Thursday, November 29, 2018

மாநில செய்திகள்

கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திய சென்னை மாணவி தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்துகிறார்




கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திய சென்னை மாணவி, பெற்றோருடன் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்துகிறார்.

பதிவு: நவம்பர் 29, 2018 04:15 AM
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர். அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு குடும்பத்துடன் வந்து தங்கினார். இவரது மனைவி வனிதா, இவர்களுக்கு கிருபா, கவுசல்யா, கவுரி என 3 மகள்கள் உள்ளனர்.

இதில் கிருபா சிறு வயதில் இருந்தே டாக்டருக்கு படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இவர் பிளஸ்-2 தேர்வில் 980 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

பின்னர் புனேவில் ஒரு வருடம் படித்து அங்கிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்தார். அங்கு முதலாம் ஆண்டு படிக்க மட்டுமே ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.

ஆனால் மேற்கொண்டு கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கிருபா தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சென்னை வந்து விட்டார். தற்போது பழனிசாமி வீதிவீதியாக சென்று டீ விற்று வருகிறார். இந்த நிலையில் டாக்டர் படிப்பை பாதியில் விட்ட கிருபா, பழவந்தாங்கல் பகுதியில் தள்ளுவண்டியில் பெற்றோருடன் சேர்ந்து டிபன் கடை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து கிருபா நிருபர்களிடம் கூறுகையில், ‘டாக்டருக்கு படிக்க ஆசை இருந்தாலும் மேற்கொண்டு பணம் கட்ட முடியாததால் பெற்றோருடன் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்துகிறேன். மேற்கொண்டு படிக்க ஆசையாக இருக்கிறது. ஆனால் பணம் இல்லை. ஒரு நாள் என் ஆசை நிறைவேறும்’ என்று கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.12.2025