Friday, February 17, 2017

சட்டசபையில் நாளை ஓட்டெடுப்பு எப்படி?
சென்னை : தமிழக சட்டசபையில், 'எண்ணி கழித்தல்' என்ற முறையில், நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

நம்பிக்கை ஓட்டெடுப்பு முறை :

நம்பிக்கை ஓட்டெடுப்பு எவ்வாறு நடைபெறும் என, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை கூடியதும், முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, தன் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிவார். அதன் மீது, சட்டசபை கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு கேட்டால், வாய்ப்பு அளிக்கப்படும். பின், ஓட்டெடுப்பு துவங்கும்.
சபையில், ஆறு பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொரு பிளாக் வாரியாக, ஓட்டெடுப்பு நடக்கும். அந்த பிளாக்கில் உள்ள, எம்.எல்.ஏ.,க்களில், தீர்மானத்தை ஆதரிப்போரை எழுந்து நிற்கும்படி, சபாநாயகர் உத்தரவிடுவார். அவ்வாறு எழுந்து நிற்கும், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை கணக்கிடப்படும். பின் எதிர்ப்பு தெரிவிக்கும்; நடுநிலை வகிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை கணக்கிடப்படும். இவ்வாறு, ஆறு பிளாக்கிலும், ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
தற்போது, 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகர் தவிர, மீதமுள்ள, 232 எம்.எல்.ஏ.,க்களில், 117 எம்.எல்.ஏ.,க்கள் தீர்மானத்தை ஆதரித்தால், அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்படும். அந்த எண்ணிக்கைக்கு குறைந்தால், ஆட்சி கவிழும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025