Monday, September 10, 2018

நாடு முழுவதும் இன்று 'பந்த்' பஸ், ரயில், ஆட்டோ ஓடுமா

Added : செப் 10, 2018 03:56

புதுடில்லி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று 'பந்த்' அறிவிக்கப்பட்டு இருப்பதால் பஸ், ஆட்டோ போக்குவரத்து பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

பெட்ரோல், டீசல் விலை எகிறி வருகிறது. சென்னையில் ஆகஸ்ட் 30ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 81.40 ஆக இருந்தது. நேற்று 83.22 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோல் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று 'பந்த்' நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காலை 9:00 மணிக்கு துவங்கி மாலை 3:00 வரை 'பந்த்' நடக்கிறது. அதன்பின் 4:00 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் மட்டும் 5:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் இக்கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் பஸ் மற்றும் ஆட்டோக்களை ஓட்ட முடிவு செய்து உள்ளனர். தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஐ.என்.டி.யு.சி., - தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., போன்ற தொழிற்சங்கத்தினர் பஸ் மற்றும் ஆட்டோக்களை இயக்குவது இல்லை என முடிவு செய்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் இன்று குறைந்த அளவே பஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் மற்றும் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இருக்காது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி.,க்கள் முன்னின்று கவனிக்க வேண்டும் என டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டாய கடையடைப்புக்கு மிரட்டல் விடுப்போர் மற்றும் பஸ்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

மதுரையின் புதிய அடையாளமாக மாறுகிறது பெரியார் பஸ் ஸ்டாண்ட்

Added : செப் 10, 2018 01:09




மதுரை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இத்திட்டத்தில் மீனாட்சி கோயிலை சுற்றிய 3100 ஏக்கரில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நவீனமாகும் பஸ் ஸ்டாண்ட் : பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி பார்க்கிங், சுற்றுலா, வைகை மேம்பாடு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த 131 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்கள் இணைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். தற்போதைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் இடத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம், வணிக வளாகம் அமைகின்றன. இரு பஸ் ஸ்டாண்ட்களையும் பிரிக்கும் ரோடு மீது பாலம் அமைகிறது. பழங்காநத்தத்திலிருந்தும், சிம்மக்கல்லிலிருந்தும் வாகனங்கள் பாலம் வழியாக செல்ல முடியும்.

கடைகளை காலி செய்ய நோட்டீஸ் : ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மாநகராட்சி இடத்தில் கடைகள், விடுதி, டூவீலர் பார்க்கிங் செயல்படுகின்றன. இவற்றை காலி செய்தால் தான் பணிகளை துவக்க முடியும். அதற்கு ஏற்ப வரிபாக்கிகளை செலுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. காலி செய்யவும் நோட்டீஸ் வழங்கப்படும்.

டூரிஸ்ட் பிளாசா : இங்கு தற்போதுள்ள சைக்கிள் ஸ்டாண்ட்டில் சுற்றுலா பணிகளுக்கான தகவல்கள், சுற்றுலாவை மேம்பாடுத்துவதற்கான வசதிகளை உள்ளடக்கிய 'சுற்றுலா பிளாசா' அமைகிறது. 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இங்கிருந்து மீனாட்சி கோயிலுக்கு பேட்டரி கார்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து மதுரையிலுள்ள பாரம்பரிய சின்னங்கள் பொலிவுப்படுத்தப்படவுள்ளன.

விரைவில் பணிகள் : திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. புராதன சின்னங்களை மேம்படுத்துதல் மற்றும் கலாசார மையம் அமைக்க 63 கோடி, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி கார் பார்கிங் 28 கோடி, வைகை கரை மேம்படுத்த 93 கோடி மற்றும் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கும் 130 கோடி ரூபாயில் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.கமிஷனர் அனீஷ்சேகர், '' சில திட்டங்களுக்கான டெண்டர் செப்., 20 முடிகிறது. ஒரே நேரத்தில் அனைத்து பணிகளும் துவங்கும். ஒவ்வொரு பணி முடிப்பதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம்

Added : செப் 09, 2018 23:55


ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி சன்னிதியில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் செப். 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.அன்று காலை 10:30 மணிக்குமேல் 11:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. அதனை தொடர்ந்து தினமும் காலையில் மண்டபம் புறப்படுதலும், இரவு திருவீதி புறப்பாடும் நடக்கிறது. செப்.17 இரவு தங்ககருடசேவையும், செப். 19 பெரியபெருமாள் சயனசேவையும், செப்.21 அன்று செப்புதேரோட்டமும், செப்.26 பகல்பத்து மண்டபத்தில் புஷ்பயாகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


பாலியல் சலுகை கேட்பதும் லஞ்சம் தான்ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்

dinamalar 10.09.2018

புதுடில்லி: பணியை முடிப்பதற்காக, பாலியல் சலுகை கேட்பதையும் லஞ்சமாகவே கருதும் வகையில், புதிய சட்டம்நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தக் குற்றத்துக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.





அரசு ஊழியர்கள், லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில், லஞ்சத் தடுப்புச் சட்டம், 1988ல் அமலுக்கு வந்தது. தனியார் நிறுவனங்களையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையில், 2013ல், திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பணம் மற்றும் பிற சலுகைகள் பெறுவதே, லஞ்சம் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், பணம் மற்றும் பிற சலுகைகள் என்ற வார்த்தைக்கு மாற்றாக, மட்டு மிஞ்சிய சலுகை என்று மாற்ற லாம் என, சட்டக் கமிஷன், 2015ல் பரிந்துரை செய்தது. அதாவது, சட்டப்பூர்வமான சம்பளத்தைத் தவிர, பிற வழிகளில் கிடைக்கும்

பொருட்கள், சலுகைகள் உள்ளிட்டவற்றையும் லஞ்சம் என்ற பொருளின் கீழ் கொண்டு வர வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, பணம் மற்றும் பணத்தின் மதிப்புக்கு நிகரான பொருட்களுடன், பிற வகைகளில் கிடைக்கும் சலுகை உள்ளிட்டவற்றையும் சேர்க்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டது. பாலியல் சலுகை கேட்பது, கிளப் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்டவையும் லஞ்சமாகக் கருதவேண்டும் என, கூறப்பட்டது. சட்டக் கமிஷன் பரிந்துரை குறித்து, பார்லிமென்ட் குழு பரிசீலனை செய்தது. சில கூடுதல் விதிகளுடன், லஞ்சத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சமீபத்தில், இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திருத்தத்தின்படி, பாலியல் சலுகை கேட்பது, கிளப்களில் உறுப்பினராக சேர்ப்பது, தன் குடும்பத்தார் அல்லது நண்பர்களுக்கு வேலை கேட்பது, கடன்களை அடைக்கச் சொல்வது உள்ளிட்டவையும் குற்றமாக பார்க்கப்படும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதை தவிர, இந்தச் சலுகைகளை லஞ்சமாக அளிப்பவர் மீதும் வழக்கு தொடரப்படும். அவர்களுக்கும், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கு முன் இருந்த சட்டத்தில், லஞ்சம் கொடுப்பவருக்கு சிறை தண்டனை விதிப்பது சேர்க்கப்படவில்லை.

கொடுத்தாலும் குற்றம்! :

இந்த சட்டத் திருத்தம் குறித்து, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது: பணமாக பெறுவதை தவிர்த்து, அதிகாரிகள், பல்வேறு வழிகளில் லஞ்சம் வாங்கி வருகின்றனர். அதைத் தடுக்கும் வகையில், 'மட்டுமிஞ்சிய சலுகை' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, பரிசுகள், இலவசங்கள் பெறுவது, வெளிநாட்டு சுற்றுலா பயணம், விமான டிக்கெட் பெறுவது, ஓட்டலில் தங்குவது என, எந்தச் சலுகை பெற்றாலும் அதுவும் லஞ்சமாகவே கருதப்படும். கடனை அடைக்கச் சொல்வது, நிலம் அல்லது வீடு என, எதுவாக இருந்தாலும், அது லஞ்சமாகும். மிகக் குறிப்பாக, பாலியல் சலுகை கேட்பது தற்போது அதிகரித்து வருகிறது. அதனால், பாலியல் சலுகை கேட்பது என்ற வார்த்தை, இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்று முழு அடைப்பு போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும்



எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. சென்னையில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்றும், ஆட்டோ, வேன்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதிவு: செப்டம்பர் 10, 2018 05:46 AM
சென்னை,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

த.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வணிகர் சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் சுமார் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று தெரிகிறது.

தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படாது.

லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் சுமார் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. பணிக்கு வரும் தொழிலாளர்களை பொறுத்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.

சென்னையில் அரசு பஸ்களை தடையின்றி இயங்கும் வகையில் 38 டெப்போக்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையம், பிராட்வே பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பால் விற்பனை நிலையம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் இந்த முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் மருந்தகம், பால் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்குகள் வழங்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட இடதுசாரிகள் சார்பில் காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிற்சங்கத்தினரும் பங்கேற்கின்றனர்.

மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன.

பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த நேரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் மாணவர்கள், பெற்றோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படாமல் இருந்தால் பள்ளிகளுக்கு குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களை அழைத்துவர தனியார் வாகனங்களை தான் ஏற்பாடு செய்துள்ளன. எனவே தனியார் வாகனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவர முடியாத நிலை ஏற்படும்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘தேர்வு காலம் இல்லாமல் மற்ற நாட்களில் முழு அடைப்பு போராட்டம் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் விடுமுறை எடுக்க சொல்லி விடுவோம். ஆனால் காலாண்டு தேர்வு நடக்கும் நேரத்தில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி எங்களை அரசியல் கட்சிகள் தவிக்கவிட்டு இருக்கிறது’ என்றனர்.
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரம்: ‘கவர்னர் நினைத்தால் 1½ மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கலாம்’



ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், கவர்னர் நினைத்தால் 1½ மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று தமிழக முன்னாள் தலைமை குற்றவியல் வக்கீல் பி.குமரேசன் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 10, 2018 05:40 AM
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அமைச்சரவை நேற்று கூடி தீர்மானம் நிறைவேற்றியது. இதுகுறித்து, தமிழக முன்னாள் தலைமை குற்றவியல் வக்கீல் பி.குமரேசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்ப உள்ளனர்.

முன்பெல்லாம் இதுபோன்ற தீர்மானங்கள் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும்போது, அந்த தீர்மான நகலை கவர்னர் மாளிகைக்கு தலைமைச் செயலாளர் நேரடியாக எடுத்துச் சென்று வழங்குவார். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால், ஒரு நொடியில் இ-மெயில் மூலம் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க முடியும்.

தமிழக அமைச்சரவையில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கவர்னரிடம் உள்ளது. அதே நேரம், தமிழக அரசின் இந்த தீர்மானத்தை அப்படியே கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கு அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பலாம்.

தமிழக அரசு விளக்கம் அளித்த பிறகு, அதை ஏற்றுக்கொள்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம். இவர்கள் அனைவரும் நீண்ட காலம் சிறையில் இருப்பதனால், இவர்களை உண்மையிலேயே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், இந்த விடுதலை நடவடிக்கை அனைத்தையும் 1½ மணி நேரத்தில் முடித்து, விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம்.

இழுத்தடிக்க விரும்பினால், அவரது (கவர்னர்) விருப்பப்படி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை



சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 10, 2018 06:00 AM
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை கைதி களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு, அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த வியாழக்கிழமை அறிவுறுத்தியதோடு, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொள்ள முகாந்திரம் இல்லை என்று கூறி அந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தின.

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் பாண்டியராஜன் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று இருப்பதால், அவர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மாலை 4 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்தில், சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை, கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஸ்ரீதரன் என்கிற முருகன், சுதந்திரராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்கிற அறிவு, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் பேரறிவாளனின் மனுவை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161-ன் கீழ் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்த போதிலும், இவரை தவிர மேலும் 6 பேரும் முன் விடுதலை மனுக்களை கவர்னர் மற்றும் அரசுக்கு முகவரியிட்டு அளித்திருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களையும் சேர்த்து 7 பேரையும் முன் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மேற்படி சட்டப்பிரிவின் படி கவர்னருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 7 பேரை விடுவிக்கும் முழு உரிமை மாநில அரசுக்கு உள்ளதா?

பதில்:- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161 என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அடிப்படையில்தான் இன்றைய தினம் அமைச்சரவை கூட்டப்பட்டு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னருக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.

கேள்வி:- சி.பி.ஐ. மூலம் கைது செய்யப்பட்டவர்களை மாநில அரசு விடுவிக்க 161-வது சட்டப்பிரிவு உதவும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- சி.பி.ஐ. விசாரணை, கைது என்பதெல்லாம் முடிந்த கதை. நமக்கு தற்போதைய சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பே முக்கியம். நீதியின் உயரிய கோட்பாடு சுப்ரீம் கோர்ட்டுதான். அந்த அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு முழு அதிகாரமும் கொடுத்து இருக்கிறது. தீர்ப்பும் இதை தெளிவாக கூறுகிறது. உச்சபட்ச தீர்ப்பே கிடைத்திருக்கும்போது வேறு என்ன வேண்டும்?

கேள்வி:- இந்த பரிந்துரை எப்போது கவர்னருக்கு வழங்கப்பட இருக்கிறது?

பதில்:- அமைச்சரவை கூட்டம் விடுமுறை தினத்தில் கூட்டப்பட்டு உள்ளது என்றால் அது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்த பரிந்துரை உடனடியாக கவர்னரிடம் வழங்கப்படும்.

கேள்வி:- மத்திய அரசின் ஆலோசனையை கேட்காமல் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியுமா?

பதில்:- இதில் மத்திய அரசின் ஆலோசனையை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி உள்ளது. அமைச்சரவையின் முடிவை கவர்னர் ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். எனவே இந்த முடிவை அவர் ஒத்துக்கொள்வார்.

மாநில அரசின் அதிகாரம் தெளிவாக உள்ள நிலையில் கவர்னர் இந்த பரிந்துரையை நிச்சயம் ஏற்பார். இதை அவர் மறுக்க முடியாது. மாநில அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கிய பொறுப்பாளர் கவர்னர்தான். எனவே அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அவரது முக்கிய கடமை ஆகும்.

கேள்வி:- தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி காலதாமதம் செய்வாரா?

பதில்:- அப்படி வாய்ப்பு இல்லை. அவர் நிர்வாக தலைவர். மாநில அரசை மதிப்பதும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து நடப்பதும் அவரது கடமை. எனவே காலதாமதம் ஆகாது என்று நம்புகிறோம்.

கடந்த 2014-ம் ஆண்டு 110-வது விதியின் கீழ் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். 2016-ம் ஆண்டு இதேபோல் மீண்டும் ஒரு முயற்சி மேற்கொண்டார். எனவே மக்கள் கோரிக்கையான இந்த பரிந்துரையை அன்றைக்கே மத்திய அரசு ஏற்று இருக்கவேண்டும். எனவே மக்கள் விரும்பும்படியும், ஜெயலலிதாவின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையிலும் இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...