Sunday, February 17, 2019


போர்க்களமாகும் சாலைகள்!


By முனைவர் அருணன் கபிலன் | Published on : 15th February 2019 01:22 AM |

இருபுறம் அல்ல. முப்புறமும்கூட அல்ல. நாற்புறமும் அணிவகுத்து நிற்கிறார்கள். எல்லாருடைய கண்களும் சமிக்ஞை ஒளியையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லாரும் தலைக்கவசங்கள் அணிந்திருக்கிறார்கள். சிலர் கைகளுக்கும்கூடக் கவசம் தரித்திருக்கிறார்கள். எந்திரக் குதிரைகளைப் போல இரு சக்கர வாகனங்களும் எந்திரத் தேர்களைப் போல நான்கு சக்கர வாகனங்களும் எந்திர யானைகளைப் போலப் பேருந்துகளும் கனரக வாகனங்களும் உறுமிக் கொள்கின்றன. இடையில் ஊர்ந்து திரிகிற காலாட்படை வீரர்களைப் போன்ற பாதசாரிகளும் தனக்கான சமிக்ஞை ஒளி கண்டவுடன் பாயத் தயாராக இருக்கிறார்கள். எங்கும் ஒரே இரைச்சலும் கூச்சலும். 

இது பழங்காலத்துப் போர்க்களமோ என்கிற ஐயம் ஒரு கணம் தோன்றி மறைகிறது. இல்லையில்லை. இது மாநகரத்தின் பெருஞ்சாலை என்று நிதர்சனம் கூறுகிறது. ஆனால் என்ன வேற்றுமையில் ஒற்றுமை. போர்க்களத்தில் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ள வேண்டும் என்பது விதி. சாலையில் ஒருவரோடொருவர் மோதி விடக் கூடாது என்பதுதான் விதி.
ஆனால், தலைவிதி இருக்கிறதே போர்க்களத்தில் கூட மோதிப் பிழைத்து விடலாம் போலிருக்கிறது. சாலையில் மோதிக்கொள்ளாமல் பிழைத்துப் போவது கடினம் போலத் தோன்றுகிறது. போர்க்களத்திலாவது எதிரே இருக்கிற ஒருவர் மீதுதான் நம் கவனத்தைச் செலுத்திச் செயல்பட வேண்டும். ஆனால், இன்றைய சாலைகளில் வாகனங்களில் பயணிக்க பிரமனைப் போல் நான்கு தலை கொண்டிருந்து 360 டிகிரி கோணத்தில் அவை சுழன்று கண்காணித்தாலும் மோதிக் கொள்வதைத் தடுக்க முடியாது போலிருக்கிறது. பார்த்தசாரதிகளே பயங்கொள்ளும் பல படுபயங்கரமான சாலைகளில் பாதசாரதிகளின் பாடு சொல்லி முடியாது.

சுமார் 33 இலட்சம் கி.மீ. நீளத்திற்கு நீண்டு கிடந்து உலக அளவில் இரண்டாமிடத்தில் இந்தியச் சாலைகள் விளங்குகின்றன. நாட்டின் 65 சதவீத சரக்குப் போக்குவரத்தும் 80 சதவீத மக்கள் போக்குவரத்தும் சாலை வழியாகத்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதற்கு இணையாகச் சாலை விபத்துகளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே அதிகமான சாலை விபத்துகள் நேரிடுகின்றன. 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 14,504 விபத்துகளில் 15,563 பேர் உயிரிழந்து விட்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அது மட்டுமின்றி கடந்த 2002 2012 ஆகிய பத்தாண்டுகளில் இந்திய அளவில் அதிகமான சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள மாநிலமாகவும் தமிழகமே விளங்குகிறது.
ஆனால், 2007-இல் 82 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, 2012-இல் 1.6 கோடியாக உயர்ந்துள்ளது வியப்பினை ஏற்படுத்தவில்லை. இதுவே ஐந்தாண்டுகளுக்கு முன்பான கணக்குத்தானே. நடப்பாண்டின் புள்ளிவிவரங்கள் நமக்கு அச்சத்தையே ஏற்படுத்தலாம்.

ஒரு வீட்டுக்கு இருசக்கர வாகனம் ஒன்றே ஒன்று மட்டும் இருந்த காலங்கள் கடந்து போய், வளரும் நாகரிகச் சூழலில் மகிழுந்துகளே இரண்டு மூன்றாகி, இருசக்கர வாகனங்கள் ஆளுக்கொன்றாகி வீட்டின் முன்னே அணிவகுத்து நிற்கின்றன. இந்த வாகனப் பெருக்கத்துக்கு இணையாக என்னதான் சாலைகளை மேம்படுத்தினாலும் இடநெருக்கடி என்ற ஒன்று இருக்கிறதே.
நகரங்கள் பெருத்து வழிந்தது போதாதென்று வாகன நாகரிகச் சூழல் கிராமங்களையும் ஆட்கொண்டு விட்ட பிறகு கைகளை வீசிக்கொண்டு காலாற நடந்து போக இடமே இல்லை என்பது போலாகி விட்டது.

சாலைகளை விடவும் அதிகமான மக்கள் தொகைப் பெருக்கம் முண்டியடித்துக் கொள்வதைத் திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் குடமுழுக்குகளிலும் பார்த்த காலம்போய் இப்போது தினம்தினம் அலுவலக நேரங்களில் ஒவ்வொரு சாலை முக்கியப் பகுதிகளிலும் காண முடிகிறது.
துர்நாற்றம், புகைக் காற்று, குண்டும் குழியுமான சாலைப் பள்ளங்கள், அலறும் ஒலிப்பான்கள் என எல்லாம் சூழ்ந்து கொள்ள சாலையைப் போர்க்களமாகத்தான் காட்சிப்படுத்துகின்றன. ஆங்காங்கே கண்காணித்துக் கொண்டிருக்கிற சிசிடிவி கேமராக்கள் படம்பிடித்துக் காட்டுகிற விபத்துகளின் கோரங்கள் நம்மைக் குலைபதற வைக்கின்றன.
முன்பெல்லாம் வாகனத்தை முறையாக ஓட்டக் கற்றுக் கொண்ட பின்னால்தான் அதைச் சொந்தமாக வாங்கத் துணிவார்கள். ஆனால், இப்போது நிலை வேறு; வாகனத்தை வாங்கிய பின்னரே அதைக் கற்றுக் கொள்ளத் தயாராகிறார்கள். அதுவும் இத்தனை அபாயகரமான சாலையில் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர். இதற்கிடையில் துள்ளுகிற ரத்தம் கொண்ட இளவட்டங்கள் தங்கள் வேகத்தைக் காட்டச் சாலை பந்தயக் களமாகவும் மாறிப் போகிறது.

நன்றாக வாகனம் ஓட்டுபவர்கள் கூட அடுத்தவர்மீது இடித்துவிடாமல் கவனித்து ஓட்டிய காலம்போய் நம்மீது வந்து யாரும் இடித்து விடக் கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். முறையாகச் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்றால் மனுநீதிச் சோழனின் வழியைத்தான் பின்பற்றித் தண்டிக்க வேண்டியிருக்கும். சாலை விதியைச் சரியாகத் தன் மகன் மூலம் நாட்டுக்கே கற்பித்தவன் அவன்தான்.
ஒட்டுமொத்தமாகச் சாலை என்பது உயிர்ப்புடைய சமூகத்தின் அடையாளம். அதை முறையான விதிகளோடு பயன்படுத்தினால் நன்மை பெறலாம். விதிமுறைகளை மீறினால் அதே சாலைகள் போர்க்களமாகத்தான் காட்சியளிக்கக் கூடும்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...