Monday, November 23, 2020

தமிழ் அழிவது வேதனையை தருகிறது உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உருக்கம்

தமிழ் அழிவது வேதனையை தருகிறது உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உருக்கம்

Added : நவ 22, 2020 23:31 


மதுரை: ''தமிழகத்தில், தமிழ் அழிவது வேதனையைத் தருகிறது,'' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.

மத்திய தொல்லியல் துறை - ஏ.எஸ்.ஐ., - திருச்சி மண்டலம் சார்பில், உலகப் பாரம்பரிய வார விழா, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்தது. மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் வரவேற்றார்.காரணம்உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி, என்.கிருபாகரன் பேசியதாவது:மதுரை, 2,500 ஆண்டுகள் தொன்மையான நகர் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. தமிழின் தொன்மைக்கு, மதுரையைச் சுற்றி சான்றுகள் உள்ளன. ஆங்கிலம் கற்கும் அதே வேளையில், தமிழையும் அறிந்திருக்க வேண்டும். தற்போது, வெளிநாட்டு மோகம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தமிழ் அழிவது வேதனையைத் தருகிறது.எந்த இனத்திற்கும், மொழிதான் ஆணிவேர். நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை தெளிவுபடுத்துவது மொழி தான்.தமிழர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முன், கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர் என்பதற்கு பிராமி எழுத்துகளே சான்று.தமிழ் எந்தளவிற்கு தொன்மையானதோ, சமணமும் தொன்மையானது. கீழடி அகழாய்விற்குப் பின், தமிழின் தொன்மையை அறியும் ஆவல் ஏற்பட்டுள்ளது. எந்த தொன்மையான மொழியையும் ஏற்கும் மனநிலை, சகிப்புத் தன்மை தேவை.இவ்வாறு, அவர் பேசினார்.

உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி பி.புகழேந்தி பேசியதாவது:நீதிபதி கிருபாகரனின் வார்த்தைக்கு, மந்திர சக்தி உண்டு. மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமலாகியுள்ளது. இதற்கு, அது தொடர்பான வழக்கை, நீதிபதி கிருபாகரன் கையாண்ட விதமே காரணம்.மந்திர சக்திதனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத யதார்த்த நிலை உள்ளது. அவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஏன் உதவ முன்வரக்கூடாது என நீதிபதி கிருபாகரன் அமர்வு அறிவுறுத்தியது.இதைத் தொடர்ந்து அரசும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டு, உதவ முன்வந்துள்ளன. நீதிபதி கிருபாகரனின் மந்திர சக்தியால், தொல்லியல் துறைக்கும் ஏதாவது நல்லது நடக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

அண்ணா பல்கலை விவகாரம்: மந்திரியிடம் அமித்ஷா கிடுக்கி


அண்ணா பல்கலை விவகாரம்: மந்திரியிடம் அமித்ஷா கிடுக்கி

Updated : நவ 23, 2020 00:02 | Added : நவ 22, 2020 23:30

சென்னை:அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், நேரில் விளக்கம் அளித்தார்.

அவரிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு, அமித் ஷா பதில் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சுரப்பா மீது, 250 கோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்துள்ளது. பல்கலை கழக பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, உயர் கல்வித் துறை வாயிலாக, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், உயர் கல்வித் துறைக்கும், துணை வேந்தர் சுரப்பாவிற்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு, 15 நிமிடங்கள் நடந்தது. அப்போது, அண்ணா பல்கலை பிரச்னை குறித்து, அமித் ஷாவிடம், அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார். உயர்கல்வி தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளிடையே உள்ள முரண்பாடுகளை களைவது குறித்தும், உயர் கல்வித் துறை அமைச்சர் வாயிலாக, சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அதேநேரத்தில், பல்கலை விவகாரம் தொடர்பாக, பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு, அமைச்சர் அன்பழகனிடம் அமித் ஷா பதில் பெற்றதாகவும், அதன் வாயிலாக தன் சந்தேகங்களை, அவர் தீர்த்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

'நிவார்!' வரும் 25-ல் தமிழகத்தில் வீசுகிறது புயல்: மாநிலம் முழுமைக்கும் 'ரெட் அலர்ட்!'

'நிவார்!' வரும் 25-ல் தமிழகத்தில் வீசுகிறது புயல்: மாநிலம் முழுமைக்கும் 'ரெட் அலர்ட்!'

Updated : நவ 23, 2020 00:30 | Added : நவ 22, 2020 22:55


சென்னை:வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவார்' புயல், நாளை மறுதினம், மாமல்லபுரம்- - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இப்புயல் வீசுவதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று துவங்கி, வரும், 26ம் தேதி காலை வரை, மாநிலம் முழுதும், 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவரும், துணை இயக்குனர் ஜெனரலுமான, பாலச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:தெற்கு மற்றும் வங்க கடலின், மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது.

இது, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை, 'நிவார்' புயலாகவும் வலுவடையும். இந்த புயல், வங்க கடலின் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் பகல் அல்லது பிற்பகலில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கலாம். இதன் காரணமாக, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். நாளை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார், அரியலுார், பெரம்பலுார் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், இடியுடன் கூடிய மிக அதிக கன மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிக கன மழை வரை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.

நாளை மறுதினம், நாகை, தஞ்சை, திருவாரூர், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிக அதிக கன மழை பெய்யும்.திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னை மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புயல் காரணமாக, கடல் கொந்தளிப்பாக காணப்படும். பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும். மணிக்கு, 100 கி.மீ., வேகம் வரை, கடலுக்குள் சூறாவளி காற்று வீசும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.‛ரெட் அலர்ட்' மாவட்டங்கள்நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கும், காரைக்காலுக்கும், இன்று கன மழைக்கான, 'மஞ்சள் அலர்ட்' விடப்பட்டுள்ளது.

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார், அரியலுார், பெரம்பலுார் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு, நாளை, 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது.நாகை, தஞ்சை, திருவாரூர், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலுார், பெரம்பலுார், புதுச்சேரி, காரைக்காலுக்கு, நாளை மறுநாள், 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மற்ற கடலோர மாவட்டங்கள், வேலுார், திருவண்ணாமலை மற்றும் அதையொட்டிய வடக்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களுக்கு, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டுள்ளது.

புயலுக்கு ஈரான் பெயர்!

* தென் மாநிலங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும், வட கிழக்கு பருவ மழை, பெரும்பாலும் புயல் வீசும் பருவமாகவே இருக்கிறது

* இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை துவங்கியதில் இருந்து, இது, இரண்டாவது புயல். முதலாவது புயல் கேட்டி, சில நாட்களுக்கு முன், குமரி அருகே மேலடுக்கு சுழற்சியாக இருந்து, பின் அரபிக்கடலுக்குள் சென்று, புயலாக மாறியது. நேற்றிரவு, இந்த புயல் சோமாலியாவில் கரையை கடந்தது

* முதல் புயலுக்கு, இந்தியா சார்பில், 'கேட்டி' என, பெயர் வைக்கப்பட்டது. தமிழகத்தை தாக்க உள்ள, 'நிவார்' புயலுக்கு, ஈரான் நாட்டில் இருந்து, பெர்ஷிய மொழியில் பெயர் வைக்கப்பட்டு உள்ளது

* இந்த புயல், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானாவின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வரை வீசும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென் மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதிகளில், 'நிவார்' புயல் காரணமாக மணிக்கு, 75 - 100 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், வரும், 26ம் தேதி காலை வரை, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள், உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரபிக்கடலில் ‛கேட்டி' புயல்!

தமிழகத்தில், குமரி கடல் அருகே, கடந்த வாரம் மையம் கொண்ட மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அரபி கடலுக்குள் நுழைந்தது. இது, ‛கேட்டி' என்ற பெயர் சூட்டப்பட்ட புயலாக மாறி, சோமாலியாவுக்குள் நுழைந்தது. இந்த புயலின் காரணமாக, தென்மேற்கு அரபி கடலுக்குள், இன்று வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் அபாயம்


4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் அபாயம்

Updated : நவ 23, 2020 05:14 | Added : நவ 23, 2020 05:11

சென்னை: சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை, 'நிவார்' புயல் குறி வைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், 'வர்தா' புயல், சென்னையை பதம் பார்த்தது போல், 'நிவார்' புயல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை தாக்குவதற்கான அபாயம் உள்ளது.

புயலின் தாக்கத்தால், நாளை(நவ.,24) அதிகாலை முதல், சென்னை மற்றும் சுற்றுப்புற கடலோர மாவட்டங்களில், அதிக கன மழை பெய்யும். திடீர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம். எனவே, முன்னெச்சரிக்கை பணிகளை துவங்கவும், மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்கவும் வேண்டிய நிலை, அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

புயல், மாமல்லபுரம் அருகே கரை கடக்கும் என்பதால், கல்பாக்கம் அணு மின் நிலையம், வல்லுார், எண்ணுார் மின் நிலையங்கள், சென்னை, எண்ணுார், காரைக்கால், பரங்கிப்பேட்டை, நாகை மற்றும் கடலுார் துறைமுங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

'விண்ணுலகம் இல்லம்' என சுடுகாட்டுக்கு பெயர்சூட்டல்


'விண்ணுலகம் இல்லம்' என சுடுகாட்டுக்கு பெயர்சூட்டல்

Added : நவ 22, 2020 23:55

சென்னை: சுடுகாட்டுக்கு, 'விண்ணுலகம் இல்லம்' என்று, பெயர் சூட்டப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது,

கிராண்ட் லைன் ஊராட்சி. இங்கு, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கமுதி அரசு, தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில், இறப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கான சுடுகாடு, மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு மரங்கள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. 2018ல் வீசிய, 'கஜா' புயலால், இங்கிருந்த பல மரங்கள் மற்றும் சுற்றுச்சுவர் நாசமானது.

புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், இதை கண்டுகொள்ளவில்லை. கடந்தாண்டு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, புதிதாக ஊராட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டதும், இந்த சுடுகாட்டை புனரமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. புயலில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை அகற்றி, புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. சுடுகாட்டிற்கு, 'விண்ணுலகம் இல்லம்' என, ஊராட்சி சார்பில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. மாதவரம் நெடுஞ்சாலை வழியாக செல்பவர்கள், இந்தப் பெயரை ஆச்சரியத்துடன் பார்த்தபடி செல்கின்றனர். சுடுகாட்டை பூங்கா போல பராமரிப்பதற்காக, மரக்கன்றுகள், பூச்செடிகள் நடவு செய்யும் பணிகளும் நடக்கின்றன.

மருத்துவ படிப்புகளுக்கு இன்று பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம்

மருத்துவ படிப்புகளுக்கு இன்று பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம்

Updated : நவ 23, 2020 02:25 | Added : நவ 23, 2020 02:22

சென்னை: மருத்துவ படிப்பில், பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது.

கவுன்சிலிங் வளாகத்தில், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., - - 1,230 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953 எம்.பி.பி.எஸ்., -- 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 399 இடங்கள்; சிறப்பு பிரிவில், 60 இடங்கள் என, 459 இடங்கள் நிரம்பியுள்ளன.அதைத் தொடர்ந்து, பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல், டிச., 4 வரை நடைபெற உள்ளது. இன்று, பொது பிரிவில் முதல், 361 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுடன், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் மட்டுமே, கவுன்சிலிங் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே, வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.மேலும், கட்டாயம் முக கவசம் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

வரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை

வரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை

Updated : நவ 23, 2020 07:11 | Added : நவ 23, 2020 07:07


சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு, காலி பணியிடங்களை நிரப்புதல், வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, வரும், 26ல் போராட்டம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 26ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு, சம்பள பிடித்தம் செய்யப்படவுள்ளது.தற்காலிக மற்றும் பகுதி நேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால், வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படும்.

தலைமைச் செயலக ஊழியர்கள், 26ம் தேதி முழுமையாக பணிக்கு வரவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும், 26ம் தேதி பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என, அனைத்து துறைகளுக்கும், தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

T.N. simplifies procedure for govt. employees to go on personal foreign trips

T.N. simplifies procedure for govt. employees to go on personal foreign trips The Hindu Bureau Chennai 03.02.2026 The Tamil Nadu government ...