Wednesday, July 15, 2015

இனியும் தாமதம் தகாது!

மாணவர்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்பது அண்மைக் காலமாகப் பல்வேறு நகரங்களிலும் நாம் கண்ணெதிரே காணுகின்ற பிரச்னை. இதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்பதும், மதுவின் தீமை குறித்து இளையோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதும்தான் எல்லாருடைய விருப்பமும்.
மாணவர்கள், சிறார்கள், பெண்கள் மது அருந்துவதை முகநூல், கட்செவி அஞ்சலில் பதிவேற்றம் செய்வதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கருதிக் கொண்டு, அவர்களைப் படம் பிடித்து பகிர்வது இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாகத் தீர்வு ஆகாது.
கோவை மாநகரில் ஒரு பள்ளி மாணவி மது மயக்கத்தில் பொது இடத்தில் கடந்த வாரம் தகராறு செய்த விடியோ காட்சி, கட்செவி அஞ்சல், முகநூலில் பகிரப்பட்டன. அச்சு, ஒளி ஊடகங்கள் இந்த மாணவியின் முகத்தை தெளிவற்றதாக்கி வெளியிட்டன. ஆனால், அந்த மாணவியின் சீருடையை வைத்து அவரது பள்ளியையும், பிறகு அந்த மாணவியையும் கண்டுபிடித்தல் மிக எளிது.
இதே முகநூலில் ஒருவர் இந்த மாணவிக்காக வேதனைப்படவும், இந்த மாணவியை இவ்வாறு பொதுவெளிக்கு கொண்டுவந்த மக்களின் பொறுப்பின்மை, அடுத்தவரின் அந்தரங்கத்துள் ஊடுருவும் அநாகரிகத்தையும் (பீப்பிங் டாம் சின்ட்ரோம்) சாடியிருந்தார். உங்களது சகோதரி அல்லது மகள் என்றால் முகநூலில், கட்செவி அஞ்சலில் இந்த அலங்கோலத்தைப் பதிவேற்றம் செய்வீர்களா என்ற கேள்வியும் எழுப்பியிருந்தார்.
சென்னையில் 2 மாணவர்கள் வகுப்பறைக்குள் மதுபோதையுடன் வந்து ஆசிரியையிடம் தகராறு செய்ததாகவும் மற்ற ஆசிரியர்கள் வந்து அவர்களைப் பள்ளியிலிருந்து வெளியேற்றியதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியானது. பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் சிறார்கள் என்பதால் இத்தகைய சம்பவங்களை ஊடகங்கள், அவர்களது பெயர் அடையாளம் தெரியாதபடி செய்தி வெளியிட வேண்டிய கடப்பாடு உள்ளது. முகநூல், கட்செவி அஞ்சலுக்கு அந்தக் கட்டாயம் இல்லை.
இதே காலகட்டத்தில் மூன்று வயதுச் சிறுவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துக் குடிக்கச் செய்ததற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்தச் சிறுவன் மது அருந்துவது போன்ற படம் பதிவேற்றம் செய்தவர்களைக் காவல் துறை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அதேபோன்று, 18 வயது நிரம்பாத ஒரு பள்ளி மாணவியின் மது மயக்க அடாவடியை கட்செவி அஞ்சல், முகநூல் மூலம் பதிவேற்றம் செய்து அசிங்கப்படுத்தியதற்காகவும் யாரும் கைது செய்யப்படவில்லை.
அண்மைக்காலமாக இளையோர் மது அருந்தும் காட்சிகள் முகநூல், கட்செவி அஞ்சலில் பரிமாறப்படுவது அதிகமாக உள்ளது. குறிப்பாக, இளம் பெண்கள் மது அருந்தும் அல்லது மதுக் கடையில் மது வாங்கும் காட்சிகளையே மேலதிகமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். திரைப்படங்களிலும்கூட, நட்சத்திர மதுக் கூடங்களில் (பப்) இளம் பெண்கள் குடிப்பதாகவும், வீட்டில் அப்பாவிப் பெண்ணாக அசத்துவதாகவும் (ராஜா ராணி) காட்சி அமைக்கிறார்கள். மது எப்படி இருக்கும் என்று அனுபவ அறிவு பெற, சகோதரிகள் இருவர் வீட்டுக்குள்ளேயே குடிக்கிற காட்சி (ஜீவா) இடம்பெறச் செய்கிறார்கள். திரைப்படத்தில் நாயகர்கள் குடித்துவிட்டு ஆடிப் பாடுவது அன்றைய "தேவதாஸ்' முதல் இன்றைய "வேலையில்லா பட்டதாரி' வரை நிற்கவே இல்லை.
18 வயது நிரம்பாதவர்களுக்கு மது விற்பனையைத் தடுப்பதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை என்பதைத்தான் நடைமுறையில் காண்கிறோம். நண்பர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்கும்போது மதுபானம் கிடைப்பதில் எந்தத் தடையும் இருப்பதில்லை.
18 வயது நிரம்பாமல் மது அருந்தியவர்களை பொது இட ஒழுங்குக்கு ஊறு செய்ததாகக் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப முடியும். அப்படிச் செய்தால், அல்லது அவர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்தால் என்ன ஆகும்? அது அவர்களது படிப்புக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடக் கூடும்.
முழுமையான மது விலக்கு அமலுக்கு வராதவரை இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது கடினம். அது உடனடி சாத்தியமாவதாகத் தெரியவில்லை.
இந்தப் பிரச்னையில் அரசைவிடப் பள்ளிகளுக்கும், பெற்றோருக்குமே மிக அதிகமான பொறுப்பு இருக்கிறது. இவர்கள் இணைந்து செயல்பட்டால் 90 விழுக்காடு மாணவர்களை மதுவிலிருந்து காப்பாற்றிவிட முடியும். ஏனெனில், இந்த 90 விழுக்காடு மாணவர்களும் பள்ளி நேரத்தில் வெளியே சென்று மதுவை சுவை பார்க்கிறார்கள். வகுப்பில் மாணவர் இல்லை என்று தெரிந்தவுடன் அவரது பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பும் வழக்கத்தை அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கு மது, போதை மாத்திரைகள் கிடைக்கக் காரணம் அரசும், சமூக விரோதிகளும் மட்டுமே அல்ல. கணக்கு கேட்காமலேயே கைச் செலவுக்குப் பணத்தை வாரி வழங்கும் பெற்றோரும் காரணம். கணக்கில் தேவைக்கு அதிகமாகப் பணம் போட்டு, ஏடிஎம் அட்டையையும் கொடுக்கும் பெற்றோர் தங்கள் குழந்தை எவ்வளவு பணத்தை எதற்காக செலவழிக்கிறார் என்பதைக் கண்காணிப்பதும் கேள்வி கேட்பதும் பிரச்னையைப் பெருமளவு குறைக்கும்.
சந்தைப் பொருளாதாரத்தின் நிலையை சந்தை நிர்ணயித்துக் கொள்வது போல, ஜனநாயகத்தில் அவரவர் செய்கையை எந்தவித அரசு அல்லது சமூகக் கட்டுப்பாடும் இல்லாமல் அவரவரே தீர்மானித்துக் கொள்வது என்கிற போக்கு சரிதானா? நாம் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...