Wednesday, March 18, 2020

முகேஷ் குமார் மனு மீண்டும் தள்ளுபடி

Added : மார் 17, 2020 22:29

புதுடில்லி, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளியான முகேஷ் குமார் தாக்கல் செய்த மனு, மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, வரும், 20ல், துாக்கு தண்டனையை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்டனை நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்தும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சார்பில், டில்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த அன்று, நான் டில்லியில் இல்லை. ராஜஸ்தானில் இருந்த என்னை, போலீசார் பிடித்து வந்து, இந்த வழக்கில் சேர்த்து விட்டனர். எனவே, எனக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'தண்டனை நிறைவேற்றுவதை மேலும் தாமதிக்கும் நோக்கத்தில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, முகேஷ் குமார் மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். குற்றவாளி முகேஷ் குமாரின் தாயார் சார்பில், துாக்கு தண்டனையை எதிர்த்து, தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுவும் தள்ளுபடியானது.

இந்நிலையில், வரும், 20ம் தேதி அதிகாலை, 5:30க்கு நான்கு பேருக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள், டில்லி திஹார் சிறையில் தயாராகி வருகின்றன. துாக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர், பவன் ஜலாட் உத்தர பிரதேச மாநிலம், மீரட் சிறையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குற்றவாளி அக் ஷய் குமார் இரண்டாவது கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று அனுப்பினார்.
இறைச்சி சாப்பிட்டால் ஆபத்து வதந்தி பரப்பிய 4 பேர் கைது

Added : மார் 18, 2020 00:51

சென்னை :''இறைச்சி சாப்பிடுவதால், கொரோனா பாதிப்பு ஏற்படும் என, வதந்தி பரப்பிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என, கால்நடைத்துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., -- வேலு: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முட்டை விலை பாதியாக குறைந்துள்ளது. கோழிப் பண்ணையாளர்களும், கோழிகளுக்கு தீவனம் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இழப்பீடு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் ராதாகிருஷ்ணன்: இறைச்சி சாப்பிடுவதால், கொரோனா வைரஸ் பாதிப்பு வரும் என, வதந்தி பரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சி சாப்பிடுவதால், கொரோனா பாதிப்பு வராது. மேலும், இழப்பீடு கோரிக்கை தொடர்பாக, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

கொரோனாவால் மொபைல் மூலம் திருமணம்

Updated : மார் 18, 2020 00:41 | Added : மார் 18, 2020 00:40 

ஐதராபாத்,: உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா' வைரஸ் காரணமாக, தெலுங்கானாவில், ஒரு ஜோடி, 'மொபைல்' போன் மூலம் திருமணம் செய்து கொண்டது. சவுதி அரேபியாவில், ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருபவர், முகமது அத்னன் கான். இவருக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.




வருத்தம்

இதையொட்டி, அவர், சவுதியில் இருந்து விமானம் மூலம், தெலுங்கானா மாநிலம் கம்மம் நகருக்கு வர இருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக, திடீரென விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், அவரால் முன்னதாக வர முடியவில்லை. வேறு நாடு வழியாக, நேரடியாக திருமண மண்டபத்திற்கு வர முயற்சித்தும் முடியவில்லை. இதனிடையே, திருமண நாளும் வந்தது. மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டார், மண்டபத்தில் காத்திருந்தபோது, 'தன்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை' என, முகமது அத்னன் மொபைல் போனில் வருத்தத்துடன் கூறினார். உடனே, மொபைல் போன் வழியாக திருமணம் நடத்த, இரு தரப்பு வீட்டாரும் முடிவு செய்தனர்.


அதன்படி, மொபைல் போனின், 'வீடியோ கால்' வாயிலாக முகமது அத்னன் திரையில் தோன்ற, இங்கு மணப்பெண் அமர்ந்திருக்க, இஸ்லாமிய வழக்கப்படி, 'நிக்கா' சடங்குகள் நடைபெற்றன. வாழ்த்துமணமகன் மொபைல்போன் வாயிலாக, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, மணமகள் சம்மதத்துடன் திருமணம் இனிதே முடிந்தது. திருமணத்திற்கு வந்திருந்தோர், மொபைல் போன் வழியாகவே, மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிங்கப்பூர் விமானம் ரத்து

Added : மார் 18, 2020 00:07

அவனியாபுரம், ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் விமானம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் கொச்சியிலிருந்து மதுரை வந்து சிங்கப்பூருக்கு செல்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் அந்த விமானம் மார்ச் 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்து செல்லும் மற்றொரு விமான இயக்கத்தில் மாற்றமில்லை.
பெட்ரோல், 'பங்க்'கில் ரொக்க பணம், 'நோ'

Added : மார் 17, 2020 22:15

சென்னை :'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்குமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும், 'கொரோனா' வைரஸ், ரொக்க பணம் வாயிலாகவும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளிடம், டிஜிட்டல் முறையில், பணம் வசூலிப்பதில் முன்னுரிமை அளிக்குமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. மேலும், பெட்ரோல் பங்க்களில், கை கழுவும் சுத்திகரிப்பான் வைப்பது உள்ளிட்ட, துாய்மை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரிகளின் அங்கீகாரம் இணையதளங்களில் வெளியிட உத்தரவு

Added : மார் 17, 2020 21:38

சென்னை : 'கல்லுாரிகளின் அங்கீகார விபரங்களை, இணையதளங்களில் வெளியிட வேண்டும்' என, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பல்கலைகள், தங்கள் கல்வி நிறுவன அங்கீகார விபரங்கள், உள் கட்டமைப்பு வசதிகள், மாணவர் விபரங்கள் போன்றவற்றை இணையதளத்தில் வெளியிட, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், தங்கள் பல்கலைகளின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளின் விபரங்களையும், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள், அரசு மற்றும்தனியார் துறையினர் என, ஒவ்வொரு தரப்பினரும், கல்லுாரியின் அங்கீகார நிலை, இணைப்பு அந்தஸ்து போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், இணையதளத்தில், இந்த விபரங்களை வெளியிட வேண்டும். இந்த பட்டியலில், ஒவ்வொரு கல்லுாரியின் பெயருடன், அதன் இணைப்பு அந்தஸ்துக்கான கால அவகாசத்தையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்புக்கு தொடரும் ஆராய்ச்சி' உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி தகவல்

Added : மார் 17, 2020 21:30

சென்னை :''கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுப்பு மருந்துகளை கண்டறியவும், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,'' என, உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி, சவுமியா சுவாமிநாதன் பேசினார்.சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த, 'சர்வதேச கோவிட் - 19' என்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது.

கருத்தரங்கத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி, சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:சீனாவின், வூஹான் மாகாணத்தில் உருவெடுத்த கொரோனா வைரஸ், இதுவரை, 127 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை, 6,500 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தவும், தடுப்பு மருந்துகளை கண்டறியவும், உலக சுகாதார நிறுவனம், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறது. உலக நாடுகள்அனைத்திற்கும், கொரோனா பரவலை தடுப்பது குறித்த, வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் கூடக் கூடாது; கைகுலுக்கி வரவேற்பதை விட, நம் பராம்பரிய முறையில், கைகூப்பி வரவேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை, பல நாடுகளும், பின்பற்ற துவங்கியுள்ளன. கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு, முதலில், நுரையீரல் தான் அதிகம் பாதிக்கப்படும். எனவே, கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தி, தேவையான தடுப்பு மருந்துகளை, தொடர்ந்து அளிப்பதன் வாயிலாக, அவர்களை குணப்படுத்த முடியும்.கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்கள் அனைவரும், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி, நன்றாக கழுவ வேண்டும். கைகளை முகத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

கருத்தரங்கம் குறித்து, இந்த பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் கூறியதாவது:மற்ற நாடுகளில் வழங்கப்படும் மருத்துவ முறைகள் குறித்து, கருத்தரங்கத்தில் அறிய முடிந்தது. கருத்தரங்கம், தமிழக டாக்டர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நோய் பரவலை தடுக்க, பொதுமக்களின் பங்கு முக்கியத்துவம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமான, உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். மற்றவர்களிடம் நெருக்கம்காட்டுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

NEWS TODAY 11.06.2026