Monday, December 10, 2018

இல்லாத பதிவாளர் பெயரில் அறிவிக்கை

Added : டிச 09, 2018 23:06

சென்னை: அண்ணா பல்கலை பதிவாளர் பதவி காலியாக உள்ள நிலையில் பதிவாளர் பெயரில் வெளியிட்டுள்ள அறிவிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜி., கல்லுாரிகளுக்கு டிச., 3ல் நடந்த கணித தேர்வில் வினாத்தாள் 'லீக்' ஆனதால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல 'எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்' துறையில் 'ஆப்டோ எலக்ட்ரானிக் டிவைசஸ்' என்ற பாடத்துக்கு தேர்வு நடந்தது. அதில் 2017 நவம்பரில் வந்த பழைய வினாத்தாள் வழங்கப்பட்டதால் மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது.

பல்கலையின் நேரடி கல்லுாரிகளுக்கான தேர்வு துறையில் என்.ஆர்.ஐ., விடைத்தாள் திருத்தத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலு நீக்கப்பட்டு சஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார்.அண்ணா பல்கலையின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவி காலியாக உள்ளது. திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனர் குமார், பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பேராசிரியர், வெங்கடேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியை கூடுதலாக கவனிக்கிறார்.இந்நிலையில் தொலைநிலை கல்விக்கு நேற்று மாணவர் சேர்க்கை அறிவிப்பு, பதிவாளர் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், பதிவாளரே இல்லாமல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டது போல், அறிவித்தது எப்படி என உயர்கல்வி அதிகாரிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 பதிவாளர் இல்லாத நிலையில், பதிவாளர் பொறுப்பு என குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லது தொலைநிலை கல்வி இயக்குனர் வழியாக மாணவர் சேர்க்கையை அறிவிக்கலாம்.மாறாக, சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பதிவாளர் இருப்பது போல அறிவிக்கை செய்தது, பல்கலையின் நிர்வாகத்துக்கு சட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என சில பேராசிரியர்கள் கூறினர். ஏற்கனவே பல்கலை தேர்வுத்துறையில் பல்வேறு குளறுபடி நிலவும் நிலையில் பதிவாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


புயல்,பாதிப்பு,அடுத்த மிரட்டல்,பெய்ட்டி

DINAMALAR 10.12.2018

வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. 'பெய்ட்டி' என, பெயரிடப்பட உள்ள இந்த புயல், வரும், 13ம் தேதி, தமிழக கடற்பகுதியை நெருங்கி, சென்னை - கல்பாக்கம் இடையே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 'கஜா' புயலின் பாதிப்பும், சோகமும் தீராத நிலையில், அடுத்த புயல் தமிழகத்தை மிரட்டத் துவங்கியுள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கியது முதல், திடீர் கன மழையும், புயலும் அடுத்தடுத்து மிரட்டி வருகின்றன. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 'கஜா' புயலாக மாறி, நவம்பர், 16ல், நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால், டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மின் வினியோகம்:

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆனாலும், பல கிராமங்களுக்கு, இன்னும் மின் வினியோகம் துவங்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட சோகத்தில் இருந்து மீள முடியாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் மிரட்டி வருகிறது.
கஜா புயலுக்கு பின், நவம்பர் இறுதியில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும், டிச., 4ல், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, மழையை கொட்டின. டிச., 6 முதல், மழை குறைந்து, வறண்ட வானிலை நிலவுகிறது. பகலில் வெயிலும், மாலை முதல் முற்பகல் வரை பனியும் நிலவுகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கே, நில நடுக்கோட்டு பகுதிக்கு வடக்கில், வங்க கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது, நாளை முதல், காற்றழுத்த

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், அந்தமானுக்கு அருகில் வரும் போது, புயல் சின்னமாக மாறும். பின், புயலாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலுக்கு, தாய்லாந்து நாடு வழங்கியுள்ள, 'பெய்ட்டி' என்ற, பெயர் சூட்டப்பட உள்ளது.
இப்புயல், வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும், 13ம் தேதி நள்ளிரவு முதல், தமிழக கடற்பகுதியை நெருங்கும். டிச., 15 முதல், 16ம் தேதிக்குள், நெல்லுார் - நாகை இடையில் கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய நிலவரப்படி, இந்த புயல், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு

இடையே, கல்பாக்கம் அருகே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மாறலாம்:

புயல் உருவான பின், காற்றின் வேகம், திசை மாறுபாடு, நிலப்பகுதியில் உள்ள வெப்பநிலை ஆகியவற்றை பொறுத்து, கரையை கடக்கும் இடமும், நாளும் மாறலாம் என்றும், வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதேநேரத்தில், புதிய புயலால், கடலுார், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிக தாக்கம் ஏற்படலாம். ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு தடை:

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளதால், சூறாவளி காற்றுடன் அலைகள் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, தென் கிழக்கு, தென் மேற்கு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு, 12ம் தேதி வரை, மீனவர்கள் செல்ல வேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

- நமது நிருபர் -
'நகரும் பதிவேடு' அமல்படுத்த உத்தரவு

Added : டிச 09, 2018 22:31

போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களை கண்காணிக்கும் விதமாக, 'நகரும் பதிவேடு' அமல்படுத்த, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், கடந்த, 4ம் தேதி, புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுரையை தொடர்ந்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், டாக்டர்கள் சங்கம், நிர்வாகத்துக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், மருந்து குறித்த விபரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், போராட்டத்தை காரணம் காட்டி, டாக்டர்கள் பலர், முறையாக பணியில் ஈடுபடுவ தில்லை என, புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள, நகரும் பதிவேடு முறையை, தீவிர மாக அமல்படுத்த, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைத்து தரப்பு அரசு அலுவலர்களுக்கும், இந்த நகரும் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் வெளியில் செல்லும்போது, இப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து டாக்டர்களும் இந்நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
'இ - மார்க்கெட் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும்' : அரசு அலுவலங்களுக்கு புதிய உத்தரவு

Added : டிச 09, 2018 21:36

அரசு அலுவலகங்களுக்கு தேவையான, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை, 'இ - மார்க்கெட்' எனப்படும், 'ஆன்லைன்' வர்த்தக முறையில் வாங்க, செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு அலுவலகங்களுக்கு தேவையான பர்னிச்சர், எழுது பொருட்கள், கணினி சார்ந்த பொருட்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. இப்பொருட்களை, எங்கு, எப்படி வாங்குவது என்பதற்கான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.இதில், கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை, தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' வாயிலாக வாங்க வேண்டும். இதற்கும், துறை ரீதியாக கருத்துரு அனுப்புவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன

.இருப்பினும், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், அதற்கான சார்பு பொருட்களை வாங்குவதில், குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுகிறது. இதில், வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, இந்த நடைமுறையை, ஆன்லைன் முறைக்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, எல்காட் நிறுவனம், இ - மார்க்கெட் என்ற ஆன்லைன் சேவையை துவக்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள், வழக்கமான முறையில் பொருட்களை வாங்குவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தலைமை செயலகத்தில், சமீபத்தில் நடந்த அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில், இ - மார்க்கெட் தளத்தில், அரசு துறைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பொருட்கள் வாங்கும் அதிகாரி, அத்துறை சார்பில், இத்தளத்தில் பதிவு செய்து, பொருட்களை வாங்க, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.துறை வாரியாக, இ - மார்க்கெட் திட்டத்தில் பதிவு செய்த விபரத்தை தெரிவிக்கவும், செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், எந்தெந்த அரசு துறைகள், என்னென்ன பொருட்களை வாங்கியுள்ளன என்ற விபரம், அரசுக்கு நேரடியாக சென்றுவிடும்.

- நமது நிருபர் -
வி.ஏ.ஓ.,க்கள் இன்று போராட்டம் : அதிகாரிகளுக்கு அரசு, 'அலர்ட்'

Added : டிச 09, 2018 21:34

சென்னை: கிராம நிர்வாக அலுவலர்களான, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், இன்று போராட்டங்களை அறிவித்துள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.சிறப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், வி.ஏ.ஓ.,க்கள், காலவரையற்ற போராட்டத்தை துவக்குகின்றனர். ரயில் நிலையங்களில், தனி கவுன்டர்களை திறக்க வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர், ரயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.இவ்விரு போராட்டங்களால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட கலெக்டர்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ், எஸ்.பி.,க்களுக்கும், பொதுத் துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.

ரயில்களில் தண்ணீர் நிரப்ப புதிய திட்டம் அறிமுகம்

Added : டிச 09, 2018 21:52


புதுடில்லி: நீண்ட துார ரயில்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், புதிய திட்டத்தை, ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.தற்போது நீண்ட துாரம் செல்லும் ரயில்களில், 300 கி.மீ.,க்கு ஒருமுறை தண்ணீர் நிரப்பப்படுகிறது. இவ்வாறு, 24 பெட்டிகள் அடங்கிய ரயிலுக்குத் தேவையான தண்ணீரை நிரப்ப, 20 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால், ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது என்பதால், குறைந்த அளவு தண்ணீரே நிரப்பப்படுகிறது.அதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பயணியர் அவதிப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில், புதிய முறையை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறியதாவது:தண்ணீர் நிரப்பும் வசதியுள்ள ரயில் நிலையங்களில், தற்போது, 4 அங்குல குழாய்கள் மூலம், தண்ணீர் நிரப்பப்படுகிறது. இவை, 6 அங்குல குழாய்களாக மாற்றப்பட உள்ளன. மிகவும் அதிக தண்ணீரை அளிக்கும் வகையில், அதிகசக்தி உடைய மோட்டார்கள் பயன்படுத்தப்பட உள்ளன.மேலும், கம்ப்யூட்டர் கண்காணிப்புடன், தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. இந்த புதிய வசதிகளை செய்வதற்கு, ரயில்வே வாரியம், 300 கோடி ரூபாயை ஒதுக்கிஉள்ளது. இதனால், இனி, ஐந்து நிமிடங்களுக்குள், ஒரு ரயிலுக்கு தேவையான நீரை நிரப்ப முடியும். அடுத்த மார்ச் முதல், இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனால், இனி, ரயில்களில், தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்

Added : டிச 09, 2018 15:39 |



உதய்பூர்: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணத்தில் பங்கேற்க வரும் முக்கிய பிரமுகர்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு விருந்தினர்கள்

நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனர் அஜய் பிரமலின் மகன் ஆனந்துக்கும், 12ல், மும்பையில் திருமணம் நடக்கவுள்ளது.சங்கீதம், நாட்டியம் மற்றும் மெஹந்தி உள்ளிட்ட, திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், 10ம் தேதி வரை நடக்கின்றன.திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அம்பானி குடும்பத்தினர் மற்றும் பிரமல் குடும்பத்தினர் உதய்பூர் வந்துள்ளனர்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் விமானங்கள்

சிறப்பு விருந்தினர்களை அழைத்து வர, 30 முதல் 50 தனியார் விமானங்கள் உதய்ப்பூர் மஹாராணா பிரதாப் விமான நிலையத்தில் தரையிறங்கவும், ஏறவும் உள்ளன. சாதாரண நாட்களில் இங்கு 19 விமானங்கள் தான் தரையிறங்கும்,கிளம்பி செல்லும். மேலும், சிறப்பு விருந்தினர்களை, விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்கு அழைத்து செல்ல ஜாக்குவார், போர்சே, மெர்சிடிஸ், ஆடி, பிஎம்டபிள்யு உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடம்பர கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விமானத்தை தவிர்த்து உதய்ப்பூரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், 600 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். திருமணத்திற்கு, இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...