Wednesday, October 3, 2018


தேர்வுக்குத் தயாரா? - பிளஸ் 2 தமிழில் இருந்து தொடங்குவோம்!

Published : 02 Oct 2018 12:48 IST




பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்குப் பல புதிய மாற்றங்களுடன் நடப்புக் கல்வியாண்டு செல்கிறது. இதனால் ஆண்டுதோறும் அரசு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் 'தேர்வுக்குத் தயாரா’ பகுதி, இந்தாண்டு வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்குகிறது. இதில் தேர்வுக்குத் தயார்படுத்தும் கடைசி நேர அவசியக் குறிப்புகள் மட்டுமின்றி புதிய மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறியலாம்.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் விடைத்தாள் திருத்தலை விரைந்து முடிக்கவும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழித் தாள்களின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. தலா இரண்டு என்றிருந்ததைத் தலா ஒன்று என்பதாகக் குறைத்திருக்கிறார்கள். பிளஸ் 2 மதிப்பெண்களும் பிளஸ் 1 போலவே தாளுக்கு 200 என்பது 100 ஆக மாறுகிறது.

மதிப்பெண்கள் சுருங்கினாலும், புதிய பாணியிலான வினாத்தாளை எதிர்கொள்ள மாணவர்கள் முன்பைவிட முனைப்பாகப் படிக்க வேண்டியுள்ளது. உயர்கல்விக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பாக, பிரதானப் பாடங்களின் தாள்களைப் பயிற்சி வினாக்களுக்கு அப்பால் பாடம் முழுமைக்கும் படிக்க வேண்டும். அதற்கொப்ப, மொழி பாடங்களிலும் 'புளூ பிரிண்ட்’ என்ற வரம்புக்குள் அகப்படாது வினாத்தாள்கள் அமைக்கப்படுகின்றன. எனவே ஏனைய பாடங்களுக்கான முக்கியத்துவத்தை மொழிப் பாடங்களுக்கும் இப்போதிருந்தே மாணவர்கள் வழங்குவது, தேர்வு நேர நெருக்கடிகளைக் குறைக்கும்.

பிளஸ் 2 தமிழ் தாள்

100 மதிப்பெண்களுக்கான தமிழ் தாளில், 10 மதிப்பெண்கள் அகமதிப் பீட்டுக்கானது. வருகைப் பதிவேடு, உள்நிலைத் தேர்வுகள், ஒப்படைவு, செயல்திட்டம், கல்வி இணைச் செயல்பாடுகள் போன்றவை இந்த அகமதிப்பீடு மதிப்பெண்களைத் தீர்மானிக்கின்றன. ஏனைய 90 மதிப்பெண்களைப் பொதுத் தேர்வு தீர்மானிக்கும்.

இந்த 90 மதிப்பெண்களும் செய்யுள், உரைநடை பகுதிகளை உள்ளடக்கிய 'பகுதி அ’ (50 மதிப்பெண்கள்), இலக்கணம், துணைப் பாடம், மொழிப் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ‘பகுதி ஆ’ (40 மதிப்பெண்கள்) எனவும் இரண்டாகப் பிரித்து வினாத்தாளில் கேட்கப்படுகின்றன. (அரசு பொதுத் தேர்வுக்கான புதிய வினாத்தாள் மாதிரிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் http://www.tnscert.org/webapp2/xiimodelquestionspaper.aspx இணையப் பக்கத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்)

'பகுதி அ’ (செய்யுள் மற்றும் உரைநடை) 50 மதிப்பெண்கள்

‘பலவுள் தெரிக’: முந்தைய வினாத்தாள்களில் இடம்பெற்ற ‘சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக’ பகுதி, சிறு மாற்றங்களை உள்ளடக்கி 'பலவுள் தெரிக’ என்பதாக இடம்பெறுகிறது. தலா 1 மதிப்பெண் என இப்பகுதி 6 மதிப்பெண்களுக்கானது.

குறுவினா பகுதி: தலா 2 என 10 மதிப்பெண்களுக்கான குறுவினா பகுதியானது செய்யுள், உரைநடை என இரண்டாகப் பிரித்து இடம்பெறுகிறது. செய்யுள் பகுதியின் கொடுக்கப்பட்ட 4-ல் 3 வினாக்களுக்கும், உரைநடை யின் கொடுக்கப்பட்ட 3-ல் 2 வினாக் களுக்கும் பதிலளிக்க வேண்டும்.

சிறுவினா பகுதி: செய்யுள் மற்றும் உரைநடை பகுதிகளில் இருந்து கொடுக்கப்பட்ட தலா 3 வினாக்களில் தலா 2-க்கு விடையளிப்பதாக அமைந்திருக்கிறது. இவ்வாறு, வினாவிற்கு 4 மதிப்பெண் எனச் சிறுவினா பகுதி 16 மதிப்பெண்களுக்கு அமைந்தி ருக்கிறது. செய்யுள் சிறுவினா பகுதியில் 15 அல்லது 16வது வினா வாகத் திணை அல்லது துறை குறித்த கேள்வி நிச்சயமாக இடம்பெறும்.

நெடுவினா பகுதி: இதில் ‘அல்லது’ பாணியிலான இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில், தலா 6 என 12 மதிப்பெண்களுக்கானது.

'அடிபிறழாமல் எழுதுக’: பகுதி ’அ’வின் நிறைவாக மனப்பாடப் பகுதி வருகிறது. ஒரு குறள் (2 மதிப்பெண்), ஒரு செய்யுள் (4 மதிப்பெண்) என மனப்பாடப் பகுதி 6 மதிப்பெண்ணுக்கானது. மனப்பாடப் பகுதியில் 20 திருக்குறள்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை ’முடியும் சொல்’ கொடுத்தே கேட்கிறார்கள். ஆனால் முடியும் சொல்லாக ஒரே சொல் பல குறள்களில் இடம்பெறுகிறது.

உதாரணத்துக்கு ’அறிவு’ என்று 5 குறளிலும் 'பெரிது’ மற்றும் ‘நட்பு’ என தலா 2 குறள்களிலும் வருகின்றன. அவ்வாறான குறள்களில் தனக்கு நன்கு தெரிந்த, பிழைக்கு வாய்ப்பில்லாத ஏதேனும் ஒரு குறளை எழுதி முழு மதிப்பெண்ணைப் பெறலாம். அதே போல மனப்பாடப் பகுதியின் இன்னொரு வினாவிற்கு, பாடப்பகுதியின் 9 மனப்பாடச் செய்யுள் களையும் படிப்பதன் மூலம் உரிய 4 மதிப்பெண்களைப் பெறலாம்.

பகுதி ஆ (இலக்கணம், துணைப்பாடம், மொழிப்பயிற்சி) 40 மதிப்பெண்கள்.

'பலவுள் தெரிக’: 'பகுதி அ’ போன்றே இதில் 'பலவுள் தெரிக’ பகுதி 8 மதிப்பெண்களுக்கு இடம்பெறுகிறது. இப்பகுதியின் 8 வினாக்களில் இலக்கணக் குறிப்பிலிருந்து 1 அல்லது 2 வினாக்கள் இடம்பெறும். மேலும் கதைகளின் ஆசிரியர் பெயர், கதையின் மையக்கரு, புணர்ச்சி விதி பயின்று வரும் சொல், பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ் சொல், பொருந்தா இணை, பொருள் வேறுபாடு அறிதல் ஆகியவை இப்பகுதிக்குக் கேட்கப்படுகின்றன.

குறுவினா பகுதி: 9 வினாக்கள் கொடுக்கப்பட்டு அவற்றிலிருந்து 7-க்கு விடையளிப்பதாக உள்ளது. அந்த வகையில் தலா 2 என மொத்தம் 14 மதிப்பெண்களுக்கானது. இலக்கணம், மொழிப்பயிற்சியிலிருந்து மட்டுமே இப்பகுதிக்கான வினாக்கள் இடம்பெறும். ‘பகுதி ஆ’வில் 'சிறுவினா பகுதி’ இல்லை.

நெடுவினா பகுதி: மொழித் திறன் பயிற்சிக்கான வினாக்கள் இதில் இடம்பெறுகின்றன. கொடுக்கப்பட்ட 4-ல் 3 வினாக்களுக்கு விடையளிக்கலாம். தலா 4 மதிப்பெண் என மொத்தம் 12 மதிப்பெண்களுக்கானது. இலக்கிய நயம் பாராட்டல், பத்தியில் இருந்து விடையளித்தல், அணி, பழமொழியை விளக்கி வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுதல், கவிதை எழுதுதல், தமிழாக்கம் தருதல் உள்ளிட்டவை தனி வினாவாகவோ, ஏதேனும் இரண்டு அடங்கிய ‘அல்லது’ வினாக்களாகவோ இப்பகுதியில் இடம்பெறும்.

துணைப் பாடப் பகுதி: ‘பகுதி ஆ’வின் நிறைவாக ‘அல்லது‘ வினாவாக 6 மதிப்பெண்களுக்கான ஒரு வினா துணைப் பாடப் பகுதியிலிருந்து இடம்பெறும். 10 துணைப் பாடங்களில் இருந்து ‘அல்லது’ வினாவாக இந்த ஒரு கேள்வி இடம்பெறும். முதல் அல்லது கடைசி 5 துணைப் பாடங்களை மட்டுமே குறிவைத்துப் படித்தால்கூட இந்தப் பகுதிக்கு நிச்சயம் விடையளித்துவிடலாம். ‘அல்லது’ வினாக்களில் ஒரு கேள்வியாக ‘சிறுகதையின் கருப்பொருளும் சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக’ இடம்பெறும். மறுகேள்வியாக ‘நிகழ்ச்சியை நாடகமாக வரைதல்’, ‘கதைமாந்தர் திறனாய்வு’ போன்றவை கேட்கப்படுகின்றன.

பொதுவான கவனக் குறிப்புகள்

அன்றன்றே படிப்பதும், அவ்வப்போது படித்ததை எழுதிப் பார்ப்பதும் தமிழ் தாளில் உயர் மதிப்பெண்கள் பெற உதவும். வினாக்களை வேறு எப்படியெல்லாம் மாற்றிக் கேட்க வாய்ப்புண்டு என்பதை ஆசிரியர் உதவியுடன் அறிந்துகொள்வதும் அவசியம்.

நடந்து முடிந்த காலாண்டுத் தமிழ் தேர்வின் மூலம், புத்தகத்தின் பயிற்சி வினாக்களுக்கு அப்பால் 90-க்கு குறைந்தது 4 மதிப்பெண்ணாவது உள்ளிருந்து கேட்டிருப்பதை அறியலாம். ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு, முன்கதை சுருக்கம், செய்யுள் பாடல் வரிகள், செய்யுள் மற்றும் உரை நடையின் ஆசிரியர் பெயர் ஆகியவற்றையும் படித்துக்கொள்வது சிறப்பு.

மொழிப்பயிற்சி பகுதி வினாக்களின் 14 மதிப்பெண்களுக்கு இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி, சொல் விரிவாக்கம், மரபு சொல், கொச்சை சொல், பிறமொழி சொல், வலிமிகும், மிகா இடங்கள், சொல் விரிவாக்கம், பொருள் வேறுபாடு அறிதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

மாணவர்கள் மத்தியில் வழக்கமாக மதிப்பெண் குறையும் பகுதி என்பதால், இதில் கூடுதல் கவனம் அவசியமாகிறது. 'பிறமொழி சொல்’ குறித்த வினாக்கள் பாடத்துக்கு அப்பால் புழக்கத்தில் உள்ளவை குறித்தும் பொதுவாகவும் கேட்கப்படலாம் என்பதால், அவற்றையும் விசாரித்துப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வதும் குழுவாகத் தாம் அறிந்தவற்றை மாணவர்கள் பகிர்ந்து கொள்வதும் நல்லது.

தேர்ச்சி எளிது

முந்தைய வினாத்தாள் மாதிரியிலான தேர்வுகளைப் போல, இதைப் படித்தால் மட்டும் போதும் என்று இந்தப் புதிய வினாத்தாளில் சொல்ல வாய்ப்புகள் குறைவு. பாடப்பகுதியின் திணை அல்லது துறை பகுதிகளைத் தனியாகப் படித்தாலே 4 மதிப்பெண்களை உறுதி செய்யலாம்.

அதுபோன்றே பாடப்பகுதியின் 4 அணிகளில் ஒரு அணி நிச்சயம் என்பதால், அதற்கான 4 மதிப்பெண் உறுதி. இந்த வரிசையில் இலக்கிய (ஏற்புடைய) நயங்கள் பகுதிக்கு 4 மதிப்பெண், மனப்பாடப் பகுதிக்கு 6 மதிப்பெண் ஆகியவற்றைச் சுலபமாகப் பெறலாம்.

மேலே குறிப்பிட்டவாறு துணைப் பாடப் பகுதியின் 5 மட்டுமே படித்து உரிய 6 மதிப்பெண்ணைப் பெறலாம். மற்றபடி பயிற்சி வினாக்களை இப்போதிருந்தே முறையாகப் படித்து வந்தால் 50-க்கு குறையாது மதிப்பெண்களை அள்ளலாம்.

கவனக் குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன்,
முதுகலை தமிழாசிரியர்,
அரியலூர் அரசு மாதிரிப் பள்ளி.

தேடிச் சென்று பார்வை தந்த வெங்கடசாமி!

Published : 01 Oct 2018 08:59 IST


முனைவர் வ. ரகுபதி




புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரான டாக்டர் கோ.வெங்கடசாமியின் வாழ்க்கை, பல்வேறு தடைகளுக்கு மத்தியில் மக்களுக்காகப் பணியாற்ற விரும்புவோருக்குச் சரியான எடுத்துக்காட்டு. முடக்குவாதத்தாலும் சோரியாஸிஸ் நோயாலும் இள வயதிலேயே பாதிக்கப்பட்ட வெங்கடசாமி, மனவுறுதியோடு அவற்றை வென்றவர். மருத்துவப் பட்டம் பெற்று, ராணுவ மருத்துவராகப் பணிபுரிந்த அவர், உடல் பாதிப்புகளுக்கு மத்தியிலும் கண் மருத்துவ மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்தவர். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அனைவரும் சிகிச்சை பெற வேண்டும், அதற்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை லட்சியமாகக் கொண்டு செயலாற்றியவர்.

1918 அக்டோபர் 1-ல், விருதுநகர் அருகே வடமலாபுரம் எனும் குக்கிராமத்தில் பாரம்பரியமிக்க வேளாண் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் வெங்கடசாமி. ராணுவத்திலிருந்து திரும்பிய பிறகு கண் மருத்துவப் படிப்பை முடித்ததும், சென்னை அரசு கண் மருத்துவமனையில் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில், குறிப்பாக, கிராமப் பகுதியைச் சார்ந்தவர்கள் எங்கு சென்று கண் அறுவை சிகிச்சையைப் பெற வேண்டும் எனத் தெரியாமல் பார்வை இழந்து தவிப்பது மிகச் சாதாரணமாக இருந்தது.

இந்த யதார்த்தமும், மகான் அரவிந்தருடைய சந்திப்பும், இயல்பிலேயே வெங்கடசாமியிடம் இருந்த அருங்குணமும் அவரது சிந்தனையை ஏழைகளை நோக்கி இட்டுச்சென்றன. விளைவாக, 1954-ல் மதுரை பொது மருத்துவமனையின் கண் மருத்துவப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் மருத்துவ உலகின் புதுமையும் புரட்சிகரமுமான உத்திகளை நடைமுறைப்படுத்தினார்.

மருத்துவமனைக்குக் கண் நோயாளிகள் வர வேண்டுமென்று மருத்துவர்கள் காத்திருப்பது என்றில்லாமல், நோயாளிகளைத் தேடி மருத்துவர்கள் செல்ல வேண்டும் என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார். கிராமியக் கண் மருத்துவ முகாம்களை 1962-ல் தொடங்கியபோது, மருத்துவ உலகம் அதிர்ச்சியுடன் பார்த்தது. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியிலுள்ள காந்திநிகேதன் ஆசிரமத்தில் நடந்த அவரது முதல் இலவச கிராமிய கண் அறுவை சிகிச்சை முகாமில் சுமார் 2,000 கண் நோயாளிகள் பயன்பெற்றனர். 300 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்தன. மிகமிகக் குறைந்த செலவில் கண் அறுவை சிகிச்சைகள் சாத்தியம் என்ற உண்மையை உணர்த்தினார் வெங்கடசாமி.

இலவசக் கண் மருத்துவ முகாம்களும் அறுவை சிகிச்சைகளும் அரவிந்த் கண் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. தரத்திலோ சேவையிலோ சமரசம் கூடாது, அனைவருக்கும் உலகத்தரமான கண் மருத்துவம் தர வேண்டும் என்பதை அரவிந்த் கண் மருத்துவமனையின் கொள்கையாக்கினார்.

கண் மருத்துவத் துறையில் பல்வேறு புதிய வழித்தடங்களை உருவாக்கிய வெங்கடசாமியின் சாதனைகள் இளைய சமுதாயத்துக்குப் பாடமாகட்டும்!

- வ.ரகுபதி, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்.

இன்று டாக்டர் கோ.வெங்கடசாமியின்

100-வது பிறந்தநாள்
மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வசூலித்ததுதான் சுகாதாரத் துறை ஊழலின் தொடக்கம்: ‘தி இந்து மையம்’ நடத்திய விவாத நிகழ்ச்சியில் டாக்டர்கள் கருத்து

Published : 03 Oct 2018 07:57 IST



‘இந்து’ என்.ராம் தொகுத்துள்ள, ‘இந்திய சுகாதாரத்துறை ஊழல்’ என்ற நூல் அறிமுக விழா மற்றும் சுகாதாரத் துறை ஊழல் குறித்த விவாதம் ‘தி இந்து மையம்்’ சார்பில் சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இதில் பேசுகிறார் டாக்டர் சமிரான் நந்தி. உடன் (இடமிருந்து) எலும்பியல் நிபுணர் டாக்டர் ஜார்ஜ் தாமஸ், சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் எம்.கே.மணி, ‘இந்து’ என்.ராம், மத்திய சுகாதாரத் துறை முன்னாள் செயலர் கேசவ் தேசிராஜூ. படம்: ம.பிரபு

மருத்துவ மாணவர் சேர்க்கை யின்போது கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிக்கின்றனர். இதில் இருந்துதான் சுகாதாரத் துறை ஊழல் தொடங்குகிறது என்று மருத்துவத் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

‘குணப்படுத்துபவர்களா? வேட் டையாடுபவர்களா? இந்திய சுகாதாரத் துறை ஊழல்’ என்ற தலைப்பிலான நூலை ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டுள்ளது. ‘இந்து’ என்.ராம் தொகுத்துள்ள இந்த நூலின் அறிமுக விழா மற்றும் சுகாதாரத் துறை ஊழல் குறித்த விவாதம் ‘தி இந்து மையம்’ சார்பில் சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை குடல்நோய் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் கணைய மாற்று அறுவை சிகிச்சை துறை முன்னாள் தலைவர் டாக்டர் சமிரான் நந்தி, மத்திய சுகாதாரத் துறை முன்னாள் செயலர் கேசவ் தேசிராஜு, சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் எம்.கே.மணி, எலும்பியல் நிபுணர் டாக்டர் ஜார்ஜ் தாமஸ் ஆகியோர் இதில் கலந்துகொண்டு பேசினர். அவர்கள் கூறியதாவது:

டாக்டர் மணி: அரசு மருத்துவ மனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்று நாம் அனைவரும் நெருக்கடி தர வேண்டும். மீறி, அவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால், அந்தச் செலவை அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த வேண்டும். அப்படி செய்தால் மருத்துவமனைகளின் தரம் தானாக உயரும். இன்சூரன்ஸ் என்ற பெயரில் அரசுப் பணம் தனியாருக்குச் செல்கிறது. ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் ஊழலை ஒழிக்க எந்த விதத்திலும் பயன்படவில்லை. அரசுப் பணம் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த மட்டுமே பயன்பட வேண்டும்.

டாக்டர் கேசவ் தேசிராஜு: கடந்த 1990-களில்தான் மருத்துவக் கல்லூரிகள் தனியார்மயம் ஆகின. அதற்கு முன்பு பெரிய அளவில் மருத்துவத் துறையில் ஊழல் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை பணம் செலுத்தி சேர ஆரம்பித்தனர். அவர்கள் டாக்டர் ஆனதும் அந்தப் பணத்தை திரும்ப எடுக்க ஆசைப்படுகின்றனர். இதுதான் சுகாதாரத் துறை ஊழலின் ஆரம்பம். இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழகத்தில் குறைந்தது மாவட்டத்துக்கு ஒரு அரசுக் கல்லூரி உண்டு. உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதற்குமே 8 அரசுக் கல்லூரிகள்தான் உள்ளன. அரசுக் கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும். நியாயமான கட்டணத்தில் டாக்டர்கள் படித்து பட்டம் பெறும்போதுதான் லாப நோக்கமின்றி நியாயமாக செயல்படத் தொடங்குவார்கள்.

டாக்டர் சமிரான் நந்தி: டாக்டர்கள் பலர் அரசியல்வாதி களின் பின்னால் போவது, நேர்மையற்ற வழியில் பணியாற்றுவதே ஊழலுக்கு அடிப்படை. ஆனால், பேன்யன், வேலூர் சிஎம்சி உள்ளிட்ட பல அமைப்புகள் சிறப்பாக சேவை செய்கின்றன.

டாக்டர் ஜார்ஜ் தாமஸ்: அனைத்து டாக்டர்களும் மோச மானவர்கள் என்று கருதக்கூடாது. நேர்மையாக செயல்படும் டாக்டர்கள் பலர் உள்ளனர். தவிர, சுகாதாரத் துறை ஊழலுக்கு டாக்டர்கள் மட்டுமே காரணம் அல்ல.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

பின்னர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, ‘‘பிரிட்டனில் உள்ள மருத்துவ கவுன்சில் போன்ற அமைப்பு இந்தியாவில் உருவாக வேண்டும். ஊழலற்ற சுகாதாரத் துறையை உருவாக்க அரசுக்கு மக்கள் நெருக்கடி தர வேண்டும்’’ என்றனர்.

நெட், ஜே.இ.இ. தேர்வுகள்: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி


By DIN | Published on : 28th September 2018 02:03 AM |

நெட், ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (செப்.30) கடைசி நாளாகும்.
இத்தேர்வுகளை முதன் முறையாக தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இத்தேர்வுகளுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 9 முதல் 23 வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்பட உள்ளது. 

அதே போன்று ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு-மெயின் (ஜே.இ.இ. - முதல்நிலைத் தேர்வு) 2019 ஜனவரி 6 முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரையிலான ஏதாவது ஒரு தேதியில் நடத்தப்பட உள்ளது.

இந்த இரண்டு தேர்வுகளுக்கும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு https://ntanet.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை?: யுஜிசி இணையதளத்தில் இன்று வெளியீடு
By DIN | Published on : 03rd October 2018 02:35 AM |




பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில், எந்தந்தப் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் உள்ளது என்ற விவரம் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது.

இந்த விவரங்களை யுஜிசி-யின் www.ugc.ac.in/deb என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடர்ந்து, திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.

புதிய நிபந்தனை: அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது. அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.
நான்கு பல்கலைக்கழகங்கள் மட்டுமே...: இதன் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றன.

அதனைத் தொடர்ந்து, தொலைநிலைப் படிப்புகளில் குறிப்பிட்ட அளவில் பேராசிரியர் நியமனம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற நிபந்தனையை யுஜிசி விதித்தது. இந்த நிபந்தனை காரணமாக சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த 51 படிப்புகளில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ள 48 படிப்புகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்தது. மேலும் பல பல்கலைக்கழகங்கள் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் எவை?: இந்த நிலையில், பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில் யுஜிசி அங்கீகாரம் பெற்றவை எவை என்ற விவரத்தை யுஜிசி புதன்கிழமை வெளியிட உள்ளது. இந்த விவரங்களை மாணவர்கள் யுஜிசி இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

30 நாள் அவகாசம்: கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன் பிறகு சேர்க்கை நடத்தப்படக் கூடாது என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற, உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
மரணமடைந்த தாயின் உடல்மேல் அமர்ந்து அஹோரி சாமியார் நடத்திய சடங்கு: திருச்சியில் ஓர் அதிர்ச்சி சம்பவம்
By DIN | Published on : 02nd October 2018 05:05 PM 




திருச்சி: திருச்சி அருகே மரணமடைந்த தாயின் உடல்மேல் அமர்ந்து அஹோரி சாமியார் ஒருவர் வினோத இறுதிச் சடங்கு நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சிவனின் அதிதீவிர உக்கிர பக்தர்ககளாக கருதப்படுபவர்கள் அகோரி சாமியார்கள். இவர்கள் இந்தியாவில் பெரும்பாலும் காசி, இமயமலைப் பகுதிகளான கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் அதிகமாக வசித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளாவில் பெருந்திரளாக இவர்கள் கலந்து கொள்வதைப் பார்த்திருக்கலாம். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு கோவில்களை கட்டி பூஜை நடத்தி வருகிறார்கள்.


அந்த வரிசையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை காசியில் முறையாக அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

இங்கு சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி பூஜை, வளர்பிறை அஷ்டமி பூஜை, தேய் பிறை அஷ்டமி பூஜை ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கோவில் நிர்வாகியான அகோரி சாமியார் மணிகண்டனின் தாயார் மேரி மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்க சடங்கு அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டில் செவ்வாயன்று நடைபெற்றது. இடுகாட்டிற்கு சென்றதும் வழமையான இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முதலில் நடைபெற்றது.

பின்னர் அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத விசேஷ பூஜைகள் செய்தார். அவருடன் சக அகோரிகளும் மேளத்தினை முழங்கி, சங்கு ஊதி பங்கு பெற்றனர்.

இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை செய்வது அகோரிகளின் வழக்கம் என்றும், அவ்வாறு செய்தால் இறந்தவராது ஆன்மா சாந்தியடையும் என்று அகோரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவமானது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

அரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு
By DIN | Published on : 03rd October 2018 01:37 AM |

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில் வியாழக்கிழமை (அக். 4) தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பான ஊதிய பிடித்தம் போன்ற எச்சரிக்கைகளுக்கு தாங்கள் அஞ்சப்போவதில்லை என இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பாக வரும் நவம்பர் 27 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

அதற்கு ஆயத்தமாகும் வகையில் வியாழக்கிழமை (அக்.4) ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெற உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு (அனைத்து அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) அறிவித்துள்ளது. இதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்: தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் துறைத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு மீண்டும் அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி உரிய காரணங்களோ, அனுமதியோ இல்லாமல், தற்செயல் விடுப்பு எடுப்போருக்கு அன்றைய தினத்துக்கான ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்செயல் விடுப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நாளில் ஊழியர்களின் வருகை குறித்த விவரங்களை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

போராட்டம் நடைபெறும்: இதனிடையே, தற்செயல் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற எச்சரிக்கையை கண்டு அஞ்சப் போவதில்லை என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கு.தியாகராஜன் கூறும்போது, எங்களுடைய போராட்டம் திட்டமிட்டபடி வியாழக்கிழமை மிகத் தீவிரமாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கு பெறுவர் என்றார்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...