Sunday, August 12, 2018

அடையாளம் இழந்த கார்டன், கோபாலபுரம்

Added : ஆக 12, 2018 02:40

ஜெயலலிதா மறைவால், அரசியல் அடையாளத்தை இழந்த, போயஸ் கார்டன் வரிசையில், தற்போது, கோபாலபுரமும் இணைந்துள்ளது.

சென்னை, தேனாம்பேட்டை, போயஸ் கார்டனில், மறைந்த, அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் வீடு உள்ளது. அதன் அருகில் உள்ள, கோபாலபுரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி வீடு உள்ளது.

சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது, போயஸ் கார்டனும், கோபாலபுரமும் களை கட்டும். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைவர்கள் வசித்ததால், தேசிய அளவில், தமிழகத்தின் அரசியல் முகவரிகளாக, போயஸ் கார்டனும், கோபாலபுரமும் திகழ்ந்தன.ஜெயலலிதா மறைவால், அவரின் போயஸ் கார்டன் வீட்டை, நினைவிடமாக்கும் பணியை, தமிழக அரசு துவக்கியுள்ளது.

தற்போது, கருணாநிதியின் மறைவால், இனி, கோபாலபுரம் வீட்டிற்கு, கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு, தலைவர்கள் வர வாய்ப்பில்லை. இதனால், போயஸ் கார்டனும், கோபாலபுரமும், தன் அடையாளத்தை இழந்துள்ளன.

- நமது நிருபர் -

நிகர்நிலை மருத்துவ பல்கலை ஆக., 20ல் இறுதி கவுன்சிலிங்

Added : ஆக 12, 2018 02:03

சென்னை:நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், இறுதி கட்ட கவுன்சிலிங், வரும், 20ல் நடைபெற உள்ளது.

அரசு மருத்துவ கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடுக்கு சமர்ப்பிக்கப்படும், 15 சதவீத இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.

ஒப்படைப்பு

இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்து, அரசு மருத்துவ கல்லுாரிகளில் நிரம்பாத இடங்கள், அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்துக்கு, 98 எம்.பி.பி.எஸ்., மற்றும் 15 பி.டி.எஸ்., இடங்கள் ஒப்படைக்கப்பட்டன. நிகர்நிலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், இறுதிகட்ட கவுன்சிலிங், வரும், 20ல் நடைபெறும் என, மத்திய சுகாதார இயக்ககம் அறிவித்துள்ளது.

மத்திய சுகாதார இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில் உள்ள காலிஇடங்கள் குறித்த விபரம், வரும், 14, 15ல், mcc.nic.in என்ற,இணையதளத்தில் வெளியிடப்படும்.இறுதி கட்ட கவுன்சிலிங் நடைமுறைகள், 16 முதல், 18ம் தேதி வரை நடைபெறும்.

மாணவர் சேர்க்கைபின், 20ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அன்றைய தினம், முடிவுகள் வெளியிடப்படும். இடங்களை பெற்ற மாணவர்கள், வரும், 21 முதல், 26ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரியில் சேர வேண்டும்.சேராத இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப் பட்டு, அந்தந்த கல்லுாரி களே, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆறாண்டாகியும் முடியாத அகல ரயில் பாதை பணி பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே ரயில் ஓடுமா?

Added : ஆக 12, 2018 01:38



தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 'மீட்டர் கேஜ்' பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, ஆறு ஆண்டுகளாகியும் முடியா ததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து, பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி வரையிலான, 187 கி.மீ., மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, 2012 முதல் நடந்து வருகிறது. இதற்கான, திட்டச்செலவு, 1,700 கோடி ரூபாய்.

இதில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, 73 கி.மீ., பாதை பணி முடிந்து, ஜூலை, 2 முதல், ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே, அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. இதில், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 76 கி.மீ., பாதை பணியை விரைவாக முடித்து, ராமேஸ்வரம் - காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் - சென்னை இடையே, ரயில் போக்குவரத்தை துவக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பாதையின் நிலை

பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதையில், 12 ரயில் நிலையங்கள் உள்ளன. பெரிய நிலையமான, அதிராம்பட்டினத்தில், 80 சதவீத பணி முடிந்துள்ளது. நடைபாதை மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையங்களின் கட்டுமான பணியும், 80 சதவீதம் முடிந்துள்ளது. நடைபாதைக்கு மண் நிரப்பப்பட்டு, மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.முத்துப்பேட்டையில், ரயில் நிலைய பணி முடிந்து, டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டு உள்ளது.

நடைபாதையில், மண் நிரப்பப்பட்டு, மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது. திருநெல்லிக்காவல் நிலைய கட்டுமான பணி, மந்த கதியில் நடக்கிறது. திருவாரூர் ரயில் நிலையத்தில், இணைப்பு நடைபாதை பணிகள் முடிந்துள்ளன. மின் விளக்குகள் அமைக்கும் பணி முடியவில்லை.

இந்தப் பாதையில், மணலி, ஆலத்தம்பாடி, அம்மனுார், மாவூர் ரோடு, மாங்குடி நிலையங்களின் கட்டுமான பணிகள், மந்த கதியில் நடக்கின்றன. அவற்றில், பாலப் பணிகள் முடிந்துள்ளன. ரயில்வே கேட், சிக்னல் பணி இன்னும் துவங்கவில்லை. பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை இடையே, 19 கி.மீ., ஜல்லி நிரப்பி, தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் - திருநெல்லிக்காவல் இடையே, 13 கி.மீ., மற்றும் திருநெல்லிகாவல் - தில்லைவிளாகம் இடையே, 27 கி.மீ., துாரத்திற்கு, ஜல்லி நிரப்பப்பட்டு, தண்டவாளம் அமைக்கும் பணி, மந்த கதியில் நடக்கிறது.

கடும் அதிருப்தி

இப்பாதையில் உள்ள, லெவல் கிராசிங் கேட்டுகளில் சிக்னல் கட்டட பணி நடந்து வருகின்றன. பாதையில், சிக்னல் அமைக்கும் பணிகள் இன்னும் துவங்கவில்லை. எந்த, 'கேட்'டும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இப்பாதை பணி மந்தகதியில் நடப்பதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலர், பாஸ்கரன் கூறியதாவது:பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், சென்னையில் வசிக்கின்றனர். அவர்கள், ரயிலில் சென்னை செல்ல வேண்டுமெனில், தஞ்சை அல்லது திருவாரூர் சென்று, அங்குஇருந்து செல்ல வேண்டும்.

'நான்கு ஆண்டுகளில் ரயில் போக்குவரத்து துவக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்; ஆறு ஆண்டு களாகியும், பாதை பணி முடியவில்லை.திருவாரூர் - காரைக்குடி மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணியை, முதலில் காரைக்குடியில் இருந்து துவங்காமல், திருவாரூரில் இருந்து துவங்கியிருக்க வேண்டும்.

அப்படி செய்திருந்தால், பட்டுக்கோட்டை வரை பாதை பணி முடிந்து, சென்னை - பட்டுக்கோட்டை வரை ரயில் போக்குவரத்து துவங்கிஇருக்கும். பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தால், ரயில்வேக்கு வருவாய் கிடைத்திருக்கும்; மக்களுக்கும், பயண செலவு குறைந்து இருக்கும்.தற்போது, 'பாதை பணி டிசம்பருக்குள் முடிக்கப்படும்' என, அதிகாரிகள் கூறுகின்றனர். பணிகள் மந்தகதியில் நடப்பதாலும், இனி, மழைக்காலம் என்பதாலும், வேலைகள் தாமதமாக வாய்ப்புள்ளது.

பணிகளை முடுக்கிவிட்டு, 2019 மார்ச் முதல், ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடியில் இருந்து, திருவாரூர் வழியாக, சென்னைக்கு ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

'கடவுளுக்கே வெளிச்சம்'

மல்லிபட்டினம், அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை மீனவர்கள் கூறியதாவது:சேதுபாவா சத்திரம், மல்லிபட்டினம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில், மீன், இறால், கருவாடு வியாபாரிகள் அதிகம் உள்ளனர். மீட்டர் கேஜ் பாதையில், ரயில் போக்குவரத்து இருந்தபோது, ராமேஸ்வரம் - சென்னை இடையே இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்; முக்கிய ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட்ட பயணியர் ரயில்களில், மீன், இறால், கருவாடு, தேங்காய், நெல், அரிசி போன்றவை, அதிகம் அனுப்பப்பட்டு வந்தன.

இப்பாதை மூடப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும் பணி முடியாததால், பொருட்களை சென்னைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல, சரக்கு லாரிகள் மற்றும் ஆம்னி பஸ்களில் கூடுதல் செலவாகிறது. இந்த பாதையில், ரயில் ஓடினால், வியாபாரிகள் அதிகம் பயன்பெறுவர். ஆனால், எப்போது ரயில் ஓடும் என்பது, அந்த கடவுளுக்கே வெளிச்சம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'இது தான் நவீன தொழில்நுட்பம்'

''காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே உள்ள, 36 ரயில்வே கேட்களில், நான்கு கேட்களில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். மற்ற, 32 கேட்டுகளை திறந்து மூட, ரயிலிலேயே ஊழியர்கள் வருகின்றனர். அவர்கள் ரயில் அந்த இடத்தை அடைந்ததும் இறங்கி, ரயில்வே கேட்டை மூடி, ரயில் சென்றதும், மீண்டும் திறந்து விடுகின்றனர்.

''இந்த காட்சிகளை பதிவு செய்யும் சிலர், சமூக வலைதளங்களில் பரப்பி, 'இந்தியன் ரயில்வேயின் நவீன தொழில்நுட்பம் இது தான்' என, கிண்டலடிப்பது வேதனையாக உள்ளது. கேட்களில், தேவையான ஊழியர்களை நியமித்திருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. இனியாவது, ரயில்வே நிர்வாகம், இந்த பிரச்னையை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும்.
ஏ.வி.காந்தி, அரிமா சங்க மாவட்ட தலைவர், தஞ்சாவூர்

'மாப்பிள்ளை ரயில்'

பேராவூரணி ரயில் பயணியர் சங்க தலைவர் பழனிவேல், செயலர் கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:காரைக்குடி - பேராவூரணி - பட்டுக்கோட்டை இடையே, ஜூலை, 2ல் இருந்து, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு, 3:15 மணி நேரமாகிறது. ஆனால், பஸ்சில், 2:15 மணி நேரத்தில் செல்ல முடியும்.

ரயில் வேகம் குறைத்து இயக்கப்படுவதால், 'மாப்பிள்ளை அழைப்பு' ரயில் என, பயணியர் கிண்டலடிக்கின்றனர். எனவே, கட்டணம் குறைவாக இருந்தும், பயண நேரம் அதிகம் என்பதால், இந்த ரயிலில் செல்ல பயணியர் ஆர்வம் காட்டவில்லை.ரயிலின் வேகத்தை அதிகரித்து, தினமும் ரயிலை இயக்கவும், பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணியை விரைவாக முடிக்கவும் வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் அலுவலகம் முன், போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
ஒரு நாள் மழைக்கே மின் தடை
சீசனை சமாளிக்குமா வாரியம்?

- நமது நிருபர் -
கடலூரில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Added : ஆக 12, 2018 01:04

கடலுார்: கடலுார் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கடலுார் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகி தேர்தல் நடந்தது. 6 பேர் கொண்ட தேர்தல் நடந்தும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று முன்தினம் காலை வேட்பு மனு, பரிசீலனை என வழக்கமான நடைமுறைகளை பின்பற்றினர்.அதனைத் தொடர்ந்து இறுதியில் போட்டியின்றி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.அதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மாசிலாமணி, செயலராக சீத்தாராமன், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலர்களாக சந்தானகிருஷ்ணன், சிவகாமசுந்தரி ஆகியோரும், நுாலகராக பூபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆக.14,16,23 தேதிகளில் சபரிமலை நடை திறப்பு

Added : ஆக 12, 2018 04:39

சபரிமலை:நிறைபுத்தரிசி, ஆவணி மற்றும் ஓண பூஜைகளுக்காக சபரிமலை நடை இந்த மாதம் மூன்று முறை திறக்கப்படுகிறது.

நிறைபுத்தரிசி பூஜைக்காக ஆக.,14- மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். 15-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து 6:00 முதல் 6:30 மணிக்குள் நெற்கதிர்களால் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு இதை நடத்துவார். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆவணி பூஜை

ஆவணி மாத பூஜைகளுக்காக 16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்பார். 17ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் தொடங்கும். 21ம் தேதி வரை எல்லா நாட்களிலும் நெய்யபிஷேகம், களபாபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படிபூஜை போன்றவை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஓணபூஜை

திருவோண பூஜைகளுக்காக 23-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கும் நடை 27-ம் தேதி இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். இந்த நாட்களிலும் வழக்கமான எல்லா பூஜைகளுடன், திருவேணத்தை ஒட்டி மூன்று நாட்கள் ஓணவிருந்து நடைபெறும்.

புல்லட் ரயில்! 


சென்னை - மும்பை உட்பட 6 புதிய வழித்தடங்கள் தேர்வு
சாத்தியங்களை ஆய்வு செய்வதாக லோக்சபாவில் தகவல் 


dinamalar 12.08.2018

புதுடில்லி: சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையில், ஆறு வழித்தடங்களில், புல்லட் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக, லோக்சபாவில் மத்திய அரசு கூறியுள்ளது.



மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை, குஜராத்தின் ஆமதாபாத் இடையே, ஜப்பான் நாட்டின் உதவியுடன், புல்லட் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டம், 2022 ஆகஸ்டில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.மும்பை - ஆமதாபாத் இடையிலான ரயில் பயணத்துக்கு, தற்போது, ஏழு மணி நேரம் ஆகிறது. புல்லட் ரயில் மூலம் செல்வதற்கு, இரண்டு மணி நேரமே ஆகும்.மும்பை - ஆமதாபாத் இடையே, புல்லட் ரயில் திட்டத்துக்கு, ஜே.ஐ.சி.ஏ., எனப்படும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஏஜன்சி, 88 ஆயிரம் கோடி ரூபாயை, குறைந்த வட்டி கடனாக அளிக்கிறது.

ரூ.1.10 லட்சம் கோடி :

இந்த தொகையை, 50 ஆண்டுகளில், 0.1 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தினால் போதும். கடனுக்கான முதல் தவணையை, 15 ஆண்டுகளுக்கு பின் செலுத்தத் துவங்கலாம். இந்த திட்டத்துக்கு, 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களை, புல்லட் ரயில் சேவை மூலம் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இதன்படி, டில்லி - மும்பை; டில்லி - கோல்கட்டா; மும்பை - சென்னை ஆகிய வழித் தடங்களில் புல்லட் ரயில் திட்டத்தை துவக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

திட்டம் :

மேலும், டில்லி - நாக்பூர் - சென்னை; மும்பை - நாக்பூர் - கோல்கட்டா; சென்னை - பெங்களூரு - மைசூரு ஆகிய வழித்தடங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.'ஆய்வுகள் முடிந்த பின், புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும்' என, அரசு அதிகாரிகள் கூறிஉள்ளனர்.முக்கிய நகரங்களை புல்லட் ரயில் மூலம் இணைக்கும் திட்டம் தொடர்பாக, பிரான்ஸ், ஸ்பெயின், சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவியை, மத்திய அரசு நாடியுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே ஸ்டேஷன்களில், 'டிஜிட்டல் மியூசியம்':

சமீபத்தில், ரயில்வே டிவிஷனல் மேலாளர்கள் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரயில்வே வாரிய இயக்குனர், சுப்ரதா நாத், 8ல், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும், 22 ரயில்வே ஸ்டேஷன்களில், சுதந்திர தினத்தன்று, டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளன.ரயில்வே ஸ்டேஷன்களின் சுவர்களில், டிஜிட்டல் அருங்காட்சியகங்களை எளிதில் அமைத்து விட முடியும். எனவே, டிஜிட்டல் அருங்காட்சியகங்களை அமைக்க, முதலீடுகள் தேவை இல்லை. ரயில்வே அருங்காட்சியகத்தில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வரலாற்றையும், நடப்பு நிலவரங்களையும் காட்சிப்படுத்த முடியும்.டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் அமையவுள்ள, 22 ரயில்வே ஸ்டேஷன்களில், 'டிஜிட்டல் மல்டிமீடியா' திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹவுரா, லக்னோ, வாரணாசி, ரேபரேலி, டில்லி, ஜெய்ப்பூர், ஈரோடு, கோவை, செகந்திராபாத், விஜயவாடா, பெங்களூரு ஆகிய ஸ்டேஷன்களில், டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் துவக்கப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மாநில செய்திகள்

நாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை




இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நேற்று மீண்டும் நிரம்பியதால், அணையில் இருந்து வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் நாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 12, 2018 05:45 AM மேட்டூர்,

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த மாதம் நிரம்பின.

இதனால் அந்த அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து, கடந்த மாதம் 23-ந் தேதி பகல் 12 மணிக்கு அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணையின் 84 ஆண்டுகால வரலாற்றில் 39-வது ஆண்டாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பிறகு மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் அவற்றில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், கடந்த இரு வாரங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 116.85 அடியாக குறைந்தது.

இந்த நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை மீண்டும் தீவிரம் அடைந்தது. இதைத்தொடர்ந்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் மீண்டும் நிரம்பியதால், அவற்றில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 233 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இருபுறமும் கரைகளை தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. நேற்று இந்த உபரிநீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 44 ஆயிரத்து 519 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல் அருவி பகுதி 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்ததை அடுத்து, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் 116.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 119 அடியாக உயர்ந்தது. பின்னர் பகல் 12 மணியளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி மீண்டும் நிரம்பியது. நேற்று மாலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர், உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் அணையையொட்டி உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி நீரும், ஒரு லட்சத்து ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் 16 கண் பாலம் வழியாக உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் 23-ந் தேதி முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய நிலையில், இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி உள்ளது.

அணையின் வரலாற்றில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு, 2005-ம் ஆண்டில் 4 முறையும், கடந்த 2007-ம் ஆண்டில் 5 முறையும் மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதையொட்டி, திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் ஆகியோர் நேரில் வந்து அணையை பார்வையிட்டனர்.

நீர்வரத்து அதிகரித்ததையொட்டி, அணை நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி, அணைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அணையின் வலதுகரை, இடதுகரை, 16 கண் பாலம் உள்பட முக்கிய பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணை மீண்டும் நிரம்பியதால், 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று அங்கு வந்தனர்.

16 கண் பாலத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும், பாதையையொட்டி உள்ள 2 வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி அங்கு நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தங்கமாபுரி பட்டணம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை மூலம் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

NEWS TODAY 28.06.2026