Sunday, February 14, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 19: ஹிஸ்டீரியா - தேவை கையாள்வதில் கவனம்

டாக்டர் ஆ. காட்சன்

ஹிஸ்டீரியாவில் பிரச்சினையே இந்த மனநோயானது, நரம்பியல் நோய் அறிகுறிகளாக வெளிப்படுவதுதான். இதனால் பாதிக்கப்படும் வளர்இளம் பருவத்தினரை நரம்பியல் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால், தேவையான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்கிற பட்சத்தில் கண்டிப்பாக மனநல ஆலோசனை அவசியம்.

இல்லையென்றால் ‘பழி ஓர் இடம், பாவம் ஓர் இடம்’ என்பதுபோல வீணான பரிசோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவதுடன், தேவையற்ற மாத்திரை மருந்துகளையும் உட்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் காலம் வீணாவதுடன் நோய் தீவிரமாகவும் மாறலாம்.

வலிப்பில்லாத வலிப்பு

சமீபத்தில் 17 வயது பெண் ஒருவரை அவருடைய அம்மா திடீர் மயக்கம் மற்றும் வலிப்புநோய் இருப்பதாகவும், பல வருடங்கள் மாத்திரைகள் உட்கொண்டபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறி அழைத்து வந்திருந்தார். அந்தப் பெண்ணின் வலிப்பு நோய் அறிகுறி மற்றும் வரலாற்றைக் கேட்டபோது, நான்கு வருடங்களுக்கு முன்பு அவருடைய அப்பா இறந்த பிறகு அந்தப் பெண்ணை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டதாகவும், அதற்குப் பின்தான் இந்த நோயே ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். அந்தப் பெண்ணின் வலிப்பு அறிகுறிகளின் தன்மை, நரம்பு பாதிப்பால் ஏற்படும் வலிப்பின் தன்மையோடு ஒத்துப்போகவில்லை.

மாறாக அப்பாவை இழந்ததால் மனதில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதில் வேதனை என்னவென்றால் மாத்திரை கொடுத்தும் சரியாகாததால், அவள் வேண்டுமென்றே செய்வதாகவும், பேய் பிடித்திருப்பதாகவும் கூறிச் சூடு போட்டுச் சிகிச்சை (?) கொடுத்திருக்கிறார்கள். இது ஒரேயொரு உதாரணம்தான்.

உண்மையில் இதுபோலப் பலர், தகுந்த சிகிச்சை இருப்பது தெரியாமல் பல வருடங்கள் கழித்தே சரியான காரணத்தைக் கண்டறியும் நிலையில் இருக்கின்றனர். புள்ளிவிவரங்களின்படி சுமார் 30% வரையிலான வலிப்புநோய்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 25 சதவீதத்துக்கும் மேலானோர் வலிப்பு மாத்திரைகளையே உட்கொள்ளும் நிலை உள்ளது.

எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்த நோயின் எல்லா அறிகுறிகளும் உடல் ரீதியாக இருப்பதால், பெற்றோர்களுக்கு இது மனநலப் பாதிப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவாக வாய்ப்பில்லைதான். ஆனால், சில வித்தியாசங்களை வைத்து இதன் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

#

இந்த அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகச் சில நாட்களுக்குள் மனதைக் காயப்படுத்திய சம்பவங்கள் ஏதேனும் பெரும்பாலும் நடந்திருக்கும்.

#

உடல் நோய் அறிகுறிகளுக்குள்ள எல்லாப் பரிசோதனைகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் இருக்காது.

#

சில வேளைகளில் அதிகக் கவனம் செலுத்தும்போது நோய் அறிகுறிகள் கூடும். ஆனால், அதற்காக அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக அர்த்தமல்ல.

#

இந்த நோய் அறிகுறிகள் மூலம், அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் இருந்திருக்கலாம். உதாரணமாக ஒருமுறை இதுபோன்ற வலிப்பு வந்தவுடன் சில நாட்கள் பள்ளி செல்வதிலிருந்து விதிவிலக்கு கிடைத்திருக்கும். பின்பு பள்ளி செல்ல விருப்பம் இல்லாத நாட்களில் இந்தத் தொந்தரவு திரும்ப ஏற்படலாம்.

# அறிவியல் ரீதியான அறிகுறிகளாக இல்லாமல் அவர்களுக்குத் தெரிந்த விதத்திலேயே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக உண்மையான வலிப்பு ஏற்படும்போது இருபுறமும் உள்ள கை, கால்கள் ஒரே நேரத்தில் வெட்டி வெட்டி இழுக்கும். ஆனால், இந்த ஹிஸ்டீரியாவில் ஏற்படும் வலிப்பில் கை கால்கள் வெவ்வேறு நேரத்தில் இழுத்து, சைக்கிள் ஓட்டுவதுபோலக்கூட இருக்கலாம்.

# இடைப்பட்ட நாட்களில் அவர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாததுபோலச் சாதாரணமாகவும் இருப்பார்கள்.

# முக்கியமாக அந்தந்த நோய் அறிகுறிகளுக்குரிய மாத்திரைகளுக்கு நோய் கட்டுப்படாது. வலிப்பு அல்லது மூர்ச்சைக்குரிய மாத்திரைகளை உட்கொண்டு வரும்போதே, மீண்டும் தீவிரப் பாதிப்புகள் ஏற்படலாம்.

என்ன சிகிச்சை?

ஹிஸ்டீரியாவில் ஏற்படும் உடல்நோய் அறிகுறிகள் மனநல சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மூலமாகக் குணப்படுத்தக்கூடியவையே. மனதைப் பாதித்த சம்பவங்களை வெளிக்கொண்டுவந்து நோயைக் குணப்படுத்த ஹிப்னாசிஸ், நார்கோ பரிசோதனைகள் உட்படப் பல உளவியல் சிகிச்சைகள் உள்ளன. ஒருவேளை மன அழுத்த நோயின் அறிகுறியாக இருக்குமானால், மாத்திரைகளுடன் மின் அதிர்வு சிகிச்சையும் தேவைப்படலாம். இவர்களைத் திட்டுவதாலோ வேண்டு மென்றே செய்கிறார்கள் என்று குறை கூறுவதாலோ, பிரச்சினை கூடுமே தவிரக் குறையாது. அதேநேரம் இந்த அறிகுறிகளின் காரணமாக அதிகப்படியான சலுகைகளும் கொடுக்கக்கூடாது. அப்பா, அம்மா இருவரின் கவனிப்பு மற்றும் அன்பு சமநிலையாகப் பகிர்ந்தளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.

(அடுத்த முறை: தலைகீழாகும் வாழ்க்கை)கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...