Monday, September 17, 2018

ஆசிரியப் பணியெனும் புனித வேள்வி!

By வெ. இன்சுவை | Published on : 17th September 2018 02:54 AM

இப்போதெல்லாம் காலையில் செய்தித்தாளைப் பிரித்தால், கொலை, கொள்ளை போன்ற செய்திகளுக்கு இணையாக, "ஆசிரியர் மாணவியிடம் சில்மிஷம்', "பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை' போன்ற செய்திகளைப் படிக்கும்போது மனம் வலிக்கிறது. இச்செய்திகள் நம் நெஞ்சைச் சுடுகின்றன. சமுதாயத்தை உருவாக்க வேண்டியவர்களே தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்று எண்ணும்போது நமக்குக் கோபம் வருகிறது.

சிறந்த மருத்துவர்களையும், பொறியாளர்களையும், விஞ்ஞானிகளையும் மேலாண்மை அதிகாரிகளையும், வழக்குரைஞர்களையும் உருவாக்குவது மட்டுமே கல்வி நிறுவனங்களின் பணி அல்ல. சிறந்த மனிதர்களையும், நற்பண்புகளும் மனித நேயமும் கொண்ட நல்ல குடிமக்களையும் உருவாக்க வேண்டும். பால் வைக்கும் பாத்திரம் அழுக்காக இருந்தால் அதில் இடும் பாலும் திரிந்துபோகுமல்லவா? அதேபோல் தான் மனத்துக்கண் மாசுடையவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் அவர்களால் நல்ல குடிமக்களை உருவாக்க முடியாது.

புலனடக்கம் இல்லாதவர் துறவறம் மேற்கொள்ளக்கூடாது. அதேபோல சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாதவர்கள் ஆசிரியர் பணிக்கு வரக்கூடாது. தன்னிடம் பயிலும் மாணவிகளைத் தங்கள் குழந்தைகளாகப் பார்க்க வேண்டாமா? அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது எதில் சேர்த்தி? இப்படிப்பட்ட இழி மக்களுக்குத் தங்கள் செயலின் சாதக, பாதகங்கள் தெரியாமலா இருக்கும்? தங்கள் பணியின் புனிதம் புரியாமலா இருக்கும்?

கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை "ரௌடிகள்' என்று நாம் முத்திரை குத்தி விடுகிறோம். தவறு செய்வது அவர்களின் இயல்பு என்றும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் தவறு செய்வதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. பிள்ளைகளின் அறிவுக் கண்களைத் திறந்து அவர்களுக்கு ஒழுக்கத்தையும், உயர் பண்புகளையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் தவறு செய்யலாமா? வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி? தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் தான் மட்டுமே பொறுப்பு என்று ஏன் அவர்கள் உணரவில்லை?

தற்போது ஆசிரியர்-மாணவர் இடையே புரிதல் இல்லை. காரணம் ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இயந்திரங்களாக மாறிப் போயினர். தன் மாணவர்களின் பிரச்னைகள், குடும்பச் சூழல், சிலர் கற்றலில் பின்தங்கியுள்ளதற்கு காரணங்கள் என எதைப்பற்றியும் தெரிந்து கொள்வதில்லை. ஆனால், அவர்களின் ஜாதி, இனம் பற்றி முதலில் தெரிந்து கொள்கிறார்கள். அக்கால ஆசிரியர் சமுதாயம் பணத்தைவிட சுய கௌரவத்தைப் பெரிதாக நினைத்தது. ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்குக் கூட ஊரில் தனி மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆசிரியரின் சொல்லுக்கு ஊர் கட்டுப்பட்டது.

தங்கள் வறிய நிலை குறித்து அவர்கள் வருந்தவில்லை. சட்டையின் கிழிசலை மேலே போட்டுக் கொண்டிருந்த கோட் மறைத்தது. கறாரும், கண்டிப்பும் அவர்களின் இயல்பாக இருந்த போதிலும் பிள்ளைகள் அவர்களை நேசித்தார்கள். அதற்குக் காரணம் கற்பித்தலில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடே ஆகும். தங்கள் தொழில் மீது அவர்களுக்குப் பக்தி இருந்தது. தம் மாணாக்கரின் முழு திறமையையும் வெளிக் கொணர்வது தங்களது கடமை என்று நினைத்தார்கள். "இவர்கள் என் மாணவர்கள் மட்டுமல்ல என் குழந்தைகளும் கூட. இவர்கள் வாழ்வு வளம் பெற என் அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்துவேன். கல்வியோடு நற்பண்புகளையும் ஊட்ட வேண்டியது என் கடமை' என்றே உறுதியேற்றார்கள்.

வாசிப்பு மட்டுமே அவர்களின் மூச்சாக இருந்தது. கண்டிக்கும்போது கண்டித்து, கனிவு காட்ட வேண்டிய நேரத்தில் கனிவு காட்டி பிள்ளைகளை அரவணைத்துச் சென்றனர். எனவேதான் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டித்தபோது, பெற்றோர்கள் சண்டைக்கு வரவில்லை; மாணவர்களும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆசிரியர் கண்டித்தாலோ அடித்தாலோ நியாயமான காரணம் இருக்கும் என்று நம்பினார்கள். கீழ்த்தரமான எண்ணங்களுக்குத் தங்கள் மனதில் இடம் கொடுத்தது இல்லை.

ஆரம்பப்பள்ளி ஆசிரியராகட்டும், கல்லூரிப் பேராசிரியர்களாகட்டும் குன்றி மணி அளவு கூட ஒழுக்கம் தவறி நடந்தது இல்லை. பணத்தின் முன் மண்டியிட்டதில்லை ; பதவிக்காக குறுக்கு வழியை நாடியதில்லை. தங்களின் தன்மானத்திற்கு இழுக்கு வரும்படி யாரிடமும் யாசித்தது இல்லை. "ஏழை' என்ற சொல் தங்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக் கொண்டது இல்லை. "சரஸ்வதியும், லட்சுமியும் ஒருசேர வாசம் செய்ய மாட்டார்கள்' என்று சமாதானம் கூறிக் கொண்டார்கள்.
வயதில் சிறியவர்கள் ஆனாலும் ஆசிரியர்கள் தந்தைக்கு ஒப்பாவர். "இவர் என் ஆசான். அறியாமை என்னும் இருளைப் போக்கி என் வாழ்வில் ஒளி ஏற்றுபவர்; நான் தவறு செய்யும் போது என்னைக் கண்டித்து நல்வழிப்படுத்துபவர்; இவர் வழிகாட்டலில் நான் வெற்றி பெறுவேன்' என்று மாணவர்கள் நினைத்தார்கள்.

இன்றைக்கு ஏன் எல்லாமே மாறிப்போய் விட்டன? பெரும்பாலான ஆசிரியர்கள் நல்ல முன்னுதாரணங்களாகத் திகழ்வது இல்லையே?
தனி வகுப்பு வைக்க வேண்டும் என்று மிரட்டும் ஆசிரியரை, ஒழுங்காகப் பாடம் நடத்தாத ஆசிரியரை, மாணவர்களைத் தங்கள் சொந்த வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரியரை, எதற்கெடுத்தாலும் பிரம்பு ஒடிய அடிக்கும் ஆசிரியரை, நடத்தை சரி இல்லாத ஆசிரியரை, குடித்துவிட்டுப் பள்ளிக்கு வரும் ஆசிரியரை, மாணவியரிடம் அத்துமீறும் ஆசிரியரை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?

ஆசிரியர் பணியை ஒருவர் விரும்பி ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஈடுபாட்டுடன் செய்ய முடியும். பாடங்களைக் கற்பிக்கும் போது அது அந்தரங்க சுத்தியுடன் ஒலிக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனையைச் செம்மைப்படுத்தி மெருகூட்டும் ஆசிரியர்கள், மேதா விலாசமும், நேர்மையும் சுய கட்டுப்பாடும் கொண்டு திகழ வேண்டும்.
ஒழுக்கமான இளைய சமுதாயத்தை உருவாக்குவது மிக மிக முக்கியம். இன்று பிள்ளைகளின் கவனத்தை சிதறடிக்கப் பல காரணிகள் உள்ளன. தங்களைச் சுற்றியுள்ள வக்கிரங்களில் வழுக்கி விழாமல் மாணவர்கள் இருக்க வேண்டுமானால் அதற்கு ஆசிரியர்கள் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அடித்தட்டுப் பிள்ளைகளுக்குப் பிரச்னை இருந்தால் அவர்கள் யாரிடம் போய்   தங்கள் மனக்குறையைக் கொட்ட முடியும்? குடிகாரத் தந்தை, பொறுப்பில்லாத தாய், மிரட்டும் வறுமை, கூடா நட்பு, குற்றப் பின்னணி என்ன செய்வார்கள் அவர்கள்? சரியான மேய்ப்பர் இல்லாவிட்டால் தடம்மாறிப் போய் விடுகிறார்கள்.

தாங்கள்போகும்பாதையின் விபரீதம் அறியா வயது. அவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை. வெறுமனே புரட்டிப் பார்த்து கையெழுத்துப் போட வேண்டிய கோப்புகள் அல்ல மாணவர்கள். ரத்தமும், சதையும் கொண்ட உணர்ச்சி உள்ள உயிர்கள். மோப்பக் குழையும் அனிச்சம் போன்றவர்கள். சில சமயம் நத்தையாய் கூட்டுக்குள் ஒடுங்கிப் போவார்கள். அவர்களைத் தம் குழந்தைகளாய் பாவித்து, அவர்களின் கை பிடித்து வெற்றிப் பாதையில் அவர்களைப் பயணிக்க வைப்பது ஒரு நல்லாசிரியரின் கடமை ஆகும்.

ஒழுக்கத்தின் மேன்மையை, உண்மையின் பலத்தை அவர்கள் ஒருமுறை ருசித்தால் போதும், அதற்குப் பின் தடம் மாற மாட்டார்கள். நூறு சதவீதம் தேர்ச்சி கொடுப்பவர் மட்டுமே நல்லாசிரியர் ஆகார். அதற்கான பயிற்சி அப்பிள்ளைகளுக்கு நிறைய வலியையும், மனச்கசப்பையும், உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

மதிப்பெண் மட்டுமே வாழ்கை ஆகாது. மாணவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ளச் செய்து, பள்ளிக்கு வருவதை ஒரு கொண்டாட்டமாக அவர்களை நினைக்கச் செய்து எதையும் குருட்டு மனப்பாடம் செய்யாமல் புரிந்து கொண்டு படிக்கச் செய்து, அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர ஒரு தூண்டுகோலாய் இருப்பவரே நல்லாசிரியர். ஆசிரியப் பணியை அனைத்து ஆசிரியர்களும் அகம் மகிழ்ந்து புனித வேள்வியாய் எடுத்துக் கொண்டால் சிறந்த சந்ததியினரை உருவாக்க முடியும்.

ஆசிரியர்களில் சிலர் தங்களின் தார்மிகப் பொறுப்பை உணராமல் கீழ்த்தரமாக நடந்துகொள்வதைப் பார்க்கும்போது நமக்கு வருத்தம் மேலோங்குகிறது. என்ன பிறவிகள் இவர்கள் என நினைக்கத் தோன்றுகிறது. அப்படிக் கூட மிருக இச்சை தோன்றுமா? பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பும்கூட அந்த ரணம் ஆறாமல் இருக்குமே. ஆண்கள் மேல் ஒருவித வெறுப்பும், பயமும், அருவருப்பும் தோன்றுமே.
இந்த மோசமான நிகழ்வு அந்தக் குழந்தையின் குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும்? இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? விபரம் தெரியாத, புரியாத பிஞ்சுகளிடமா தங்கள் வக்கிரத்துக்கு வடிகால் தேடுவது? சே! வெட்கக்கேடு. ஒரு சில கரும் புள்ளிகளால் நல்லவர்களும் அவமானம் அடைகிறார்கள். இனியாவது இந்த அவலம் மாற வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தொடர்ந்து உச்சம்! பெட்ரோல் ரூ.85.31.. டீசல் ரூ.78.00.
.
Added : செப் 17, 2018 06:24

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.31 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.00 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.31 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 6 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாகவும் உள்ளன
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

Added : செப் 16, 2018 22:28




தேனி: தேனி வடபுதுப்பட்டி மகாலட்சுமி கோயிலில் பக்தர்களை சாட்டையால் அடித்து, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்திய வினோத திருவிழா நடந்தது.தேனி வடபுதுப்பட்டி ஜெ.,ஜெ., காலனியில் குரும்ப கவுண்டர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி கோயில் உள்ளது. 31 ஆண்டாக சக்தி தேங்காய் திருவிழா ஓராண்டு விட்டு மறு ஆண்டு நடத்தப்படுகிறது.நேற்றுமுன்தினம் மகாலட்சுமிக்கு காலை 6:00 மணிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.2வது நாளான நேற்று கோயில் முன் நெய் தீபமிட்டு, பக்தர்களை சாட்டையால் அடித்தும், பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் சக்தி தேங்காய் பூஜை நடந்தது.விழா நிர்வாகக்குழுத் தலைவர் முருகேசன் கூறியதாவது: மக்கள் வேண்டிக்கொண்ட விஷயங்கள் நடந்து விடுவதால் அந்த நம்பிக்கையில் மறு ஆண்டே விரதம் இருந்து சக்தி தேங்காய் பூஜையில் பங்கேற்கின்றனர். சாட்டை அடி நேர்த்திக்கடனும் அவர்களின் விருப்பப்படியே நடக்கிறது,''என்றார்.
'ஆரிராரோ.. ஆராரிராரோ...' 18 ஆண்டுகளாய் காத்திருக்கும் மகள் : படுக்கையில் கிடக்கும் மகளுக்கான பாசப்போராட்டத்தில் தாய்

Updated : செப் 17, 2018 00:22 | Added : செப் 16, 2018 23:00




மதுரை: ''18 ஆண்டுகளாய் படுக்கையில் கிடக்கும் ஒரு மனுஷிக்கு இதை விட வேறு என்ன கஷ்டம் தான் வந்துவிடப் போகிறது,'' என கதறும் ஒரு தாய். ''அம்மாவின் குரலை ஒரு முறைகூட கேட்கவில்லை,'' என 18 ஆண்டுகளாக பதறும் மகள், என ஒரே குடும்பத்தில் மூன்று பெண்களின் சோக, பாசப்போராட்டம் நெஞ்சை பிழிகிறது.

வலியின் வாழ்க்கை :
 
குமரி மாவட்டம் பொன்மனை அருகே உள்ள இடைக்காட்டன்காலை கிராமத்தை சேர்ந்தவர் வனஜா,60. இவரது கணவர் சோமன். போலீஸ் ஏட்டாக பணிபுரிந்தார். இவர்களது மூத்த மகள் ஷோபா, 38. பிளஸ் 2 படித்திருந்த ஷோபாவிற்கும், அதே பகுதியில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ரமேஷ்பாபுவிற்கும் 1998ல் திருமணம் நடக்க, மகிழ்ச்சியில் நாட்கள் நகர்ந்தன.''எங்களுக்கு வாய்த்த இந்த கொடிய வாழ்க்கை உலகில் யாருக்கும் வாய்க்கக்கூடாது... இந்த வலிகளை தாங்கி தாங்கி இனி அழுவதற்கு என்னிடம் இனி கண்ணீரும் இல்லை,'' என தன் வலிகளை வார்தைகளாக்குகிறார் வனஜா...

''மகள் ஷோபாவின் பிரசவத்திற்காக எல்லோரும் சந்தோஷமாக குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் 2000 மார்ச் 3ல் கூடியிருந்தோம்.'சிசேரியன்' என்றார்கள். முடிந்ததும் அறையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. எங்களுக்கு எல்லாம் மிகுந்த மகிழ்ச்சி. சில மணி நேரம் ஆகியும் இருவரையும் எங்களிடம் காட்டவில்லை. சண்டை போட்டு அறையின் உள்ளே சென்று பார்த்தால் மகள் ஜன்னியால் துடித்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் மாறிவிடும் என்றனர். உடல் அசைவற்று கோமா நிலைக்கு சென்றுவிட்டாள். மருத்துவ சிகிச்சையில் எங்கோ தவறு நடந்து விட்டது என்பதை மட்டும் எங்களால் உணர முடிந்தது. வேறு மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல அங்கு ஆம்புலன்ஸ் இல்லை. அன்று அது நிஜமாகவே சிவராத்திரியாகவும் இருந்தது.

துரத்தும் மருத்துவம் : 

''நாகர்கோயிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் சேர்த்தோம். அவளது கோமா நிலை மாறுமா என்று எல்லோரும் ஏக்கத்தோடு காத்திருந்தோம். அவள் பெற்றெடுத்த மகளை (ஆதர்ஷா) அப்போது யாரும் கவனிக்கவில்லை. ஷோபாவுக்கு கபம் ஏறிவிட்டது. தொண்டை கழுத்து, பக்கவாட்டில் ஓட்டை போட்டு சிகிச்சை அளித்தார்கள். 40 நாட்கள் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

எங்களது மொத்த சம்பாத்தியமும் தீர்ந்தது. அங்கு இந்த சிலர் குழந்தை நன்றாக தானே இருக்கிறது. அவளை கவனியுங்கள் என சொல்ல எனது அக்கா ேஹமாவதி அங்கு பராமரித்தார். அதன் பின் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரி, நெய்யாற்றின்கரை தாலுகா மருத்துவனை என 6 மாதங்கள் மருத்துவமனை வாழ்க்கையானது.

செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. நாங்கள் நலமாக்கிக் காட்டுகிறோம் என சில டாக்டர்கள் சொல்ல அவர்களது மருத்துவமனை என இப்படி பல ஆண்டுகளை கடந்தோம். 2012 ல் அனந்தபுரி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கும் கஷ்டங்கள் தீர்ந்தபாடில்லை. பேத்தி ஆதர்ஷாவின் நிலையை பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கும். கடன் பிரச்னை, கஷ்டம் இப்படி எல்லாம் இழந்த நான் அப்பா குஞ்சன்பிள்ளை வீட்டில் அடைக்கலமானேன். அங்கு என்து அம்மா குட்டியம்மா, ஆதர்ஷாவை முழுமையாக அரவணைத்துக் கொண்டார். வீட்டில் ஷோபாவை கவனிக்கும் வகையில் சிறு வசதிகளை ஏற்படுத்தினோம்.

அதிர்ச்சிக்கு பஞ்சமில்லை : 

மகளின் இந்த நிலையை பார்த்து துவண்டுபோன எனது கணவர் சோமனும் 2003 ம் ஆண்டில் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார். மூன்றாவது நாள் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கடிதம் வந்தது. மருத்துவ சிகிச்சை தொடர்பாக தக்கலை நுகர்வோர் கோர்ட்டில் ஆதர்ஷாவின் அப்பா ரமேஷ்பாபு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நாகர்கோயிலுக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் எங்களுக்கு தெரியாமல் வேறு பெண்ணை ரமேஷ்பாபு திருமணம் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கும் பதிவானது. இந்த வழக்குகள் எல்லாம் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டன. நுகர்வோர் நீதின்றத்தில் ரமேஷ்பாபு தொடர்ந்த வழக்குகளில் அவருக்கு பதில் நான் ஆஜராக வேண்டிய நிலை வந்தது. இப்படி நீதிமன்றம், மகளின் மருத்துவம், பேத்தியின் தனிமை என மனசு முழுவதும் உடைந்து போனது.நெஞ்சம் உடைகிறது''ஷோபாவை கவனிப்பதில் உள்ள சிரமங்கள் சொல்லிமாளாது. இப்போது சாப்பிடுகிறாள். உணவு ஊட்டும் போது கையை கடித்து வைத்து கொள்வாள். அவை புண்களாகி, வடுக்களாகவும் மாறிவிட்டன. சிறு வயதில் மிகவும் அழகாக இருப்பாள்.

இப்போது பற்கள் பாதிக்கப்பட்டுவிட்டன. அவளை துாக்கி உட்கார வைக்க முடியவில்லை. எனக்கும் நெஞ்சு வலி, சுகர், பிரஷர் வந்து விட்டது. ஆதர்ஷாவின் பாசத்துக்குரிய எனது அம்மா குட்டியம்மாவும் இறந்துவிட்டார். சிலநேரம் ஷோபாவை நினைத்து கோபப்படுவேன். அதை பார்த்துவிட்டு ஆதர்ஷா 'எனது அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள்' என என்னிடம் கேட்டு அழுது கொண்டு குடியம்மா கல்லறையில் போய் உட்கார்ந்துவிடுவாள். அது என் நெஞ்சை அடித்து உடைத்தது போன்ற வலியை தரும். எனது கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. (என சொல்கையில், அருகில் இருந்து கேட்கும் நபர்களின் கண்களில் தண்ணீர் ஓடுகிறது). எனக்கு என் மகள் நலம்பெறுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என பேச்சை முடித்த போது, கல்லுாரிக்கு சென்றிருந்த ஆதர்ஷா வீட்டிற்குள் நுழைந்தார்.

மகளின் அவதாரம் :
ஆதர்ஷா தக்கலை அருகே குமாரகோவிலில் உள்ள நுாருல் இஸ்லாம் கலைக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ., ஆங்கிலம் படிக்கிறார். தனது சோகங்களை தெய்வத்திடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் இதயத்தை கொண்டிருக்கிறார். ''குழந்தையாக இருந்து இதுவரையிலும் நான் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. வலிகளில் தான் வாழ்ந்துவருகிறேன்,'' என்றார். ஆறுதலாக இருந்த குட்டியம்மாவும் போய்விட்டார். அம்மாவுடன் சேர்ந்து அடிக்கடி 'செல்பி' எடுப்பதும், காதருகே பேசுவதும், சிரிக்கவைக்க முயற்சிப்பதுமாக இருக்கும் ஆதர்ஷாவுக்கு எதிர்காலம் பெரிய கேள்விக்குரியாகவே முன்னிற்கிறது.

அதிர்ந்த ஆதர்ஷா : 

தனது நிலை பற்றி ஆதர்ஷா அரசுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். கவர்னர் இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது தான் கல்லுாரி முதல்வருக்கே ஆதர்ஷாவின் நிலை தெரிந்திருக்கிறது. தவறான சிகிச்சையால் தனது தாய் கோமா நிலையில் இருப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி சுந்தரேஷூக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 'ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி டீன், டாக்டர்கள் குழு அமைத்து பரிசோதிக்க வேண்டும். சிகிச்சையின் அடிப்படையில் குணப்படுத்த முடியுமா அல்லது கருணை கொலை செய்ய வேண்டுமா,' என செப்., 25ல் அறிக்கை தாக்கல் செய்ய செப்., 11ல் நீதிபதி உத்தரவிட்டார்.

'கருணை கொலை' வார்த்தையால் துடிதுடித்துப்போனார் ஆதர்ஷா. பள்ளி, கல்லுாரியில் பெறும் வெற்றிகளை வீட்டின் அருகில் உள்ள இசக்கி அம்மன் கோயிலில் சென்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஆதர்ஷா, அந்த கோயில் முன் அழுது புரண்டார். அவரை ஆறுதல்படுத்தி தேற்றியுள்ளனர்.

தெய்வமே துணை : 

அம்மாவின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள ஆதர்ஷா பேசுகிறார்... அம்மாவை நான் தினமும் பார்க்கிறேன். ஆனால் அவரது குரலை ஒரு நாள் கூட கேட்டது இல்லை. அம்மாவின் தாலாட்டை கேட்க சின்ன வயசில் ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு நடனம் மீது ரொம்ப ஆசை. பல நிகழ்ச்சிகளில், போட்டிகளில் ஆடியிருக்கிறேன். அப்போது என்னோடு ஆடும் பிள்ளைகளின் பெற்றோர் வந்து ஊக்கப்படுத்துவதும், முத்தம் கொடுப்பதை ஏக்கத்தோடு பார்ப்பேன்.

எனக்கு யாருமே இருக்க மாட்டார்கள். அந்த தனிமை என்னை ரொம்பவே பாதித்தது. கோ - கோ விளையாட்டிலும் நான் இதை உணர்ந்தேன். அதன் பின் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து விட்டேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பறையில் எங்கள் ஆசிரியை ஒரு பெண் கோமா நிலையில் பல ஆண்டுகள் படுத்துகிடப்பதாகவும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் எனது கதையை பற்றி ஒரு மீடியாவில் வந்ததை பார்த்து சொன்னார். அப்போது என் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஒரு மாணவி அந்த கதைக்குரிய மாணவி இவர் தான் என சொன்ன போது அந்த ஆசிரியை அழுதுவிட்டார்.

என்கதை என்னோடு என்று இருந்துவிடுவேன். யாரிடமும் என் அம்மா, அப்பா பற்றி பகிர்ந்து கொள்வது இல்லை. அம்மாவை விட்டு அப்பா போய்விட்டாலும், நான் இன்னமும் அப்பாவின் பாசத்தை எதிர்பார்க்கிறேன். இப்போது தான் எனது கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என நீதிமன்றத்திலும் கோரிக்கை வைத்தேன்.

சோகங்களை பாடல்கள் கேட்டும், அருகில் உள்ள இசக்கி அம்மன் கோயிலும், பூட்டியின் கல்லறையிலும் சொல்லி என்னை தேற்றிக்கொள்கிறேன். சில நேரங்களில் பெற்றோரே இல்லாதவர்களை நினைத்து ஆறுதலடைவேன். ஆனாலும் எனக்கு உள்ள ஒரே நம்பிக்கை, என் அம்மா எழுந்து நடப்பார்கள் என்பது தான். அனைவருக்கும் அம்மா எப்போதும் மதிப்புக்குரியவள். அவள் இல்லாத உலகம் வெறுமையானது. அம்மா ஐ லவ் யூ.

தொடர்புக்கு:
94424 72865aadharshababu@gmail.com- டபிள்யு.எட்வின்
மருத்துவ மாணவிக்கு குவியும் நிதியுதவி

Added : செப் 17, 2018 00:35

பெரம்பலுார்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, மருத்துவ மாணவிக்கு, வாசகர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர். பெரம்பலுார், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், கனிமொழி, 21. பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்த பணமின்றி, கூலி வேலைக்கு சென்றார்.இது குறித்து, நமது நாளிதழில், 12ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, 'தினமலர்' வாசகர்கள், மாணவி கனிமொழியின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கு எண்ணை பெற்று, தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.கனிமொழி கூறியதாவது:வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எனக்கு, நிதியுதவி பெற்றுத் தந்த, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. செய்தி வெளியான நாள் முதல் இன்று வரை, இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், 'தினமலர்' வாசகர்கள், எனக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
'ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது' : கவர்னருக்கு 14 பேர் குடும்பத்தினர் மனு

Added : செப் 16, 2018 23:02

சென்னை; 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது' என, ஸ்ரீபெரும்புதுாரில், அவருடன் பலியான, 14 பேர் குடும்பத்தினர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, இ - மெயில் வாயிலாக, மனு அனுப்பியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்; இவர், 1991 மே, 21ல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது, விடுதலை புலிகளின் தற்கொலை படையினரால், கொடூரமாக கொல்லப்பட்டார். அவருடன் போலீஸ் அதிகாரிகள் உட்பட, 14 பேர் பலியாகினர்.இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஏழு பேரை விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, தமிழக அரசுபரிந்துரை அனுப்பியுள்ளது.இந்நிலையில், 'ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது' என, அவருடன் பலியான, 14 பேர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.'

நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்த ஏழு பேரையும் விடுதலை செய்தால், அது, தவறான முன் உதாரணம் ஆகிவிடும். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ராஜிவுடன், எங்கள் உறவினர்கள், 14 பேரை பலி கொடுத்து உள்ளோம். அவர்கள் என்ன பாவம் செய்தனர்' என்றும், கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், 14 பேர் குடும்பத்தினரும், ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக கவர்னருக்கு, 'இ - மெயில்' வாயிலாக, மனு அனுப்பி உள்ளனர்; நேரில், மனு அளிக்கவும் முயற்சித்து வருகின்றனர்.இதுதொடர்பாக, 14 பேர் குடும்பத்தாரை ஒருங்கிணைத்து வரும், அப்பாஸ் கூறுகையில்,''ராஜிவ் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். அவருடன், ஒரு பாவமும் அறியாத, 14 பேர் பலியாகி உள்ளனர். கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்வது, குற்றத்தை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும்,'' என்றார்.

விடுதலை கிடைக்குமா : ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக 2014-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. காங்கிரசை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பலாம்' என சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது. அதனால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக இன்று முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இ - டிக்கெட்' முன்பதிவு : 5 சதவீத கட்டண சலுகை

Added : செப் 16, 2018 21:05


ரயில்களில், 'பிம்' மொபைல் போன் செயலி யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு, 5 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியர், உணவு, 'பெட்ஷீட்' உள்ளிட்டவற்றையும் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பயணியர் அலைச்சலை போக்கும் விதமாக, 'இ - டிக்கெட்' பெற, புதிய மொபைல் போன் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, 'பிம்' எனும் செயலி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, பயணியரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, 'பிம்' செயலி மூலம் டிக்கெட் பெறும் பயணியருக்கு, அடுத்தாண்டு ஜூன், 13 வரை, 5 சதவீதம் டிக்கெட் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -



NEWS TODAY 03.07.2026