Saturday, February 23, 2019


தாம்பூலம் போய், தாம்பாளம்...

By சி.வ.சு. ஜெகஜோதி | Published on : 22nd February 2019 01:35 AM |

கடந்த மாதம் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தேன். வந்தவர்கள் அனைவருக்கும் சிறு சில்வர் தாம்பாளம் ஒன்றை கொடுத்தார்கள். மணமக்களின் ஊரும், பெயரும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. என் அருகிலிருந்த சித்த மருத்துவர் அதைப் படித்துப் பார்த்து விட்டு லேசாக புன்னகைத்தார். என்ன சார், சிரிக்கிறீங்க என்று கேட்டபோது முன்பெல்லாம் தாம்பூலம் கொடுத்தார்கள், இப்போது தாம்பாளம் தருகிறார்கள் என்றார்.
திருமண விருந்து முடித்து வரும் போது விருந்தினர்களுக்கு ஏன் தாம்பூலம் கொடுத்தார்கள் தெரியுமா என்று அவரே பின் தொடர்ந்தார்.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், சுக்கு, காசுக்கட்டி-இது அத்தனையும் சேர்ந்ததுதான் தாம்பூலம். இவை ஒவ்வொன்றுக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளன. வெற்றிலையின் உரைப்பு கபத்தையும், பாக்கின் துவர்ப்பு பித்தத்தையும், சுண்ணாம்பின் காரம் வாதத்தையும் போக்கக் கூடியது. இவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது அந்தச் சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறது. இதயத்தை வலுப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்குத் தருகிறது. தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிப்பத்திரி போன்றவை வாயில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் பற்களையும் உறுதிப்படுத்தும்.

திருமண விருந்துகளில் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் உருவாகி உடல் நலத்தையும் கெடுக்கும். உணவு எளிதில் ஜீரணிக்கவும், உமிழ் நீர் சுரப்பியைத் தூண்டி, ஒருவித உற்சாக உணர்வைத் தரவுமே அந்தக் காலத்தில் நம் முன்னோர் தாம்பூலம் தரும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் உறவினர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பழக்கம் இருந்து வந்துள்ளது.

வெற்றிலையில் உள்ள நரம்புகளை நீக்கிவிட்டு, சுண்ணாம்பு தடவி, சிறிதளவு கொட்டை பாக்கு சேர்த்து, அவற்றோடு சம அளவில் ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், கொஞ்சமாக தேங்காய்ப்பூ ஆகியவற்றைக் கலந்து, நீளவாட்டில் மடித்து, பின்பு அகலவாட்டில் சுருட்டி, வாயில் போட்டு மெல்லுவதைத்தான் தாம்பூலம் தரித்தல் என்றும் அவர் கூறினார். அவர் சொன்னது 100 சதவீதம் உண்மை எனப் புரிந்துகொள்ள முடிந்தது. வெற்றிலைக்கு பாலுணர்வையும், நரம்புகளையும் வலுவேற்றும் சக்தி இருப்பதால்தான் புதுமணத் தம்பதிகளுக்கு திருமணத்தின் போது தாம்பூலம் தரித்தலும் ஒரு சடங்காகவே நடந்து வந்தது.

நிச்சயதார்த்தம் என்பதே தாம்பூலத்தட்டு மாற்றி திருமணத்தை உறுதி செய்து கொள்வதாகவே இன்றும் இருந்து வரும் நடைமுறையாகும். எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்த சாமிக்கு வழிபாடு செய்தாலும் வெற்றிலை, பாக்கு வைக்க மறப்பதில்லை. வெற்றிலை பாக்குடன்கூடிய தாம்பூலம் ஒரு மங்கலப் பொருள். குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் பலரும் தாம்பூலம் மடித்துக் கொடுப்பதற்காகவே ஊழியர்களை நியமித்திருந்தார்கள். வசதி படைத்தவர்களில் சிலரது இல்லத் திருமணங்களில் பீடா கொடுக்கிறார்கள். கொல்கத்தா வெற்றிலை, குல்கந்து, லவங்கம், ஏலக்காய் என ஏகப்படட சேர்மானங்கள் இருக்கும். இனிப்பாகவும் இருக்கும். தாம்பூலத்துக்கும், பீடாவுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

முன்பெல்லாம் வீட்டு விசேஷங்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் பழக்கம் இருந்தது. இப்போது திருமணப் பத்திரிகைகள் தாய் மாமன்களுக்கே தபாலில்தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. தாமதமாக வருவோரை என்னப்பா, உனக்கு வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சாத்தான் வருவியோ? என்று உரிமையுடன் கடிந்து கொள்வதையும் பார்க்க முடிந்தது. வெத்தலை போட்டா,கோழி முட்டும் என்று சிறார்களிடம் பெரியவர்கள் சொல்வதையும் கேட்டிருப்போம்.வெற்றிலையில் சுண்ணாம்பைச் சேர்க்கும் போது கூடுதலாகச் சேர்த்து விட்டால் நாக்கு பொத்துப் போகும். சரியான விகிதத்தில் சிறுவர்களுக்கு சுண்ணாம்பு சேர்க்கத் தெரியாது என்பதற்காகவே அப்படிச் சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்.
முன்பெல்லாம் எந்த வீடாக இருந்தாலும் வெற்றிலைப் பெட்டி அல்லது வெற்றிலைத் தாம்பாளம், பாக்கு வெட்டி, சுண்ணாம்பு டப்பி, வெற்றிலை இடிக்கும் சிற்றுரல் இவையனைத்தும் இருந்தன. தாத்தாக்கள், பாட்டிகள் மதியக் கஞ்சி குடிக்காமல் போனாலும் வெற்றிலை போடாமல் இருக்கவே மாட்டார்கள். எந்த ஊருக்குப் போனாலும் வெற்றிலைப் பெட்டியும் டிக்கெட் எடுக்காமல் கூடவே வரும். வயதான மூதாட்டிகள் இடுப்பில் சொருகியிருக்கும் சுருக்குப் பையை வெத்தலைப்பை என்பார்கள். உடலில் சுருக்கங்கள் அதிகமான மூதாட்டிகளைத்தான் இன்று பார்க்க முடிகிறதே தவிர, சுருக்குப் பைகளை பார்க்க முடியவில்லை. இன்றைய இளைய தலைமுறைக்கு வெற்றிலைப் பெட்டி என்றால் என்னவென்றே தெரியாத நிலையே உள்ளது.

வேலைப்பாடுகள் நிறைந்த பித்தளைப் பாக்குவெட்டிகளும், சுண்ணாம்பு கறண்டவங்களும் இன்று காட்சிப் பொருளாகிப் போய் விட்டன. எந்த ஊருக்குப் போனாலும் வெற்றிலைப் பெட்டிகள் நம்முடன் பயணிப்பதற்குப் பதிலாக, இப்போது மாத்திரைப் பெட்டிகளே உடன் வருகின்றன. மாத்திரை டப்பாக்கள் இல்லாமல் எந்த வெளியூருக்கும் போக முடிவதில்லை. நோய்களுக்காக மட்டுமில்லாமல் விரக்தி, வெறுப்பு, கோபம், நிறைவேறாத ஆசைகள், கசந்த நினைவுகள் என்று கணக்கில்லாத மனக் காயங்களுக்கும் சேர்த்தே சாப்பிட மாத்திரைகள் அவசியமாகி விட்டது.
பிளாஸ்டிக் பைகளை தூக்கி வீசிவிட்டு, துணிப் பைகளை தூக்கிச் செல்வதே கெளரவம் என்ற மாற்றம் மலர்ந்திருப்பதைப் போல மாத்திரைப் பெட்டிகளை தூக்கி வீசி விட்டு வெற்றிலைப் பெட்டிகளை தூக்கும் காலம் வரட்டும். டும்,டும்,டும்... தாம்பாளம் போய் விட்டு, தாம்பூலம் வரட்டும் டும்,டும்,டும்... என முரசு கொட்டுவோம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

நெருங்கும் தேர்வுகளும், நடுங்கும் மாணவர்களும்!


By இரா. கற்பகம் | Published on : 23rd February 2019 01:30 AM

பொதுத் தேர்வுகள் நெருங்கி விட்டன. கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து தினம் தினம் விதவிதமான தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் என்று தேர்வுக்கு மேல் தேர்வு எழுதியும் பொதுத் தேர்வு என்றாலே மாணவர்கள் நடுங்குகிறார்கள். இதற்குக் காரணம் பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, புத்தகங்கள் மற்றும் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள்தான்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் தரமானது என்ற தவறான கருத்து மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் நிலவுகிறது. உண்மையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் உள்ள அதே பாடங்கள்தான், சமச்சீர்ப் பாடத்திட்டத்தின் எல்லாப் பாடங்களிலும், எல்லா வகுப்புகளிலும் உள்ளன. அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஒரே பாடங்கள் வெவ்வேறு பெயர்களில் உள்ளன. வினாத்தாள் அமைப்பு, மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறைதான் மாறுகின்றனவே தவிர பாடங்கள் எல்லாமே ஒன்றுதான்.

இரு பாடத்திட்டங்களிலும் உள்ள மிகப் பெரிய குறைபாடு அளவுக்கு அதிகமான பாடங்கள் இருப்பதுதான். எந்தப் பாடத்தை எடுத்துக்கொண்டாலும், மேல் வகுப்புகளில் இருக்கும் அதே பாடங்கள், கீழ் வகுப்புகளிலும் உள்ளன. கணிதம், அறிவியல் இரண்டிலுமே கீழ் வகுப்புகளுக்கு அடிப்படைத் தகவல்களும், மேல் வகுப்புகளுக்குச் செல்லச்செல்ல கூடுதல் தகவல்களைப் பாடங்களில் சேர்ப்பது ஏற்புடையது.
எடுத்துக்காட்டாக, ஏழாம் வகுப்பில் அறிவியலில் தாவரங்களின் அடிப்படை வகைகள், எட்டாம் வகுப்பில் அதே பாடம் சற்று விரிவாக, ஒன்பதாம் வகுப்பில் தாவரங்களின் உணவு, அசைவுகள், இனப்பெருக்கம் என்று கூட்டிக் கொண்டு போவது சரி. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித இனப்பெருக்கம் பற்றி விரிவாக ஒரு பாடம்.
பருவமடைதல், சினைமுட்டை, விந்து - இவற்றை எப்படி இவர்களுக்கு விளக்குவது? அதிலும் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் இரு பாலரும் சேர்ந்து படிக்கும்போது இவற்றைப் பாடமாகச் சொல்லிக் கொடுப்பது ஆசிரியர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பத்தாம் வகுப்பில் இதே பாடத்தில் எய்ட்ஸ் பற்றியும், அதைத் தவிர்க்கும் முறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பான உடலுறவு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது.
பிளஸ் 2 வகுப்பு சமச்சீர் உயிரியல் பாடத்தில் கருத்தடை முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும்போது முதலாம் ஆண்டில் உடற்கூறு பற்றி முழுமையாகப் படிக்கப் போகிறார்கள் எனும்போது பிளஸ் 2 வகுப்பில், அதுவும் கருத்தடை பற்றிய பாடம் தேவையே இல்லை.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது வரவேற்கத்தக்கது. சமச்சீர்ப் பாடத்திட்டத்திலும் தற்போதுள்ள பாடங்களைப் பாதியாகக் குறைத்து, விளையாட்டு, கவின்கலைகள், புத்தக வாசிப்பு, நல்லொழுக்கம், சுற்றுச்சூழல், தற்காப்புக்கலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் வடிவமைக்க வேண்டும்.

பாடப் புத்தகங்களை எழுதுபவர்கள் பெரும்பாலும் கற்றுத் தேர்ந்த பேராசியர்களாக இருப்பார்கள். இவர்கள் பாடநூல்களை எழுதும்போது தங்கள் புலமை வெளிப்படும் வண்ணம் எழுதுகிறார்கள். மாணவர்களுக்குப் புரியுமா, புரியாதா என்று எண்ணிப் பார்ப்பதில்லை. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாடங்களை வடிவமைக்கும்போது அவர்கள் அளவிற்குக் கீழிறங்கி வந்து அவர்களது கோணத்தில் சிந்தித்து எளிமையாக எழுத வேண்டும். 

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களைப் பார்த்து அதே போன்று வடிவமைத்திருக்கிறார்கள். கணிதத்தில் மிக முக்கியமான பாடமான, லாகரிதம், ஒன்பதாம் வகுப்புப் புத்தகத்தில் விடுபட்டுள்ளது. இரண்டு வருடங்கள் இந்தப் பாடத்தைப் பயின்றால்தான் பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் கணக்குகளை எளிதாகப் போட முடியும். ஆங்கிலம், தமிழ் ஆகிய புத்தகங்கள் அசுவாரசியமாக உள்ளன.

முன்பு ஆங்கிலப் புத்தகங்களில், கிளாசிக்ஸ் எனப்படும் பழங்காலக் கதைப் புத்தகங்களிலிருந்து ஒரு அத்தியாயத்தை மட்டும் எடுத்து ஒரு பாடமாக வைப்பார்கள். அதனைப் படிக்கும் போது மூலப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். துணை பாடப் புத்தகங்கள் நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பாகவோ, தேசத்தலைவர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பாகவோ இருக்கும்.
இப்போதோ குழந்தைத் தொழிலாளர்களின் நிலைமை சாதனையாளர்களின் சிரமங்களை விவரிக்கும் வரலாறுகள் பாடமாக உள்ளன. பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி தரும் பாடங்களையே விரும்புவார்கள். இதுபோன்ற மனதைப் பாரமாக்கும் பாடங்களை விரும்புவதில்லை, அதனால் பாடங்களைப் படிப்பதில் ஆர்வமும் காட்டுவதில்லை.

தமிழ்ப் புத்தகத்தில், செம்மைத் தமிழ் மொழி, தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள், என்று பழம்பெருமை பேசும் காலத்துக்கு ஒவ்வாத பாடங்கள் உள்ள புத்தகங்கள் மாணவர்களைத் தமிழ் என்றாலே ஓடச் செய்கின்றன. இதனாலேயே பத்தாம் வகுப்பு வரை வேறு வழியின்றித் தமிழைப் பாடமாகப் படித்துவிட்டு பிளஸ் 1 வகுப்பில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிக்குத் தாவி விடுகிறார்கள். கல்கியின் நகைச்சுவைக் கட்டுரைகள், விடுதலைப்போரின் வீரச்சம்பவங்கள், ராமாயணம், மகாபாரதம், ஐம்பெருங்காப்பியங்கள், பெரியபுராணம் முதலிய இதிகாசம், சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்களைக் கதை வடிவமாக்கி, எளிய தமிழில் புத்தகமாக எழுதினால் மாணவர்கள் தமிழை விரும்பிப் படிப்பார்கள்.

நான்கு சுவர்களுக்குள் மாணவர்களை அடைத்து வைத்துப் பாடம் கற்பிக்கும் முறை மாற வேண்டும். ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே இலக்கண வகுப்புகள் அவ்வளவு சுவாரசியமாக இருப்பதில்லை. ஒருமை, பன்மை, அஃறிணை, உயர்திணை, ஆண்பால்-பெண்பால் இவற்றையெல்லாம் கரும்பலகையில் எழுதிக் கற்பிக்காமல் பள்ளி மைதானத்தில் இயற்கையோடு இணைந்து, கற்களையும், மரங்களையும், செடிகளையும் எடுத்துக்காட்டாக வைத்துக் கற்பிக்கலாம்.

ஆங்கிலத்தில் பாடல்கள் மற்றும் பாடங்களை மாணவர்களை நாடகமாக நடிக்கச் செய்தால் அந்தப் பாடங்களை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.
சமச்சீர்ப் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கணப் பாடங்கள் மிக அழகாக உரையாடல் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆசிரியர்கள் அந்த முறையில் மாணவர்கள் ஒவ்வொருவரையும் வாய் விட்டுப் படிக்கச்சொல்லிக் கற்பிப்பது இல்லை. ஒரு பாடத்தை ஒரு வகுப்பில் இரு முறை சொல்லிக் கொடுத்து, அப்போதே மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து ஒரு குழு கேள்வி கேட்க மற்ற குழுக்கள் பதில் சொல்வதுபோல் வகுப்பை நடத்தினால் சுவாரசியம் கூடும்.
நமது தேர்வு முறையில் உள்ள மிகப் பெரும் குறைபாடு, தேர்வு வினாக்கள் மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிக்கும் வகையில் இல்லாமல் அறியாத் திறனைச் சோதிக்கும் வண்ணம் இருப்பதுதான்.

சமச்சீர்த் திட்டத்தில் புத்தகத்தில் உள்ள கேள்விகளை வார்த்தை மாறாமல் அப்படியே கேட்கிறார்கள். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலோ புத்தகத்தில் இருப்பதற்குச் சற்றும் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்கிறார்கள். இரண்டுமே தவறு. பாடங்களை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டு அதில் எப்படி கேள்விகளைக் கேட்டாலும் பதில் எழுதத் தெரியும் அளவுக்கு மாணவர்களைத் தயார் செய்யவேண்டும்.

மாணவர்களுக்குப் பாடங்களைப் படிக்கப் போதிய அவகாசம் கொடுக்காமல் தேர்வுகள் வைத்துப் பயனில்லை. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இவற்றுக்கிடையே ஒரு பருவத் தேர்வு, முழு ஆண்டுப் பொதுத் தேர்வுக்கு முன்னர் இரண்டு திருப்புதல் தேர்வுகள் - இவை போதும், மாணவர்கள் தேர்வுகளைப் பயமின்றி எழுதுவார்கள்.
ஒவ்வொரு தேர்விலும் வெவ்வெறு வகையான வினாக்கள் கேட்கப்பட வேண்டும். புளூஃபிரிண்ட் எனப்படும் மாதிரி வடிவம் அறவே ஒழிக்கப்படவேண்டும். ஒவ்வொரு பொதுத் தேர்வுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒரே கேள்விக்குப் பலவிதமான பதில்களை அளிக்க முடியும். விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களும் இதனைப் புரிந்து கொண்டு குறிப்பேடுகளின் துணையோடு திருத்தாமல் மாணவர்களின் புரிதல் திறனை மதித்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
சனி, ஞாயிறுகளிலும், காலாண்டு, அரையாண்டு மற்றும் கோடை விடுமுறைகளிலும் கூடுதல் வகுப்புகள் வைத்து மாணவர்களைச் சோர்ந்துபோக வைத்துவிடுகிறார்கள். இந்த நாள்களில் விடுமுறையைக் கட்டாயமாக்கி மாணவர்களுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் ஒட்டுமொத்த மாறுதல் ஏற்பட்டு, பாடத்திட்டமும், கற்பிக்கும் முறையும், புத்தகங்களும், தேர்வு முறையும் மாறினால் மாணவர்கள் தேர்வுகளைப் பயமின்றி, மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள்.

கட்டுரையாளர்:
சுற்றுச்சூழல் ஆர்வலர்

விருதுநகர், ராஜபாளையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Added : பிப் 23, 2019 01:01

விருதுநகர், விருதுநகர் சமூகநலத்துறை, ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் விருதுநகர் மாவட்ட பயனாளிகளுக்கு கடந்த மாதம் நிதி வழங்கப்பட்டது. 275 பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்க வில்லை. இந்த நிதி உதவி பெறுவதற்கு பயனாளிகளிடம் வட்டார விரிவாக்க அலுவலர், ஊர்வல அலுவலர்கள் குறிப்பிட்ட தொகை வசூலித்து அதிகாரிகளுக்கு வழங்குவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.பயனாளிகளிடம் வசூலித்த பணத்தை வட்டார விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், உயர் அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக விருதுநகரில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு வந்தனர்.தகவல் அறிந்து நேற்று மாலை 4:30 மணிக்கு விருதுநகர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நிலம் எடுப்பு தனித் தாசில்தார் ராமநாதன் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 

அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளரிடம் ரூ.9,480, 5 வட்டார விரிவாக்க அலுவர்களிடம் ரூ.19,590 என மொத்தம் ரூ.29,070 கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம் உள்பட ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொழிலாளர் துறைராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா முடங்கியார் ரோட்டில் தொழிலாளர்துறை உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தொழிலாளர் நல உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சிவகங்கையை சேர்ந்த மாரிமுத்து. இவர் கடைகள், ஓட்டல்கள் வணிக நிறுவனங்களில் சென்று தராசுகளில் முத்திரையிடப்பட்டுள்ளதா, பொட்டலங்களில் காலாவதி தேதி உள்ளதா, குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கின்றனரா என ஆய்வு செய்வார். வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்பதாக வியாபாரிகள் புகார் வந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு டி.எஸ்.பி. ரகுபதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விமலா உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அருப்புக்கோட்டை சிவில் சப்ளை தாசில்தார் ஷாஜகான் குழுவினர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ.48 ஆயிரம் பணம் கைப்பற்றினர். உதவி ஆய்வாளர் மற்றும் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர். மாவட்டத்தில் ஒரே நாளில் இரு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளியில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை: ஒருதலை காதலால் விபரீதம்

Added : பிப் 23, 2019 00:48 |




வடலுார், திருமணத்திற்கு சம்மதிக்காத தனியார் பள்ளி ஆசிரியையை, வகுப்பறையில் கழுத்தை அறுத்து கொலை செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ரம்யா, 23, தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று காலை, 8:15 மணிக்கு, பள்ளிக்கு வந்தார். 

பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து,வகுப்பறைக்கு சென்று பணியை மேற்கொண்டார்.இந்நிலையில், ரம்யா வகுப்பறையில் மயங்கி கிடப்பதாக, பள்ளி துப்புரவு பணியாளர் சாந்தி தலைமையாசிரியரிடம் தெரிவித்தார். தலைமை ஆசிரியர் சென்று பார்த்த போது, ரம்யா இரண்டு கை விரல்கள் துண்டிக்கப்பட்டு, கழுத்தில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.ரம்யாவை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ரம்யா ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்தார்.

இது குறித்து, குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை நடத்திய போது கிடைத்ததாவது:ரம்யா, கடலுார், கே.என்.சி., கல்லுாரியில் எம்.எஸ்சி.,படித்த போது, தினமும் தனியார் பஸ்சில் சென்று வந்தார். 

விருத்தகிரிகுப்பத்தைச்சேர்ந்த கல்லுாரி மாணவர் ராஜசேகர், 24 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில், ராஜசேகர் ரம்யாவை ஒரு தலையாக காதலிக்க துவங்கினார். இதனால், ராஜசேகருடன் பேசுவதை, ரம்யாநிறுத்தினார்.இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு முன், ரம்யாவை திருமணம் செய்து கொடுக்குமாறு அவரது தந்தை சுப்ரமணியிடம், ராஜசேகரின் வீட்டார் பெண் கேட்டுள்ளனர். திருமணத்திற்கு, ரம்யாவின் தந்தை மறுத்து விட்டர்.குறிஞ்சிப்பாடி ரெட்டியார் காலனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த ரம்யாவை, தினமும் பின் தொடர்ந்து, ராஜசேகர் தொந்தரவு செய்துள்ளார். இதனால் பள்ளியில் இருந்து நின்ற ரம்யா, தந்தையிடம் சொல்லி ராஜசேகரை கண்டித்து, போன் எண்னை மாற்றியுள்ளார்.கடந்தஆறு மாதங்களாக ரம்யாவை பற்றிய தகவல் தெரியாமல் இருந்த ராஜசேகர், அவர், குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவில் உள்ள பள்ளியில் பணியாற்றுவதை கண்டறிந்து, ஒரு வாரமாக பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.நேற்று முன்தினம் ரம்யா போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி உள்ளார். இதை கண்டு கொள்ளத ரம்யா, நேற்று வழக்கமாக பள்ளிக்குவந்துள்ளார்.இதனால் கோபமடைந்த ராஜசேகர், பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் வகுப்பறைக்கு சென்று, கத்தியால் ரம்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து, பைக்கில் தப்பிச் சென்றார்.குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து ராஜசேகரை தேடி வருகின்றனர்.

சுயமாக கட்டணம் நிர்ணயிக்க தடை

Added : பிப் 22, 2019 22:17

சென்னை, தனியார் பல்கலைகள், சுயமாக கட்டணம் நிர்ணயிக்கவும், நன்கொடை வசூலிக்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது.அரசு கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, மாநில அரசால் நியமிக்கப்படும், கட்டண நிர்ணய கமிட்டி வழியாகவோ அல்லது பல்கலைகளின் சிண்டிகேட் வழியாகவோ கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், தனியார் பல்கலைகளுக்கு, அந்தந்த நிர்வாகங்களே கட்டணத்தை நிர்ணயிக்கின்றன.இந்நிலையில், தனியார் நிகர்நிலை பல்கலைகளுக்கான புதிய விதிகளை, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. 

அதில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதன் விபரம்:

அனுமதியின்றி, எந்த புதிய படிப்பையும், தனியார் பல்கலைகள் துவக்கக் கூடாது. தனியார் நிகர்நிலை அந்தஸ்து பெறும் பல்கலைகளுக்கு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். தேசிய தர வரிசை பட்டியலில், 50 இடங்களுக்குள் இடம் பெற வேண்டும். வெளிப்புற கல்வி மைய வளாகம் அமைக்க, முன் அனுமதி பெற வேண்டும்.நிகர்நிலை பல்கலைகள், தாங்களாகவே கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கக் கூடாது. மாநில அரசுகளின் கீழ் செயல்படும் கட்டண நிர்ணய கமிட்டியின் வழியாக, கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு மேல், மாணவர் சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம், நன்கொடை என, எந்த தலைப்பிலும் பணம் வசூலிக்கக் கூடாது.அனுமதிக்கப்பட்ட கட்டண விபரங்களை, தங்கள் நிறுவன இணையதளங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை - கொல்லம் சிறப்பு ரயில்

Added : பிப் 22, 2019 22:15

சென்னை, சென்னை எழும்பூரில் இருந்து, கேரள மாநிலம் கொல்லத்துக்கு, சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், எழும்பூரில் இருந்து, மார்ச், 29ம் தேதி, மாலை, 5:00க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 9:20 மணிக்கு, கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து, 31ம் தேதி, காலை, 11:30க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:30க்கு எழும்பூர் வந்தடையும் கேரள மாநிலம், எர்ணாகுளம் மற்றும் கொச்சுவேலியில் இருந்து, கோவை, திருப்பூர், சேலம் வழியாக, ஆந்திர மாநிலம், ஐதராபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், எர்ணாகுளத்தில் இருந்து, மார்ச், 7, 14, 21, 28, ஏப்., 4, 11, 18 மற்றும், 25ம் தேதிகளில், இரவு, 9:30க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு, 10:55 மணிக்கு, ஐதராபாத் சென்றடையும் கொச்சுவேலியில் இருந்து, மார்ச், 4, 11, 18, 25, ஏப்., 1, 8, 15, 22 மற்றும், 29ம் தேதிகளில், காலை, 7:45க்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:00 மணிக்கு, ஐதரா பாத் சென்றடையும்.

'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்

23.02.2019

புதுடில்லி, 'புல்லட்' ரயிலுக்கு, பொருத்தமான பெயர் மற்றும் சின்னம் வடிவமைக்கும் போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.நாட்டின், முதல் புல்லட் ரயில் திட்டம் விரைவில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத்தில் உள்ள ஆமதாபாத் வரையில் இயக்கப்பட உள்ளது.புல்லட் ரயில் சேவைக்கு பொருத்தமான பெயரும், 'லோகோ' எனப்படும் சின்னமும் வடிவமைக்க, ரயில்வே நிர்வாகம் போட்டி அறிவித்துள்ளது.பெயர் மற்றும் சின்னம் வடிவமைப்பவருக்கு, ரொக்க பரிசுடன், சான்றிதழும் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விபரங்களை, www.mygov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

NEWS TODAY 15,16.06.2026