Friday, September 7, 2018


நோயல்ல, அறிகுறி!

By ஆசிரியர் | Published on : 06th September 2018 01:35 AM |


இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி லூயி சோபியா பிரச்னை பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. சோபியா மேல் தொடரப்பட்டிருக்கும் வழக்கைத் திரும்பப் பெறவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருக்கின்றன. இந்தப் பிரச்னையை அரசியல் கோணத்தில் மட்டும் பார்ப்பது என்பது சரியாக இருக்காது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குச் சென்ற விமானத்திலிருந்து இறங்கும்போது, சக பயணியான தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தன்னைக் கடந்து சென்றதைப் பார்த்தவுடன் ஆவேசமாக பாசிச பாஜக அரசு ஒழிக' என்று அத்தனை பயணிகளையும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைக்கும்படி உரக்கக் கோஷம் எழுப்பினார் சோபியா. அதை தமிழிசை செளந்தரராஜன் பொருட்படுத்தாமல், விமானத்திலிருந்து இறங்கிவிட்டார். அப்படியே அவர் அதை சட்டை செய்யாமல் போயிருந்தால் பிரச்னை பெரிதாகி இருக்காது. லூயி சோபியாவுக்கு தேவையில்லாமல் இந்த அளவிலான ஊடக விளம்பரமும் கிடைத்திருக்காது.

தூத்துக்குடி விமான நிலையத்தின் வரவேற்பறையில், பொது இடத்தில் நடந்துகொண்ட முறை சரிதானா என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியதற்கு, தன்னுடைய கருத்தை வெளியிடும் உரிமை தமக்கு இருக்கிறது என்று லூயி சோபியா பதிலளிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தமிழிசை செளந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் லூயி சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களைத் தூண்டச் செய்யும் விதத்தில் பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனத்தை முன்வைத்திருக்கின்றன. பாசிச பாஜக அரசு ஒழிக' என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக லூயி சோபியா மீது புகார் அளித்ததற்கும், அவர் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஜனநாயக நாட்டில் ஆட்சி ஒழிக' என்று கோஷமிடக் கூட உரிமையில்லையா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. 

லூயி சோபியா குறிப்பிடுவது போல, கோஷம் எழுப்பவோ, எதிர்ப்பைத் தெரிவிக்கவோ நிச்சயமாக அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பொது இடத்தில் இதுபோன்ற கோஷங்களை எழுப்புவது மேலை நாடுகளில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு அநாகரிகமான செயல் என்று தெரியாமல் போனதுதான் ஆச்சரியம். 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவோ, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராகவோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராகவோ, விமானத்திலோ, ரயிலிலோ, பொது இடத்திலோ இதுபோல கோஷம் எழுப்ப முற்பட்டால், அதை அவர்களின் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தனது கருத்தை சொல்ல லூயி சோபியாவுக்கு உரிமை இருந்தாலும் அவர் விமானத்தில் கோஷம் எழுப்பியது தவறு. தமிழிசை அதை சட்டை செய்யாமல் விட்டிருக்கலாம். அவருடன் வாக்குவாதம் செய்ததும், அவர் மீது புகார் அளிக்க முற்பட்டதும் அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அமைப்பு சார்ந்த அரசியல் கட்சிகளின் மீது பரவலாக வெறுப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 128 நாடுகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அரசியலில் நாட்டம் இருந்தாலும் அவர்கள் அரசியல்ரீதியாகக் களம் இறங்குவதை விட, தெருவில் இறங்கிப் போராடுவதில்தான் கூடுதல் நாட்டம் கொள்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. 9% முதல் 17% வரையிலான 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவதிலும் லூயி சோபியா பாணியில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதிலும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

மக்கள் ஆட்சி முறைதான் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவதாக இருந்தாலும் கூட, வாக்களிப்பில் பங்குபெறும் இளைஞர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவோ, தொண்டர்களாகவோ இருப்பதில் நாட்டம் இல்லாதவர்களாகவும், தெருவில் இறங்கிப் போராடுவதிலும், சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்பவர்களாகவும்தான் அதிகமாகக் காணப்படுகின்றனர். 

உலகில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 2% மட்டும்தான் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. 2016 அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்காதவர்களில் 3-இல் 2 பங்கு வாக்காளர்கள் 50 வயதிற்கும் கீழே உள்ளோர்.

அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஊழல்வாதிகள், பணத்தாசையும், பதவி வெறியும் பிடித்தவர்கள் என்கிற கருத்து இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது.
சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் களமிறங்கும் இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளில் இடமில்லாமல் இருப்பதுதான் அவர்களை ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகின்றன. 

லூயி சோபியாவின் செயல்பாடு இன்றைய அரசியல் ஆட்சி அமைப்புக்கு எதிராகக் காணப்படும் இளைய தலைமுறையின் மனநிலை வெளிப்பாடு. அதற்கு வடிகால் ஏற்படுத்தித் தீர்வு கண்டாக வேண்டும்.
குற்றமில்லை!

இந்தியாவில் இனிமேல் ஓரினச் சேர்க்கை...
பழைய சட்டத்தை மாற்றி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

dinamalar 07.09.2018













புதுடில்லி : 'வயதுக்கு வந்த இருவர், சுயவிருப்பத்தின் அடிப்படையில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமில்லை' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும், 158 ஆண்டுகள் பழமையான, 377வது சட்டப் பிரிவு, அரசியல் சாசனம் அளித்துள்ள தனிமனித உரிமை, சம உரிமைக்கு எதிரானது என்றும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஒருமித்த தீர்ப்பில் கூறியுள்ளது.






ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாக பார்க்கும், 377வது சட்டப் பிரிவை எதிர்த்து, 2001ல், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல' என, டில்லி உயர் நீதிமன்றம், 2009ல் அளித்த தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம், 2013ல், தடை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, பிரபல நடனக் கலைஞர் நவ்தேஜ் ஜவ்ஹார், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா, சமையல் கலைஞர் ரீது டால்மியா, ஓட்டல் அதிபர்கள் அமான் நாத், கேஷன் சூரி உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, ஆர்.எப்.நரிமன், ஏ.எம். கன்வில்கர் அடங்கிய அரசில் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும், 377வது சட்டப் பிரிவின் ஒரு பகுதியை ரத்து செய்து, ஐந்து நீதிபதிகளும், ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். ஐந்து நீதிபதிகளும், தனித்தனியாக, அதே நேரத்தில், ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 493 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில், அமர்வு கூறியுள்ளதாவது:

பாலியல் உணர்வு என்பது, ஒருவரது உடலில் ஏற்படும் உயிரியல் நிகழ்வாகவும், இயற்கையாகவும் அமைந்தது; இதில் பாகுபாடு பார்ப்பது, அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஓரினச் சேர்க்கை என்பது, மனது அல்லது உடலில் ஏற்படும் கோளாறும் அல்ல; அது இயற்கையான ஒரு நிலையே.

ஒருவரது உணர்வு மறுக்கப்படுவது, இறப்புக்கு சமம். அந்த வகையில், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவில், ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்ப்பது, அரசியலமைப்பு சட்டத்தின், 14, 15, 19 மற்றும் 21வது பிரிவுகள் அளித்து உள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது; இது சட்டவிரோதமானது, ஒருதலைபட்சமானது. தனிமனித உரிமை, கண்ணியத்துடன் வாழும் உரிமை, சம உரிமை ஆகியவற்றில் பாரபட்சம் கூடாது.

அதே நேரத்தில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வைத்துக் கொள்ளும் உறவு, முழுக்க முழுக்க சொந்த விருப்பமானதாக, இருவரும் ஏற்றுக் கொண்டதாக, கட்டுப்பாடு மற்றும் மிரட்டல் இல்லாததாக இருக்க வேண்டும்.

இத்தனை ஆண்டுகளாக, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு இருந்ததோடு, இந்தச் சட்டத்தை அவர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிவாரணம், இவ்வளவு தாமதமாக அவர்களுக்கு கிடைத்துள்ளதற்காகவும், அவர்களை ஒதுக்கி வைத்ததற்காகவும், இந்த சமூகம், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும் பகுதி மட்டுமே நீக்கப்படுகிறது.

அதே நேரத்தில், ஒருவருடைய விருப்பம் இல்லாமல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, சிறுவர் - சிறுமியர் மற்றும் விலங்குகளுடன் உறவு வைப்பது குற்றம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான தண்டனை தொடரும்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், இந்தத் தீர்ப்பு அதற்கு பொருந்தாது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மட்டும், இந்தத் தீர்ப்பு பொருந்தும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கொண்டாட்டம் :

ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக போராடி வந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். ஓரினச் சேர்க்கையாளர் உரிமைக்கான அடையாளமாகக் கருதப்படும், வானவில் நிறங்கள் கொண்ட கொடிகளையும் பலர் ஏந்தி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரலாறு முக்கியம்!

ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நம் நாட்டில் அமலுக்கு வந்தது. அந்த காலத்தில், பெரும்பாலான நாடுகளில், ஓரினச் சேர்க்கைக்கு தடை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தங்கள் ஆதிக்கத்தில் இருந்த அனைத்து நாடுகளிலும், இந்த சட்டத்தை அமல்படுத்தினர். இதனால், பல ஆண்டுகளாக, ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கையர் ஆகியோர், இந்த சட்டத்தை பயன்படுத்தியே நசுக்கப்பட்டனர். தற்போது, இந்த சட்டத்தின் ஒரு பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஓரினச் சேர்க்கையாளர்கள், இதை, தங்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், இத்தனை நாட்களாக, ஓரினச் சேர்க்கையாளருக்கு எதிராக பின்பற்றப்பட்டு வந்த அடக்கு முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
'குட்கா' ஊழல் வழக்கில் சி.பி.ஐ., நடவடிக்கை

அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கைது  dinamalar 07.09.2018

சென்னை : 'குட்கா' ஊழல் வழக்கில், 'குடோன்' உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா உள்பட, ஐந்து பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று கைது செய்தனர். இவர்களை, 15 நாள் சிறையில் அடைக்க, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாதவ ராவ். இவர் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை, சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் கோடவுனில் மறைத்து வைத்திருந்தார். 2016ல், இவரது வீடு அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலருக்கு 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்த தகவல்கள் அடங்கிய 'டைரி' சிக்கியது. இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.


இதையடுத்து குட்கா கோடவுன் உரிமையாளர் மாதவ ராவிடம் விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து, கோடவுனுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

இந்நிலையில் மாதவ ராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகளில் நேற்று முன்தினம், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கோடவுன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கலால் வரி துறை அதிகாரிகள் வீடுகள் உள்பட சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை என மொத்தம் 40 இடங்களில் சோதனை நடந்தது.

தமிழக டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் உள்ள ஆவணங்கள் வங்கிக் கணக்குகளை சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தகவல் வெளியானது. முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நேற்று முன்தினம் துவங்கிய சோதனை நேற்று காலை வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை ராயபுரம், போலீஸ் குடியிருப்பில் உள்ள, இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வீட்டை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை 'சீல்' வைத்தனர்.

துாத்துக்குடிக்கு மாற்றலாகி சென்ற பின்னும் இந்த வீட்டை அவர் காலி செய்யவில்லை. நீண்ட காலமாக பூட்டி வைத்திருப்பதால் அதில் நிறைய ஆவணங்கள் இருக்கலாம் என, சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

15 நாள் காவல்:

குட்கா ஊழல் வழக்கில் கோடவுன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, செந்தில்முருகன் மற்றும் கலால் வரி துறை அதிகாரி, எம்.கே.பாண்டியன் ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை கைது செய்தனர்.

நீண்ட நேர விசாரணைக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருநீலபிரசாத் முன் ஐந்து பேரையும் ஆஜர்படுத்தினார். இவர்களை செப்., 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்டாலின் வலியுறுத்தல் :

அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி: 'குட்கா' விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவருடைய உறவினர்கள் நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தமிழக வரலாற்றில் முதல் முறையாக போலீஸ் டி.ஜி.பி., வீட்டிலும் அவரது அலுவலகத்திலும் சி.பி.ஐ., சோதனை நடந்துள்ளது. அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் இவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அமைச்சர், டி.ஜி.பி.,யை, உடனே கைது செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

ஆராய்ச்சி செய்யாத பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, 'கட்'

Added : செப் 07, 2018 00:56




'ஆராய்ச்சிகளில் ஈடுபடாத பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வு இல்லை' என, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், தமிழகம் முழுவதும், 600க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் மற்றும் கட்டடவியல் மேலாண்மை கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு, இணை பேராசிரியர்களாகவும்; இணை பேராசிரியர்களுக்கு, பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகின்றன.

ஆனால், கடந்த ஆண்டு களில், பதவி உயர்வு வழங்கியதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என, உயர் கல்வித் துறை கண்டறிந்துள்ளது.அதனால், இந்த ஆண்டு முதல், பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின் அடிப்படையில் மட்டுமே, பதவி உயர்வு வழங்க, அண்ணா பல்கலை முடிவு செய்து உள்ளது.இது குறித்து, கடந்த வாரம், அண்ணா பல்கலையில் நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, 'பதவி உயர்வுக்கு தகுதி பெறும், உதவி மற்றும் இணை பேராசிரியர்கள், பிஎச்.டி., என்ற ஆராய்ச்சி படிப்பில், குறைந்தபட்சம், ஒரு மாணவரையாவது உருவாக்க வேண்டும்.

'யு.ஜி.சி., அங்கீகரித்த பிரபலமான ஆய்வு இதழ்களில், குறைந்தபட்சம், இரண்டு ஆய்வு கட்டுரை கள் வெளியிட்டிருக்க வேண்டும்' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.பதவி உயர்வுக்கு விண்ணப்பித்தோர் குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தர் தலைமையிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, சுயமாக முடிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், 1,884 பேர், பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 600 பேருக்கு மட்டுமே, புதிய விதிகளின்படி பதவி உயர்வு கிடைக்கும் என, கூறப்படுகிறது.

- நமது நிருபர் -
துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்

Added : செப் 07, 2018 00:28

சென்னை:துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ம் தேதி துவங்குகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., - பி.ஓ.டி., உள்ளிட்ட, 15 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில், 8,000; நிர்வாக ஒதுக்கீட்டில், 4,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 10ல் துவங்கி, 19ல் முடிகிறது.மேலும், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 20க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பல் மருத்துவ படிப்புக்கு மீண்டும் கவுன்சிலிங்

Added : செப் 07, 2018 02:57

சென்னை:தனியார் பல் மருத்துவ கல்லுாரி களில் உள்ள, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், வரும், 10ம் தேதி துவங்குகிறது.தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.டி.எஸ்., படிப்புக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்து உள்ளது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 264 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில், 569 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, இதுவரை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்காதோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இதன்படி, 207 பேர் புதியதாக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கவுன்சிலிங், வரும், 10ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நடைபெற உள்ளது. அரசு ஒதுக்கீட்டிற்கு, காலை, 9:00 மணிக்கும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, பிற்பகல், 2:00 மணிக்கும் கவுன்சிலிங் துவங்கும்.இது குறித்து, மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:பல் மருத்துவ இடங்களுக்கு புதிதாக விண்ணப்பித்தோர்; ஏற்கனவே விண்ணப்பித்து, கவுன்சிலிங்கில் பங்கேற்காதோர்; கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை கைவிட்டோர் என, அனைவரும் பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அற்புதம்மாள் கூறியுள்ளார்.

பதிவு: செப்டம்பர் 07, 2018 05:30 AM
சென்னை,

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று இருக்கிறார். வண்டலூர் ஓட்டேரி இல்லத்தில் அவரை தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இது குறித்து பேரறிவாளனின் தாயார் தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் தினத்தந்தி நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக முடிவு எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறதே?

பதில்:-இப்போது தான் கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 27 ஆண்டு காலம் நடந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை முடித்து வைத்து இருக்கிறது. மாநில அரசுக்கு முழு உரிமை இருக்கிறது என்பதை நீதிபதிகள் உறுதி செய்து இருக்கிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மேலும் சிறையில் வைக்க வேண்டாம், வெளியே விட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை கருத்தில் கொண்டு, கவர்னரிடம் ஆலோசனை செய்தோ அல்லது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை போல் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியோ என் மகன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வேண்டுகோள். இந்த விஷயத்தில் இனியும் கால தாமதம் செய்யக்கூடாது.

கேள்வி:- முதல்-அமைச்சரை சந்தித்து, அவர்களின் விடுதலை குறித்து நேரில் வேண்டுகோள் விடுக்க இருக்கிறீர்களா?

பதில்:- இந்த தீர்ப்பின் முழு விவரம் வந்ததும் நான் முதல்-அமைச்சரை சந்திப்பேன். நாளைக்கு (இன்று) போகலாம் என்று நினைக்கிறேன். தீர்ப்பின் முழு விவரம் வேண்டும், மனு தயார் செய்ய வேண்டும் அல்லவா?. வக்கீல்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கேட்டு மனு தயார் செய்ய வேண்டும்.

கேள்வி:-இந்த தருணம் உங்களுக்கு எப்படி உள்ளது?

பதில்:-நம்பிக்கையாக இருக்கிறதுப்பா... இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

NEWS TODAY 29.06.2026