Tuesday, June 30, 2015

சென்னை மெட்ரோ ரயில்!

சென்னை மாநகரத்தின் சரித்திரத்தில் அதிமுக்கியத்துவம் பெறும் இரண்டு நாள்களாக 1931 ஏப்ரல் 2-ஆம் தேதியும், 2015 ஜூன் 29-ஆம் தேதியும் திகழும். முந்தையது, அன்றைய சென்னை ராஜதானியின் ஆளுநர் சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லியால், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே மின்சார ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்ட நாள்

. அடுத்தது, தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் நாள்.

மின்சார ரயில் சென்னையின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்காத நிலையில், அதிவேகமாக அதிகரித்து வரும் மக்கள் பெருக்கத்துக்குப் போக்குவரத்து வசதிகள் ஈடுகொடுக்க முடியாத நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை சற்று ஆறுதலளிக்கும் என்று நம்பலாம்.
முதல் கட்டமாக ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு வரையிலுமான மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடத்திலும் அடுத்தகட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்க இருக்கிறது. இதுவரை ரூ.10,751.94 கோடி செலவில் தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை, சென்னை மாநகரத்தின் கட்டமைப்பு வசதிக்குப் புதிய பரிமாணத்தையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
1931-இல் தொடங்கப்பட்ட மின்சார ரயில் சேவையின் பயனால் சென்னை மாநகரம் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளிலும் பரந்து விரிந்து வளர்ந்தது என்றால், 2015-இல் தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை மின்சார ரயில் இல்லாத பகுதிகளை இணைப்பதுடன் கணிசமாகச் சாலை நெரிசலைக் குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்ல, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுக்கு மெட்ரோ ரயில், மின்சார ரயில், பெட்ரோலிய எரிவாயு பயன்பாடு ஆகியவை மட்டுமே விடையாக இருக்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. அரசுப் பேருந்துகளும், சிற்றுந்துகளும், ஷேர் ஆட்டோக்களும் இருந்தும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ற அளவுக்கு பொதுப் போக்குவரத்தின் எண்ணிக்கையும், தரமும் அதிகரிக்காமல் இருப்பதும் மிகப்பெரிய காரணம்.
73 லட்சம் மோட்டார் வாகனங்கள் உள்ள தலைநகர் தில்லியைவிட, 37 லட்சம் வாகனங்கள் உள்ள சென்னைதான் பரப்பளவு சார்ந்த விகிதப்படி, சாலையில் அதிக வாகனங்கள் காணப்படும் நகரமாகத் திகழ்கிறது. தில்லியில் 30,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் கி.மீட்டருக்கு 245 வாகனங்கள் என்றால், வெறும் 1,800 கி.மீ. நீளமேயுள்ள சென்னை நகரத்தின் சாலைகளில் கி.மீட்டருக்கு 2,093 வாகனங்கள் காணப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?
பெட்ரோல், டீசல் விலை உயர்வு சென்னையைப் பொருத்தவரை வாகனங்கள் வாங்குவதில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நாள்தோறும் தமிழகத்தில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில் 25% வாகனங்கள் சென்னையின் சாலைகளில்தான் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, மோட்டார் வாகனங்களில் கணிசமானவை இரண்டு சக்கர வாகனங்கள் என்றாலும்கூட, அதிநவீனமான பெரிய கார்கள், பேருந்துகள் போன்றவை அதிக அளவில் செல்வதற்கு ஏற்ப சாலைகள் சென்னை மாநகரில் விரிவுபடுத்தப்படவில்லை, விரிவுபடுத்துவது சாத்தியமும் இல்லை.
தனியார் மோட்டார் வாகனங்கள் போதாதென்று, சென்னையைச் சுற்றிலும் செங்கல்பட்டு, அரக்கோணம் வரையில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் வாகனங்கள் வேறு சென்னை நகரின் வீதிகளில் நூற்றுக்கணக்கில் வளைய வருகின்றன. வங்கிகள் வரைமுறையே இல்லாமல் மோட்டார் கார்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும் கடன் அளிப்பதன் விளைவாக, சொந்தமாகக் காரோ, இரு சக்கர மோட்டார் வாகனமோ வைத்திருப்பது என்பது நடுத்தர மக்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும்கூட ஒரு கெüரவப் பிரச்னையாகி விட்டிருக்கும் நிலைமை.
உலகில் மிக அதிகமாக வாயு மாசுவால் பாதிக்கப்பட்டிருக்கும் 20 நகரங்களில், இந்தியாவில்தான் 13 நகரங்கள் இருக்கின்றன. அதில் சென்னையும் அடங்கும். அதற்குக் காரணம், மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் பெட்ரோலியப் புகை. நகர்ப்புறத்திலுள்ள 40% குழந்தைகளின் நுரையீரல்கள் பலவீனமாக இருப்பதாக சுகாதாரப் புள்ளிவிவரம் கூறுகிறது.
போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் வாயுமாசு, வாகனங்கள் வாங்கியதால் ஏற்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் கடன் சுமை இவற்றுக்கு எல்லாம் ஒரே தீர்வு பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதுதான். அதிநவீன வசதிகளுடன்கூடிய, மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம், மேலைநாடுகளில் காணப்படுவது போல பணக்காரர்களும்கூட சொந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் நிலைமை ஏற்படும்.
அடுத்த கட்டமாக தில்லியில் உள்ளதுபோல, ஆட்டோ, வாடகைக் கார், பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள், குறிப்பாகத் தனியார் கல்லூரிப் பேருந்துகள் கட்டாயமாக சி.என்.ஜி. எரிவாயுவில்தான் இயக்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் முதல் முயற்சியாகச் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை இருக்கட்டும்!

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...