Tuesday, January 15, 2019


அனைவருக்கும் இனி அரிசி கார்டு: ரேஷனில் வருகிறது மாற்றம்

Added : ஜன 15, 2019 01:34 |

சென்னை, பொங்கல் பரிசு, 1,000 ரூபாய் வழங்குவதில் ஏற்பட்ட திடீர் குழப்பத்தால், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவு துறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. இவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம்.காகித கார்டு புழக்கத்தில் இருந்த போது, அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காதது என, நான்கு வகை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. அதில், அரிசி, காவலர் கார்டுகளுக்கு, அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த, மற்ற பொருட்கள் வழங்கப்பட்டன. 'என்' கார்டுக்கு, எந்த பொருட்களும் கிடையாது.

தமிழகத்தில், 2017 ஏப்ரல் முதல், 'ஆதார்' விபரத்தின் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து, முன்னுரிமை, முன்னுரிமை அல்லாதது, முன்னுரிமை அல்லாத சர்க்கரை, எந்த பொருளும் இல்லாதது என்ற வகைகளில், கார்டுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஏற்கனவே இருந்த அரிசி, சர்க்கரை கார்டுதாரர்களின் அடிப்படையில், ரேஷனில், பொருட்கள் வழங்கப்படுகின்றன.பொங்கலை முன்னிட்டு, 2.02 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு துண்டுடன், 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அவை, வசதியானோருக்கு வழங்க, எதிர்ப்பு எழுந்தது.நீதிமன்ற உத்தரவை அடுத்து, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் வழங்குவது நிறுத்தப்பட்டது. 

பின், நீதிமன்ற அனுமதியுடன், சர்க்கரை கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.இந்த பிரச்னை, இனி ஏற்படாமல் இருக்க, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவு துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் மட்டும், மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால், வசதி படைத்தோர், அரிசி கார்டு வைத்துள்ளனர். வசதியாக இருந்த போது, சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டு வாங்கியோர், தற்போது, ஏழ்மையில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு, ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை.பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசின் இலவச திட்டங்கள், அரிசி கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் கார்டு வழங்குவதால், ரேஷன் முறைகேடு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.ஏற்கனவே, உணவு மானியத்திற்கு, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டுகளை, வகை மாற்றம் செய்வதால் கூடுதலாக செலவு ஏற்பட வாய்ப்பில்லை

.இதனால், சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டுகளையும், 2017ல், அரிசி கார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கு, சில அரசு உயரதிகாரிகள் ஒப்புதல் தரவில்லை. தற்போது, பொங்கல் பரிசு விவகாரத்தில் ஏற்பட்டது போல், மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க, 10.50 லட்சம் சர்க்கரை மற்றும், 42 ஆயிரம் எந்த பொருளும் இல்லா கார்டுகள், விரைவில், அரிசி கார்டுகளாக மாற்றப்பட உள்ளன. இதற்கு, அரசிடம் அனுமதி பெற்றதும், அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் செலவு ஏற்படுமாகாகித கார்டு இருந்தபோது, ஒருவரே பல முகவரிகளில், மூன்று - நான்கு ரேஷன் கார்டுகள் வைத்திருந்தார்.இதனால், 2017 துவக்கத்தில், 2.04 கோடி ரேஷன் கார்டுகளும், அவற்றில், ஏழு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களும் இருந்தனர். அதே ஆண்டு ஏப்ரல் முதல், ஆதார் விபரம் அடிப்படையில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படுகிறது.இதனால், ஒரே நபர், வேறு முகவரியில், கூடுதல் ரேஷன் கார்டு வாங்குவது தடுக்கப்பட்டது. ஒரு கார்டில் உறுப்பினராக இருப்பவர், வேறு கார்டில் உறுப்பினராக சேரவும் முடியாது. இதனால் தற்போது, 2.02 கோடி ரேஷன் கார்டுகளில், 6.55 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புவது முதல், விற்பனை விபரம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவாகிறது. 

விரைவில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.இதனால், வசதி படைத்தோர், வேறு நபர்களிடம், கார்டை கொடுத்து, பொருட்களை வாங்கும்படி கூற முடியாது.மேலும், ரேஷன் பொருட்கள் வாங்க விரும்பாதோர், அதை, அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதியும் துவக்கப்பட்டு உள்ளது. இது போன்ற காரணங்களால், உணவு மானியத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மிச்சமாகும்.அந்த நிதியில், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகளுக்கு, அரிசி கார்டாக மாற்றி, பொருட்கள் வழங்குவதில், கூடுதல் செலவு ஏற்படாது. வகை மாற்றம் செய்யக்கூடிய கார்டுதாரர்களில், அனைவரும் பொருட்களை வாங்க வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...