Sunday, February 17, 2019


மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும்...

By வெ. இன்சுவை | Published on : 15th February 2019 01:23 AM


நம்மை வளர்த்த தாய், தந்தையரே நமக்குப் பாரமா? பணம் இருப்பவன் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான், இல்லாதவன் அடித்துத் துவைக்கிறான். ஆக இருவரும் ஒன்றுதான். முன்னதில் மனம் வலிக்கும், பின்னதில் உடல் வலிக்கும். 

குழந்தைகளே உலகம் என்று வாழ்ந்த தாய்-தந்தையரை முதுமையில் சில பிள்ளைகள் கவனிப்பது இல்லை. ஆனால், பிள்ளைகள் மீது பாசம் காட்டாமல் ஒதுக்கிய பெற்றோரைப் பின்னாளில் அந்தப் பிள்ளைகள் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம். 

ஓய்வு பெறும் வயது 58 அல்லது 60 என்று அரசு நிர்ணயித்து பணியில் இருந்து விடுவித்து விடுகிறது. அதுவரை வேலை, குடும்பம் என்று ஓடி, ஓடிக் களைத்துப் போனவர்கள், இப்போதுதான் தன்னைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறார்கள். மேலும், குழந்தைகள், உறவுகள், குடும்பம் என தங்களைச் சுருக்கிக் கொண்டவர்கள் ஓய்வுக்குப் பின்தான் வெளி உலகைப் பார்க்கிறார்கள்; வேலையே சுவாசம் என்று இருந்தவர்கள், வேலைக்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்கிறார்கள்; மேலதிகாரிக்குப் பயந்து பயந்து வாழ்ந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்; கடினமான பணியில் இருந்தவர்கள் எந்த வம்பு, வழக்கிலும் சிக்காமல் ஓய்வு பெற்றதை எண்ணி மகிழ்கிறார்கள்;

நேர்மையாக இருந்து உண்மையாக உழைத்தவர்கள் மன நிறைவு பெறுகிறார்கள்; தன் கீழ் வேலை செய்தவர்களை இரக்கம் இன்றி நடத்தி அதிகாரம் செய்தவர்கள், கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டிருக்கலாமோ என்று லேசாக வருத்தப்படுகிறார்கள்.
இப்படி கலந்து கட்டிய உணர்வுகளுடன் ஓய்வு பெற்ற பின் கடந்த காலத்தை அசை போட்டபடியே காலத்தைத் தள்ள பலரும் தயாராக இல்லை. குடும்பத்தின் பொருளாதார நிலையை இன்னும் கொஞ்சம் தூக்கிப் பிடிக்க சிலர் வேறு ஏதாவது வேலைக்குப் போகிறார்கள். 

இன்னும் சிலருக்கு பேரக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டு விடும். குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்குப் போய்விட, தாத்தாவும், பாட்டியும் அல்லாடுவார்கள். பள்ளி நாள்களில் இவர்கள் விருப்பப்பட்டு எங்கும் போக முடியாது. மறுபடியும் செக்கு மாடு போல ஒரு வாழ்க்கை. பெண்களுக்கு மீண்டும் அடுப்படி வாசம்தான்.
ஒருசிலருக்கு எந்தவித குடும்ப பாரமும், பொறுப்பும் இருக்காது. பிடித்த இசை, நடைப்பயிற்சி, பிடித்த உணவு, நிம்மதியான தூக்கம், பரபரப்பில்லாத அமைதியான வாழ்க்கை, நண்பர்கள், உறவினர்கள், கோயில், விருந்து என வாழ்க்கையை ரசனையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். கையில் காசும், மனதில் நிம்மதியும், உடலில் தெம்பும் இருந்தால் அதுதானே சொர்க்கம்? வறுமை, நோய், பகை - இந்த மூன்றும் இல்லாமல் ஒரு புதிய வாழ்க்கையை ஓய்வுக்குப் பின் தொடங்குவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும், புரிதலும் அதிகமாகும்.

இப்படி இயந்திரமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்பவர்கள் ஒரு சிலரே; மகனோ, மகளோ வெளிநாட்டில் இருந்தால் இவர்களும் சில காலம் அங்கு போய் அவர்களுடன் தங்கி விட்டு மகிழ்வுடன் ஊர் திரும்புகிறார்கள்.

அடுத்து, 70 வயது ஆன முதியவர்களுக்கு உடல் தளர்ந்து போய் விடுகிறது. கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பிரச்னை இல்லை. பெற்றோர்களை உயர்வாக மதித்து, அன்புடன் நடத்தும் மகள், மருமகள் வாய்க்கப் பெறுவதுதான் சிறந்த கொடுப்பினை. கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இருந்தால் அதுவே அவர்களுக்குப் போதும். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக, அனுசரணையாக இருக்கிறார்கள். வேறு பேச்சுத் துணை தேட வேண்டிய அவசியம் இல்லை. மனைவி தவறிப் போய் கணவன் மட்டும் இருந்தால் தவித்துப் போய் விடுகிறார்கள். சட்டென ஒரு வெறுமை. தன் சுகதுக்கங்கள் அனைத்திலும் பங்கேற்று, மனக் காயங்களுக்கு மருந்தாக இருந்த அன்பு மனைவியைப் பிரிந்து வாழும் வாழ்க்கை கசந்து போகிறது. இன்னொரு கோப்பை தேநீர் வேண்டும் என மருமகளிடம் கேட்கத் தயக்கம்; பசித்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய பரிதாபம்; உணவு பிடிக்கவில்லை என்று சொல்ல பயம். தன் மனதைப் படித்து வைத்திருந்த அந்த ஒரு ஜீவனுடன் தன் வாழ்வும் முடிந்து விட்டதை அந்த முதியவர் உணரும் காலம் அது. 

இதுவே பெரியவர் இறந்து போய், பாட்டி மட்டும் உயிருடன் இருந்தால் அவர் எப்படியாவது தன் பொழுதை ஓட்டி விடுவார். வீட்டு வேலை,கோயிலுக்குச் செல்வது, பூஜை என்று நேரத்தைக் கழித்து விடுவார். கொஞ்சம் நம்பகமான ஆள் கிடைத்தால் தன் மனத்தாங்கலையும், குறைகளையும் கொட்டி விடுவார். பெண்களைப் போல ஆண்கள் யாரிடமும் குடும்ப விஷயத்தைப் பேச மாட்டார்கள். சக வயதை ஒத்தவர்களிடம் நாட்டு நடப்பைப் பற்றி அலசி ஆராய்வார்களேயொழிய வேறு எதைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். எனவே, ஆத்மார்த்தமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மனைவி இல்லாததுதான் பெரிய மனக் குறையாக இருக்கிறது. ஆகவே, அவர்களை அப்படியே ஒதுக்கி விடாமல் வீட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களைத் தனிமை வாட்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

70 வயதுக்கு மேல் உள்ள முதியோர் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுடன் சில காலம், பின் தன் வீட்டில் தனியாக சில காலம் என்று காலம் தள்ளுகின்றனர். இப்படி ஆறு மாதங்கள் வெளி நாட்டில் இருந்து திரும்பிய ஒருவர். தன் வீட்டைத் திறந்த போது பெரும் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் அனைத்து அறைகளிலும் வெள்ள நீர் புகுந்து அனைத்துப் பொருள்களையும் பாழாக்கி இருந்தது. அதைச் சுத்தம் செய்வதற்குள் அவருக்கு விழி பிதுங்கி விட்டது. தான் ஊரில் இல்லாத போது தன் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி அவர் யாரிடமும் சொல்லவில்லை.
 
அக்கம் பக்கத்தாருடன் அதிக ஒட்டுதல் கிடையாது.
இன்றைக்குத் தனியாக இருக்கும் முதியவர்களால் ஒருவரையும் நம்ப முடியவில்லை. எனவே, யாரிடமும் பழகாமல் உள்ளனர். சக மனிதர்களுக்கும், கொசுவுக்கும் ஒருசேர பயந்து ஜன்னல் கதவுகளை மூடியே வைத்திருக்கிறார்கள். ஓர் அவசரத் தேவைக்கு உதவ அவர்களுக்கு யாரும் இல்லை. ஏதாவது உதவி தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளா வந்து உதவ முடியும்? தனியாக இருப்பவர்களுக்கு அக்கம்பக்கத்தினர்தான் உறவுகள். அவர்களை நம்பாவிட்டால் எப்படி? அதே போல இளைஞர்களும் தங்கள் பகுதியில் தனியாக இருக்கும் முதியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.இப்போது எல்லாம் இ-சேவைகளாகவே உள்ளதால் முதியவர்கள் தவித்துப் போகிறார்கள். படித்த இளைஞர்கள் அவர்களுக்கு இதுபோன்ற வேலைகளில் ஒத்தாசையாக இருக்கலாம். சும்மா இருக்கும்போது பெரியவர்களிடம் உட்கார்ந்து எதையாவது பேசிக் கொண்டிருக்கலாம். தனிமையில் இருப்பவர்களுக்கு இது பெரும் ஆறுதலாக இருக்கும். 

தற்போது கூட்டுக் குடும்பங்களில்கூட வயதானவர்களை மதித்து அவர்களிடம் உட்கார்ந்து யாரும் பேசுவது இல்லை. அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். முதியவர்களின் மன வருத்தம் என்னவென்றால், வீட்டில் யாரும் தங்களை மதிப்பது இல்லை என்பதே.
எனவே, அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. நம் நாட்டின் கூட்டுக் குடும்ப கலாசாரத்தையும், பண்பாட்டையும் நொறுக்கி விட்டதன் அடையாளச் சின்னங்கள் முதியோர் இல்லங்கள்; ஆதரவற்ற முதியவர்களுக்கான இல்லங்களாக மட்டும் அவை இருக்கட்டும்; பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் அடைக்கலம் அல்ல அவை.

வசதியுள்ள, படித்த முதியோர் தங்களது தனிமையைப் பொருட்படுத்துவதில்லை. வாசிப்பை நேசிக்கும் அவர்கள் தங்கள் நேரத்தை மிக அற்புதமாகவும், பயனுள்ளதாகவும் செலவிடுகிறார்கள். தனிமையை நேசிக்கவும் கூடச் செய்கிறார்கள். ஆகவே, இவர்கள் யாரையும் சார்ந்து இருப்பதில்லை. நடுத்தரக் குடும்பத்து முதியவர்கள் மட்டுமே தவித்துப் போகிறார்கள். உடலுக்கு முடியாமல் படுத்துவிடக் கூடாது;
யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது; படுக்கையில் விழுந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் முழு நேரப் பிரார்த்தனையாக இருக்கிறது. ஏழையோ, பணக்காரரோ எல்லோருக்கும் மூப்பு வரும். முதுமை வரமாகவோ, சாபமாகவோ ஆவது, அவரவர் குடும்பப் பிண்ணனி மற்றும் பொருளாதார நிலைமையைச் சார்ந்தது. நோய் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களிடம் தன்னம்பிக்கை அதிகம். அவர்களால் தனித்து வாழ முடியும். 

ஏழை முதியவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. அத்தகைய முதியோருக்கு சாப்பாடுதான் பிரச்னை; பொழுது நன்றாகப் போய்விடும். மேல்தட்டு முதியோர்களுக்குக்கூட கவலை இல்லை. பணம் பத்தும் செய்யும்.ஆனால், கௌரவம் பார்க்கும் நடுத்தர குடும்ப முதியோர்தான், ஒரு சின்ன வட்டத்துக்குள் தங்களை முடக்கிக் கொள்கிறார்கள். யாரிடமும் வலிந்து போய் உதவி கேட்கத் தயக்கம். மற்றவர்களுக்கு தான் பாரமோ என்ற சந்தேகம்.

ஆக, இவர்களுக்குத்தான் சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம் உதவ வேண்டும். வயதான பாட்டியிடமிருந்து இக்காலப் பெண்கள் சமையல், பூஜை நியதிகள், கை வைத்தியம் போன்ற பலவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். அவர்களின் அனுபவமும், அறிவும் இளைஞர்களை நன்கு செம்மைப்படுத்தும். மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்றார் ஒளவையார்; அது நூற்றுக்கு நூறு நிஜம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...