Saturday, January 5, 2019

மாவட்ட செய்திகள்

கன்னங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்



கன்னங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

பதிவு: ஜனவரி 05, 2019 03:30 AM மாற்றம்: ஜனவரி 05, 2019 04:34 AM
கன்னங்குறிச்சி,

தமிழர் பாரம்பரிய விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. எனினும் சேலம் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதற்காக சீறிப்பாயும் காளைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் காளைகளை அடக்க காளையர்கள் மறுபுறம் தயாராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளை என்றாலே, அதனை சிறப்பாக கவனிக்க வேண்டும். அதற்கு தினமும் தீவனம் அளித்து, பயிற்சி அளித்து போட்டிக்கு தயார்படுத்த பெருந்தொகையை செலவிட வேண்டும். மாதந்தோறும் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை செலவு பிடிக்கும் என்கிறார்கள்.

சேலத்தை அடுத்த கன்னங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கன்னங்குறிச்சி 1-வது வார்டு பகுதியில் வசித்து வரும் கார்த்தி என்பவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். தைப்பொங்கலுக்கு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டிற்காக தான் வளர்த்து வரும் மருது என்ற 4 வயதான காளையை தயார்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டிக்காக நான் வளர்க்கும் காளையை தயார்படுத்தி வருகிறேன். தினமும் மண்ணை குத்தவிடுவது, ஓடவிடுவது, நீச்சல் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் இருப்பதற்கும் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை விலக்கப்பட்ட பின்பு வழக்கத்தை விட கூடுதலாக காளைகளை போட்டியில் பங்கேற்க வைக்க பலருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் போட்டியை சமாளிக்க தீவிர பயிற்சி அளிக்க வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதே போன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. பொதுமக்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை கண்டு ரசிக்கிறார்கள். ஜல்லிக்கட்டு களம் காண இன்னும் சில நாட்கள் உள்ளதால், பயிற்சியை தீவிரப்படுத்துவதாக காளைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...