Tuesday, February 5, 2019

போதும் என்ற மனமே...

By எஸ்.ஏ. முத்துபாரதி | Published on : 05th February 2019 02:07 AM

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழி படித்திருப்போம். இது இந்தக் காலத்துக்கும் பொருந்துமா என நினைக்கலாம். ஆனால், இப்படி அனைவரும் நினைத்தால் முன்னேற்றமே இருக்காது என்றும் சிலர் வாதிடுவார்கள்.

போதும் என்ற மனம் என்பது வளர்ச்சிக்கான தடை இல்லை. அநியாயமாகச் சம்பாதிப்பவர்களுக்குத்தான் இந்தப் பழமொழி. காரணம், தவறு செய்பவர்களை ஒருபோதும் இயற்கை அப்படியே விட்டுவிடாது. நாம் செய்யும் எதற்கும் விளைவு என்பது வந்தே தீரும். நல்லது செய்தால் நல்ல விளைவும், தீயவை செய்தால் தீய விளைவும் வருவது நிச்சயம். இதிலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில விதி
விலக்குகள் இருக்கலாம்.

எனவே, நமக்கான உழைப்புக்கு ஊதியம் என ஒன்று கொடுக்கப்படும்போதுஅதை மீறி முறையற்ற வழியில் சம்பாதிப்பது என்பது பிச்சை எடுப்பதைவிடக் கீழான செயலாகும். கூடுதலான நேரம் வேலை செய்து அதற்கான ஊதியம் பெறுவது என்பது ஏற்புடையதுதான்.
அதற்காக சில சலுகைகள் பெறுவதையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இயல்பாகச் செய்ய வேண்டிய வேலைக்கு கையூட்டு பெறுவதை எப்படி ஏற்க இயலும்? அவரவர் செயலை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், எது நியாயமோ, எது முறையோ, எது கடமையோஅதைச் செய்வதே சிறந்தது.

முறையான அரசுப் பணி மற்றும் நிரந்தரச் சம்பளம் கிடைக்கும் நிலையில், கடமையை சரியாகச் செய்யாமல் இருப்பது தவறு. அத்துடன் சமுதாயத்தின் நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர்? குறைந்த ஊதியத்தில் கடினமான பணிகளைச் செய்வோர் எத்தனை பேர்? கொத்தடிமைகளாக வேலை செய்வோர் எத்தனை பேர்? இப்படி எவ்வித கவலையும் இல்லாமல், அரசு வேலைக்காக பல வழிகளில் முயற்சி செய்து பெற்று, அதை சரியாகச் செய்யாமல் மாதந்தோறும் சம்பளம் மட்டும் பெறுவோரை என்னவென்று சொல்வது?
இங்கே குறிப்பிடுவது அரசு ஊழியர்களை மட்டுமல்ல; தனியார் ஊழியர்களும் தங்களால் வேறு எந்த மாதிரியான வழிகளில் கூடுதலாகச் சம்பாதிக்க முடியும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.
குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் அந்த நிறுவனத்துக்குத் தேவையான "ஸ்டேஷனரி' போன்ற பொருள்கள் அல்லது வேறு அத்தியாவசியமான மாதம் ஒரு முறை வாங்கவேண்டிய பொருள்களுக்கு விநியோகம் செய்பவரிடம் தனியாக "கமிஷன்' வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இப்படி எத்தனையோ துறைகளைச் சொல்லிக் கொண்டேபோகலாம். கல்வித் துறை ஒன்றுதான் இதற்கு விதிவிலக்காக இருந்தது. இருப்பினும், அங்கே வேறு விதமான நடவடிக்கை மூலம் அதனுடைய நேர்மையும் கேள்விக்குறியாகிவிட்டது. தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் விற்கப்
படுவதும், விடைத்தாள் திருத்தம் செய்வதில் குளறுபடிகள் நடப்பதையும் தொடர்ந்து கேள்விப்படுகிறோம்.

இவை அனைத்துக்கும் மேலாக உயர்கல்வித் துறையிலும் முறைகேடுகள் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனால், பல்கலைக்கழகங்கள் மீது இருந்த மதிப்பு போய்விட்டது.

குறிப்பாக, உயர் கல்வியான முனைவர் பட்டத்துக்கான வழிமுறைகளைக் கூற வேண்டியதில்லை; அதன் நிலை மிகவும் விபரீதமானது. இனிமேல் முனைவர் பட்டம் பெறுவோர் அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், உண்மையான கல்வியாளர்கள் மதிப்பிழந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்துக் கவலைப்பட யாருமில்லை. அவரவர் பட்டம், பதவி, சம்பளம், சொகுசான வாழ்க்கை என இருந்து விடுவதால், குற்றம் செய்பவரும் பலனடைபவரும் பரஸ்பரம் வெளியே சொல்வதில்லை. இதனால், பலவிதமான குற்றங்கள் வெளிவருவதில்லை. பிறகு எப்படி முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை வழி நடத்துவது? நாம் மட்டும் சம்பாதித்தால் போதும் என்றும், அதற்கு எந்தவிதமான குறுக்கு வழியைப் பயன்படுத்தினாலும் தவறில்லை என்ற மனோபாவமும் அதிகரித்துவிட்டது. ஒரு துளிக்கூட சஞ்சலப்படாமல் லஞ்சம் கேட்பவர்களை, முறையற்ற வழியில் செல்பவர்களைக் கண்டால் நமக்கு ஏற்படும் கோபம் விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடிகிறது.

காரணம், நாம் குறிப்பிட்ட நபரைப் பற்றி புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் அதற்கு என்று ஒரு தொகை பெற்றுக்கொண்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொள்ளும் உயரதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 
 
வாழ்வதற்குத் தகுதியான நாடுகளில் (சுற்றுச்சூழல், ஊழல் போன்ற காரணிகளால்) மிகவும் பின்தங்கியுள்ள நாம், லஞ்சம், ஊழல் பெருகியிருக்கும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறோம்.
பொருள் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வும், வாழ்க்கை குறித்த புரிதலும் இருந்தால்தான் பலருக்கும் இந்தப் பொருள் சேர்க்கும் போட்டியின் உண்மை நிலை புரியும். எவ்வளவு சேர்த்தாலும் ஒரு ரூபாய்கூட நம்மால் இறந்தவுடன் எங்கும் கொண்டு செல்ல முடியாது எனத் தெரிந்தும், கோடி கோடியாய் சம்பாதிக்க ஆசைப்பட்டு அதற்கான தேடுதல் வேட்டையில் நாம் சுயத்தை, நற்பெயரை, நிம்மதியை இழந்து, நியாய-தர்மங்களை மறந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நேர்மை, லஞ்சமற்ற ஊழலற்ற நிர்வாகம் எனப் பேசுபவர்களை பலரும் மதிப்பதில்லை என்பதுடன் நம்பிக்கையும் கொள்வதில்லை. காரணம், அந்த அளவுக்கு நேர்மையின்மையும், லஞ்சமும் இந்தச் சமுதாயத்தில் புரையோடிப்போய் உள்ளன. நேர்மையான வழியில் இந்தச் சமுதாயம் செல்வதற்கு இன்றைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும். நேர்மை, தர்மம், நீதி குறித்து குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, மாணவ சமுதாயத்தை நேர்மை வழியில் கட்டமைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் நாளைய சமுதாயத்தை நிர்ணயம் செய்பவர்கள்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...