Friday, March 27, 2020

நிமோனியா தடுப்பு ஊசி போடுங்கள்! மூத்த குடிமக்கள் கோரிக்கை

Added : மார் 27, 2020 00:53

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நிமோனியா தடுப்பூசி போட, அரசு முன் வரவேண்டும் என, மூத்த குடிமக்கள் அமைப்பு சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சூடான உணவுஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், மூத்த குடிமக்களே அதிகளவில் உயிரிழந்துஉள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும் காரணத்தால், இறப்பு சதவீதம் அதிகமாவதாக கூறப்படுகிறது.எனவே, மூத்த குடிமக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, நிமோனியா தடுப்பு ஊசி போட, அரசு தனி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மூத்த குடிமக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், மூத்த குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, ஓய்வு பெற்ற அரசு மருத்துவரும், மூத்த குடிமக்கள் அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர் வி.எஸ்.நடராஜன் கூறியதாவது:

முதியவர்கள் குளிர்ச்சியான உணவு, பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் குடிக்க பழக வேண்டும். முடிந்தவரை சூடான உணவுகளை சாப்பிட வேண்டும்.நடைபயிற்சிவைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி ஆகியவற்றுடன் பாதாம், பாகற்காய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்கு, குழந்தைகளை விட்டு தள்ளி இருக்க வேண்டும். தினமும், சூரிய ஒளி உடலில் படும்படி, சிறிது நேரம் அமர வேண்டும்.தடை உத்தரவு காரணமாக, வீட்டிலேயே நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, கிட்னி பிரச்னை உள்ளவர்கள், முடிந்தவரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள் இனி தடையின்றி கிடைக்கும் ஓட்டல், மளிகை கடைகள் முழு நேரம் செயல்பட அனுமதி

Added : மார் 26, 2020 23:04

சென்னை :'மக்களுக்கு தேவையான, அனைத்து அத்தியாவசிய சேவைகளும், தடையின்றி கிடைக்க, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, ஒன்பது குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் தலைமையில், இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.'கொரோனா' வைரஸ் தொற்றை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் பழனிசாமி நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார். அதன்பின், முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன் விபரம்:

* மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் இதர உத்தரவுகள், ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்படுகின்றன.   மக்களுக்கு தேவையான, அனைத்து அத்தியாவசிய சேவைகளும், தடையின்றி கிடைக்க, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, ஒன்பது குழுக்கள் அமைக்கப்படும்

* சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் போன்றவை, தினசரி, வாராந்திர, மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. ஊரடங்கு உத்தரவால், பண வசூலை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். மீறுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்

* காய்கறி மார்க்கெட், கிராம சந்தை பகுதியில், மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க, காய்கறி, பழம் விற்கும் கடைகளை, விசாலமான இடங்கள் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும். மளிகை கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளிலும், சமூக விலகல் முறையை, தீவிரமாக பின்பற்ற வேண்டும்

* கர்ப்பிணி பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காசநோய், எச்.ஐ.வி., தொற்று உள்ளோருக்கு, அரசு மருத்துவமனைகளில், இரு மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்

* அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள், தடையின்றி நடக்க, சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையம் அமைக்கப்படும். அவற்றுக்கான அத்தியாவசிய சான்றிதழை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் வழங்குவர்

* மருத்துவ பொருட்களுக்கான சான்றிதழ்களை, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், அரசு மருத்துவனை முதல்வர்கள், மருத்துவ பணிகளின் இணை இயக்குனர்கள், பொது சுகாதார துணை இயக்குனர்கள் வழங்குவர்

* அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும், தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள, தனியார் பணியாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள், காவல் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அடையாள அட்டை வழங்க, ஏற்பாடு செய்ய வேண்டும்

* மளிகை கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் போன்றவை, வீடுகளுக்கு சென்று, அத்தியாவசிய பொருட்கள் வழங்க, அனுமதி அளிக்கப்படுகிறது. காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், பிற நபர்களுக்கும் தேவையான அனுமதி சீட்டை, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்

* வேளாண் பொருட்கள், கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடை தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும் அனுமதிக்கப்படுகின்றன. இதில் சிரமங்கள் இருந்தால், 044 -- 2844 7701, 2844 7703 ஆகிய தொலைபேசி எண்களை, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்

* அரசால் அறிவிக்கப்பட்ட, சிறப்பு நிவாரணம் முழுமையாக பயனாளிகளை சென்றடைவதையும், அவற்றை வழங்கும் போது, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள், முழுமையாக பின்பற்றப்படுவதையும், மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்

* தேவைப்பட்டால், நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை, அவரவர் வீடுகளில் நேரடியாக வழங்க, கலெக்டர்கள் ஏற்பாடு செய்யலாம். நோய் தொற்றை தடுக்கும் விதமாக, கை ரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்குவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

54 ஆயிரம் பேர் கண்காணிப்புவெளிநாடுகளில் இருந்து வந்த, 54 ஆயிரம் பேர் பட்டியல், மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் வெளியில் வராதபடி, தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.'கொரோனா' தொற்று உடையோருடன் தொடர்பில் இருந்தோர், அவரவர் வீடுகளில், தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் வருவது, முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான, அத்தியாவசியப் பொருட்களை, மாவட்ட கலெக்டர்கள், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையும் மீறி, வெளியில் வருவோர் மீது, அபராதம் விதிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு எச்சரித்துள்ளது.


கொரோனா கண்காணிப்பில் இருப்பவர்கள் வீதியில் திரிவதால் பீதி எங்கே போனது சமூகப் பொறுப்பு

Added : மார் 26, 2020 23:05

மதுரை, தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளவர்கள் வீதியில் திரிவதால் மக்களுக்கும் அச்சம் தொற்றியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவத்துவங்கியதும் வெளிநாடுகளில் வேலை செய்த, சுற்றுலா சென்ற தமிழர்கள் சொந்த ஊர் திரும்பினர். அப்படி ஊர் திரும்பிய 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் விமான நிலையங்களில் பரிசோதித்தனர். பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிப்பிற்குள்ளான மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களையும் சுகாதாரத்துறை தனிமைப்படுத்தியுள்ளது.தவிர மாநிலத்தில் நேற்று பகல் வரை 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். மாநிலத்தில் இதுவரை 16 ஆயிரம் பேர் தனிமைவாசம் அனுபவிக்கின்றனர். 28 நாட்கள் வரை இதை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு, அவர்கள் வீடுகளிலும் அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அறிகுறி தென்பட்டால் உடனடியாக தங்களை தொடர்புகொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.ஆனால் சமூகப்பொறுப்பை உணராத பலரும் கட்டுப்பாடுகளை மீறுகின்றனர். குடும்ப விழாக்களில் பங்கெடுப்பது, நண்பர்களுடன் கூடுவது என கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தெருக்களிலும் சர்வசாதாரணமாக உலா வருகின்றனர். கொரோனா அறிகுறி சில நாட்கள் கழித்தும் வரலாம். ஒருவேளை பாதிப்பு தென்பட்டால், இவர்கள் மூலம் குடும்பத்தினர், உறவினர், பக்கத்து வீட்டுக்காரர்களையும் கொரோனா தாக்கும் அபாயம் உள்ளது. 

இதை உணராமல் தனக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என்ற மெத்தனத்தில் பலரும் வீதியில் நடமாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் இவர்களை தினமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.உள்ளாட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் தான் 75 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு சுகாதார ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சிகளில் 20 பேர் தான் உள்ளனர். இதர துறை அதிகாரிகளையும் இப்பணியில் இணைத்து, வார்டுகளை பிரித்து வழங்கினால் மட்டுமே கண்காணிப்பது சாத்தியம். பாதுகாப்பிற்காக போலீசாரையும் இணைக்க வேண்டும், என்றார்.
முடி திருத்துவோர் அரசுக்கு கோரிக்கை

Added : மார் 26, 2020 21:50

சென்னை :'அடுத்தவர்களை நம்பி வாழும், எங்களின் வாழ்வாதாரத்தை காத்திட, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என, தமிழ்நாடு முடி திருத்தும் அழகு கலை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, முதல்வருக்கு அச்சங்கம் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள், அடுத்தவர்களை நம்பி வாழ்பவர்கள். மக்களோடு இணைந்து பணியாற்றும், அவர்களது தொழில், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, கடை வாடகை பிரச்னையோடு, அன்றாடம் தொழில் செய்தால் தான் வருமானம் வரும். தற்போது, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால், வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். எனவே, முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, நல உதவி திட்டத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளது.
55 வயது மேற்பட்ட போலீசாருக்கு விடுப்பு

Added : மார் 26, 2020 21:35

சென்னை : 'நீரிழிவு மற்றும் மன அழுத்தத்திற்கு மாத்திரை உட்கொள்ளும், 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார், பணிக்கு வர வேண்டாம்' என, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, மண்டல ஐ.ஜி.,க்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா வைரஸ் பரவி வருவதால், காவல் நிலையங்களில், 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார், முழு நேர பணியில் ஈடுபட வேண்டாம்.

அதேபோல, நீரிழிவு மற்றும் மன அழுத்தத்திற்கு மாத்திரைகள் உட்கொள்ளும், 55 வயதுக்கு மேற்பட்ட போலீசாரும், பணிக்கு வர வேண்டாம். போலீசாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக டாக்டர்களை அணுக வேண்டும்; அலட்சியமாக இருக்க கூடாது. பணியில் உள்ள போலீசார் அனைவரும், முக கவசம் அணிவது உள்ளிட்ட, பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

தேவையில்லாமல், காவல் நிலையங்களில், போலீசார் அதிக எண்ணிக்கையில் பணியில் இருக்க கூடாது. போலீசார் சுழற்சி முறையில் பணியாற்ற, டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உத்தரவிட வேண்டும்.உடல் நலக்குறைவு உள்ள போலீசாருக்கு, உடனடியாக விடுப்பு அளிக்க வேண்டும். போலீசாரை தொடர்ச்சியாக, இரண்டு நாட்கள் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தங்க நகை சேமிப்பு திட்டங்களில், தவணை செலுத்துவதில் சிக்கல்

Added : மார் 26, 2020 21:19

'தங்க நகை சேமிப்பு திட்டங்களில், வாடிக்கையாளர்கள், இம்மாதம் தவணை தொகையை செலுத்த தவறினாலும், முழு சலுகையும் வழங்கப்படும்' என, நகை கடைகள் தெரிவித்துள்ளன.தமிழகத்தில், 35 ஆயிரம்தங்க நகை
 கடைகள் உள்ளன. அவை, மொத்தமாக பணம் கொடுத்து, தங்கம் வாங்க முடியாதவர்களின் வசதிக்காக, மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன.

வாடிக்கையாளர்கள், மாதம், 500 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, 11 மாதங்களுக்கு பணம் செலுத்தி, தீபாவளி, அக் ஷய திருதியை போன்ற விசேஷ நாட்களில், தங்கம் வாங்குகின்றனர்.அவ்வாறு, சேமிப்பு திட்டங்களில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு, நகை கடை நிறுவனங்கள், ஒரு மாத தவணை தொகை இலவசம்; தங்க நகைகளுக்கு செய்கூலி தள்ளுபடி, பரிசு பொருட்கள் என, பல சலுகைகளை வழங்குகின்றன.தவணை தொகையை ஒழுங்காக செலுத்தவில்லை எனில், முழு சலுகைகளும் கிடைக்காது. நகை கடைகளுக்கு, தவணை தொகையை இணையதளம் வாயிலாக செலுத்தும் வசதி இருந்தும், நேரில் தான் பலர் செலுத்துகின்றனர்.தற்போது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டு உள்ளன. அதனால், இம்மாதம் தவணை செலுத்த தவறினாலும், வாடிக்கையாளர்களுக்கு, முழு சலுகைகள் வழங்கப்படும் என, நகை கடைகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில், அனைத்து நகை கடைகளும், ஏப்., 14 வரை செயல்படாது; நகை சேமிப்பு திட்டங்களில் சேர்ந்தவர்கள்,இம்மாதம் தவணை தொகையை செலுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை.அவர்கள், இம்மாத தவணையை, அடுத்த மாதம் சேர்த்து செலுத்தலாம். அவர்கள், நகை கடைகளின், எந்தெந்த சேமிப்பு திட்டங்களில் உள்ளனரோ, அதற்கு ஏற்ப, முழு சலுகைகளும் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் - -
முதல்வர் நிவாரண நிதிக்கு கவர்னர் ஒரு மாத சம்பளம்

Updated : மார் 27, 2020 03:02 | Added : மார் 27, 2020 02:58 

சென்னை: கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன் ஒரு மாத சம்பளத்தை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக, பல்வேறு தரப்பினரும், முதல்வர் நிவாரண நிதிக்கு, நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன் ஒரு மாத சம்பளத்தை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். அவரது ஒரு மாத சம்பளம், 3.5 லட்சம் ரூபாய்.

NEWS TODAY 14.06.2026