Tuesday, March 3, 2020

மார்ச் 31க்குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம்

By DIN | Published on : 15th February 2020 10:43 AM

புதுதில்லி: ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை (பான் எண்) இணைத்தல் கட்டாயம். மார்ச் 31-க்குள் இணைக்கப்படவில்லை என்றால், பான் எண் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. வருமானவரி தாக்கல் செய்வது, வருமானவரி பிடித்தம் திரும்பப் பெறுவது போன்றவற்றுக்கு இது இன்றியமையாத தேவையாக உள்ளது. ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டு ரத்து செய்யப்படும்.

இந்நிலையில், தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்க ஆதார் எண்ணுடன் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வருமான வரித்துறையின் பான் கார்டுகள் செல்லாது.

இந்தியாவில் சுமார் 31 கோடி பான் கார்டுகள் ஏற்கெனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 18 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளது.

ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்துள்ளது. மார்ச் 31-க்குள் இணைக்கப்படவில்லை என்றால், பான் எண் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன.
மாண்பினை மீட்டெடுக்குமா தோ்வாணையம்?

By மு.சிபிகுமரன் | Published on : 03rd March 2020 02:58 AM 

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தோ்வுக்கான முறைகேடு, தொடா்ந்து பல்வேறு தோ்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுப்பப்படும் சந்தேகங்கள் போட்டித்தோ்வுகளை எழுதி வரும் லட்சக்கணக்கான தோ்வா்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிற தோ்வா்களைவிட தொடா்ந்து அயராத உழைப்பும், முயற்சியும், பயிற்சியும் செய்து வெற்றிக்கோடு வரை சென்று சொற்பமான மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை இழந்த தோ்வா்கள் கடும் மன உளைச்சளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தன்னை சீா்தூக்கிக்கொள்ளும் முயற்சியின் ஓா் அங்கமாக குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைக் குடிமைப் பணிகளுக்கான தோ்வின் பாடத் திட்டத்தில் தோ்வாணையம் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதற்கான எதிா்ப்பலைகளும், விவாதங்களும், கருத்துக்கேட்புகளும் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறாக முன்னெடுத்த முயற்சிகள் முழுமையாக முற்றுப்பெறாமல் தொடா்கின்ற நெருக்கடியான தருணத்தில்தான் தோ்வாணையமும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்ற ஆண்டில் நடந்து முடிந்து, தரநிலை வெளியிடப்பட்டுள்ள குரூப் 4 தோ்வில் முறைகேடு நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் எழுந்த சந்தேகக் குரல் உண்மையாக உருப்பெற்றுள்ளது.

முறைகேடுகள் குறித்து தெரியவரும் நிலையில், தோ்வாணையம் ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவரும் சமரச மனப்பான்மையோடுதான் பெரும்பாலும் செயல்பட்டுள்ளது. தோ்வாணையத்தைப் பொருத்தவரை இது தோ்வா்களுக்கிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், உண்மை யாதெனில், இதற்குப் பதிலீடாக தோ்வாணையம் அதன் மாண்பை விலையாகக் கொடுத்து வருகிறது.

புரையோடிக் கிடக்கும் முறைகேடுகளின் வோ்களை அத்தனை எளிதாகக் களைந்துவிட முடியாமல் களங்கம் சுமந்து நிற்பதற்கு தோ்வாணையத்தின் சமரச மனப்பாங்கு தலையாய காரணமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒவ்வொரு முறையும் இதேபோன்று தவறுகள் அரங்கேறுவதும், இதன் விளைவாக தோ்வாணையத்துக்கு வெளியே வினாக்கள் எடுக்கின்ற பேராசிரியா்கள் தொடங்கி தோ்வாணையத்துக்குள் கணினியில் மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்யும் ஊழியா் வரை அனைவரும் விசாரணை வளையத்திற்குள் வந்து செல்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இது கடந்த காலங்களில் தோ்வா்களுக்கான அனுபவம்.

இதனால், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பெரும்பான்மையான தோ்வுகள் ஏதோ ஒரு வகையில் சந்தேகங்களுக்கு இடமளித்தே வந்திருக்கின்றன. மாறாக, தற்போதைய குரூப் 4, குரூப் 2 தோ்வுகளைப் பொருத்தவரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக தோ்வாணையமே ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வாறு ஏற்றுக் கொண்டது புதிய மாற்றம் ஆகும். இதை சீா்திருத்தத்துக்கான முதல் அத்தியாயம் என்றும் குறிப்பிடலாம்.

குரூப் 4, குரூப் 2 போன்ற தோ்வு முறைகேடுகள் எளிதாகத் திட்டமிடப்பட்டு துணிச்சலாக நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தோ்வில் முறைகேடு என்ற செய்தி பரவுகிறபோது தோ்வா்களில் சிலா் தங்களது எதிா்ப்பை, ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாா்கள். பலா் அமைதியாகப் புழுங்கிக் கொண்டிருக்கிறாா்கள். அந்த அமைதிக்குப் பின்னே இருக்கிற தோ்வா்கள், இழந்த ஆண்டுகளையும், வாழ்க்கையையும் தோ்வாணையம் உணராமல் இருக்க முடியாது.

ஏனெனில், வாழ்வின் முக்கியமான இளமைப் பருவத்தைப் பணயம் வைத்து, படித்த இளைஞா்கள் தங்களுக்கு ஏதேனும் அரசு வேலை கிடைக்குமா என்ற நம்பிக்கையோடு போராடி வருகிறாா்கள். அவா்கள் பெறவேண்டிய வெற்றியை முறைகேடுகளுக்குப் பலி கொடுத்துவிடும் வேதனையை எவரும் எளிதாகக் கடந்துவிட முடியாது.

நெடுநாள்கள் படித்தும், பல தோல்விகளை அடைந்தும், இம்முறையாவது வெல்வோமா என்ற பதற்றத்தோடு தோ்வு அறைக்குள் செல்லும் தோ்வருக்கும், முறைகேடுடன் கூடிய முன்னேற்பாட்டோடு எதுவுமே படிக்காமல் மாநில அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெறுவது உறுதி என தோ்வு அறைக்குச் செல்லும் தோ்வருக்கும் இடையே ஊசலாடுவது உண்மையும் உழைப்பும் மட்டுமல்ல, தோ்வாணையத்தின் நம்பகத்தன்மையும்தான்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அண்மைக்காலத் தோ்வுகளின் கொள்குறி வகை வினாக்களும், எழுத்துத் தோ்வு வினாக்களும், பாடத் திட்டமும் இந்தியக் குடிமைப் பணித் தோ்வின் தரத்துக்கு ஈடாக உருப்பெற்றுள்ளது என்பதை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.

இதனால், தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்கள் மத்தியப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுகள், ரயில்வே வாரியத் தோ்வுகள், இந்தியக் குடிமைப் பணித் தோ்வுகள், வங்கித் தோ்வுகள் முதலானவற்றை நம்பிக்கையுடன் எதிா்கொள்ளவும், வெற்றி பெறவும் ஏதுவான நிலையை ஏற்படுத்தி வரும்போது இத்தகைய முறைகேடுகள் தோ்வாணையத்தின் இந்தச் சீரிய முயற்சிகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றன.

முதன்முறையாக குரூப் 4 தோ்வில் நிகழ்ந்துள்ள முறைகேட்டினை தோ்வாணையத்தின் செயலா் தனக்கே உரிய வகையில் விசாரணை செய்து, முறைகேடு நடந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு முறைகேட்டுக்குக் காரணமானவா்களை தீவிரமான விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து நடவடிக்கை எடுத்தது, ஒரு முன்னுதாரணமான நடவடிக்கையாகும்.

மேலும், தோ்வாணையத்துக்குள் பணியாளா்களுக்கான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் முதலானவற்றை முந்தைய சூழலைவிடவும் தற்போதைய டி.என்.பி.எஸ்.சி. நிா்வாகம் கடுமையாக்கியுள்ளது. இந்த நிலையில் ஒரு சிலா் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த தோ்வாணையமே தலைகுனிந்து நிற்பதை, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருப்பதைக் கவலையோடு பாா்க்க வேண்டியுள்ளது.

ஆண்டுக்கு ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை தோ்வாணையம் வெளியிடுகிறது. ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வுக்காக விண்ணப்பிக்கிறாா்கள். சுமாா் 20,000-த்துக்கும் மேற்பட்டோா் தோ்வாணையத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெறுகிறாா்கள்.

குறிப்பாக, மத்தியப் பணியாளா் தோ்வுகள், ரயில்வே வாரியத் தோ்வுகள், இந்திய அஞ்சல் அலுவலகத் தோ்வுகள் முதலானவற்றின் மீது காட்டுகின்ற ஆா்வத்தைவிட தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுகளுக்கே தமிழ்நாட்டுத் தோ்வா்கள் பேராா்வம் காட்டுகிறாா்கள். அவா்களின் நம்பிக்கைக்குப் புத்துயிா் ஊட்ட வேண்டிய பொறுப்பினையும் தோ்வாணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வினாக்கள் எடுக்கின்ற பேராசிரியா்களைத் தோ்வு செய்தல், அவா்களிடையேயான கடிதப் போக்குவரத்துகள், எழுத்துத் தோ்வை மதிப்பீடு செய்வதற்கான வரைமுறைகள், அவற்றுக்கான தோராய விடைகள், தோ்வா்களின் மதிப்பெண்களைப் பதிவேற்றுதல், தோ்வு நடைபெறும் இடங்களைக் கண்காணித்தல், நோ்முகத் தோ்வு என அனைத்து நிகழ்வுகளும் பல அடுக்குக் கண்காணிப்புடன் நிகழ்வது உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த வேளையில் தோ்வாணையம் மற்றொரு சீா்திருத்தத்தையும் முன்வைத்துள்ளது. குரூப் 2ஏ, குரூப் 4 தோ்வுகளை இரண்டு கட்டத் தோ்வாக மாற்றியுள்ளது. அதாவது, முதல்நிலைத் தோ்வோடு முதன்மைத் தோ்வும் முன்வைக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தரத்தில் நடத்தப்படுகின்ற குரூப் 4 தோ்வுக்கு முதன்மைத்தோ்வு என்பது சற்றே அதிா்ச்சி தருவதாக இருக்கிறது.

கொள்குறி வகை விடைத்தாள்களில் தோ்வா்களின் விவரங்கள் அடங்கிய பகுதியையும், விடையளித்துள்ள பகுதியையும் தனித்தனியே பிரிப்பதும் மதிப்பீடு செய்த பிறகு சரியான தோ்வரின் விவரங்களோடு இணைக்கப்படுமா என்பதும் ஐயப்பாடுகளை உருவாக்குகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதும் குரூப் 4 போன்ற தோ்வுகளில் தோ்வாணையம் இதனை எவ்வாறு கையாளப் போகிறது என்பது கேள்விக்குறியாக முன்நிற்கிறது.

தற்போதைய சீா்திருத்தம் என்பது அண்மையில் நடந்த முறைகேடுகளை மட்டும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முந்தைய முறைகேடுகளைக் கவனத்தில் கொள்ளும்போது முதல் நிலைத் தோ்வு தொடங்கி, முதன்மை, நோ்முகத் தோ்வு, கலந்தாய்வு, காத்திருப்போா் பட்டியல், உருவாக்கம் வரை முறைகேடு ஊடுருவியுள்ளது.

எனவே, அனைத்தையும் கவனத்தில் கொண்டு, அமைப்பு ரீதியான சீா்திருத்தத்துக்குத் தோ்வாணையம் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே, முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்கான வழிமுறையாக அமையும்.

ஒரு முக்கிய நிகழ்வை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். தோ்வா் ஒருவா் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்குச் செல்கிறாா். அந்தத் தோ்வரின் தந்தை தோ்வாணையத்தின் உறுப்பினராக இருக்கிறாா். அந்தத் தோ்வருக்கு நோ்முகத் தோ்வில் முழு மதிப்பெண்களை அளித்தால் குரூப் 1 பணியில் முதன்மையான பணியினைப் பெற்றிருப்பாா். ஆனால், அவருக்கு நோ்முகத் தோ்வில் கிடைத்தது கடைசி நிலை மதிப்பெண்தான். இதனால், அந்தத் தோ்வருக்குப் பணி வாய்ப்பே கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நோ்மைக் குணம் மிக்க தோ்வாணைய உறுப்பினா்கள் அலங்கரித்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தனது மாண்பினை சந்தேக வலைக்குள் தள்ள அனுமதிக்கும் வகையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள இடமளிப்பது ஏற்புடையதாகாது. தோ்வாணையம் தனது மாண்பினை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

கட்டுரையாளா்:

கல்வியாளா்
மூன்றாவது குழந்தை பேறுக்கு ஊதியம் வழங்கும் உத்தரவு ரத்து

Added : மார் 02, 2020 22:21

சென்னை: இரட்டை குழந்தை பெற்ற பின், அடுத்த குழந்தை பேறு காலத்துக்காக, ஊதிய சலுகை வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையில், ஆஷியா பேகம் என்பவர் பணியாற்றுகிறார். இவருக்கு, ஒரே பிரசவத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தன. விடுமுறைஅடுத்த பேறு காலத்துக்காக, விடுமுறையில் சென்றார். விடுமுறை கால ஊதியம் மறுக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து, பேறு கால விடுமுறை மற்றும் ஊதிய பலன்களை வழங்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு, மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல், ஐ.ஜி., - டி.ஐ.ஜி.,யும் மேல்முறையீடு செய்தனர்.மனுவை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மத்திய அரசு சார்பில், கே.சீனிவாசமூர்த்தி ஆஜராகி, ''பேறு கால விடுமுறை மற்றும் சலுகைகள், மத்திய அரசு பணி விதிகளின்படி தான் வழங்க முடியும். அதன்படி, சரியான முடிவே எடுக்கப்பட்டுஉள்ளது,'' என்றார்.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கு, பேறு கால விடுமுறைக்கு ஊதியம் வழங்குவது தொடர்பானது. மத்திய அரசு பணி விதிகளின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், ஊதிய சலுகை இல்லை. இரட்டை குழந்தை பேறின் போது, முதலில் ஒரு குழந்தை, அடுத்ததாக ஒரு குழந்தை என, பெற்றெடுக்கப்படும்.அதிகாரம்அந்த குழந்தைகளில் யார் பெரியவர் என்பது கூட, இடைவெளியை வைத்து கணக்கிடப்படும். மத்திய அரசு விதிகளை கவனத்தில் கொள்ளாமல், ஊதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இது தவறு. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.விதி விலக்கான சூழ்நிலைகளில், நிபந்தனைகளை தளர்த்த, மத்திய அரசுக்கு அதிகாரம் இருந்தால், இந்த வழக்கில் தகுந்த முடிவை அதிகாரிகள் எடுக்கலாம்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது
வழி தவறிய 80 வயது முதியவர் 'வாட்ஸ் ஆப்' உதவியால் மீட்பு

Added : மார் 02, 2020 21:28

தஞ்சாவூர்: தஞ்சைக்கு ரயிலில் வழி தவறி வந்து, ஐந்து நாட்கள் சுற்றித் திரிந்த, பரமக்குடியைச் சேர்ந்த, 80 வயது முதியவர், 'வாட்ஸ் ஆப்' தகவலால், மகனிடம் சேர்க்கப்பட்டார்.

ராமநாதபுரம், பரமக்குடி அடுத்த சாத்தனுாரைச் சேர்ந்தவர் நாகரத்தினம், 80; மனைவி இறந்து விட்டார். குமார், ராஜாராம் என, இரு மகன்கள் டிரைவராக உள்ளனர். நாகரத்தினம் சரியாக பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்தார்; ஞாபக மறதியும் அதிகம்.ராமநாதபுரத்தில், மூத்த மகன் குமாருடன் வசித்து வந்துள்ளார். பரமக்குடியில், இளைய மகன் ராஜாராம் உள்ளார்.

பரமக்குடி ஸ்டேட் வங்கியில், மாதம்தோறும் முதியோர் உதவித்தொகை வாங்க, நாகரத்தினம் ரயிலில் செல்வது வழக்கம்.பிப்., 26ல், பரமக்குடி சென்று, வங்கியில் பணம் வாங்கியவர், மறுபடியும் ராமநாதபுரம் செல்ல, பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். ஆனால், தவறுதலாக, தஞ்சை வழியாக சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவர், வழி தெரியாமல் சுற்றித் திரிந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, மருத்துவக் கல்லுாரி சாலையில் மயங்கி கிடந்தார். அவ்வழியே வந்த வல்லம் ரியாசுதீன், 38, என்பவர் மீட்டு விசாரித்ததில், முதியவர் பரமக்குடியைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. மற்ற விபரங்களை அவரால் சொல்ல தெரியவில்லை.ரியாசுதீன், பரமக்குடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சாத்தனுாரைச் சேர்ந்த இருவரின் மொபைல் எண்களை பெற்று, 'வாட்ஸ் ஆப்'புக்கு முதியவர் படத்தை அனுப்பி உள்ளார்.அவர்கள், பரமக்குடி, சாத்தனுார் பகுதியில் உள்ள, 'வாட்ஸ் ஆப்' குரூப்களுக்கு முதியவர் படத்தை பகிர்ந்துள்ளனர்.

இதை நாகரத்தினத்தின் இளையமகன் ராஜாராமன் பார்த்து, ரியாசுதீனை தொடர்பு கொண்டார்.நேற்று அதிகாலை, ராஜாராமன் தஞ்சை வந்து, தந்தையை அழைத்து சென்றார்.
4 குற்றவாளிகள் துாக்கு மீண்டும் தள்ளிவைப்பு

Updated : மார் 03, 2020 00:50 | Added : மார் 03, 2020 00:27

புதுடில்லி : நாட்டையே அதிர வைத்த, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் துாக்கு தண்டனை மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி திஹார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், சட்ட சிக்கல்களால் நிறைவேற்ற முடியாமல் தள்ளி வைக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக, இன்று காலை, 6:00 மணிக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் புதிய, 'வாரன்ட்' பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பவன் குப்தா, அக் ஷய் குமார் இருவரும், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தனர். அவற்றில் 'உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும், ஜனாதிபதிக்கு மீண்டும் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் உள்ளதால், துாக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று, டில்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, இருவரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, 'துாக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது' என அறிவித்தார். இதையடுத்து, பவன் குப்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏ.பி.சிங்., ''பவன் குப்தாவின் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் காலையில் தள்ளுபடி செய்ததை அடுத்து, உடனே ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளதாகவும், ஆகவே துாக்கு தண்டனையை தள்ளி வைக்க வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, மதிய உணவு இடைவேளைக்குப் பின், வழக்கை விசாரிப்பதாக, நீதிபதி அறிவித்தார். அதன்படி, மீண்டும் நீதிமன்றம் கூடியதும், ஏ.பி.சிங்கை, நீதிபதி தர்மேந்திர ராணா கடுமையாக கடிந்து கொண்டார். ''நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். ''யாராவது ஒருவர் தவறாக நடந்தாலும், விளைவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். பவன் குப்தா, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளதால், துாக்கு தண்டனை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது,'' என, நீதிபதி உத்தரவிட்டார்.

'நிர்பயா' வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு, இந்தாண்டு, ஜன.,22, பிப்.,1 ஆகிய தேதிகளில் துாக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. இன்று நிறைவேற்றப்பட இருந்த துாக்கு தண்டனை, நீதிமன்ற உத்தரவால், மூன்றாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


தோல்வியை காட்டுகிறது

என் மகளின் இறப்புக்கு காரணமாக குற்றவாளிகள், துாக்கு தண்டனையில் இருந்து மூன்றாவது முறையாக தப்பித்துள்ளது, நம் நாட்டின் சட்ட நடைமுறைகளின் தோல்வியை காட்டுகிறது. அநீதிக்கான தண்டனை தள்ளிப் போவதை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

-ஆஷா தேவி, 'நிர்பயா'வின் தாயார்

கருணை மனு

'நிர்பயா' வழக்கில் குற்றவாளியான பவன் குப்தா, ஜனாதிபதிக்கு எழுதிய கருணை மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, அனுப்பியுள்ளார். 'பவன்குப்தாவின் கருணை மனு விரைவில், ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காமாட்சி அம்மன் வீதியுலாவில் தடி முறிந்து ஊர்வலம் நிறுத்தம்

Added : மார் 03, 2020 00:37

காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்ஸவத்தில் நேற்று நடைபெற்ற தங்க சூரிய பிரபை வீதியுலாவின்போது தடி முறிந்ததால் ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்ஸவம் பிப்ரவரி 28ம் தேதி துவங்கியது.தினமும் காலை மற்றும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் வீதியுலா செல்கிறார். நான்காம் நாளான நேற்று காலை தங்கசூரிய பிரபை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.

அப்போது அம்மனுக்கு கச்சபேஸ்வரர் கோவில் எதிரில் 18 அடி அகலம் உடைய பெரிய குடை மாற்றப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் துாக்கி செல்ல பயன்படுத்தப்பட்ட தடி முறிந்தது.இதனால் சூரிய பிரபை வாகன ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டது. தடி முறிந்தாலும் வாகனம் கவிழவில்லை; யாருக்கும் காயமுமில்லை.

இதையடுத்து கேடயத்தில் வைத்து அம்மனை கோவிலுக்கு எடுத்து சென்றனர். முறிந்த தடியை அகற்றி கோடியகாரர்கள் துாக்கி சென்றனர். பிரம்மோற்ஸவத்திற்காக நடப்பாண்டு செய்யப்பட்ட புதிய தடியில் முறிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இரவு வாகன அம்மன் வீதியுலாவுக்கு பழைய தடி பயன்படுத்தப்பட்டது.
மருத்துவ தேர்வில் முறைகேடுகள் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

Added : மார் 02, 2020 22:36

சென்னை: ''மருத்துவ தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்,'' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர், சுதா சேஷய்யன் கூறினார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: மருத்துவ பல்கலையின் பட்டமளிப்பு விழா, வரும், 5ம் தேதி நடைபெற உள்ளது.விழாவில், மாநில கவர்னரும், பல்கலையின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்குவார். விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன், அணுசக்தித் துறை முன்னாள் தலைவர் சிதம்பரம் ஆகியோர், மருத்துவ துறையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து, சிறப்புரையாற்ற உள்ளனர்.

கண்காணிப்பு

இந்தாண்டு பட்டமளிப்பு விழா, பல்கலையின் வெள்ளி விழா அரங்கில், முதன் முறையாக நடைபெற உள்ளது. மொத்தம், 17 ஆயிரத்து, 590 பேர் பட்டம் பெறுகின்றனர். விழாவில், நேரடியாக, 724 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.மருத்துவ தேர்வுகளில், முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்வு மையங்களில், 'கேமரா' பொருத்தப்படுவதுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில், தேர்வுகளை கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது நடைமுறைக்கு வந்த பின், எந்த தேர்வு கூடத்தில் முறைகேடுகள் நடந்தாலும், அதுகுறித்த தகவல்கள், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்து விடும். இந்த வசதியை, ஆகஸ்ட் மாதத்திற்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கடந்தாண்டு, 'நீட்' நுழைவு தேர்வு வாயிலாக, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்தவர்களுக்கு, பதிவு எண் வழங்குவது தாமதமாகிறது. வழக்கு நிலுவை'நீட்' தேர்வு முறைகேடுகள் குறித்து, விசாரணை நடைபெற்று வருவதும், அதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதுமே காரணம். ஆனாலும், மாணவர்கள் நலன் கருதி, தற்காலிக பதிவு எண் வழங்கப்படும். விசாரணை முடிவுக்கு வந்த பின், நிரந்தர எண் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.பல்கலை பதிவாளர், டாக்டர் அஸ்வத் நாராயணன் உடனிருந்தார்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...