Sunday, September 22, 2019

உலகிலேயே இது முதல்முறை: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இணையும் சட்டக் கல்லூரித் தோழர்கள்!

By ENS | Published on : 21st September 2019 04:19 PM



உச்ச நீதிமன்றம்

புது தில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக பதவியேற்றுள்ள 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. ஆம் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்ல, அவர்கள் நான்கு பேரும் 1982ம் ஆண்டு தில்லி சட்டக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களாம்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் உள்பட 4 நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் 34- ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் நால்வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளனர்.

ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நீதிபதி எஸ். ரவீந்திர பட், ரிஷிகேஷ் ராய் மற்றும், ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் டிஒய் சந்திரகுட், எஸ்கே கௌல் ஆகியோர் தில்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் சட்டப்படிப்பு முடித்தவர்களாம்.

இது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நிகழாத ஒரு நிகழ்வாகும். அதாவது நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் 4 பேர் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்களாக இருப்பது இதுவரை நிகழாத ஒன்றாம்.

இவர்களில் சந்திரகுட் 2016ம் ஆண்டு மே மாதமும், கௌல் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 4 நீதிபதிகளில் பட் மற்றும் ராய் ஆகியோரின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்திருந்த நிலையில், இதற்கு குடியரசுத் தலைவர் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தார்.

இது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-ம் இதே கல்லூரியில் வேறு ஆண்டில் படித்தவர்தான். தற்போது நீதிபதிகளாக இருக்கும் ஆர்எஃப் நாரிமன், நவீன் சின்ஹா, தீபக் குப்தா, இந்து மல்ஹோத்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோரும் இதே கல்லூரியில் வேறு வேறு ஆண்டுகளில் சட்டம் பயின்றவர்கள்தான்.

1924ம் ஆண்டு துவக்கப்பட்ட தில்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சட்டம் பயின்று வருகிறார்கள்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையரிடம் தனிப்படை விசாரணை

By DIN | Published on : 22nd September 2019 03:48 AM

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் "நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொடர்பாக அக் கல்லூரி முதன்மையரிடம் தனிப் படை போலீஸார் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.

சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் உதித் சூர்யா(20), தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்தார்.

இந்நிலையில் உதித் சூர்யா "நீட்' தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பதாக, தேர்வறை அனுமதிச் சீட்டு ஆதாரத்துடன், அசோக்கிருஷ்ணன் என்பவர் கடந்த 11ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர், கடந்த, 13 ஆம் தேதி, மின்னஞ்சல் மூலம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மீண்டும் அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இப் புகார் குறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையர் தலைமையிலான குழுவினர், உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், மஹாராஷ்டிரத்தில் தேர்வு மையம் ஒன்றில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா "நீட்' தேர்வு எழுதியிருப்பதும், ஆள்மாறாட்டம் செய்து கலந்தாய்வில் பங்கேற்றதும் தெரியவந்தது.

மேலும், கல்லூரிச் சேர்க்கையின் போதும் உதித் சூர்யா சார்பில் "நீட்' தேர்வு எழுதியவரே ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் ஆஜராகி சான்றிதழ் சமர்ப்பித்திருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கை அனுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாணவர் தலைமறைவு: ஆள்மாறாட்ட புகார் குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, உதித்சூர்யா கல்லூரி விடுதியில் இருந்து தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் பரவியதை அடுத்து, உதித் சூர்யா மீது கடந்த 18-ஆம் தேதி க.விலக்கு காவல் நிலையத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
தனிப் படை விசாரணை: இப் புகாரின் பேரில் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் உஷா, சார்பு- ஆய்வாளர் சுல்தான் பாஷா ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் உதித் சூர்யாவின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவரது உறவினர் வீடுகளில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். மேலும் உதித் சூர்யா படித்ததாகக் கூறப்படும் "நீட்' தேர்வு பயிற்சி மையத்திலும் விசாரணை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, உதித் சூர்யா மீதான புகார் குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணை விவரம், உதித் சூர்யா சமர்ப்பித்த கல்வி மற்றும் இதர சான்றிதழ்களின் நம்பகத் தன்மை, கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவு, அசோக்கிருஷ்ணன் என்ற பெயரில் மின்னஞ்சலில் புகார் அனுப்பியவர் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரனிடம் தனிப் படை காவல் ஆய்வாளர் உஷா சனிக்கிழமை விசாரணை நடத்தினார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் கூறியது: தனிப் படை போலீஸார் நடத்திய விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை "நீட்' தேர்வு எழுதி தோல்வியடைந்திருந்ததும், இந்த ஆண்டு "நீட்' தேர்வு நடைபெற்ற நாளில் அவர் சென்னையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
உதித் சூர்யா சார்பில் "நீட்' தேர்வு எழுதியவரின் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து, தமிழகத்தில் ஏற்கெனவே "நீட்' தேர்வு எழுதியவர்கள், மருத்துவக் கல்லூரியில் தற்போது 2 ஆம் ஆண்டு படித்துவரும் மாணவர்கள் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்தும், உதித் சூர்யா சார்பில் "நீட்' தேர்வு எழுதியவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றுவது குறித்து காவல் துறை தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். உதித் சூர்யா சார்பில் ஆள் மாறாட்டம் செய்து "நீட்' தேர்வு எழுதியவர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்: 04546-253101, செல்லிடப்பேசி எண்: 94981 01570 ஆகியவற்றில் தொடர்பு கொண்டும், ள்ல்ர்ச்ச்ண்ஸ்ரீங்ற்ட்ங்ய்ண்க்ண்ள்ற்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
மறந்து போன விருந்து

By முனைவர் அருணன் கபிலன்

விருந்து என்றவுடன் நமக்கு அறுசுவை உணவுகள் நிறைந்த விழாதான் நினைவுக்கு வருகிறது. உண்மையில் அது உணவு மட்டும்தான். ஆனால் விருந்து என்ற சொல்லுக்கு விருந்தினராகிய உறவினர்களின் கூட்டம் என்னும் உண்மையான பொருள் மறைந்து போய் விட்டது.
உறவுகளும் நட்புகளுமாகச் சூழ்ந்திருக்கத் தன் இல்லத்தில் நடைபெறும் நல்வேளைப் பொழுதுகளில் மகிழ்ந்திருந்து அறுசுவை உணவு உண்ணும் இனிய நிகழ்வே முழுமையான விருந்து. இதனைத் தமிழ் மரபு விருந்தோம்பல் என்கிறது. தெய்வப் புலவர் திருவள்ளுவர் விருந்தின் சிறப்பினைப் போற்றித் தனி அதிகாரமே படைத்திருக்கிறார். பண்டிகைக் காலங்களில் அவரவர் வீடுகளில் செய்யப்பட்ட உணவுகளைப் பரிமாறிக் கொள்வதும் விருந்தோம்பலின் ஒரு பகுதிதான். அதிலும் சமயக் கலப்பு நிறைந்த விருந்தோம்பலும் இன்றைக்கு உண்டு.

பழங்காலங்களில் ஓர் ஊரில் நடைபெறுகின்ற அம்மன் திருவிழா, ஐயனார் திருவிழா, தேர்த் திருவிழா போன்ற ஊர்ப் பொது விழாக்களுக்கு அண்மையில் உள்ள ஊர்களிலிருந்து உறவினர்கள் புடைசூழ வருகை தந்து விடுவார்கள். பத்து நாட்களும் விருந்து மணக்கும் அந்த இனிய நாள் ஞாபகங்களை இன்றைய பெரியவர்கள் தங்கள் நெஞ்சுக்குள் பசுமையாகத் தேக்கி வைத்திருப்பார்கள்.
ஒருகாலத்தில் திருமணம்கூடப் பல நாள் விழாவாகத்தான் நடைபெற்றது. வேளாண் தொழில் செய்வோர் அந்த விழாக்களுக்கு தான் மட்டும் செல்லாது தங்களுடைய கால்நடைகளையும் வளர்ப்பு உயிரிகளையும் விருந்தினராகவே அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
உண்மையில் விருந்து என்பது அறுசுவையோடு கூடிய உணவுதான் என்றாலும் அந்த உணவைத் தங்களின் முயற்சியால் தங்களின் நிலத்தில் விளைந்த பொருள்களால் தங்கள் வீட்டுப் பாத்திரங்களால் தாங்களே சமைத்துத் தாங்களே ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகச் சேர்ந்து பரிமாறித் தாங்களும் மகிழ்ந்து உறவினர்களாகிய விருந்தினர்களையும் மகிழ்வித்து இன்புற்றிருந்த காலம்தான் உண்மையான விருந்துக் காலம்.

விருந்தினரை வரவேற்கும் முறை குறித்து இளையான்குடி மாறநாயனார் புராணத்தில் தெய்வச் சேக்கிழார் மிக அழகான வரையறை செய்கிறார். விருந்தினரை வாசல்வரை சென்று பணிந்து அழைத்து வந்து அவர்களுடைய பாதங்களைத் தூய்மையான நீரினால் புனிதம் செய்து மனைக்குள் எழுந்தருள்வித்து சரியான ஆசனத்தில் இருக்கச் செய்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தந்து அவர்கள் விரும்பியவாறு வேண்டியவாறு அவர்களுக்கு ஏற்ற அறுசுவை உணவு வழங்குவதையே தனது தொழிலாகவும் சிவத்தொண்டாகவும் கொண்டு வாழ்ந்தவர் இளையான்குடி மாறநாயனார். இதில் ஒரு மறைபொருளைச் சேக்கிழார் உணர்த்திக் காட்டுகிறார். இளையான்குடி மாறநாயனாரின் இயல்பு சிவச்சின்னங்கள் அணிந்து வரும் யாவராயினும் அவர்களை இவ்வாறு வரவேற்பார் என்றும், வரும் யாவராயினும் அவர்களை இவ்வாறு வரவேற்பார் என்றும் இரு மறைப் பொருள்களை உணர்த்திக் காட்டுகிறார்.

விருந்து என்பதே புதியவர்களாய் வருபவர்கள் என்னும் பொருளில் இங்கு கையாளப்பெறுகிறது. என்ன அதிசயம்? ஹோமரின் காலத்தில் கிரேக்க மத நம்பிக்கைகளின்படி சியுசு என்னும் தெய்வம்தான் விருந்தோம்பல் பொறுப்பை ஏற்று நடத்தியதாம். கிரேக்க வழக்கப்படி வீட்டுக்குப் புறத்தே செல்லும் அயலார் ஒருவரை அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் இல்லத்திற்கு விருந்தினராக வருமாறு அழைப்பு விடுப்பர். அவ்வாறு தம்வீட்டுக்கு வந்த அந்த விருந்தினரின் பாதங்களைக் கழுவி, உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் இளைப்பாறிய பின்னரே, அவரது பெயரைக் கேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. தமிழ்மரபுக்கும் கிரேக்க மரபுக்கும் எத்தனை பொருத்தம்? இது மட்டுமா? விருந்தினர் கேட்டால் என்னவெல்லாம் தரலாம்? வந்தவர் ஒரு குடிக்கு ஒரு மகனாக இருக்கும் தனது இளம்பிள்ளையைக் கறியாகச் சமைத்துத் தா என்று கேட்டவுடன் சற்றும் சளைக்காமல் தானும் தன் மனைவியுமாய்ச் சேர்ந்து கொண்டு தன்பிள்ளையை விருந்தினர் கேட்ட விதத்திலேயே சமைத்துத் தந்தவர் சிறுத்தொண்ட நாயனார். 

தமது இல்லம் எழுந்தருளி தங்கி இருந்து அறுசுவை உண்டபின்னால் தான் விரும்புவதைத் தரமுடியுமா எனக்கேட்டு, உன் மனைவியைத் தா என்றவுடன் தயங்காமல் தந்தவர் இல்லையே என்னாத இயற்பகை நாயனார். 

தன் வீட்டிற்கு விருந்தாக வந்த தேவதைகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற ஒரு கும்பலிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற, இவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்கள் என் கூரையின் கீழ் விருந்தினர்களாக வந்தவர்கள் என்று கூறி, அந்தக் கும்பலுக்குத் தன் மகளிரைப் பதிலாக நிறுத்திய லோத் என்பவரின் கதையைக் குறித்து விவிலியத்தின் ஆதிஆகமம் விவரிக்கிறது.

இதனால் விருந்தினர்கள் என்றாலே முன்பின் அறியாத புதியவர்கள் என்றும் அவர்களுக்கு அளிக்கப் பெறும் அறுசுவை உணவு மட்டுமல்லாமல் அவர்களின் மெய்ம்மனமகிழ்வே உண்மையான விருந்து என்பதும் அவர்களுக்காகத் தங்களையே ஈயும் ஈகைப் பண்பே என்பதும் புலப்படுகிறது.

இன்றைய நிலையில் விருந்து என்பது என்னவாயிருக்கிறது? ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் அல்லது நட்சத்திர விடுதியில் தொழில்முறைச் சமையல் வல்லுநர்கள் சமைத்த உணவை அமர்ந்தோ நின்றோ மற்றொரு தொழில்முறை உபசரிப்பாளர் பரிமாற நடைபெறுவதே விருந்து என்பதாக உள்ளது.
கிராமங்களில்கூட இப்போது விருந்தினர்களா
கிய உறவினர்கள் வந்துவிட்டால் உடனே உணவு விடுதியில் உணவு வாங்கி வரும் வழக்கம் மிகுந்து வருகிறது. எந்த நல்விழாவாக இருந்தாலும் இத்தனை இலைச் சாப்பாடு என்று கணக்குச் செய்து இன்னின்ன வகைப் பண்டங்கள் என்று பக்கத்து நகரத்திலிருக்கும் உணவுக் கடையில் பட்டியல் கொடுத்து விட்டால் விருந்து நிறைந்து விடுகிறது.

இவ்விதமான விருந்துகளில் இலைகளில் பரிமாறப்படுவதில் பாதிக்கு மேலான உணவுகள் குப்பைக்கே சென்று விடுகின்றன. தற்போது ஒரு மாற்றமாய் மிஞ்சுகிற உணவுப் பொருள்களைச் சேகரித்து அந்தந்த ஊர்களில் உள்ள ஆதரவற்றோர்களுக்குக் கொண்டு சேர்த்துப் பசியாற்றும் குழுக்களும் இயங்குவது சற்று ஆறுதலாக இருக்கிறது. அது இன்னொருவகை விருந்தாகி வருகிறது.

பொருள் படைத்தோர் இல்லங்களில் விருந்து என்பது கேளிக்கையாய் மாறி விட்டது. அவர்களோடு ஒட்ட முடியாமல் நடுத்தர வர்க்கத்து மக்களும் தவித்துத் தாங்களும் அதுபோன்ற விருந்துகளுக்கு ஆசைப்படுகிறார்கள். கிராமங்களில் வாழும் ஏழைகளின் வீடுகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது உண்மையான விருந்து.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நல்லறமாக விளங்கிய விருந்தோம்பல் மெல்ல மெல்லச் சிதைந்து பணத் துண்டுகளை வீசிப் பண்டங்களை வாங்கிக் கொட்டும் பகட்டுத்தனமாய் மாறிப் போய்விட்டது. எல்லாத் துறைகளையும் தன்பால் வளைத்துக் கொண்ட வணிகச் சூழல் உயிரிரக்கப் பண்பின் அடையாளமாகிய விருந்தினையும் உணவினையும் விலைகூறி விற்கத் தயங்கவில்லை.

விருந்து என்னும் அறியாதவர்களுக்கு உணவிடுவதற்கு இன்றைக்கு யாரும் காத்திருப்பதில்லை. பிச்சையெடுப்பவர்களும்கூட உணவை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பணமிருந்தால் எதுவும் எங்கும் கிடைக்கும் என்பதால் அவர்களுக்கும் கூடப் பணமே முதன்மையாகத் தோன்றுகிறது.

நம் பழங்கால விருந்தோம்பல் வாழ்க்கையைப் பறைசாற்றும் விதமாகத்தான் சத்திரம் என்றும் சாவடி என்றும் பல ஊர்கள் இன்றும் வழக்கில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஆனால், அவற்றின் தன்மையே மாறிப் போய்விட்டனவே. தல யாத்திரையும், தீர்த்த யாத்திரையும் மேற்கொண்ட அந்தக் கால மனிதர்களுக்குக் கோயில்களும் சத்திரங்களும் சாவடிகளும்தான் விருந்து வழங்கும் இடங்களாக விளங்கின. சுற்றுலா என்னும் பெயர் பெற்றபின்னால் எல்லாமே விலை கொடுத்து வாங்கும் விலைப் பொருள்கள் ஆகிவிட்டன.
எத்தனை பெரிய இடங்களில் நடக்கும் எந்த விழாக்களிலும் மற்ற நிகழ்வுகள் நிறைந்திருந்தாலும் விருந்தில் குறை என்றால் ஊரே கூடிப் பேசும் என்ற பழங்காலக் கதைகள் நிறைய உண்டு. அறுசுவை உணவேயானாலும் முறையாகக் கவனித்து, கனிந்து உணவிடாத இடங்களில் உண்ணத் தலைப்படத் தமிழர்கள் கூசுவர். உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும் என்பார் ஒளவைப் பெருமாட்டி.

பொதுவாகத் திருமடத்தில் வசதி படைத்தவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் தனி விருந்து. சாதாரண மக்களுக்கு, கிராமப்புற விவசாய மக்களுக்கு இரண்டாந்தர உணவு வழங்குவது வழக்கம். இந்த முறையை நாம் விரும்பவில்லை. நிர்வாகிகளுக்கு இதனை அறிவிக்க ஒரு யுக்தி செய்தோம். ஒருநாள், சிவகங்கை மன்னர் வரப் போகின்றார். மதியம் விருந்து தயாரியுங்கள் என்று உத்தரவிடப்பட்டது.
மடம் சுறுசுறுப்பாக இயங்கியது. சுவையான உணவு சமைத்தார்கள். மடத்து முகப்பு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. சிவகங்கை மன்னரை வரவேற்க ஆயத்தம். மணி பகல் 12. ஆனாலும் சிவகங்கை மன்னர் வரவில்லை. நமது மடத்து விவசாயிகள் சிலர் வந்தனர். நாம் விவசாயிகளை வரவேற்று, மடத்து நிர்வாகிகளிடம், இவர்கள்தான் சிவகங்கை மன்னர்கள். இவர்களை உபசரியுங்கள் என்றோம். எல்லோர் முகத்திலும் வியப்பு: ஆம்! நாட்டின் மன்னர்கள் விவசாயிகள்தான்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருமடத்தில் விசேஷங்களில் இரண்டு உணவு தயாரிப்பு இல்லை. ஒரே வகை உணவு-ஒரே பந்தி என்று விருந்தின் பெருமை குறித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனகர்த்தராக விளங்கிய குன்றக்குடி அடிகளார் பெருமான் நிகழ்த்திய திருப்பாடம் இது.

ஊர்ந்து திரிகிற வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதைப் போல அலைந்து திரிகிற தங்களின் வயிற்றுக்குச் சொரிபொருளாக உணவை அள்ளி எறிந்து விட்டு அடுத்த வேலையை நோக்கி அரக்கப் பரக்க ஓடுகிற மனிதர்கள் விருந்து என்னும் சிறந்த மனிதப் பண்பைத் தாங்கள் மறந்துவிட்டதை அறிவார்களா?
உதவி பேராசிரியர்கள் தேர்வு மீன்வள பல்கலைக்கு 'நோட்டீஸ்'

Added : செப் 22, 2019 00:44

சென்னை சென்னையைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்பு கூட்டமைப்பு செயலர் செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:பல்கலை அதிகாரிகள் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மீன்வள பல்கலை பதிவாளர் வெளியிட்டுள்ளார். பல்கலை விதிகள் பல்கலை மானியக் குழு விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஜூனில் மீன்வள பல்கலை பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கையில் பல்கலை அதிகாரிகளுக்கான தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதி பல்கலை விதிமுறைகளில் நிர்ணயிக்கப்பட்ட தகுதியில் இருந்து மாறுபட்டு உள்ளது.உதவி பேராசிரியர்களுக்கான தகுதி நிர்ணயத்தில் அறிவிப்பாணைக்கும் பல்கலை விதிமுறைகளுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் இன்றி பல வகுப்புகளை மீன்வள பல்கலை நடத்துகிறது. தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. எனவே பல்கலை அதிகாரிகள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தேர்வு குறித்த மீன்வள பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் என்.சேஷசாயி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க மீன்வள பல்கலை பதிவாளர் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அக். ௧௮க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
அண்ணா பல்கலையின் புதிய விதிமுறையை எதிர்த்து வழக்கு

Added : செப் 22, 2019 00:00

சென்னை, பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற, அண்ணா பல்கலை ஏற்படுத்திய, புதிய விதிமுறையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அண்ணா பல்கலைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொறியியல் மாணவர்களுக்கு, புதிய தேர்ச்சி முறையை, அண்ணா பல்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான விதியை, ௨௦௧௯ பிப்ரவரியில் பிறப்பித்தது. அதன்படி, ஒரு செமஸ்டரில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அடுத்தடுத்து, மூன்று செமஸ்டர்கள் வரை தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.மூன்று முறை கிடைத்த வாய்ப்பிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால், அடுத்த செமஸ்டரை தொடர முடியாது. அதாவது, முதல் செமஸ்டரில் தோல்வி அடைந்தவர், நான்காவது செமஸ்டர் முடிவதற்குள், தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான், ஐந்தாவது செமஸ்டர் போக முடியும்.இந்தப் புதிய விதிமுறையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், ௧௦ பேர் மனு தாக்கல் செய்தனர். மனுவில், 'புதிய விதிமுறையால், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும்; எனவே, தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டது.இம்மனு, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் கந்தவடிவேல் துரைசாமி ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, உயர் கல்வித் துறை செயலர் மற்றும் அண்ணா பல்கலைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, அக்., ௧௦க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

ஒரே வகுப்பில் படித்த நான்கு நீதிபதிகள்


Added : செப் 21, 2019 21:51

புதுடில்லி, : உச்ச நீதிமன்ற நீதிபதிகளில், நான்கு பேர், ஒரே ஆண்டில், டில்லி சட்டக் கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றவர்கள்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை சமீபத்தில், 34 ஆக உயர்த்தப்பட்டது. தற்போதுள்ள, 34 நீதிபதிகளில், நான்கு பேர், டில்லியில் உள்ள சட்டக் கல்லுாரியில், 1982ல், பட்டப் படிப்பை முடித்தவர்கள்.

இவர்களில், நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட், 2016ம் ஆண்டிலும்; நீதிபதி, எஸ்.கே.கவுல், 2017லும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர். நீதிபதிகள், எஸ்.ரவீந்திர பட், ரிஷிகேஷ் ராய் சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர்.தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், ஆர்.எப்.நரிமன், நவீன் சின்ஹா, தீபக் குப்தா, ஹிந்து மல்ஹோத்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோரும், இதே கல்லுாரியில் படித்தவர்கள் தான்.

நிரந்தர அமர்வு

ஐந்து நீதிபதிகள் கொண்ட, நிரந்தர அரசியல் சாசன அமர்வை அமைக்க, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் முடிவு செய்துள்ளார். அரசியல் சாசனம் தொடர்பான, 37 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை, இந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.மூன்று நீதிபதிகள் அமர்வில், 164 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கும் நிரந்தர அமர்வு உருவாக்குவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் ஆள்மாறாட்டம்

Added : செப் 22, 2019 00:25

சென்னை, 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், தப்பிக்க முயற்சிக்கின்றனர்.சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர், வெங்கடேசன். இவர், சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவரது மகன், உதித் சூர்யா. இரண்டு ஆண்டுகளாக, நீட் தேர்வு எழுதியும், தேர்ச்சி அடையவில்லை.

தலைமறைவுஇந்த ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தேர்வு எழுதினார். 385 மதிப்பெண்களுடன், தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றார்.இதற்கிடையே, மாணவர் உதித் சூர்யா முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில், கல்லுாரி நிர்வாகம், போலீசில் புகார் அளித்தது. புகாரை தொடர்ந்து, மாணவரின் குடும்பம் தலைமறைவானது.போலீஸ் விசாரணையில், உதித் சூர்யாவிற்கு பதிலாக, வேறொரு மாணவர், 'நீட்' தேர்வு எழுதியதும், கலந்தாய்வில் பங்கேற்றதும் தெரிய வந்தது. அவரை எப்படி அதிகாரிகள் அனுமதித்தனர் என்ற, கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், இவ்விவகாரத்தில், அத்தேர்வை நடத்தும், மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை தான் பதில் அளிக்க வேண்டும் என கூறி, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், தப்பிக்க நினைக்கின்றனர்.தவறியுள்ளனர்நாடு முழுவதும், இந்த ஆண்டு, நீட் தேர்வை, 14 லட்சத்து, 10 ஆயிரத்து, 755 பேர் எழுதினர். இதில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை, தேசிய தேர்வு முகமை கண்காணிக்க தவறியுள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 5,000க்கும் குறைவான, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., இடங்களே உள்ளன. இதற்கு, 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே, கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.கவுன்சிலிங்கின் போது, இருப்பிட சான்று, பெற்றோரின் பிறப்பு சான்றிதழ் உட்பட, பல சான்றிதழ்கள், மாணவரிடமிருந்து பெறப்பட்டன.அப்படி இருக்கையில், உதித் சூர்யா சான்றிதழ்களை, கவுன்சிலிங் போதே, ஆய்வு செய்திருந்தால், இந்த முறைகேடு தடுக்கப்பட்டு இருக்கும். மேலும், ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் தான், அந்தந்த கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனரா என்பதையும், மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கண்காணிக்க தவறியுள்ளனர்.

போலீசார் தீவிரம்இப்படி கோட்டை விட்ட, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், தற்போது, 'தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும்; எங்கள் தரப்பில், எந்த தவறும் நடக்கவில்லை' என, பேசி வருவது நியாயமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.இதற்கிடையே, முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் மற்றும் பெற்றோரின் வங்கி கணக்கு மற்றும் பல முக்கிய ஆவணங்களை, போலீசார் சேகரித்துஉள்ளனர்.இந்த மாணவனை பிடித்தால் தான், உடந்தையாக இருந்தவர்கள், தேர்வு எழுதிய மாணவர் யார் என்பது தெரிய வரும் என்பதால், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு?'நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.தேனி மாவட்ட, எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், ''இவ்வழக்கில் வெளிமாநிலம், பிற தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றினால், வழக்கை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவர். இதை, ஐ.ஜி., முடிவு செய்வார். இந்த முறைகேடு குறித்த விபரம் தெரிந்தோர், 94981 01570 என்ற எண், sbofficethenidist@gmail.com என்ற இணைய முகவரியில் புகார் செய்யலாம்'' என்றார்.பொறுப்பு யார்?கடந்த காலங்களில், சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம், 'நீட்' தேர்வை நடத்தியது. அப்போது, அந்தந்த மாநிலத்தில் உள்ள, இயக்குனர்கள், நீட் தேர்வு விவகாரத்தில் பதிலளிக்க கூடிய அதிகாரிகளாக இருந்தனர். தற்போது, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வை நடத்துகிறது.இதற்கான தலைமை அலுவலகம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது. ஆனால், மாநிலங்களுக்கான அதிகாரமிக்க அதிகாரிகள் யார் என்பது, தெரியாத நிலை உள்ளது. எனவே, அந்தந்த மாநிலங்களும், பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

NEWS TODAY 09.07.2026