Wednesday, December 4, 2019

சிதம்பரத்துக்கு ஜாமீன்: கடைசி வரை ஒரே ஒரு வாதத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம்!

By DIN | Published on : 04th December 2019 11:22 AM 


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் கடந்த மாதம் 15-ஆம் தேதி மறுத்துவிட்ட நிலையில், அதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆா்.பானுமதி தலைமையிலான அமா்வு இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என்று அமலாக்கத்துறை தரப்பில் திரும்பத் திரும்ப வாதம் முன் வைக்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவேதான் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனுக்கான நிபந்தனையில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி:

கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-இல் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த அக்டோபா் 22-இல் ஜாமீன் வழங்கியது.

எனினும், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் அக்டோபா் 16-இல் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருந்ததால், அவரது சிறைவாசம் தொடா்ந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, ‘ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுவித்தால், வழக்கில் தொடா்புடைய சாட்சிகளை அவா் கலைத்துவிடுவாா்; ஆதாரங்களையும் அழிக்க வாய்ப்புள்ளது’ என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை என்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாகும். அதிகாரத்தில் இருப்பவா்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும்போது, நிா்வாக அமைப்புமுறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவா் என்றும் அமலாக்கத் துறை வாதிட்டது.

ஆனால், ‘ப.சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை; அவா் தொடா்புடைய நேரடி அல்லது மறைமுக ஆதாரங்கள் எதையும் அமலாக்கத் துறை சமா்ப்பிக்கவில்லை’ என்று அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோா் வாதிட்டனா். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அரசு ஓய்வூதியத்தில் சேராத ஓய்வூதிய தொகுப்பு பணப்பலன்: 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்
தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் பெறும் 10,000 பேரின் ஓய்வூதியத்தில், ஓய்வூதிய தொகுப்பு பணப்பலன் சேர்க்கப்படவில்லை என, பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 7 லட்சத்துக்கும் மேலான ஓய்வூதியர்களும் உள்ளனர்.

ஒவ்வோர் அரசு ஊழியர், அலுவலர், ஆசிரியர்களும் பணி ஓய்வின்போது, ஓரிருமாதத்தில் ஓய்வூதி பணப் பலன்களுடன் அவர்கள் பணிபுரிந்த ஆண்டுகள் மற்றும் சம்பளத்திற்கு தகுந்தவாறு ஓய்வூதிய தொகுப்பு தொகை வழங்கப்படுகிறது. 2003க்குபின் ஒவ்வொருவருக்கும் பல லட்சக்கணக்கில் தொகுப்பு தொகை வழங்கப்படுகிறது.

இத்தொகையை 15 ஆண்டு வரை கணக்கீட்டு, ஓய்வூதியத்தில் இருந்து மாதந்தோறும் அந்தந்த மாவட்ட கருவூலத்தால் பிடித்தம் செய்யப்படுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்த அந்தத் தொகை மீண்டும் அவரவர் ஒய்வூதியத்தில் சேர்த்து வழங்கப்படும். இதுவே தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், அலுவலர்களுக்கு ஓய்வூதிய தொகுப்பு தொகை பிடித்தம் காலம் முடிந்தும், அதற்கான தொகை ஓய்வூதியத்தில் சேர்க்கப்படவில்லை என புகார் எழுகிறது.

பாதிக்கப்பட் டோர் நேரில் சென்று கருவூலத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என ஓய்வூதியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஓய்வூதியர் சங்க நிர்வாகி என்.அழகுமுத்துவேலாயுதம் கூறியது:

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து 15 ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றேன். எனக்கான ஓய்வூதிய தொகுப்பு தொகை பிடித்த கால அளவு முடிந்து சில மாதமாகியும் அந்தத் தொகை ஓய்வூதியத்தில் சேர்க்க படாமல் உள்ளது.

கருவூலத்தில் முறையாக மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. என்னைப் போன்று தமிழகத்தில் 2003-க்கும் முன்பு பணி ஓய்வு பெற்ற சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கருவூல அலுவலங்கள் கணினி மயமானாலும் இந்நிலை தொடர்கிறது. கருவூல அதிகாரிகள் இது பற்றி ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

கருவூல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ மாவட்ட கருவூலங்கள் கணினி மயமாக்கப் பட்டுள்ளன. அனைத்து ஓய்வூதியர்களும் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தொகுப்பு தொகை பிடித்தம் காலம் முடிந்தவுடன் அது தானாகவே உரியவர் ஓய்வூதியத்தில் சேர்ந்துவிடும். ஒருவேளை பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட கருவூலத்தை அணுகலாம். பென்சன் புத்தக நகலுடன் புகார் மனு கொடுத்து, நிவர்த்தி செய்யலாம்,’’ என்றார்.
நெல்லை, பொதிகை இயக்கத்தில் மாற்றம்

Added : டிச 03, 2019 23:44

சென்னை : பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்று முதல், எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூரில் இருந்து, பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் ரயில் நிலையத்தில், பராமரிப்பு பணி காரணமாக, இந்தாண்டு, அக்டோபர், 4 முதல், இரண்டு ரயில்களும், எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.இந்த ரயில்கள், இன்று முதல் எழும்பூரில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
'நீட்' தேர்வில் ரேகை பதிவு கட்டாயம்

Added : டிச 03, 2019 22:46

சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஆள் மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில், 'நீட்' நுழைவு தேர்வுக்கு, இடது கை பெருவிரல் ரேகை பதிவை கட்டாயமாக்கி, தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேசிய அளவில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாநில அளவிலும், தேசிய அளவிலும், தரவரிசை பட்டியல் தயாரிக்கப் படுகிறது. இதில், மத்திய, மாநில இட ஒதுக்கீட்டு கொள்கைகளின் அடிப்படையில், நீட் தேர்வு தரவரிசை வழியாக, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இந்த மாணவர் சேர்க்கையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆள் மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதிய விவகாரம் வெடித்தது. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதும், வேறு மாணவர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த முறைகேடு, தேனி மருத்துவ கல்லுாரியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட, மாணவர்கள், மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டிற்கான, நீட் நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 மே, 3ல் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவுகள், நேற்று முன்தினம் துவங்கின.

இந்த பதிவுக்கு, மாணவர்களின் இடது கை பெருவிரல் ரேகை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதாவது, விண்ணப்பங்களை பதிவு செய்யும் போதே, இடது கை பெருவிரல் ரேகையையும் பதிவு செய்ய வேண்டும். இந்த விரல் ரேகையுடன், தேர்வு எழுத வருபவரின் விரல் ரேகை ஒப்பிடப்படும். அதன்பின், மாணவர் சேர்க்கையின் போதும், விரல் ரேகை சரிபார்க்கப்பட்டு, உறுதி செய்யப்படும். மேலும், மாணவர்களின், 'பாஸ்போர்ட்' மற்றும் தபால் அட்டை அளவு புகைப்படத்துடன், மின்னணு கையெழுத்தும் கேட்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.200 ஐ எட்டும் வெங்காயம் விலை

Updated : டிச 04, 2019 08:10 | Added : டிச 04, 2019 08:07

சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 ஐ நெருங்கி வருவதால், வியாபாரிகளும் பொது மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் 130 வரையிலும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140 முதல் 180 வரையிலும் விற்கப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காய லாரிகளின் வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால் தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்ததால், விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக 100 லாரிகளில் 20 டன் வெங்காயம் வரும் நிலையில் தற்போது 35 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.45 ஆகவும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.160 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கோல்கத்தாவில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.150 ஆகவும், மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.11,000 ஆகவும் உள்ளது.

பி.எஸ்.என்.எல்.,லிலிருந்து 78,000 பேர் ஓய்வு

Added : டிச 03, 2019 23:39

சென்னை : பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல, நாடு முழுவதும் 78 ஆயிரத்து, 569 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகிறது. தற்போது, நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பி.எஸ்.என்.எல்.,லில் விருப்ப ஓய்வு திட்டம், நவ., 4ம் தேதி துவங்கப்பட்டது. இந்த திட்டம், நேற்று மாலை 5:30 மணி உடன் நிறைவடைந்தது.இதில், நாடு முழுவதும், 78 ஆயிரத்து, 569 பேர் விருப்ப ஓய்வில் செல்ல, விருப்பம் தெரிவித்துள்ளனர். 5,237 பேர், தங்களின் விருப்ப ஓய்வு விண்ணபத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

626 பேர், பின்னர் முடிவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் 78 ஆயிரத்து, 569 பேர், விருப்ப ஓய்வில் செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டம் இரண்டும் சேர்த்து, 8,000த்திற்கும் அதிமானோர், விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
திகார் சிறையில் 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் நிம்மதி

Updated : டிச 04, 2019 00:57 | Added : டிச 03, 2019 23:16

புதுடில்லி: 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி திஹார் சிறையில் ஆள் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில், 2012ல், நிர்பயா என்ற மருத்துவக் கல்லுாரி மாணவி, ஒரு கும்பலால் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிர்பயா, உயிரிழந்தார். இந்த வழக்கில், வினய் குமார், முகேஷ், பவன், அக் ஷய் ஆகிய நான்கு பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தகவல்:

இவர்களது மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசிடமிருந்து உத்தரவு வந்ததும், எந்த நேரத்திலும், இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படலாம். ஆனால், தற்போது இந்த நான்கு குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஊழியர் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, சிறை வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதெல்லாம், மிக அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே, குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. எனவே, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு, நிரந்தரமாக ஒரு ஊழியரை பணியமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் தான், ஆட்களை பணியமர்த்த முடியும். ஆனாலும், அதற்கு தகுந்த ஆட்கள் கிடைக்க வேண்டும்.


முயற்சி:

அருகில் உள்ள உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், இதற்கான ஆட்கள் கிடைக்கின்றனரா என முயற்சித்து வருகிறோம். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. திஹார் சிறையில், துாக்கு தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் இல்லாததால், நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரும், தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளனர்.

உண்ணாவிரத போராட்டம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில், ஒரு கும்பலால், பெண் டாக்டர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். டில்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், டில்லியில், நேற்று முதல், காலவரையற்ற உண்ணாவிர போராட்டத்தை துவங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ஐதராபாத் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டுள்ளார். ராஜஸ்தானில், 6 வயது குழந்தை, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளது. இந்த சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு, ஆறு மாதங்களுக்குள் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த போராட்டத்தை துவக்கியுள்ளேன். பிரதமர் மோடிக்கும், இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, ஐதராபாத் சம்பவ குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வலியுறுத்தி, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதில், 15 லட்சத்துக்கு அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

NEWS TODAY 11.07.2026