Thursday, May 2, 2019

8 மணி நேர வேலைக்கு 6 மணி நேர பயணம்

மேல்மருவத்தூர் டூ ஆதம்பாக்கம்; 8 மணி நேர வேலைக்கு 6 மணி நேரப் பயணம்

வி. ராம்ஜி

தி விகடன்

மேல்மருவத்தூர் தெரியும்தானே. சென்னையில் இருந்து தாம்பரம் தாண்டி, செங்கல்பட்டு, மாமண்டூர், மதுராந்தகத்தையெல்லாம் கடந்தால் மேல்மருவத்தூர் வரும் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். மேல்மருவத்தூரில் இருந்து வந்தவாசி செல்வதற்கு சாலை உண்டு. அந்தச் சாலையில் 10 கி.மீ. பயணம் செய்தால் ராமாபுரம் எனும் கிராமத்தை அடையலாம். அங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ. சென்றால் தீப்பெட்டி சைஸில் உள்ள அண்ணாநகர் எனும் பகுதியை அடையலாம்.

அடேங்கப்பா... என்று சொல்லும்போதே அயர்ச்சியாகிறதுதானே. ஆனால் மேல்மருவத்தூரை அடுத்த ராமாபுரம் அண்ணாநகரில் இருந்துதான் தினமும் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு வேலைக்கு வருகிறார் ஆறுமுகம்.
இதுக்கே மலைத்தால் எப்படி?

எங்க ராமாபுரம் அண்ணாநகர்லேருந்து மேல்மருவத்தூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு 13 கி.மீ. அங்கேருந்து ரயில்ல வேலைக்கு வந்துக்கிட்டிருக்கேன்’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் ஆறுமுகம்.
‘’இது சொந்தவீடு. கூட்டுக்குடும்பமா இருக்கோம். பெருசா படிக்கலை. 22 வருசமா ஹோட்டல் சர்வர் வேலைதான் பாத்துக்கிட்டிருக்கேன். அண்ணாநகர்லேருந்து சைக்கிள்ல ராமாபுரம் வந்துருவேன். அங்கே ஒருநண்பர் எலப்பாக்கத்துலேருந்து டூவீலர்ல வருவார். அவர் லீவு, உடம்புக்கு முடியலை அப்படி இப்படின்னு ஆகிட்டா, அங்கேருந்து பஸ் பிடிச்சு, மேல்மருவத்தூர் வந்து, விறுவிறுன்னு மேல்மருவத்தூர் ஸ்டேஷனுக்கு ஓடுவேன். அங்கே சென்னைக்குப் போற பல்லவன் எக்ஸ்பிரஸ்ல ஏறுவேன். பல்லவனை விட்டாச்சுன்னா, அன்னிக்கி கதை கந்தல்தான். அதைவிட்டா, ரெண்டு மூணு மணி நேரம் கழிச்சு, வைகைதான். ஆனா அரைநாள் லீவாயிரும். சம்பளமும் கட்டாயிரும்’’ என்கிற ஆறுமுகத்திற்கு, மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம்.

‘’பல்லவன் டிரெயின்ல ஏறி, நேரா மாம்பலம் ஸ்டேஷன்ல இறங்குவேன். சூப்பர் ஃபாஸ்ட்ல ஏறுற மாதிரி, பாஸ் வாங்கிவைச்சிருக்கேன். தடதடன்னு இந்தப் பக்கமா வந்து, பீச்லேருந்து தாம்பரம் நோக்கி போற யூனிட் டிரெயின்ல ஏறி, பரங்கிமலை ஸ்டேஷன்ல இறங்குவேன். அங்கே டைம் இருந்தா, ஒரு கால்மணி நேரம் கண்ணை மூடி ஒரு குட்டித்தூக்கம். வண்டி லேட்டு, சிக்னல் பிராப்ளம்னு எதுனா ஆயிட்டா, கொஞ்சம் ரெஸ்ட்டும் எடுக்கமுடியாது. லேட்டும் ஆயிரும். அப்புறம், மூஞ்சியெல்லாம் அலம்பிட்டு, ஆதம்பாக்கத்துல நான் வேலை பாக்கற ஹோட்டலுக்குப் போயிருவேன். சின்ன ஹோட்டல்தான். ஆனா எப்பவும் கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும்.
முதலாளியும் நல்ல மாதிரி. அங்கேஇங்கேன்னு பல ஹோட்டல்ல சர்வரா வேலை பாத்து, இப்பதான் அஞ்சாறு வருஷமா நல்ல இடமா அமைஞ்சிருக்கு. ராத்திரி பத்துமணி வரைக்கும் பரபரன்னு போகும் வேலை.
அப்புறம் டியூட்டி முடிஞ்சு, ஹாயா, ரிலாக்ஸ்டா பராக்கு பாத்துக்கிட்டெல்லாம் வரமுடியாது. 

பத்துமணிக்கு வேலை முடிஞ்ச பத்தாவது நிமிஷம், பரங்கிமலை ஸ்டேஷன்ல ஆஜராயிருவேன். யூனிட் டிரெயின்ல ஏறி, தாம்பரம் வந்துருவேன். சேலம் எக்ஸ்பிரஸ் பத்தரை பத்தே முக்கால் போல வரும். அதுல ஏறி, மேல்மருவத்தூர் ஸ்டேஷன்ல இறங்கி, வந்தவாசி போற ரோட்டுக்கு வந்து நின்னு, குலசாமியையெல்லாம் வேண்டிக்குவேன். பஸ் ஒண்ணு ரெண்டுதான் இருக்கும். முன்னபின்னதான் வரும். யாராவது தெரிஞ்சவங்களோ, அந்தப் பக்கமா போறவங்களோ டூவீலர்ல போனாக்க, கொஞ்சம் ராமாபுரத்துல இறக்கிவிடுங்கண்ணேன்னு சொல்லி ஏறிக்கறதும் நடக்கும். வழக்கமா, டூவீலர் நண்பர் ஒருத்தர் இருக்காரு. அவரும் நானும் வர்ற நேரம் ஒத்துப்போச்சுன்னா, என்னை வீட்லயே கொண்டுபோய் விட்ருவாரு. அப்படி இல்லேன்னா, ராமாபுரம் வந்து, அங்கேருந்து சைக்கிளை எடுத்துக்கிட்டு, வீட்டுக்குள்ளே போய் சட்டையை கழட்டினா... மணி ஒண்ணு, ஒன்னரைன்னு ஆகியிருக்கும். ஒரு குளியலைப் போட்டு படுத்தேன்னா... உலகமே இடிஞ்சாலும் எதுவும் கேக்காது எனக்கு. அப்புறம் காலைல எந்திரிச்சு, சைக்கிள், டூவீலர், பஸ், டிரெயின்... அப்படின்னு பழையபடி ஓடணும்’’ என்று சொல்லும் ஆறுமுகத்திற்கு எட்டாயிரம் சம்பளம் தாண்டி, தினமும் வரும் டிப்ஸ், பஸ், ரயில் செலவுக்கே சரியாகிவிடும் என்கிறார்.

‘’படிப்பு ஏறலே. இதான் வாழ்க்கைன்னு முடிவாயிருச்சு. மூத்த பையன் ஆறாவது போறான். சின்னப் பையன் ரெண்டாவது போறான். திங்கட்கிழமைலேருந்து வியாழக்கிழமைக்குள்ளே வீக்லி ஆஃப் எடுத்துக்கலாம். அன்னிக்கி, ‘இவன் பேரு ஆறுமுகமா, இல்ல கும்பகர்ணனான்னு கேப்பாங்க எல்லாரும். அன்னிக்கி சாயந்திரம், பசங்க ஸ்கூல் விட்டு வரும்போது நான் இருப்பேனா? அதுங்களுக்கு அவ்ளோ சந்தோஷம். சைக்கிள்ல உக்காரவைச்சு ஏரியாவை ஒரு ரவுண்டு வந்தா, உற்சாகமாயிருவாங்க. பத்துரூபாய்க்கு பிஸ்கட்டும் சாக்லெட்டும் வாங்கிக் கொடுத்தா போதும், குஷியாயிருவாங்க. எல்லாத்துக்கும் மேல, அடுத்தடுத்த நாள், காலைல மூணுமணி நேரம் நைட் மூணுமணி நேரம்னு டிராவல்h பண்ணி வேலை பாக்கற எனக்கு, செம எனர்ஜி பசங்கதான்!’’ என்றபடி மாம்பலம்ரயில்வே ஸ்டேஷனில் நின்றபடி பேசிக்கொண்டே இருந்தவர், ‘அண்ணா... இதோ யூனிட் ரயில் வந்துருச்சுண்ணா. பாப்போம்ணா’ என்றபடி ரயிலில் ஏற ஆயத்தமானார்.

வாழ்க்கை நீண்டதான பயணம் என்பது உண்மைதான். எட்டுமணி நேர வேலைக்கு ஆறுமணி நேரப் பயணம் செய்யும் ஆறுமுகங்கள், இன்னும் எத்தனையெத்தனை பேரோ? எங்கிருந்து வருகிறார்களோ...?
அப்படியான உழைப்பாளிகளுக்கு வலிக்க வலிக்க கைகுலுக்குவோம். வாழ்க உழைப்பாளர்கள். மே தினத்தில், உழைப்பாளர்கள் தினத்தில் அவர்களை மனதார நினைத்து வாழ்த்துவோம்; போற்றுவோம்!
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையை அதிகரிக்க புதிய சாதனங்கள் கொள்முதல்

By DIN | Published on : 02nd May 2019 03:01 AM

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக கூடுதலாக 4 டயாலிசிஸ் சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாதந்தோறும் 300-இலிருந்து 350 டயாலிசிஸ் சிகிச்சைகள் கூடுதலாக மேற்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிறுநீரகப் பிரச்னைக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அவர்களில் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அந்த வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. சிலருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. டயாலிசிஸ் பிரிவைப் பொருத்தவரை தற்போது மொத்தம் 7 சாதனங்கள் அங்கு உள்ளன. இதன் மூலம் மாதந்தோறும் 350 டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், புதிதாக மேலும் 4 டயாலிசிஸ் சாதனங்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.24 லட்சம் செலவில் இச்சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய சாதனங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள சாதனங்கள் அனைத்தும், மற்றொரு புதிய இடத்துக்கு மாற்றப்பட்டு அடுத்த சில வாரங்களில் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் செலவில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறியது: 

புதிய டயாலிஸ் சாதனங்கள் வாங்கப்பட்டிருப்பதன் மூலம் தற்போது அளிக்கப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை எண்ணிக்கையை விட இரு மடங்கு கூடுதலாக சிகிச்சை அளிக்க முடியும். கீழ்ப்பாக்கத்தைத் தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் 30 டயாலிசிஸ் சாதனங்கள் புதிதாக வாங்கப்பட உள்ளன. அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கொள்முதல் நடவடிக்கைகள் தொடங்கும் என்றார் அவர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறை பேராசியர் பலராமன் கூறியது: சிறுநீரக சிகிச்சைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாகவே தற்போது புதிய சாதனங்கள் வாங்கப்படுகின்றன.பொதுவாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நோயாளியின் ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை மட்டுமே தானமாகப் பெற்று பொருத்த முடியும். ஆனால், மற்ற எந்த அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத வகையில் மாற்று ரத்தப் பிரிவு சிறுநீரகங்களையும் பொருத்தும் சவாலான அறுவை சிகிச்சைகள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
வரவேற்புக்குரிய தீர்ப்பு!

By ஆசிரியர் | Published on : 02nd May 2019 01:32 AM

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையேயான பிரச்னை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் தெளிவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியல் சாசனத்தின் உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் தீர்ப்பாக அமைந்திருப்பதால், இனி வருங்காலத்தில் இந்தியாவில் ஆளுநர் முதல்வர் அதிகாரப் பகிர்வு குறித்த பிரச்னைகள் எழும்போதெல்லாம் இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டப்படும்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டது முதலே, வே. நாராயணசாமி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் தொடங்கிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் துணைநிலை ஆளுநர் அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கியபோது அதிகாரிகள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர். அரசுக்கு இணையாக ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது, அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் கோரிப்பெறுவது, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது என்று துணைநிலை ஆளுநர் செயல்படத் தொடங்கியபோது புதுச்சேரி அரசு அநேகமாக ஸ்தம்பித்துவிட்ட நிலையை எட்டியது
.
பிரச்னை கைமீறிப் போனபோது, புதுச்சேரி முதல்வரும் அமைச்சர்களும் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்னால் தெருவில் உட்கார்ந்து போராட வேண்டிய கேலிக்கூத்தான சூழல் ஏற்பட்டது. அந்த நிலையில்தான் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். 

ஆளுநர்களுக்கும், முதல்வர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது என்பது புதிதொன்றுமல்ல. 198384இல் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி. ராமாராவ் ஆந்திர முதல்வராக இருந்தபோது, மத்திய காங்கிரஸ் ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தாகூர் ராம்லால் அவருக்குக் கொடுத்த தொந்தரவுகள் சொல்லி மாளாது. இதய அறுவைச் சிகிச்சைக்காக முதல்வர் என்.டி. ராமாராவ் அமெரிக்கா சென்றிருந்தபோது, ஆளுநர் ராம்லால் நிதியமைச்சராக இருந்த பாஸ்கர் ராவை முதல்வராக்கி மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு ராமாராவ் தன்னுடைய சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபித்து ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டியிருந்தது.

கேரளத்தில் ஈ.கே. நாயனார் முதல்வராக இருந்தபோது, அப்போதைய ஆளுநராக இருந்த ராம்துலாரி சின்ஹா இடதுசாரி கூட்டணி அமைச்சரவைக்கு ஏற்படுத்திய பிரச்னைகள் ஏராளம். திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில் இருந்துதான் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியே செயல்படுகிறது என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு ஆளுநர் ராம்துலாரி சின்ஹா செயல்பட்டார். அதேபோல, குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது ஆளுநராக இருந்த கமலா பெனிவாலுக்கும் அவருக்கும் நடந்த பனிப்போர் உலகறிந்த ரகசியம். 
 
ஆளுநர்கள் நியமனம் குறித்து அரசியல் சாசன சபை மிகவும் விரிவாகவே விவாதித்தது. ஜவாஹர்லால் நேரு, கே.எம். முன்ஷி, பி.எஸ். தேஷ்முக் உள்ளிட்ட பலர், தனது அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்றும் அளவிலான அதிகாரங்களுடன் ஆளுநர்கள் மாநில நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கருதினர். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தும் அதிகாரம் அவர்களுக்குத் தரப்பட வேண்டுமென்றும், மாநில அரசின் அன்றாட ஆணைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டால்தான், நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது குறித்து ஆளுநர்களுக்குத் தெரியும் என்றும் பி.எஸ். தேஷ்முக் ஜூன் 2, 1949இல் இது குறித்த விவாதத்தின்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
1967 தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி அமைந்தபோதுதான் இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் குறித்த பல கேள்விகள் எழும்பின. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிகளும் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்களாகவும் இருந்ததால், பிரச்னைகள் ஏற்படத் தொடங்கியதில் வியப்பில்லை. 

இப்படியொரு சூழல் ஏற்படும் என்பதை அரசியல் சாசன சபை உணர்ந்து விவாதித்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். 1949 மே 31ஆம் தேதி அரசியல் சாசன சபை விவாதத்தின்போது வெவ்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும்போது, ஆளுநர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வியை விஸ்வநாத தாஸ் எழுப்பியிருக்கிறார். ஆளுநர்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று அவர் அப்போது எழுப்பிய கேள்வி தொலைநோக்குப் பார்வையுடன் கூடியது என்பதை கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியாகிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் என்றும், துணைநிலை ஆளுநருக்கு என்று தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின், அமைச்சரவையின் அதிகாரத்தைவிட அதிகமான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை என்றும் வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது.

 ஜனநாயகத்தில் ஆளுநர்தான் முடிவெடுப்பார் என்றால், தேர்தலும், சட்டப்பேரவையும் அமைச்சரவையும் எதற்காக?
டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

Added : மே 02, 2019 06:37

சென்னை:டாக்டர்கள், செவிலியர்கள் நியமனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றும்படி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவிலியர்கள் நியமனத்துக்கு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:நடைமுறையில் உள்ள தேர்வு விதிகளை பின்பற்றாமல் 2015ம் ஆண்டில் தேர்வு பட்டியலில் உள்ளவர்களை செவிலியர் பணிக்கு நியமிக்கின்றனர்.இவர்கள் ௨௦௧௫ல் நடந்த தேர்வில் வெற்றி பெறவில்லை. இதை அனுமதித்தால் எங்களுக்கு தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
.மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் புகழ்காந்தி; அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் சிறப்பு பிளீடர் தம்பிதுரை ஆகியோர் ஆஜராகினர்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடந்த 2015ல் தேர்ச்சி பெறாதவர்களை செவிலியர் பணிக்கு நியமிக்கும் நடைமுறையை அனுமதித்தால் பின் வாசல் வழியாக நுழைவதை ஊக்குவிப்பது போல ஆகிவிடும். எனவே நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களை பணி வரன்முறை செய்யக் கூடாது.ஒப்பந்த ஊழியர்களைதேர்வில் பங்கேற்க அனுமதிக்கலாம்.பணியிடங்களை நிரப்பும் வரை ஒப்பந்த ஊழியர்கள் பணியில் தொடரலாம். அதன்பின் அவர்களை விடுவிக்க வேண்டும்.டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் பணியிடங்களில் நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.
சூறாவளியுடன் பல மாவட்டங்களில் கன மழை: வீடுகள், மரங்கள், மின் கம்பங்கள் சேதம்

Added : மே 02, 2019 01:29




சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சூறாவளியுடன் பெய்த கன மழைக்கு, பல வீடுகள் சேதமாகின. மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில், அவ்வப்போது, கோடை மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன், மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றால், தளியை சுற்றிய பகுதிகளில், 11க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமாகின.

ஜவளகிரி - கொலகொண்டப்பள்ளி செல்லும் சாலையில், ஆலமரம் சாய்ந்தது. அஞ்செட்டியை சுற்றிய பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஐந்து மின் கம்பங்கள் சேதமாகின. குமார்தனஹள்ளி பகுதியில், பலத்த காற்றில், மரம் சாய்ந்து, கன்றுக்குட்டி பலியானது. 8 ஏக்கருக்கு மேல் வாழைத் தோட்டங்கள் நாசமாகின.

மக்கள் தஞ்சம்

தர்மபுரி அடுத்த மாதேமங்கலம், குட்டூர், கவலைக்காரன் கொட்டாய் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பலத்த சூறைக்காற்று வீசியது.இதில், 19 வீடுகளின் கூரைகள், 100 மீட்டருக்கு அப்பால் போய் விழுந்தன. 15க்கும் மேற்பட்ட மரங்கள் வேராடு சாய்ந்து, வீடுகள், மின் கம்பங்கள் மீது விழுந்தன.இப்பகுதி இருளில் மூழ்கியதால், சாரல் மழைக்கு மத்தியில், தங்களது உடைமைகளுடன் அருகில் உள்ள வீடுகளில், மக்கள் தஞ்சமடைந்தனர்.

வேலுார் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல், அரை மணி நேரம் சூறைக்காற்று வீசியது. ஆம்பூரில் மட்டும் மழை பெய்தது.வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டியில், முருகன், 45, என்பவருக்கு சொந்தமான, ஆட்டுக் கொட்டகை இடிந்து, எட்டு ஆடுகள் பலியாகின.வாணியம்பாடியை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 6,000 வாழை மரங்கள் சாய்ந்தன.பேர்ணாம்பட்டு - குடியாத்தம் சாலையில், ஐந்து புளிய மரங்கள், நான்கு டிரான்ஸ்பார்மர்கள், 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர், நிலோபர் கபில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மொரப்பூர் - ஜோலார்பேட்டை ரயில் மார்க்கத்தில், சூறை காற்றால், பல இடங்களில், உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், சிக்னல்கள் செயல் இழந்தன. இந்த மார்க்கத் தில், சென்னை செல்லும் ரயில்கள், மூன்று மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக சென்றன.

மூதாட்டி பலி

சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, பல இடங்களில் பலத்த காற்று, இடியுடன் மழை கொட்டியது.மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்த மூதாட்டி வெள்ளையம்மாள், 80, உறவினர் கள் சிலருடன், வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பலமாக வீசிய காற்றால், கொட்டகையின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை சரிந்து விழுந்தது. இதில் சிக்கி, பசு மாடும், வெள்ளையம்மாளும் இறந்தனர். காயமடைந்த இரண்டு பெண்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரிந்துரை கடிதங்களுக்கு தரிசனம் ரத்து

Added : மே 02, 2019 00:03


திருப்பதி:திருமலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள, மே, 23ம் தேதி வரை, வி.ஐ.பி.,க்கள் தரும் பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கப்படும் தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருக்கும் திருமலை தேவஸ்தானம், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பரிந்துரை கடிதங்களுக்கு, 'வி.ஐ.பி., பிரேக்' தரிசனம் வழங்கி வருகிறது.வி.ஐ.பி.,க்கள் நேரடியாக வந்தால், 'லிஸ்ட்-' 1 தரிசனமும், அவர்களின் பரிந்துரை கடிதங்களுக்கு, 'லிஸ்ட்'-2 மற்றும் 'ஜெனரல்' என, மூன்று வகையாக, வி.ஐ.பி., பிரேக் தரிசனம், வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அவை முடியும் வரை, வி.ஐ.பி.,க்களின் பரிந்துரை கடிதங்களுக்கு, தரிசனம் வழங்க கூடாது என, ஆந்திர அரசு, தேவஸ்தானத்திற்கு உத்திரவிட்டுள்ளது.அதன்படி ஓட்டு எண்ணிக்கை நடக்கும், மே, 23ம் தேதி வரை, திருமலையில், பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...