Wednesday, February 4, 2026

தங்கம் விலை ஏன் உயர்கிறது?





தங்கம் விலை ஏன் உயர்கிறது?



தங்கம் விலை

முனைவா் வைகைச்செல்வன்


Updated on:
04 பிப்ரவரி 2026, 2:26 am

சர்வதேச போர்ப் பதற்றம், மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது, டாலர் மதிப்பு சரிவு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் தேவை அதிகரிப்பால் விலை உயர்கிறது. அமெரிக்க வங்கிகளில் வட்டி விகிதக் குறைப்பு, பணவீக்கம் மற்றும் நகைக் கடைகளில் பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

போர் மற்றும் வர்த்தகப் போட்டிகள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் நாடுகிறார்கள். சீனா, ரஷியா போன்ற நாடுகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை அதிக அளவில் வாங்கி சேமித்து வருகின்றன. மேலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு தங்கம் விலை உயர்வதற்கு முக்கியக் காரணியாகும்.

கடந்த இரு ஆண்டுகளில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக தங்கம் திகழ்ந்தாலும், ஏழை, எளியோரின் வாழ்க்கையில் எட்டாக்கனியாகி விட்டது. காலையில் ஒரு விலையும், மாலையில் மற்றொரு விலையும் என்று தங்கத்தின் விலை மேலும் மேலும் உயர்கிறது. வெள்ளியின் விலையும் அதே போன்ற நிலையில் உயரத் தொடங்கியிருக்கிறது.

சர்வதேச பொருளாதாரச் சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. ரஷியா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா, இந்தியா மீதான வரி விகித உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றங்கள் போன்றவற்றால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்குப் பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்து விட்டன. இதனால், தங்கம் விலையில் ஏற்றம் இருக்கிறது.

தங்கம் மட்டுமன்றி வெள்ளி விலையும் கடும் ஏற்றத்தைக் கண்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவும், தங்கம், வெள்ளி உச்சத்தைத் தொட ஒரு காரணமாகும். விநியோக-தேவை இடைவெளிகள், அதிகரித்த முதலீட்டுத் தேவை, சரிந்துவரும் பங்குச் சந்தைகள் மற்றும் பலவீனமான நாணயங்கள் என அனைத்தும் இணைந்து, புல்லியன் விலைகளை தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கித் தள்ளுகின்றன.

நிபுணர்களின் தகவலின்படி, புல்லியன் விலைகளின் இந்த ஏற்றம், தொடர்ச்சியான புவியியல் அரசியல் மோதல்களாலும், பொருளாதார சவால்களாலும் தூண்டப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு முதலீட்டுச் சொத்துகளுக்கான தேவையை மேலும் அதிகரிக்கிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கும் எட்டு நாடுகளுக்கு எதிரான வரி மிரட்டலுக்கு ஐரோப்பாவின் பதில், மற்றும் டாவோஸில் உலகத் தலைவர்களுடன் டிரம்ப் இந்த விவகாரம் குறித்து விவாதித்த நிகழ்வுகள் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.

போர்ப் பதற்றம், புவிசார் மோதல்கள், வர்த்தக மோதல்கள் என சர்வதேச அரசியல், சர்வதேச பொருளாதார நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி தங்கம், வெள்ளி விலையைத் தீர்மானிக்கின்றன. ஜனவரி மாதத் தொடக்கத்தில் வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு, தங்கம்-வெள்ளி விலை உயர்ந்தது. அதன் பின்னர் ஈரான் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மூன்றாவது வாரத்தில் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்படி ஒவ்வொரு வாரமும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு வித்திடும் வகையிலான ஏதேனும் ஒரு விஷயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிறகு, கிரீன்லாந்து விவகாரம் சற்று தணிந்தது. அமெரிக்க அதிபர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதான வரி விதிப்பு நடவடிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனால், பங்குச் சந்தைகள் மீண்டு வந்தன.

ஸ்பாட் தங்கம் விலை புதிய வரலாற்றைத் தொட்டிருக்கிறது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் தடாலடியாக உயர்ந்து 5,026 டாலர்கள் என உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 175 டாலர்கள்; இந்திய மதிப்பில் ரூ.16 ஆயிரம். இது வரலாற்றிலேயே இல்லாத உச்சம். தங்கம் விலை 5 ஆயிரம் டாலர்களை எட்டி விடும் என்றுதான் பல்வேறு நிறுவனங்கள் கணித்திருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பாட் தங்கம் ஒரு வார காலத்தில் 7.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதேபோல, வெள்ளி விலையும் ஒரு அவுன்ஸ் 102 டாலர்களை நெருங்கி விட்டது. ஸ்பாட் வெள்ளி விலை 98.70 டாலர்கள் என வரலாற்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒரே நாளில் ஸ்பாட் வெள்ளியின் விலை 2.17 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த ஒரு வார காலத்தில் 11 சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது. அமெரிக்க டாலர் வலுவிலந்திருப்பதே தங்கம், வெள்ளியின் விலை உயர்வுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இவை தவிர, அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு வரி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி தலைவர் பதவியில் இருக்கும் ஜெரோம் பவலின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவடைகிறது. மத்திய வங்கியின் அடுத்த தலைவராக தனக்குச் சாதகமான கெவின் வார்ஷை டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். எனவே, இந்த ஆண்டு அமெரிக்க மத்திய வங்கி அதிகப்படியான வட்டிக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது, டாலர் குறியீடு இரண்டு வாரங்களில் இல்லாத சரிவைச் சந்தித்திருப்பது ஆகியவை தங்கம்-வெள்ளி விலை உயர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

டாலர் மற்றும் பத்திரங்கள் மீதான நம்பிக்கை சற்று குறைந்திருப்பதால், தங்கம் பாதுகாப்பான முதலீடாகத் தெரிகிறது. கடந்த வாரம் உலகெங்கிலும் உள்ள பல முக்கிய மத்திய வங்கிகளின் தலைவர்கள் பெடரல் ரிசர்வ் மற்றும் ஜெரோம்பவலுக்கு ஆதரவு தெரிவித்தனர். மத்திய வங்கியின் சுதந்திரம் குறித்த கவலைகள் படிப்படியாக தங்கத்தின் விலைக்கு ஒரு வலுவான அடிப்படையை வழங்குகின்றன. உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் தங்கத்தின் தேவை மதிப்பு அடிப்படையில், ஆண்டுக்கு 44 சதவீதம் அதிகரித்து 146 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியது. தங்கம் இடிஎஃப் மூலம் பங்குச்சந்தையிலும் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு தினங்களாக தங்கம்-வெள்ளி விலை சற்று குறைந்துள்ள போதிலும், விலை உயர்வு அல்லது விலையில் சற்று ஏற்ற-இறக்கம் இத்துடன் முடிந்து விட்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது இன்னும் ஏற்றம் காணுமோ என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கடன் நெருக்கடி என்பது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறுகின்றனர். கட்டுப்பாடற்ற கடன்களைச் சமாளிக்க அரசாங்கங்கள் பணவீக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடும். ஆகவேதான், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் தங்கத்தின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஜனவரி மாதம் மட்டும் 22 காரட் தங்கம் விலை 17.14 சதவீதம் வரையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், தற்போது மக்கள் மத்தியில் புதிய டிமான்டை உருவாக்கியுள்ள 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,500 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த 18 காரட் தங்கம் நகைகள் மற்றும் டிசைனர் நகைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்கிற காரணத்தினாலும், 18 சதவீத காரட் என்பதாலும், குறைந்த விலையில் வாங்க முடியும் என்ற காரணத்தினாலும் மக்கள் அதிகப்படியான விருப்பத்தைக் காட்டுகின்றனர்.

கடந்த 10 நாள்களில் சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் உயர்வைப் பதிவு செய்து வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,280 ஆக இருந்த நிலையில், ஜனவரி 26ஆம் தேதி அது ரூ.15,025 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கம் ரூ.14,487 இருந்து ரூ.16,391 ஆக உயர்ந்து, குறுகிய காலத்தில் கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளது. சில நாட்கள் லேசான சரிவுகள் இருந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது தங்கம் விலை வேகமான உயர்வு பாதையிலேயே பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று வெள்ளி விலையும் தங்கத்தின் போக்கை பின்பற்றி உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ.375 என்ற அளவில் ரூ.10 உயர்வுடன் வர்த்தகமாகியது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ.3.75 லட்சம் என்ற அளவுக்கு உள்ளது. உள்நாட்டில் தங்க விலை உயர்வுக்கு திருமண சீசன் நெருங்குவது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. தென் இந்தியாவின் பல மாநிலங்களில் திருமணங்கள் சீசன் தொடங்கி உள்ளதால், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நகைக்கடைகளில் கூடுதலான வர்த்தகத்தை பெற்று வருகிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் தேவை தொடர்வதால் விலை உயர்வும் நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மேலும், இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக பலவீனமடைந்துள்ளது. தங்கத்தை இந்தியா பெரும்பாலும் இறக்குமதி செய்வதால், ரூபாய் வீழ்ச்சி இறக்குமதி செலவை அதிகரிக்கிறது. மேலும், சர்வதேச காரணிகளான ரஷியா-உக்ரைன் மோதல் தொடர்வது, கிரீன்லாந்து தொடர்பான புவிசார் அபாயங்கள், வர்த்தகப் பதற்றங்கள் ஆகியவை பாதுகாப்பு சொத்துகளான தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவையை அதிகரித்துள்ளன.

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


NEWS TODAY 04.02.2026

 





















































44 for Gynaecology, 4 for Ortho: What's behind alarmingly low NEET PG cut-offs for medical seats

44 for Gynaecology, 4 for Ortho: What's behind alarmingly low NEET PG cut-offs for medical seats This shift was especially noted during ...