிச்சம் பழம் விலை என்னானு உனக்குத் தெரியுமா? திருச்சில இருந்து வந்துட்டு 20 ரூபாயை கொண்டுகிட்டு' என்று என்னை பஸ் பயணிகள் நிறையப் பேர் இருக்கும்போது மரியாதை இல்லாம பேசிட்டார். நான் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவன் . முதியவர் என்றுகூட பார்க்காமல், தரக் குறைவாகப் பேசியதால் தாங்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் அதிக விலைகொடுத்து அந்தப் பழங்களை வாங்கிச் சென்றேன்” என்று வேதனை தெரிவித்தார்.

'இது தற்போது நடைபெறுவதில்லை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பல நாள்களாக அரங்கேறிவருகிறது . இதில், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று அடவாடிச் செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர் .

NEWS TODAY 27.06.2026