Thursday, July 9, 2015

இனியுமா தொடர்வது?

திருமணமாகாத இளம் பெண்களின் கையில் செல்லிடப்பேசி இருப்பது அவர்களைத் தவறான வழிகளில் செல்லத் தூண்டுகிறது என்றும், கள்ளக்காதலுக்கும், முறைகேடான உறவுகளுக்கும் துணை போகிறது என்றும் ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் "காப் பஞ்சாயத்து' எனப்படும் கிராமப் பஞ்சாயத்து கருதுகிறது.
அந்தக் கிராமத்தில் இருக்கும் திருமணமாகாத இளம் பெண்கள் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவது காப் பஞ்சாயத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் அலாவாட் என்கிற கிராமம். கல்லூரிகளில் பெண்கள் மேற்படிப்பைத் தொடர்வதை இந்தக் கிராமம் அனுமதிக்கிறது. மகளிர் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது. ஆனால், இந்தக் கிராமத்தில் காப் பஞ்சாயத்து ஒரு விசித்திரமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. காப் பஞ்சாயத்துகளையும், அவற்றின் தீர்ப்புகளையும் கேலி செய்தும், நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியும் தயாரிக்கப்பட்ட ஹிந்தி திரைப்பட இயக்குநரின் தலையை வெட்டுபவர்களுக்கு 51 எருமை மாடுகளைப் பரிசளிப்பதாக அறிவித்திருக்கிறது.
அதேபோல, வட நாட்டின் பல மாநிலங்களில் செயல்படும் இதுபோன்ற காப் பஞ்சாயத்துகள், காதல் திருமணங்களுக்கு எதிராக நடத்தப்படும் கெüரவக் கொலைகளுக்கும் அங்கீகாரம் அளிக்கின்றன என்பதுதான், அரசின் நீதி பரிபாலன அதிகாரத்துக்கே சவாலாக அமைகிறது. காப் பஞ்சாயத்துகளின் தீர்ப்புகள் பல கிராமங்களில் சட்டம் - ஒழுங்குக் கட்டுப்பாட்டை மீறியதாகவே இருக்கின்றன. கிராம மக்களிடம் காப் பஞ்சாயத்துகளுக்கு இருக்கும் செல்வாக்கு அவற்றை அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாகச் செயல்பட அனுமதித்திருக்கிறது என்பதுதான் வேடிக்கை. சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளாகியும், இதுபோன்ற அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட அமைப்பை நம்மால் அகற்ற முடியவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.
காப் பஞ்சாயத்து, மத, ஜாதிகளின் கெüரவத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொள்ளும் அமைப்புகள் போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய அவசியத் தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற அமைப்புகள் சமுதாயத்தின், நம்பிக்கைகளின், ஜாதிகளின், பெண்களின், தேசத்தின் கெüரவத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக் கொள்வதும், அரசும், சட்ட அமைப்புகளும் அதைத் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்ப்பதும் வியப்பாக இருக்கிறது.
இதுபோன்ற காப் பஞ்சாயத்துகளின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் நிராகரித்தும் உச்சநீதிமன்றம் பல முறை தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அப்படி இருந்தும்கூட, வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கிராமங்கள் இப்போதும் காப் பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்பதுதான் உண்மை. சட்டம் - ஒழுங்கையும்விட, ஆங்காங்கே வாழும் சமூகத்தினரின் ஆசாரங்களும், சம்பிரதாயங்களும் முன்னுரிமை பெறுவதுதான் நடைமுறையாக இருப்பதும்கூட காப் பஞ்சாயத்துகளின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படுவதற்குக் காரணம்.
காப் பஞ்சாயத்துகள் இல்லாத தமிழ்நாட்டில்கூட, ஆங்காங்கே கெüரவக் கொலைகள் நடப்பதைத் தடுத்துவிட முடியவில்லை. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், கிராமப்புறக் கோயில்களில் நடைபெறும் மிருக பலிகளைத் தடை செய்யும் புரட்சிகரமான, நாகரிகமான உத்தரவுக்கு எதிர்ப்பு எழுந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. கல்வி அறிவும், பகுத்தறிவுப் பிரசாரமும் கடந்த 60 ஆண்டுகளாக மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் தமிழகத்திலேயே உயிர் பலியை நிறுத்தவோ தடுக்கவோ முடியவில்லை எனும்போது, பிற்பட்ட நிலையிலுள்ள வட மாநிலக் கிராமங்களில் காப் பஞ்சாயத்துகளின் ஆதிக்கம் இன்றும் கொடிகட்டிப் பறப்பதில் வியப்பில்லை.
காப் பஞ்சாயத்துகளும், கலாசாரக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுக்களும் செயல்படுவதற்கு மிக முக்கியமான காரணம் அரசியல் கட்சிகள்தான். காப் பஞ்சாயத்துகளின் தீர்ப்புகளுக்கு எதிராக எந்தவோர் அரசியல் கட்சியோ, தலைவர்களோ குரலெழுப்புவதில்லை. கொள்கைரீதியாக வாக்காளர்களை அணுகவோ, அவர்களது ஆதரவைப் பெறவோ வலுவில்லாத நிலைக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டு விட்டன என்பதுதான் அவர்களது மெüனத்துக்குக் காரணம்.
காப் பஞ்சாயத்துகளைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதன் மூலமும், அவர்களைப் பணத்தாலோ, வாக்குறுதிகளாலோ விலை பேசுவதன் மூலமாகவும் ஒட்டுமொத்தக் கிராமத்தின் வாக்குகளையும் பெற்று விடலாம் என்று அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. காப் பஞ்சாயத்துகளைப் பகைத்துக் கொள்வதன் மூலம் கிராமத்தின் அத்தனை வாக்குகளையும் இழக்க அவர்கள் தயாராக இல்லை.
புரையோடிப் போயிருக்கும் சமுதாய பழக்க வழக்கங்களை கல்வியோ, வாழ்க்கை வசதிகளோ, செல்வமோ அகற்றி விடுவதில்லை. உதாரணமாக, குறிப்பிட்ட திரைப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது என்று கூறித் தடை விதித்திருக்கும் உத்தரப் பிரதேச கிராமமான பைன்சி, பொருளாதாரரீதியாகவும், கல்வியிலும் மிகவும் முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
கலாசாரத்தையும், தமது பழக்கவழக்கங்களையும், அவரவர் வாழ்க்கை முறையையும் கடைப்பிடிப்பது, தொடர்வது என்பது வேறு. அரசியல் சட்டத்துக்கு வெளியே காப் பஞ்சாயத்து என்கிற பெயரில் நீதி வழங்கப்படுவது என்பது வேறு. அரசியல் கட்சிகளும், விழிப்புணர்வு இயக்கத்தினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதற்கு முடிவு கட்டாத வரையில், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி என்பது கேலிக்கூத்தாகவே இருக்கும்!

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...