Tuesday, August 14, 2018

மருத்துவ கவுன்சிலிங் இடங்கள், 'ஹவுஸ்புல்'

Added : ஆக 13, 2018 23:30

சென்னை: இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான, 3,501 இடங்களுக்கும், பி.டி.எஸ்., படிப்பிற்கான, 1,198 இடங்களுக்குமான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7ம் தேதி வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பின.இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாதவை மற்றும் கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று, கல்லுாரிகளில் சேராதோர் என, 268 இடங்கள் காலியாகின.இதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், ஆக., 11ல் துவங்கியது. இரண்டு நாட்களில், 192 இடங்கள் நிரம்பி, 76 இடங்கள் மீதமிருந்தன. மூன்றாம் நாளான நேற்று, 76 இடங்களும் நிரம்பின.இது குறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், 17ம் தேதிக்குள், கல்லுாரிகளில் சேர வேண்டும். தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், விரைவில் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நடை இன்று திறப்பு பக்தர்கள் வரவேண்டாம் என வேண்டுகோள்

Added : ஆக 14, 2018 06:06

சபரிமலை: நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. பம்பை ஆறு கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.சபரிமலை நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. நாளை காலை 6:00 முதல் 6:30 மணிக்குள் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது.மழை காரணமாக பம்பை கரைபுரண்டுஓடுகிறது. பக்தர்கள் பம்பையில் கடக்கும் இரண்டு பாலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பம்பையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தேவஸ்தான மண்டபங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.எனவே பக்தர்கள் தரிசனத்துக்கு வரவேண்டாம் என்றும், மீறி வருபவர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.பக்தர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், சன்னிதானத்தில் நிறைபுத்தரிசி பூஜை வழக்கம் போல் நடைபெறும்.
முன்னாள் சபாநாயகர் சோம்நாத் காலமானார்

Added : ஆக 13, 2018 23:41



கோல்கட்டா: லோக்சபா முன்னாள் சபாநாயகரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான, சோம்நாத் சாட்டர்ஜி, 89, உடல் நலக் குறைவால், கோல்கட்டாவில் நேற்று காலமானார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, சோம்நாத் சாட்டர்ஜி, 1968ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராக பதவி வகித்துள்ள அவர், 10 முறை, லோக்சபா உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.கடந்த, 2004 - 2009ல், லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார். கடந்த மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்ட சோம்நாத், மருத்துவமனையில், 40 நாட்கள் சிகிச்சை பெற்றார்.பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, சமீபத்தில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.இருப்பினும், 7ல், உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.அங்கு, சிறுநீரகம் உட்பட முக்கிய உறுப்புகள் செயல் இழந்ததால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.இறப்புக்கு பின், தன் உடலை தானம் செய்வதாக, சோம்நாத் சாட்டர்ஜி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி, அவரது உடல், கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'இந்திய அரசியலில் மாபெரும் தலைவராக திகழ்ந்தவர், சோம்நாத் சாட்டர்ஜி; நம் பார்லிமென்ட் ஜனநாயகத்தை செம்மைப்படுத்தியவர்' என, கூறியுள்ளார்.
காங்., தலைவர் ராகுல் வெளியிட்ட செய்தியில், 'சிறந்த தலைவராக திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, கட்சி பேதமின்றி, அனைத்து அரசியல் தலைவர்களாலும் உயர்வாக மதிக்கப்பட்டவர்' என, தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'லோக்சபா சபாநாயகராக, 2004 ஜூன் முதல், 2009 மே வரை பதவி வகித்து, சபையை திறம்பட வழி நடத்தியவர். 'அவர் இறந்த செய்தி அறிந்து, மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' என, கூறியுள்ளார்.

முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் உட்பட பல்வேறு தலைவர்கள், சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


நேர்மை... துாய்மை... எளிமை!

சிறந்த பார்லிமென்ட் உறுப்பினராக திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, பொதுவாழ்வில் நேர்மை, துாய்மையை கடைபிடித்தார். சபாநாயகராக இருந்தபோது அரசு மாளிகையில் தங்கினார். அரசு நிதியை பயன்படுத்திக் கொள்ள சட்டத்தில் இடமிருந்தும், சொந்த தேவைகளை தன் செலவிலேயே நிறைவேற்றினார். வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்றபோது, குடும்பத்தினர் உடன் வந்தால், அவர்களுக்கான செலவை சொந்தப் பணத்திலிருந்து செலுத்தினார்.

முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அசாமின் தேஜ்பூரில், 1929 ஜூலை, 25ல் பிறந்தார். இவரது தந்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜி, அகில பாரதிய ஹிந்து மகா சபையின் நிறுவனர்களில் ஒருவர். கோல்கட்டாவில் கல்லுாரிப் படிப்பை முடித்த சோம்நாத், சட்டம் பயின்று சிறந்த சட்ட வல்லுனராக விளங்கினார். அரசியலில் நுழைவதற்கு முன், கோல்கட்டா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். எம்.பி.,யாக இருந்த இவரது தந்தை இறந்தவுடன், பர்தவான் தொகுதிக்கு, 1971ல் நடந்த லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் ஆதரவுடன், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு முதன்முறையாக லோக்சபா, எம்.பி., ஆனார். பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த அவர், மேற்கு வங்கத்தின், ஜாதவ்பூர் (இரண்டு முறை), போல்பூர் (ஏழு முறை) தொகுதிகளில் போட்டியிட்டு, 10 முறை லோக்சபாவுக்கு தேர்வானார்.கடந்த, 1989 - 2004 வரை லோக்சபாவில் மார்க்சிஸ்ட் தலைவராக இருந்தார். இவரின் சிறந்த செயல்பாட்டை பாராட்டி, 1996ல், சிறந்த பார்லிமென்ட் உறுப்பினர் விருது வழங்கப்பட்டது. 2004 - -2009 வரை, மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார். இவரே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல் சபாநாயகர். பதவிக்காலத்தில் லோக்சபாவை சிறப்பாக வழிநடத்தினார். மக்களின் வரிப்பணத்தில் பார்லிமென்ட் செயல்படுகிறது என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டிய இவர், சபை நடவடிக்கைகளை சீர்குலைத்து, மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது என, அறிவுறுத்தினார்.

கடந்த, 2008ல், காங்., அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கொண்டு வந்தது. ஆனால், சோம்நாத் சாட்டர்ஜி இதை ஆதரிக்கவில்லை. இதையடுத்து, மார்க்., கம்யூ., கட்சியிலிருந்து சாட்டர்ஜி நீக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 'என் வாழ்நாளில் மிக சோகமான நாள்' என, குறிப்பிட்டார்.

10 முறை எம்.பி., : மறைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971 - 2004 வரை மேற்கு வங்கத்தில் இருந்து, 10 முறை, எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.ஒருமுறை மட்டும், 1984ல் ஜாதவ்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். லோக்சபா வரலாற்றில் அதிகபட்சமாக, 11 முறை, எம்.பி.,யாக இருந்தவர், இ.கம்யூ., கட்சியை சேர்ந்த இந்திரஜித் குப்தா.இரண்டாவது இடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், காங்கிரசின் சயீத் ஆகியோருடன் சோம்நாத் சாட்டர்ஜியும் உள்ளார். மூவரும், 10 முறை, எம்.பி., யாக இருந்துள்ளனர்.

இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாதுசி.பி.எஸ்.இ.,க்கு மைக்ரோசாப்ட் உதவி 


dinamalar 14.08.2018

புதுடில்லி : இந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதால், சர்ச்சையில் சிக்கிய, சி.பி.எஸ்.இ., வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நிகழாமல் தடுக்கும் வகையில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.





சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், இந்தாண்டு நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், வருங்காலத்தில், வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க திட்டமிட்ட, சி.பி.எஸ்.இ., அமெரிக்காவை ச் சேர்ந்த, தகவல் தொடர்பு துறை ஜாம்பவான் நிறுவனம், மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துள்ளது.

இரு நிறுவனங்களும் செய்துள்ள ஒப்பந்தப்படி, சி.பி.எஸ்.இ.,யின் டிஜிட்டல் கேள்வித்தாள்கள், வெளியாகாத வகையில், அதீத பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தொழில்நுட்ப தீர்வை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும்.

இதுகுறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண்மை இயக்குனர், அனில் பன்சாலி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வுகளின்போது, டிஜிட்டல் முறையிலான கேள்வித் தாள்கள், தேர்வு துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் வரை,

பார்க்க முடியாத வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கப்படும்.

அதற்கென, பிரத்யேக தொழில் நுட்பத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி உள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் தயாராகும் வினாத்தாள்கள், சிறப்பு குறியீடு உடையவை. எனவே, எந்த சமயத்தில் தவறு நிகழ்ந்தாலும், எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த தொழில் நுட்பம் தொடர்பாக நடந்துள்ள அனைத்து சோதனைகளும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய ரயில்வே அட்டவணை : நாளை வெளிவரும்

Added : ஆக 14, 2018 05:27



புதுடில்லி: நாளை முதல் புதிய ரயில்வே கால அட்டவணை இணையதளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ரயில்வே அட்டவணை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆகஸ்டு 14 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த முறை புதிய ரயில்வே கால அட்டவணையை ஐ.ஆர்.சி.டி.சி. தயாரித்துள்ளது. இந்தப் புதிய கால அட்டவணை நாளை முதல் (ஆக.15) முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும், நாளையே இணையத்தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கால அட்டவணையில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பல விரைவு ரயில்களின் புறப்படும் நேரமும் சேரும் நேரமும் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர புதிய கால அட்டவணையைப் புத்தகமாக அச்சிடும் பணி மும்பையில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒருவாரத்தில் புத்தகங்கள் ரயில்நிலையங்களில் விற்பனைக்கு வரும்


Monday, August 13, 2018

கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து அஞ்சலி

By DIN | Published on : 12th August 2018 04:33 PM |



சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். பின்னர் புதனன்று அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.

மு.க.முத்துவுடன் அவரது குடும்பத்தினரும் உடன் வந்து இருந்தனர். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க. முத்து என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக உடல்நலக் குறைவின் காரணமாக வெளியே எங்கும் செல்லாமல் இருந்த அவர், தற்போது தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்திற்கு முதன்முறையாக வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் எண்பது கவனிக்கத்தக்கது.
வரிகளால் ஆய பயன் என்?

By வெ.ந. கிரிதரன் | Published on : 13th August 2018 02:45 AM |

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். நாட்டு நடப்புகள் குறித்து கலந்துரையாடி கொண்டிருந்தபோது வருமான வரி குறித்து பேச்சு வந்தது. "நாங்கள் எல்லாம் உயர் வருவாய் பிரிவின்கீழ் வருவதால் 30 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு அதிகமாக வரி விதிப்பது எந்த விதத்தில் நியாயம்' என பேச்சை ஆரம்பித்தவர், "எங்களை இத்துடன் விட்டுவிட்டால் பரவாயில்லை. ஹோட்டலுக்கு சென்றால் ஜி.எஸ்.டி., தியேட்டருக்கு போனால் ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசலுக்கு 50 சதவீதத்துக்கு மேல் வரி, போதாகுறைக்கு சமையல் எரிவாயு மானியத்தையும் விட்டுக் கொடுங்கள் எனவும் கேட்கின்றனர்.

சரி, நாம் நன்றாக சம்பாதிப்பதன் பயனாக வருமான வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறோம் என மகிழ்ச்சி கொள்ளலாம் என்றால் அதுவும் முடியவில்லை' என வருந்தினார்.
"மின்னல் வேகத்தில் வாகனங்கள் பறக்கும் நான்கு வழி, ஆறு வழி, எட்டு வழி சாலைகள் உள்ள இதே நாட்டில்தான், குண்டும் குழியுமான சாலைகளும், இன்னும் சாலை வசதியையே காணாத ஆயிரக்கணக்கான கிராமங்களும் இருக்கின்றன. ஆனால், நாட்டின் எந்த மூலையில் வசிப்பவராக இருந்தாலும், அவர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும்போது, அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும்போது ஆயுள்கால சாலை வரி என மொத்தமாக ஒரு தொகையை வசூலித்து விடுகின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு மணி நேரம் தொடர்ந்தால் போல் மழை பெய்தால் போதும். மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கி நிற்கும்படிதானே உள்ளன இங்கு உள்கட்டமைப்பு வசதிகள்?

உயர்கல்விக்கு 2 சதவீதம், பள்ளிக்கல்விக்கு 1 சதவீதம் என கல்விக்கென தனியாக வரி வசூலிக்கப்பட்டாலும் (எஜுகேஷன் செஸ்), மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டியது கட்டாயமென சட்டம் போட்டிருப்பது, அரசாங்கமே தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிப்பது போல இல்லையா?

அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், அவசர மருத்துவத் தேவைக்கு நாம் விரும்பியோ, விரும்பாமலோ தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்துதானே மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது?
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குறிப்பாக, சென்னை போன்ற மாநகராட்சிகளுக்கு குடிநீருக்காக வரி செலுத்திவிட்டு, அன்றாட தேவைகளுக்காக லாரி தண்ணீரையும், குடிநீருக்கு கேன் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கும் அவலநிலை நம் மக்களைத் தவிர உலகின் வேறெந்த நாட்டு மக்களுக்காவது ஏற்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
குடிநீருக்காக குடங்களைச் சுமந்துக் கொண்டு மக்கள் வீதி வீதியாக அலைவதும், தண்ணீர் கேட்டு தொண்டைநீர் வற்ற பொதுமக்கள் சாலை மறியல் செய்வதும் ஒவ்வொரு கோடையிலும் நடக்கும் கொடுமைகளாகத்தானே தொடர்கின்றன?

அரசு இயந்திரத்தின் அலட்சிய போக்கால், தங்கள் ஊரின் ஏரி, குளம், கால்வாய்களை தங்களது சொந்த செலவில் தூர்வார வேண்டிய துர்பாக்கிய நிலைக்கும் அல்லவா நம் மக்கள் தள்ளப்படுகின்றனர்?
இவையெல்லாவற்றுக்கும் மேலாக, செய்யும் வேலைக்கான சரியாக ஊதியம் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. "அவுட்சோர்சிங்' எனப்படும்

அயல்பணி நியமனமுறையை கொண்டு வந்து, பணியாளர்களின் சம்பளத்திலும் மாதந்தோறும் கைவைத்து விடுகின்றனர்.
ஏடிஎம்-களில் இவ்வளவு முறைக்கு மேல் பணம் எடுத்தால் அபராதம், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் இவ்வளவு தொகை இல்லையென்றால் அதற்கும் அபராதம், ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கும் வரி என,வங்கிகளும் தங்கள் பங்குக்குக் கொள்ளை அடித்து வருகின்றன.

இப்படி தரமான கல்வி, மருத்துவம், சுத்தமான குடிநீர், சிறப்பான உள்கட்டமைப்பு வசதி, உழைப்பை சுரண்டாத வேலை என ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் வருமான வரி, சாலை வரி, ஜி.எஸ்.டி. என பல்வேறு வரிகளை ஓர் அரசு வசூலிப்பதால் ஆன பயன் என்ன' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் நண்பர்.
"இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? நம் நாடு வளர்ச்சி அடையவே இல்லையென சொல்கிறீர்களா?' என அவரிடம் கேட்டேன். "அப்படிச் சொல்லிவிட முடியாது; நம் தேசத்தின் வளர்ச்சி சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியாக இல்லை என்பதுதான் என் வருத்தம்' என்றார் அவர்.

அவரது இந்த வருத்தத்தை நேர்மையாக வரி செலுத்தும் அனைவரின் ஒட்டுமொத்த குரலாகதான் நாம் பார்க்க வேண்டும். இத்தகையோரின் ஆதங்கத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து வருமான வரிவிதிப்பு மற்றும் வசூலிக்கும் முறையில் அதிரடி சீர்திருத்தங்களை கொண்டு வருவது அவசியமாகும். 

அதாவது, அதிகமாக சம்பாதித்தால் அதிக வரிவிதிப்பு என்றில்லாமல், அனைவருக்கும் சமமான அளவு வரி விதிக்கும் முறையை கொண்டுவர வேண்டும். அத்துடன், அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு வருமான வரி விதிப்பில் கடைப்பிடிக்கப்படும் டி.டி.எஸ். முறை போன்று, பல்வேறு சுயதொழில் புரிவோர், வணிகர்கள், பலவித சேவை நிறுவனங்களை நடத்துவோர் என பலதரப்பினரும் வருமான வரி ஏய்ப்பு செய்யாதபடி புதிய வழிமுறையை கண்டறிந்து அதனைக் கடுமையாக செயல்படுத்த வேண்டும். 

பல்வேறு வரி இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் வகுக்கப்படும் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பை, பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் மட்டும் ஒப்படைக்காமல், வாய்ப்புக்காக காத்திருக்கும் நம் இளைஞர்களை கொண்டு நடத்தப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் அவற்றில் சரி பங்கு தர வேண்டும்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது, முந்தைய நிதியாண்டில் கிடைத்த மொத்த வரி வருவாய் எவ்வளவு, அதில் எந்தெந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது, அத்திட்டங்களில் தற்போதைய நிலை என்ன என்பவை குறித்தும் மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவைதான், நேர்மையாக வரி செலுத்தும் குடிமக்களுக்கு ஓர் நல்லரசு தரும் வெகுமதியாக இருக்கும்.

NEWS TODAY 28.06.2026