Tuesday, February 5, 2019

பத்மஸ்ரீ விருதுபெற்ற டீக்கடைக்காரர்



‘‘54 ஆண்டுகளாக, நான் சாலையோர டீ விற்பனையாளராக இருந்தேன். இன்று பத்மஸ்ரீ டீ விற்பனையாளராக அடையாளப்படுத்தப்படுகிறேன்’’ என்று பெருமிதம் கொள்கிறார், பிரகாஷ் ராவ்.

பதிவு: பிப்ரவரி 03, 2019 16:26 PM

‘‘54 ஆண்டுகளாக, நான் சாலையோர டீ விற்பனையாளராக இருந்தேன். இன்று பத்மஸ்ரீ டீ விற்பனையாளராக அடையாளப்படுத்தப்படுகிறேன்’’ என்று பெருமிதம் கொள்கிறார், பிரகாஷ் ராவ். 61 வயதாகும் இவர் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர். சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுள் பிரகாஷ் ராவும் ஒருவர். தான் விற்பனை செய்யும் ஒவ்வொரு கப் டீயிலும் பாதி தொகையை குடிசை பகுதியில் வசிக்கும் குழந்தை களின் கல்விக்காக செலவிட்டுக்கொண்டிருக் கிறார். இதற்காக பள்ளிக்கூடம் ஒன்றையும் தொடங்கி நிர்வகித்து வருகிறார். இவரது பள்ளியில் படிக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி கல்வி சார்ந்த உபகரணங்கள், சீருடைகள், காலணிகள், காலை வேளையில் பால், மதிய உணவு போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

2000-ம் ஆண்டு ‘ஆஷா ஓ ஆஷ்வசனா’ என்ற பெயரில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் பள்ளியை தொடங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் நான்கு பிள்ளைகள்தான் சேர்ந்திருக்கிறார்கள். இன்று 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பிரகாஷ் ராவ் 10-ம் வகுப்பு வரை படித்தவர். படிக்கும்போது 6 வயதிலேயே தந்தை நடத்திவந்த டீ கடையில் அவருக்கு உதவிகரமாக இருந்திருக்கிறார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் டீக்கடையை நிர்வகிக்க தொடங்கி இருக்கிறார். டீக்கடை வருமானத்தில் பாதியை கல்விக்காக செலவிடுவதற்கு அவர் படிக்க முடியாமல் போனதும், குடிசை பகுதியில் வசிக்கும் குழந்தைகள் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு பணி அமர்த்தப்படுவதும் காரணமாக இருந்திருக்கிறது. அதுபற்றி பிரகாஷ் ராவ் சொல்கிறார்.

‘‘நான் குடிசைப்பகுதியில் பிறந்து வளர்ந்தவன். அங்கு வசிக்கும் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை வருமானம் ஈட்டித்தருபவர்களாகவே பார்க்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் அவர்களை சேர்ப்பதற்கு பதிலாக கூலி தொழிலாளர்களாகவும், வீட்டு வேலைக்காரர்களாகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மதுபானம் வாங்கி குடிப்பதற்கே பெரும்பாலான தந்தைகள் செலவிடுகிறார்கள்.

மது போதையில் வீட்டில் தகராறு செய்வதும் வாடிக்கையாக மாறிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது என் மனதை ஆழமாக பாதித்தது. நான் படிக்கும்போது சிறந்த மாணவனாக இருந்தேன். மேலும் நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான கல்வி வாய்ப்புகள் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதுபோன்ற நிலைமை குடிசை பகுதியில் வசிக்கும் குழந்தை களுக்கும் தொடர்வதை நான் விரும்பவில்லை. ஒவ்வொரு கப் டீ விற்பதிலும் கிடைக்கும் பணத்தை குடிசை பகுதி குழந்தைகளின் சுகாதாரத்திற்கும், கல்விக்கும் செலவிட முடிவு செய்தேன். அதுபற்றி அங்குள்ள மக்களிடம் பேசியபோது, ‘என் மகள் வீட்டு வேலைக்கு சென்று மாதம் 700 ரூபாய் சம்பாதிக்கிறாள். அவளை படிக்க வைத்தால் படிப்பு எங்களுக்கு சோறு போடுமா?’ என்று கேட்டார்கள். இன்று அதே பெற்றோர் என் பள்ளிக்கூடத்தில் படித்த தங்கள் மகனும், மகளும் கல்லூரிக்கு படிக்க செல்வதை பார்த்து பெருமைப்படுகிறார்கள்’’ என்கிறார்.

பிரகாஷ் ராவ் படிக்க வைக்கும் ஏழைக்குழந்தைகளை பிரதமர் நரேந்திரமோடி நேரில் சந்தித்திருக்கிறார், அவரை பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பேசி இருக்கிறார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...