Sunday, February 26, 2017


சிக்கனில் மருத்துவக் குணம் உண்டா? கடக்நாத் கோழிகள் ஓர் அலசல்! #SundayChicken





ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சாப்பிட்டால்தான் அந்த நாள் முழுமையடையும் சிலருக்கு... அப்படித்தான் ஒரு ஞாயிறு மதியம் உணவு நேரம் கடந்து நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 'கடக்நாத் சிக்கன் சாப்பிட்ருக்கீங்களா?' என்று நண்பர் கேட்டார். சிக்கன் 65 போல் ஏதோ ஒரு டிஷ் என்று நினைத்துக்கொண்டேன். "இல்லை" என்றேன். வாங்க சாப்பிடலாம் என்று வலுக்கட்டாயமாக தட்டின் முன் அமரவைத்தார். கன்னங்கறேல் என்ற மாமிசத் துண்டுகளைப் பார்த்துவிட்டு, "என்ன சார் ரொம்ப தீய விட்டுட்டீங்களா?" என்றேன். "இல்லைங்க இதுதான் கடக்நாத் சிக்கன்... இதுல ஏகப்பட்ட மெடிக்கல் பெனிஃபிட்ஸ் இருக்கு" என்றார்.
சாப்பிட்டுப் பார்த்தேன். ருசியாகத்தான் இருந்தது. அது என்ன கடக்நாத் சிக்கன்? மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா? வாங்க பார்க்கலாம்.

கடக்நாத் சிக்கன்

மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை என்பதால், இதை 'காளி மாசி' (காளியின் தங்கை) என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.

இந்தக் கோழியைச் சாப்பிடுவதால், இதன் மெலனின்தன்மை காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன என்றும், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், மைசூரில் உள்ள உணவு ஆராய்ச்சி மையம், இதில் உள்ள கொழுப்பு தரமானது. எல்லா நாட்டுக்கோழிகளையும் போலவே இதன் ஒயிட் மீட் ஆரோக்கியமானது. இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது எனக் குறிப்பிட்டு உள்ளது.
மத்தியப்பிரதேஷத்தின் மலைப்பகுதியில் உள்ள மக்கள் இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்று பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.




முட்டைகள்

கடக்நாத் கோழியின் முட்டைகளும் கறுப்பு நிறத்தில் உள்ளன. எல்லா நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சென்னையில் ஆரோல் ஃபார்ம்ஸ் என்ற கடக்நாத் சிக்கன் பண்ணையை நடத்திவரும் சார்லஸ் அவர்களிடம் பேசினோம். "இந்தக் கோழிகள் அதிக மருத்துவகுணம் வாய்ந்தவை. ஆண்மையைப் பெருக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது. எங்கள் பண்ணையில் முழுமையாக இயற்கையான முறையில் இந்தக் கோழிகளை வளர்த்துவருகிறோம். அதிகமான கறி வேண்டும் என்பதற்காக கோழிகளுக்கு செயற்கையான தீவனங்களோ, ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் ஊசிகளோ நாங்கள் போடுவது இல்லை. முழுக்க முழுக்க ஆரோக்கியமான, ஆர்கானிக் முறையில் இவற்றை நாங்கள் வளர்க்கிறோம்." என்கிறார்.

இந்தக் கோழிகளுக்கு நிஜமாகவே மருத்துவ குணங்கள் உண்டா? மற்ற கோழிகளைவிட கடக்நாத் கோழிகள் சிறந்தவையா? இதுகுறித்து சென்னை, கோழி இன ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஏ.வி.ஓம்பிராகாஷ் அவர்களிடம் கேட்டோம். "கடக்நாத் வகை சிக்கன்கள் மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழி வகையைச் சேர்ந்தவை. மெலனின் மிக அதிகமாக உள்ளதால், இதன் கறி, ரத்தம், முட்டை, சிறகு என அனைத்தும் கறுப்பு நிறத்தில் உள்ளன. இவற்றுக்கு அதிகமான மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பி மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். இவை எந்த அளவுக்கு மற்ற நாட்டுக்கோழிகளைவிட சிறப்பான மருத்துவக் குணங்கள் கொண்டவை என்பதற்கு போதுமான நிரூபிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லை. ஆனால், நாட்டுக்கோழி என்ற அளவில் இதன் ஒயிட் மீட் உடலுக்கு மிகவும் ஏற்ற ஒன்று. இதன் முட்டைகளையும் நாம் தாரளமாகப் பயன்படுத்தலாம். இதன் கறியின் நிறம் கறுப்பாக இருப்பதால், இதை வாங்குவதற்கு மக்களிடம் ஒரு தயக்கம் உள்ளது. ஆனால், இதுபோன்ற தயக்கங்கள் தேவை இல்லை. இந்தக் கோழிகள் உண்பதற்கு மிகவும் ஏற்றவை." என்கிறார்.

- இளங்கோ கிருஷ்ணன்

Dailyhunt




No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...