Sunday, August 5, 2018

பெற்றோர் நலன்: தமிழக அரசு - பின்பற்றுமா..? பின்தங்குமா...?

Published : 05 Aug 2018 07:34 IST

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
 





அவ்வப்போது, ஆங்காங்கே நாம் கண்கூடாக பார்த்து வரும் ஒரு சமூகப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயன்றுள்ளது அசாம் மாநிலம். இதற்காக ஒரு சட்டம் இயற்றி இருக்கிறது.

முதியவர்கள் முன் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே, ‘சம்பாத்தியம்' இல்லை. தான் சம்பாதித்ததை எல்லாம், பிள்ளைகளின் படிப்பு, ஆரோக்கியம், நல்வாழ்வுக்காகச் செலவு செய்து விட்டு, முதிய வயதில், வருமானத்துக்கு வழியின்றி, தமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பிள்ளைகளை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெற்றோர்கள் ஏராளம்.

பிள்ளைகளும் ஆதரிக்காதபோது, தள்ளாத வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கும் மருத்துவ செலவுக்கும் என்னதான் செய்வார்கள்? யாரிடம் போய்க் கேட்பது? இந்தச் சிக்கலுக்கு விடை காணும் முயற்சிதான் அசாம் அரசின் ‘பிரணாம்' சட்டம். இரு கரம் கூப்பி, சற்றே குனிந்து, பெரியவர்களுக்கு ‘வணக்கம்' சொல்கிறோம் அல்லவா...? இதுதான் வட மொழியில், ‘பிரணாம்' எனப்படுகிறது. வரும் அக்டோபர் 2-ம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாள் முதல், இச்சட்டம் அமலுக்கு வருகிறது.

மாநில அரசு ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்தும் இந்தச் சட்டம் நாளடைவில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஓய்வூதியம் அல்லது வருமானம் இல்லாத பெற்றோர், தம் பிள்ளை பணிபுரியும் துறையின் உள்ளூர் தலைமை அதிகாரி முன்பு கோரிக்கை வைக்க இந்தச் சட்டம் வழி வகுக்கிறது.

அவர், இரு பக்க நியாயங்களையும் கேட்டறிந்து, இறுதி முடிவு எடுப்பார். பெற்றோரின் கோரிக்கை நியாயமானதாக இருப்பின், பிள்ளைகளின் மாத சம்பளத்தில், 10 முதல் 15 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நாட்டிலேயே முதன் முறையாக அசாம் மாநிலத்தில்தான் இது அறிமுகம் ஆகிறது. இந்த நோக்கத்துக்காக, ‘பிரணாம் ஆணையம்' அமைக்கப்படும். கூடுதல் முதன்மைச் செயலாளர்நிலையில் உள்ள ஒருவர், முதன்மை ஆணையராக நியமிக்கப்படுவார். இவருடன் சமூக சேவகர்கள் (அ) ஆணையர் நிலையில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் இரண்டு பேரும், ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த ஆணையம், ஒரு ‘குவாஸி’ நீதிமன்றம் போன்றது. அதாவது, நீதிமன்ற அதிகாரங்களுடன், முழுவதும் தன்னிச்சையாக செயல்படும் நிர்வாக அமைப்பு.

பிள்ளைகள் பணிபுரியும் அலுவலகத்தில், சம்பளம் வழங்கும் அலுவலரிடம் மனு கொடுத்தால் போதுமானது. ஒரு மாதத்துக்குள் அவர் முடிவு எடுக்க வேண்டும். தவறினால், அல்லது சரியான நிவாரணம் கிடைக்கவில்லை என்று கருதினால், அந்தத் துறையின் இயக்குநரிடம் முறையிடலாம். இதன் மீது அவர், 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

இங்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், ‘பிரணாம்' ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யலாம். மூன்று மாதங்களுக்குள் ஆணையம், இறுதி முடிவை எடுத்தாக வேண்டும். இந்தச் சட்டத்தின் மூலம், சுமார் 4 லட்சம் பேர் (பெற்றோர்) உடனடியாக பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் (சட்டம்) காரணமாக, அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை எதுவும் இல்லை. சமூக நலத் திட்டங்களை வடிவமைப்போர் இதுபோலதான் சிந்திக்க வேண்டும். தனி நபர்கள் ஆற்ற வேண்டிய கடமைக்கு அவர்களையே பொறுப்பாக்குவதுதான் ஆரோக்கியமான வழிமுறை. இதை தமிழக அரசும் ஏன் இதனைப் பின்பற்றக் கூடாது? என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. மிக அதிக எண்ணிக்கையில் அரசு ஊழியர்களைக் கொண்ட மாநிலம் தமிழகம். அதேபோல, பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோரின் எண்ணிக்கையும் மிகுந்துள்ள மாநிலம்.

எந்தவொரு சமூக நலத் திட்டமாக இருந்தாலும், அதை முன்னெடுப்பதில், முனைப்புடன் செயல்படுத்துவதில், தமிழ்நாடு எப்போதுமே முதலிடம் வகித்து வருகிறது. ஆகவே, தமிழக அரசும் உடனடியாக, ‘பிரணாம்' சட்டத்தின் தமிழ் வடிவத்தைக் கொண்டு வந்து, முதியோர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றலாம்.

கல்வித் துறையில் பல நல்ல முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. முதியோர் நலன் சார்ந்த சட்டத்துக்கும் முன்னுரிமை தந்து நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும். ஆதரவற்ற முதியோருக்கு உதவும் இலவசத் திட்டம் ஏற்கெனவே இருக்கிறது. ஆனால் போதாது. காரணம், பல முதியவர்களின் தன்மானம், இலவச திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுக்கிறது.

‘பிரணாம்' சட்டம், இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தாம் வளர்த்த, தாம் மிகவும் நேசிக்கிற, பிள்ளைகளிடம் இருந்தே, வருமானம் பெற்றுத் தருகிறது; அவர்களின் கடமையை, ஒரு வகையில், சட்ட உரிமை ஆக்குகிறது. இதுதான் இந்தச் சட்டத்தின் ஆகப் பெரிய வெற்றி. தொழில் துறையில் நன்கு முன்னேறிய, தனியார் துறையில் கணிசமானோர் பணிபுரியும் மாநிலமாக நாம் உள்ளதால், அசாம் மாநிலம் போல் அல்லாது, தொடக்க நிலையிலேயே, பொதுத்துறை, தனியார் ஊழியர்களையும் உள்ளடக்கியதாக தமிழகச் சட்டம் அமையலாம்.
அண்ணா பல்கலை விடைத்தாள் மோசடி: முறைகேட்டில் மிக மோசமான விஷயம் இதுதான்!

By DIN | Published on : 04th August 2018 05:49 PM |




சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேட்டை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் கடந்த 2017 ஏப்ரல், மே மாதங்களில் பருவத் தேர்வில், 3.02 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 16,636 பேருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருந்தது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார்: இந்நிலையில் மறுமதிப்பீடு தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வரத் தொடங்கின.

அதிக மதிப்பெண் பெற தகுதியிருந்தும், குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதி இல்லாத மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றிருப்பது குறித்தும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் இருந்து இப்புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், மறுமதிப்பீட்டில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்களை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தினர். அதில் அதிக மதிப்பெண்கள் பெற தகுதி இருந்தும் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதில் முறைகேடு நடந்தது ஏனோ தனோவென்று இல்லாமல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரு மாணவன் தேர்வில் 10 மதிப்பெண்கள்தான் எடுத்துள்ளான். அதனை 99 மதிப்பெண்களாக எப்படி மாற்ற முடியும். ஒரே சுற்றில் மாற்ற முடியாதல்லவா?

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு விதிகளில், மறு மதிப்பீட்டில் ஒரு விடைத்தாளுக்கு 15 மதிப்பெண்களுக்கு மேல் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டால் இரண்டாவது முறையாக மறுமதிப்பீடு செய்ய வேண்டும். இரண்டாவது முறையிலும் 15 மதிப்பெண்களுக்குக் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டால், அது இரண்டிலும் எது அதிக மதிப்பெண்ணோ அதையே வழங்க வேண்டும் என்று உள்ளது.

அதன்படி, ஒரு 10 மதிப்பெண் எடுத்த மாணவனின் விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்குச் செல்லும் போது அதனை முதல் முறை மறுமதிப்பீடு செய்பவர் 50 மதிப்பெண் வழங்குவார். விதிப்படி இந்த விடைத்தாள் 2வது முறை மறு மதிப்பீட்டுக்குச் செல்ல வேண்டும். அதன்படி 2வது முறை மறுமதிப்பீடு செய்பவர் 99 மதிப்பெண்களை வழங்குவார். விதிப்படி அந்த விடைத்தாளுக்கு 99 மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த முறையில் மதிப்பெண் வழங்கப்படுவதால் யாராலும் அவ்வளவு எளிதில் முறைகேட்டைக் கண்டுபிடிக்க முடியாது என்று பல்கலையின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், அந்த விடைத்தாளை முதல் முறை திருத்தியவர் (10 மதிப்பெண் அளித்தவர்), விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார். எந்த குற்றமும் செய்யாத ஒருநபர், இந்த முறைகேட்டால் குற்றவாளியாக்கப்படுவார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களில் முதல்கட்டமாக 100 பேரின் விடைத்தாள்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில் தகுதியற்ற விடைகளுக்கும் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் உறுதி செய்தனர்.

10 பேர் மீது வழக்கு: அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், முறைகேடு நடைபெறும்போது அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா, மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த பேராசிரியர் பி.விஜயகுமார், உதவிப் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் உள்பட 10 பேர் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் ஒரு விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சமாக பெற்றுக் கொண்டு, கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது தெரியவந்தது.

வீடுகள், அலுவலகங்களில் சோதனை: அதைத் தொடர்ந்து வழக்குத் தொடர்பான சோதனையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள உமாவின் அறை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீடு, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் உமா, வீட்டில் இருந்து சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்தனர்.

லஞ்சம் கொடுத்த மாணவர்களிடம் விசாரணை: விடைத்தாள் மோசடி தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை தயார் செய்யும் வகையில் மறுமதிப்பீட்டின்போது லஞ்சம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற்றதாக முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட 100 மாணவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களில் 50 பேரிடம் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை மேலும் சில நாள்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து மறுமதிப்பீடு பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
ஆக. 7 -இல் பலத்த மழைக்கு வாய்ப்பு

By DIN | Published on : 05th August 2018 02:05 AM |

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மாலை மற்றும் இரவில் இடி, மின்னல் ஏற்படக் கூடும்.

மேற்கு திசை காற்று வலுவடையும் என்பதால், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மன்னார்குடியில் 50 மி.மீ. : தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 50 மி.மீ. மழை பதிவானது. காஞ்சிபுரம் மாவட்டம் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 40 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தலா 30 மி.மீ. மழை பதிவானது என்றார் அவர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 25 கி.மீ முதல் 45 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசக் கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 25-35 கி.மீ. முதல் 45-55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடலூரில் 101டிகிரி: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. அதிகபட்சமாக, கடலூரில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், வேலூரில் தலா 99 டிகிரியும், பரங்கிபேட்டை, திருச்சிராப்பள்ளியில் தலா 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
பைலட் அறைக்குள் நுழைய முயன்ற பயணி

Added : ஆக 05, 2018 03:00

புதுடில்லி:இத்தாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில், ஒரு பயணி, பைலட் அறைக்குள் நுழைய முயன்றதால், 'ஏர் - இந்தியா' விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இருந்து, ௨ல், டில்லிக்கு, ௨௫௦ பயணியருடன், 'ஏர் - இந்தியா' விமானம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், குர்பீரீத் சிங் என்ற பயணி, பைலட் அறைக்குள் நுழைய முயன்றார்.இதனால், விமானத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது; கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, விமானம் மீண்டும் மிலன் நகரில் தரை இறக்கப்பட்டது.

மிலன் போலீசாரிடம், குர்பிரீத் சிங் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், அவர் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின், மூன்று மணி நேரம் தாமதமாக, அந்த விமானம், டில்லிக்கு புறப்பட்டது.

கொடுமுடியில் 'பித்ரு தர்ப்பணம்' ஆடி அமாவாசையன்று சிறப்பு ஏற்பாடு

Added : ஆக 05, 2018 01:43

சேலம்:கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில், விசேஷமான, ஆக., 11, ஆடி அமாவாசை தினத்தில், பித்ரு தர்ப்பணம் செய்ய, காலைக்கதிர், 'ஆன்மிகக்கதிர்' வார இதழ் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரியன் செல்லும் திசையை அடிப்படையாக வைத்து, தட்சிணாயனம், உத்திராயனம் என, பிரித்துள்ளனர். இதில், ஆடி மாதத்தில் துவங்கும் தட்சிணாயனம் மிக உன்னத காலமாக கருதப்படுகிறது.

விரதங்கள்

ஆடி வெள்ளி, அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, வியாச பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், கருட பஞ்சமி, ஆண்டாள் அவதார தினம், ஹயக்கிரீவர் ஜெயந்தி, கோவர்த்தன விரதம், குமார சஷ்டி, வாராஹி விரதம் என விரதங்களும், பண்டிகைகளும் நிறைந்த மாதம்.

தேவர்களுடைய இரவு நேரத்தின் தொடக்க மாதம் என, ஆடியை புராணங்கள் சிறப்பிக்கின்றன. இம்மாதத்தில், பித்ரு லோகத்தில் வசிக்கும் நம் முன்னோர், பூலோகத்துக்கு வருவதாக நம்பப்படுகிறது.ஆவலோடு தங்களது சந்ததிகளை காணவரும் பித்ருக்களை, வணங்கி வழிபட்டால், எல்லா தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

குறிப்பாக நதி, குளம், கடல் போன்ற புண்ணிய நீர்நிலைகளில் நீராடி திதி கொடுப்பது நல்லது. அதிலும், ஆடி அமாவாசையில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, 'காலைக்கதிர்' ஆன்மிகக் கதிர் வார இதழ் சார்பில், ஆடி அமாவாசை தினமான, ஆக., 11ல், கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில், 'சமஷ்டி தர்ப்பணம்' நடக்கிறது.

கட்டணம்

இதில், கணபதி பூஜை, அமாவாசை சங்கல்பம், வருண கலச பூஜை, நவகிரக பூஜை, பித்ரு பூஜை, பித்ரு பிண்ட பூஜை, தர்ப்பணம், தீபாராதனை, சூரிய நமஸ்காரம், பித்ரு பிரசாத ஆசீர்வாதம், பித்ருக்களுக்கான சமஷ்டி ஹோமம் ஆகியவை நடக்கிறது. பங்கேற்க கட்டணம் உண்டு.ஆடி அமாவாசை தினந்தன்று, ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில், காலை, 6:30 முதல், 7:00 மணி; 7:15 முதல், 7:45; 8:00 முதல், 8:30; 8:45 முதல், 9:15; 9:30 முதல், 10:00 மணி வரை என, ஐந்து பிரிவுகளாக சமஷ்டி ஹோமம் நடக்கிறது.

இதில், பங்கேற்க விறுவிறுப்பாக முன்பதிவு நடந்து வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. 95976 66400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, ஆகஸ்ட், 8 மாலை, 5:00 மணிக்குள் முன் பதிவு செய்யலாம்.

னுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே... : இன்று உலக நண்பர்கள் தினம்

Added : ஆக 05, 2018 01:31



நமது வாழ்க்கையில் பல உறவுகள் இருந்தாலும், அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு 'நண்பர்கள்'. மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது.

அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட, நண்பர்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நண்பன் இருந்தால், அந்த வானமும் நமக்கு தொடும் துாரம் தான். வாழ்க்கையின் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ள அனைவருக்கும் நட்பு அவசியம்.

உருவான வரலாறு:

நண்பர்கள் தினம், பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. 1919ல் இருந்தே தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1935ல் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டது. 1958ல் பராகுவே சார்பாக முதன்முறையாக உலக நண்பர்கள் தினம் உருவாக்கப்பட்டது. நட்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா., 2011 ஏப்., 27ம் தேதி ஆண்டுதோறும் ஜூலை 30, உலக நண்பர்கள் தினம் என அறிவித்தது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு (ஆக., 5) நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

எப்போதும் ஒன்றாக

இன்றைய வேகமான உலகில் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் தான் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மனதின் துன்பத்துக்கு மருந்தாக நண்பர்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். இப்படிப்பட்ட நண்பர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் அலைபேசி, சமூக வலைதளம், ஆகியவற்றின் மூலம், அவர்களுடன் அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவேண்டும். புதிய நண்பர்களை ஏற்கும் நேரத்தில், பழைய நண்பர்களை மறந்துவிடக்கூடாது. நட்புக்குள் வரக்கூடாது பிரிவு. பிரிந்த நட்பை உயிர்ப்பிக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது. கருத்து வேற்றுமையினால் நண்பர்களுக்கு பிரிவு வருவது இயற்கைதான், ஆனால் அதை அடுத்த சில மணி நேரங்களில் உணர்ந்து தாமாக பேச முன்வர வேண்டும். நட்பு எந்த ஒரு மனிதனும் தனி தீவாக ஒதுங்கிவிடாமல் காப்பாற்றுகிறது.

அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும் 



dinamalar 5.8.2018

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசிய, 'ஆடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும்பாலானோரிடம் வரவேற்பையும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் சேலத்தில் நடந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் போன்றவற்றை, கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது: எட்டு வழி சாலை அமைப்பதை எதிர்த்து, தி.மு.க., - பா.ம.க.,கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் குரல்கொடுக்கின்றனர். அரசியல் ஆதாயம் தேட, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சியினர், எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பர். இந்தியாவில் அதிக போராட்டம் நடந்த மாநிலம், தமிழகம். ஆட்சியை கலைக்க பார்த்தனர்; களங்கம் கற்பிக்க பார்த்தனர். அனைத்தையும் முறியடித்தோம். அரசு ஊழியர்களை குத்தி விட்டு, வேடிக்கை பார்த்தனர். நன்றாக சிந்தித்து பாருங்கள்...

ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 82 ஆயிரம் ரூபாய், சம்பளம் வாங்குகிறார். நம்ம வீட்டு பையன், மண்டி போட்டு படித்து,எம்.இ., முடித்து, வேலையில் சேர்ந்தால், 10 ஆண்டு கள் தாண்டினால் கூட, 50 ஆயிரம் சம்பளத்தை தாண்டுவதில்லை. அவர்களுக்கு, 160 நாட்கள் விடுமுறை. எட்டாம் வகுப்பு வரை, 'பாஸ், பெயில்' கிடையாது. இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு போராடினால், யார் ஏற்றுக் கொள்வர்? கடந்த ஆண்டு மட்டும், 14 ஆயிரத்து, 719 கோடி ரூபாய், சம்பள உயர்வு வழங்கி உள்ளோம். இவ்வளவு பணத்தை வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துவது, எந்த வகையில் நியாயம்? அதிகமாக ஊதிய உயர்வு தரப்பட்டுள்ளது. 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர், 60 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். என்னுடைய, பி.ஏ., 65 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார்; தற்போது, 1.10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இன்னும் என்ன கொடுக்கிறது? எல்லா பணத்தையும் இவர்களுக்கு கொடுத்தால், மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும்; இதை நீங்கள் புரிந்து கொண்டு, மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். தி.மு.க., ஆட்சியிலிருந்த போது, போக்குவரத்து பணிமனைகளை அடமானம் வைத்தனர். அவர்கள் வைத்த கடன் சுமையை, நாம் சுமக்கிறோம். தற்போது, என்னை சந்தித்து, 'அரசுக்கு ஆலோசனை சொல்கிறேன்' எனக்கூறி, பெரிய புத்தகத்தை கொடுக்கின்றனர். அதை, அவர்கள் ஆட்சியில் செய்திருக்கலாமே! நமக்கு ஒன்றும் தெரியாதது போல, நமக்கு ஆலோசனை கூறுகின்றனர்.

நான் இரவு, 11:00 மணி வரை படிக்கிறேன். என் துறைகள் மட்டுமின்றி, மற்ற துறைகள் குறித்தும், தினமும் படிக்கிறேன். ஆட்சியை கவிழ்க்க வேண்டும்; கட்சியை உடைக்க வேண்டும் என, நினைக்கின்றனர். ஆ, ஊ என்றால், ஸ்டாலின், 'ராஜினாமா செய்' என்கிறார். இந்த நாற்காலி மீது, ஸ்டாலினுக்கு அதிக ஆசை; மக்கள் கொடுத்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு முதல்வர் பேசிய, 'ஆடியோ' பதிவு, சமூக வலைதளங்களில், வேகமாக பரவியது. இது, பொது மக்களிடம் வரவேற்பையும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

NEWS TODAY 27.06.2026